தமிழீழ ஆர்வலர்களே,
1.5 இலட்சம் வன்னி மக்கள் முள்கம்பி சிறையிலும், மொத்த தமிழீழ மக்களும் ஈழம் என்ற பெருஞ்சிறையிலும் உயிர்துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஈழப்போராட்ட வரலாற்றில் கடந்த மே -2009 எதையாவது முடித்து வைத்திருக்கிறதா? இல்லை. புதிதாக எதையாவது தொடங்கி வைத்திருக்கிறதா? என்று நம்மில் பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் அனைவரும் இதற்குமுன் போர் நிறுத்தத்திற்காக துடியாய் துடித்தோம். அப்போது ஈழமக்களின் எதிரிகளும், துரோகிகளும் கூட போர் நிறுத்தம் கோரி மக்களிடம் அம்பலப்படாமல் தப்பித்துக் கொண்டனர். இப்போது இவர்கள் வன்னி மக்களை மீளமைப்பது குறித்து (சிங்கள அரசு மனம் புண்படாமல்) பேசி தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். கூடவே தமிழர்க்கு சம உரிமை பேசி தம்மை சனநாயக வாதிகளாகவும் சமத்துவ வாதிகளாகவும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொருபுறம் ஈழத்தை அடைவதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து பல்வேறு அமைப்புகளும், தனிநபர்களும் சிந்திப்பதும், பரிமாறிக் கொள்வதும் கருத்து தெரிவிப்பதுமாய் இருக்கிறார்கள். இதில் பேசப்படும் பல்வேறு 'கருத்துக்களில் பொதுவாக்கெடுப்பு ஒன்றை ஈழத்தில் நடத்தக் கோருவது' என்பதும் ஒன்றாகும். இதை எல்லா தமிழீழ ஆதரவு ஆற்றல்களும் அடிப்படையில் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது பேசியும் வருகின்றனர். இந்த பொதுவாக்கெடுப்பு இன்றைய ஈழ சூழலில் ஈழத்தை அடைவதற்கான ஒரு வழிமுறையாகவும் பரந்துபட்ட மக்களை அணி திரட்டும் போராட்ட ஆயுதமாகவும் விளங்க முடியும்.
எப்படியெனில் ஒரு போராட்டம் வெற்றியடைய தேவையான 3 அம்சங்களையும் இது உள்ளடக்கி உள்ளது. எதிரியின் நண்பர்களிடமிருந்து எதிரியை பிரித்து தனிமைப்படுத்துகிறது. துரோகிகளையும், சந்தர்ப்பவாதிகளையும் மக்களிடமிருந்து பிரித்துவைக்கிறது. இடத்தாலும், செயலாலும், சிதறிக்கிடக்கும் மக்கள் ஆற்றல்களை முழுமையாக ஒன்றுகுவிக்கின்றது.
இது எப்படி என புரிந்துகொள்ளுமுன், பொதுவாக்கெடுப்பு குறித்து சில வார்த்தைகள்:
பொதுவாக்கெடுப்பு - ஓர் உலகப்போக்கு ஈழம் போன்ற தேசியஇன ஒடுக்குமுறை உள்ள நாடுகளுக்கு உலகம் வைத்திருக்கின்ற சனநாயக வழிமுறைதான் பொதுவாக்கெடுப்பு, இது சரியாகவும், நேர்மையாகவும் எல்லா பகுதிகளுக்கும் அமுல்படுத்தப்படுமேயானால் உலகில் தேசிய இன ஒடுக்குமுறைக்கு இடமில்லை.
நடந்தவை: ஸ்லோவேனியா (1990) க்ரோஷியா(91) மாசிடோனியா(91) உக்ரைன் (91), ஜார்ஜியா(91) டிரான்ஸ்னிஸ்டீரியா (91) போஸ்னியா (92) எரித்ரியா (93) மால்டோவா (94) கிழக்குதிமோர் (99) மாண்டிநிக்ரோ (2006) தெற்கு ஒசேடியன் (2006)
நடக்க இருப்பவை : தெற்கு சூடான் (2011) போகைன்வில்லே (2010) கலிடோனியா (2014) மேற்கு சகாரா(வாய்ப்பில்)
மேற்சொன்ன தேசிய இனங்கள் ஈழத்தை விட அதிக இழப்புகளை சந்தித்தவை அல்ல. தமிழர்களைப் போன்று எண்ணிக்கையில் உலகம் முழுவதும் பரந்து விரிந்தவை அல்ல. எனினும் அவர்களால் சாதிக்க முடிந்ததை நாம் சாதிக்க முடியவில்லை என்பது கசப்பான உண்மை. இதற்கான காரணங்கள் எதுவாக இருப்பினும் இப்போது இதற்கான சூழல் கனிந்து வருகிறது என்பது இனிப்பான உண்மை.
பொது வாக்கெடுப்பு கோரிக்கை - எதிரியின் நண்பர்களிடமிருந்து எதிரியைபிரித்து தனிமைப்படுத்துகிறது. சிங்கள பெரும்பான்மை மக்கள் இன அழித்தொழிப்பின் பக்கபலமாக நிற்கும் நிலையில் சிங்கள அரசு இவ்விடத்தில் உள்நாட்டில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பே இல்லை. அது உலக அளவில் தனிமைப் படுத்தப்பட்டாலன்றி ஈழம் வெற்றி பெறமுடியாது.
சிங்கள அரசின் 60 ஆண்டு கால இன அழிப்பு நடவடிக்கையின் உச்சகட்டமாய், இறுதிநாளில் குறைந்தது 20,000 பேர் வரை கொல்லப்பட்ட உண்மைகளால் என்ன நடந்திருக்க வேண்டும்? சிங்கள அரசை ஹிட்லரிய அரசாக வகைப்படுத்தி போர்க்குற்றவாளியாக அறிவித்து உலகிலிருந்து தனிமைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் முற்றிலும் ஒருவருக்கொருவர் சுயநலன்களையே அரச உறவுகளாகக் கொண்டிருக்கும் பெரும்பாலான உலகநாடுகளால் அவர்களின் சுயநலன்களுக்காக சிங்கள அரசு காப்பாற்றப்பட்டிருக்கிறது.
பயங்கரவாத ஒழிப்பு என்பது அவர்களுக்கு சாதகமான உலக வெகுமக்கள் கருத்தியலாக இருந்துள்ளது. உலகம் முழுவதும் சராசரிமக்கள் வரை ஏற்றுக்கொண்டிருக்கின்ற ஏற்றுக்கொள்ளப்பட முடிந்த வெகுமக்கள் கருத்தியல் ஒன்று நமக்கு சாதகமாக அமையுமேயானால் அதை அடிப்படையாகக் கொண்டுநாமும் வெற்றிபெற முடியும். அந்த வெகுமக்கள் கருத்தியலாக பொதுவாக்கெடுப்பு இருக்கமுடியும். ஏனெனில் உலக நாடுகளில் எல்லா அரசுகளும் தத்தமது மக்களுக்கு தேர்தல் ஒரு சனநாயகப் பாதை என்று போதுமான அளவில் போதித்து வைத்துள்ளன.
அவர்கள் உருவாக்கி வைத்திருந்த பயங்கரவாத ஒழிப்பு என்ற கருத்தியலமைப்பை அவர்கள் எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினார்களோ அதே போல் அவர்கள் உருவாக்கிவைத்திருக்கும் தேர்தல் என்ற கருத்தியலமைப்பை நாம் நமக்குச் சாதகமாக பயன்படுத்தமுடியும். அவர்களுக்கு பயங்கரவாத ஒழிப்பு கருத்து ஆயுதம் என்றால் நமக்கு பொதுவாக்கெடுப்பு ஒரு கருத்து ஆயுதம்.
சிங்கள அரசின் பொதுவாக்கெடுப்பு மீதான மறுப்பை (அதுமறுக்கவே செய்யும்) தமிழகத்திலும், புலம்பெயர் தமிழர் நாடுகளிலும் நன்கு பரப்புரை செய்து, சராசரி உலக மக்கள் கருத்தியலை சிங்கள அரசிற்கு எதிராக கட்டமைக்கமுடியும். சிங்கள அரசின் பயங்கரவாத ஒழிப்பு என்ற இராஜதந்திர சொல் ஏற்கப்பட்டதுபோல அதன் பொதுவாக்கெடுப்பு மறுப்பு என்ற சொல் உலக அளவில் ஏற்கப்பட முடியாமல் அது தனிமைப்படுத்தப்படும்.
விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட வேண்டும் என ஓர் ஒற்றுமை சிங்கள அரசிற்கும், மற்ற நாடுகளுக்கும் இருந்தது. அதே ஒற்றுமை பொதுவாக்கெடுப்பு குறித்த விசயத்தில் தொடர முடியாது. அதில் சிங்கள அரசு தனிமைப்படும். சிங்கள அரசிற்கு ஆதரவாக இனப்படுகொலையையோ வாக்கெடுப்பையோ மறுத்தால் பல நாடுகளின் சனநாயகப் பண்பு கடுமையாக கேள்விக்குள்ளாகப்படும்.
இந்நிலையில் உலகநாடுகளால் சிங்கள அரசு கைவிடப்பட்டு தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்திய முட்டுக்கட்டையால் சிங்கள அரசை எதிர்க்க முடியாமல் சில நாடுகள் உள்ளன. அவை இந்திய அரசின் தெற்காசிய வல்லாதிக்கத்தை மறுக்காமல் பொதுவாக்கெடுப்பை மட்டும் தாம் ஆதரிப்பதான நிலையை எடுக்கும் பட்சத்தில் இந்தியா மூலமான ஆதரவு நாடுகளை சிங்கள அரசு இழக்கும்.
இப்படி உலகஅளவில் சிங்கள அரசை தனிமைப்படுத்தும் போராட்ட வடிவமாக பொதுவாக்கெடுப்பு கோரிக்கை இருக்கமுடியும். பொதுவாக்கெடுப்பு கோரிக்கை சந்தர்ப்பவாதிகளையும், துரோகிகளையும் மக்களிடமிருந்து பிரித்து வைக்கிறது. இலங்கையில் தமிழர்க்கு சம உரிமை 13 வது அரசியல் சட்டத்திருத்தம் இந்திய - இலங்கை உடன்பாடு என்பது போன்ற ஈழமறுப்பு கருத்தியலின் பின்னால் பலரும் உள்ளனர்.
கோடிக்கணக்கான தமிழரல்லாத இந்திய மக்களும், தமிழரல்லாத உலக மக்களும் பல்வேறு நாட்டு அரசுகளும், மனித உரிமை அமைப்புகளும், நேர்மையான அறிவு ஜீவிகளும், ஈழப்போராட்டத்திற்கு துரோகம் செய்தவர்களும், அதை தமது நலன்களுக்கு பயன்படுத்தி வருபவர்களும் என பலரும் உள்ளனர். ஏன், இராசபக்சேவும், சிங்கள இனவெறிக் கட்சிகளுமே கூட இக்கருத்தியலுக்கு அவ்வப்போது வந்து போவதுண்டு. அந்த அளவிற்கு இதற்குபெரும் கருத்தியல் பரப்பு உண்டு.
புலிகளின் பின்னடைவுக்கு பின், 'தமிழீழம் கேட்டவர்கள் அனைவரும் ஒழிக்கப்ட்டு விட்டனர். இப்போது மக்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு சமஉரிமை அளித்தால் போதும், பிரச்சனை தீர்ந்து விடும்.' என்ற கருத்து வளர்க்கப்படுகிறது. இவையெல்லாம் சிங்கள அரசும், இந்திய அரசும் உலகிற்கு தெரிவித்துவரும் கருத்துகள். இது குறித்து கருத்துக்கூற தமிழீழ மக்களின் வாய் கட்டபட்டுள்ளது. இக்கட்டை அவிழ்த்து விட்டு இவ்வரசுகள் கூறுவது உண்மையா? என அறியக்கோருவது தான் பொதுவாக்கெடுப்பு கோரிக்கை.
முடிவு, ஒன்றுபட்ட இலங்கையானாலும், ஈழமானாலும் அது அம்மக்கள் தீர்ப்பாகவே இருக்க வேண்டும். சிங்களத்தீர்ப்பாகவோ, வெளிஉலகத் திணிப்பாகவோ இருக்கமுடியாது. இத்தகைய பொதுவாக்கெடுப்பை சமஉரிமை பேசும் பரந்துபட்ட உலகமக்கள், அறிவுஜீவிகள், உரிமை அமைப்புகள் அனைவரும் ஏற்கமுன்வருவர். ஆனால் சமஉரிமை கருத்தியலுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் துரோகிகளும், சந்தர்ப்பவாதிகளும் சில எதிரிகளும் பொதுவாக்கெடுப்பை மறுப்பதன் மூலம் அம்பலப்படுவர்.
ஈழமல்லாத சமஉரிமை பேசும் முகாம், பொதுவாக்கெடுப்பை ஏற்காத சிறிய முகாமாகவும், பொதுவாக்கெடுப்பை ஏற்கும் பெரிய முகாமாகவும் பிளவுபடும். இவ்வாறு பொதுவாக்கெடுப்பு கோரிக்கையால் அடையாளம் காணப்பட்டு எதிர்சக்திகள் அம்பலப்படமுடியும். இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. பொதுவாக்கெடுப்பு கோரிக்கை என்பது ஈழ மக்கள் தமது அரசியல் நலன்களை தாமே நேரடியாக தீர்மானித்துக்கொள்ளும் ஒரு சாதாரண தேர்தல் நடவடிக்கை. இது சனநாயகமானது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
உலகிலேயே மிகப் பெரிய சனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் இந்தியா, போர்நடைபெற்ற காலத்தில் அதை பயங்கராவத ஒழிப்பு என கூறி தமிழக மக்களை குழப்பியது. ஆனால் பொதுவாக்கெடுப்பை கோரிக்கை விசயத்தில் தமிழக மக்களை அதேபோல் ஏமாற்றுவது கடினம். இந்தியா பொதுவாக்கெடுப்பு கோரிக்கையை மறுக்குமேயானால் அது தேர்தலை கூட ஏற்காத சனநாயமற்ற அரசு என்று அழுத்தமாக தம்மக்களிடம் பதிவு செய்து கொள்ளும். இந்தியாவில் தேசிய இன ஒடுக்குமுறைக்குட்பட்ட மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையிலான முரண் அதிகப்படும்.
பொதுவாக்கெடுப்பு கோரிக்கையை ஆதரித்தால் அதுபோலவே இந்தியாவிலும் கோரிக்கைகள் வளர்ந்துவிடும் என்ற அச்சத்திற்கு அது ஆளாக நேரிடும். இந்தியா எந்த முடிவை எடுத்தாலும் அதன் உள்நாட்டு தேசிய இன ஒடுக்குமுறைக்கு இது பலத்த அடியாகவே இருக்கும். இச்சிக்கலிலிருந்து தப்பிக்க பொதுவாக்கெடுப்பு அல்லாத முறையில் ஈழம் அமைவதே தமக்கு குறைந்த இழப்புடையது. என்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கையில் இந்தியா இறங்கக்கூடும் என்ற வாய்பையும் மறுக்கமுடியாது.
இது அந்த நேரத்தில் இந்திய ஆட்சியில் நடைமுறைசார்ந்த புத்திசாலிகள் இருப்பது சம்பந்தப்பட்ட விசயம். பொதுவாக்கெடுப்பு கோரிக்கை - இடத்தாலும், செயலாலும் சிதறிக்கிடக்கும் மக்கள் ஆற்றல்களை முழுமையாக ஒன்று குவிக்கின்றது. தமிழீழமக்கள் மூன்றுபெரும் எண்ணிக்கையில் சிதறிக்கிடக்கின்றனர்.
1.தமிழீழம்
2.புலம் பெயர்ந்த நாடுகள்,
3.தமிழகம்.
போராட்டங்களின் பங்கேற்பில் இம் 3 பகுதியினரின் நிலையும் வெவ்வேறானது. ஈழத்தில் இப்போதைய இராணுவ ஆட்சி நிலைமைகளால் அரசியல் போராட்டம் நடத்தமுடியாமல் இருக்கிறது. ஆயுதப்போராட்டம் நடத்தும் வாய்ப்பைக் கொண்டிருந்தாலும் அதில் தமிழக, புலம் பெயர் தமிழர்களின் எண்ணிக்கை பலத்தை பயன்படுத்தமுடியாது. தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர் அரசியல் போராட்டமும் நடத்தமுடியாது, ஆயுதப்போராட்டமும் நடத்தமுடியாது. புலம் பெயர் தமிழர் எல்லைக்கு உட்பட்ட அரசியல் போராட்டம் நடத்தலாம். ஆயுதப்போராட்டத்தில் படையணியாக பங்கேற்க முடியாது. ஆனால் மக்கள் சிதறிப்போய் கிடக்கின்ற நிலையை மற்ற போராட்ட வடிவங்களை விட பொதுவாக்கெடுப்பு கோரிக்கை, பெரிதும் சாதகமாக பயன்படுத்தமுடியும்.
சிதறிக்கிடக்கும் மக்களில், உணர்வு மட்டத்தில் ஏற்றத்தாழ்வான அனைவரையும் இதில் ஒன்று குவிக்க முடியும், அம்மக்கள் மட்டும் அல்ல புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள மனித உரிமை இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், ஊடகங்கள், உலக அறிவுஜீவி துறையினர், தேர்தல் சனநாயக நடைமுறைய ஏற்கும் சராசரி உலக வெகுமக்கள் கருத்தினர் என அனைவரையும் பொதுவாக்கெடுப்புக்கான போராட்டம் ஒன்று குவிக்கமுடியும்.
தமிழகத்தில் மனிதாபிமான அடிப்படையிலும் இன உணர்வு அடிப்படையிலும் ஈழத்தை ஆதரிக்கும் ஒரு வெகுமக்கள் உணர்வலை உண்டு இந்த உணர்வலை 60 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வாக தேர்தல் என்ற எளிய வழிமுறையை நிச்சயம் ஏற்கும். இச்சூழல் தமிழக வெகுமக்கள் இயக்கத்தை கட்டியமைக்க உதவும். பிரிவினை என்றாலே பயங்கரவாதம் தான் என்று மக்களிடம் கருத்து பதியவைக்கப்பட்டுள்ளது. இல்லை, பிரிவினை என்பது ஒரு சனநாயக வாதம் என்று பொதுவாக்கெடுப்பு கோரிக்கை தெளியவைத்து அவர்களை சாதகமாக்க முடியும்.
பொதுவாக்கெடுப்பு கோரிக்கை ஈழம், புலம் பெயர் நாடுகள், தமிழகம் இம்மூன்றிலும் இங்குள்ள மக்களின் அக ஆற்றல் நிலைமைகளுக்கு பொருத்தமான போராட்ட வடிவமாக உள்ளது. அதேபோல் சிங்கள அரசு என்றும் இல்லாத அளவில் உலக அளவில் மனித உரிமை அரங்கில் தனிமைப்பட்டு வரும் புறச்சூழ்நிலைமைகளுக்கும் பொருத்தமானதாக உள்ளது. தமிழகத்திலும் உலக நாடுகளிலும் சாத்தியமான அளவில் தமிழீழத்திலும் பொதுவாக்கெடுப்பு கோரிக்கைக்கான ஒரு மக்கள் இயக்கத்தை கட்டியமைக்காமல் நாம் மேற்சொன்னவற்றிற்க்கு ஆசைப்பட முடியாது.
தமிழகத்தில் சில அமைப்புகளும், பல தமிழீழ ஆர்வலர்களும் இவற்றை முன்வைக்கின்றனர். மேலும் பல்வேறு அமைப்புகளும் தமிழீழ ஆர்வலர்களும் இதுபோல் முன்னெடுக்கும் பட்சத்தில் நாம் தமிழகத்தில் ஈழ தமிழர்களுக்கு ஆதரவான ஓர் மக்கள் இயக்கத்தை கட்டியமைக்க முடியும். இதை கட்டமைத்து விட்டால் இன்று பலவந்தமாக ஓங்கியிருக்கும் சிங்கள அரசின் கை இனி எப்போதுமே ஓங்க முடியாது.
- பிரபாகரன்
Comments