நிரூபிக்கப்படும் உண்மைகளும் கூண்டிலேற்றப்பட வேண்டிய போர்க் குற்றவாளிகளும்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் வாக்குமூலம் முன்னேற்பாடுகள் செயப்பட்டு சரணடைய வெள்ளைக் கொடியோடு வந்தவர்களை ராஜபக்ச சகோதரர்களும், பிரிகேடியர் சவீந்ர சில்வாவும் சேர்ந்தே சுட்டுக்கொன்றுள்ளனர் என்பது நிரூபித்துள்ளது.

இது சர்வதேச சட்டங்களின் கீழ் ஒரு பாரிய போர்க் குற்றமாகும். அமெரிக்க போர்க்கள சட்டவிதிகளின் 27-10 வரைபுக்குள் தரைப்போர் சட்டங்களின் (1956ம் ஆண்டு) அடிப்படையில் 504வது சரத்தின்படி மாபெரும் போர்க் குற்றமாகும் என இல்லிநொய்ஸ் சட்டக்கல்லூரியின் பேராசிரியர் பிரான்சிஸ் ஏ பொய்ல் தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற இவர் மேலும் தெரிவிக்கையில், ஆகக்குறைந்தது பின்வரும் மூன்று சட்டங்களுக்குள் நீதி வழங்கப்பட்டாலேயே போர்க் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுவிடும் என்றார். 504 :- 1949ம் ஆண்டின் ஜெனிவா சட்டவிதிகள் பாரிய அளவில் மீறப்படும்போது அது போரியல் சட்டத்தின் மீறலாக போர்க் குற்றமாகக் கணிக்கப்படும்.

E: உடன்படிக்கைக்கு உட்பட்ட கொடியின் மீது துஷ்பிரயோக, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளல்.

I : எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாயினும் விசாரணைகளின்றி கொலை செய்தல்.

N : சரணடைதல் சட்டவிதிகளை மீறல். இதனடிப்படையில் ராஜபக்ச சகோதரர்களும் சவீந்திர சில்வாவும் போர்க் குற்றவாளிகள் ஆகின்றனர். உலகின் எல்லா அரசுகளுக்கும் சிறீலங்காவிற்கு நீதி வழங்கவேண்டிய உரிமையும், கடமையும் உள்ளது. மேலும் இந்தப் போர்க் குற்றம் 1949ம் ஆண்டின் உடன்படிக்கையின் நான்கு சட்டங்களில் மூன்றை முற்றுமுழுதாக மீறியுள்ளது. இந்த உடன்படிக்கையில் சிறீலங்காவும் கையெழுத்திட்ட நாடு என்பதால் சிறீலங்காவை போர்க் குற்றவாளியாக்குகின்றது. ‘போரில் ஈடுபடாத மக்கள், ஆயுதங்களை கீழே வைத்த போரில் ஈடுபட்டவர்கள் அனைவரும் எந்த சூழ்நிலையிலும் மனிதபிமானத்தோடு அணுகப்படவேண்டும். இவர்கள் மீது எந்த எதிர்ப்போ, அல்லது இன, நிற, மத, பால், வறிய, செல்வந்த வேறுபாடுகள் எவையும் காட்டப்படலாகாது'.

A : இந்த நடவடிக்கைகள் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் மேற்கூறப்பட்டவர்கள் மீது எதிர்ப்புக்காட்டாது மரியாதையோடு நடத்தப்படவேண்டும்.

D : சட்டபூர்வமான நீதிமன்ற விசாரணைகள் இன்றி எந்தக் கொலைகளும் தண்டனைகளும் வழங்கப்படலாகாது. நாகரீகமடைந்த சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதி உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.

உலகின் எல்லா நாடுகளும் இந்த ஜெனீவா உடன்படிக்கையின் நான்கு வரைபிற்குள்ளும் கட்டுப்பட்டவர்கள். அதனால் எல்லா நாடுகளுக்கும் ராஜபக்ச சகோதரர்களையும் பிரிகேடியர் சவீந்திர சில்வாவையும் போர்க் குற்ற நீதிமன்ற முன் நிறுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது. சர்வதேச சமூகம் குறைந்தது கடைசி நேர படுகொலையை விசாரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. காரணம் இவர்களிடம் இதற்கு உண்டான ஆதாரங்கள் நிறையவே உள்ளன. நோர்வேயில் வெளியாகியுள்ள ஒரு தகவலின்படி மே மாதம் 17ம், 18ம் திகதிகளில் 40 பெயர் கொண்ட ஒரு பட்டியல் சரணடைதலுக்கும் பாதுகாப்பிற்குமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு அவுஸ்திரேலியப் பிரசையும் தொடர்பாடளராக இருந்ததாக கூறப்படுகின்றது.

தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் ரமேஷ் வெள்ளைக் கொடியோடு வந்ததையும் அதே நடைமுறையைப் பின்பற்றி மற்றவர்களும் ஒரு சில சர்வதேச நடுவர்கள் மூலம் செய்யப்பட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் வெள்ளைக்கொடியோடு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டதையும் பாலித கோகன்ன ஏற்றுக்கொண்டுள்ளார். புலித்தேவனும், நடேசனும் வழங்கிய பட்டியல் சர்வதேச நடுநிலையாளர்கள் மூலம் பாலித கோகன்னவுக்கு வழங்கப்பட்டது. பொன்சோகா சண்டே லீடருக்கு வழங்கிய செவ்வியில் இந்த சரணடைதல் தொடர்பான எந்தச் செய்தியும் தனக்கு வழங்கப்படவில்லை என்றார். பின்பு தான் அறிந்தபடி இந்த தகவல்கள் பசில் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டு அவர் மூலம் கோத்தபாய ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டது. ஆனால் கோத்தபாய 58வது படையணியின் பிரிகேடியர் சவீந்திர சில்வாவை அழைத்து புலிகள் யாரையும் சரணடைய அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றும் ஆனையிட்டதாக வாக்குமூலம் தந்துள்ளார்.

பசிலும், கோத்தபாயவும் ஒரு வெள்ளைத் துண்டை கையிலேந்தி கைகளைத் தூக்கியபடி இராணுவத்தை நோக்கி செல்லும்படி பணித்திருந்தனர். இதை ஏற்றுச் சென்றவர்களும் அவர்களின் குடும்பங்களும் 17 நள்ளிரவு முதல் 18 அதிகாலைக்குள் கொன்றொழிக்கப்பட்டனர். இதற்கு ‘முக்கிய தூதுவராக எரிக் சொல்கெய்மே' இருந்துள்ளார். சிறீலங்காவின் முன்னைநாள் வெளியுறவுச் செயலாளனரும் ஐ.நா.வின் தற்போதைய பிரதிநிதியுமாகிய பாலித கோகன்ன சிறீலங்காவின் சார்பில் இந்த உடன்படிக்கையில் ஈடுபட்டிருந்தார். சவீந்திர சில்வாவுடன் நின்ற இராணுவ பத்திரிகையாளர் மூலமே நடந்த சம்பவத்தை அறிந்ததாக பொன்சேகா கூறியுள்ளார். இது ஒரு புறமிருக்க, அமெரிக்காவின் சுயாதீன நிறுவனத்தின் ஆராய்வின் முடிவின் பின்னர் பிரித்தானியாவின் ரைம்ஸ் பத்திரிகை தனது செவ்வாய்க்கிழமைப் பதிப்பில் தமது குற்றவியல் நிபுணர்கள் சனல் 4இல் வெளியிடப்பட்ட சிறீலங்கா இராணுவத்தால் நிர்வாணமாக்கி சுட்டுக்கொல்லப்பட்ட காணொளிக்காட்சி மீண்டும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

இந்தப் பரிசோதனையின்போது எந்தவித கணினியல் மாற்றங்களும் செய்யப்படாத நேரடி ஒளிப்பதீவு என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனை உறுதிசெய்த ரைம்சின் குற்றவியல் நிபுணர் கிரான் பிரட்ரிக்ஸ் ஒரு குற்றவியல் காணொளி நிபுணர் மட்டுமல்லாது, எப்.பி.ஐயின் தேசிய கலாசாலையின் இயக்குநர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது ஆய்வில் இந்தக் காணொளியில் பாவிக்கப்பட்டிருக்கும் கணினியில் கட்டமைப்பு (Codec) நொக்கியா செல்பேசியின் கணினியில் கட்டமைப்பை உள்ளடக்கியதாகத் தெரிவித்துள்ளார். இதுமுழுமையான செல்பேசியினால் எடுக்கப்பட்ட காணொளி என்றும், எந்தவிதமாற்றங்களுக்கும் உட்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கொலடொரவில் இயங்கும் ஒலி-ஒளி குற்றவியல் ஆராய்ச்சி நிறுவனம் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க செய்து வழங்கிய ஆராய்ச்சியின் அறிக்கையும் ரைம்சின் அறிக்கையும் சரியாக ஒத்துப்போகின்றது. எனவே சரத் பொன்சேகாவின் கூற்றுப்படி ராஜபக்ச சகோதரர்களும் இந்தப் படுகொலைகளைச் செய்த இராணுவத்தின் கட்டளைத் தளபதி சரத் பொன்சேகாவும் முப்படைகளின் தளபதி மகிந்த ராஜபக்சவும் அதியுயர் போர்க் குற்றவாளிகள் ஆகின்றனர். ஆனால் இவர்களை இவர்களே விசாரிக்கட்டும் என்று விட்டுவிட்ட பான் கீ மூன் தன் சொந்த நலன்களில் மட்டுமே அக்கறை கொண்டு இயங்குகின்றார் என இன்னசிற்றிப் பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஆபிரிக்கா மீதான தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தவதற்காக 157 பேர் மட்டுமே படுகொலை செய்யப்பட்டதற்காக கென்யாவிற்கு ஐ.நாவின் போர்க் குற்றவியல் விசாரணைக்குழு பான் கீ மூனால் அனுப்பப்பட்டுள்ளது.

157 கென்ய மக்களின் உயிருக்குள்ள மதிப்பு, 20 ஆயிரத்திற்கு மேல் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு இல்லையென்று இந்தப் பான் கீ மூன் எண்ணியுள்ளாரா? இங்கு எம் மக்களின் எழுச்சியும் பலமுமே பான் கீ மூனையும் பாதுகாப்பு சபையையும் எம்மை நோக்கி திரும்பவைக்கும். சென்ற வாரம் பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை நடாத்திய தமிழீழத்திற்கான மீள் வலியுறுத்தலுக்கான வாக்கெடுப்பில் பாரிய அளவிலான மக்கள் கலந்துகொண்டு பெருவெற்றியைத் தமிழீழ ஆணையாகக் கொடுத்துள்ளனர். இது எமது பலத்தின் வெளிப்பாடு. இதே ஆதரவுடன் தமிழீழ மக்கள் பேரவையையும் அனைவரும் அங்கத்தவராகிப் பலப்படுத்துவதுடன் எமது குரலை இவர்களை நோக்கி எழுப்ப முடியும். புவிசார் அரசியலில் பலியாகும் நீதிகளை மீட்க முடியும். சிறீலங்காவின் அரசியல் தலைமைகளையும் இராணுவத் தலைமைகளையும் போர்க் குற்றவாளிகளாக நிரூபிக்க உலகெங்கும் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும். எமது ஒன்றிணைந்த பலமே எமக்கான நியாயங்களை எமக்குப் பெற்றுத்தரும்.

- சோழ.கரிகாலன்

நன்றி:ஈழமுரசு

Comments