முறையற்ற போரை மூர்க்கமாக முன்னெடுத்த இராணுவ அரசியல் தலைமைகளுக்கு இடையில், யுத்த வெற்றியின் பின் னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, இப்படிக் கூட்டுச் சேர்ந்து புரிந்த அராஜகங்களின் ஒளிவு, மறைவான பக்கங்களை வெளிச் சத்துக்குக் கொண்டுவரும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே.
அந்த எதிர்பார்ப்பு சாத்தியமாகத் தொடங்கியிருக்கின்றது. இவ்வரிசையில் முதல் துப்பை எதிரணியின் பொதுவேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியிருக்கும் ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா போட்டுடைத் திருக்கின்றார்.
மே மாதத்தில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில்தான் வன் னியில் தமிழர்கள் மீது மிக மோசமானதும், மூர்க்கமானதுமான பேர ழிவு யுத்தம் கொழும்பால் திணிக்கப்பட்டது. பல்லாயிரக் கணக் கில் தமிழரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டமை அப்போதுதான்.
ஆனால், யுத்தத்தின் இறுதி நாள்களில் இவ்விடயங்களில் தமக்கு எந்தத் தொடர்பாடலும் தரப்படவேயில்லை என்று அப் போது இராணுவத் தளபதியாக இருந்த இப்போதைய எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் பொன்சேகா கூறியிருக்கின்றார்.
அச்சமயத்தில்தான், சரணடையும் நோக்கோடு வெள்ளைக்கொடி தாங்கி வந்த விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் போன்றோர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகின்றது.
"இவ்வாறு சரணடைய வரும் புலிகளின் எந்தத் தலைவரையும் ஏற்கவேண்டாம். அத்தகையோரின் கதையை முடித்து விடுங்கள்!" என்ற உத்தரவு பாதுகாப்பு அமைச்சின் செயலாள ரும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷவினால் தம்மை மீறி நேரடியாகக் கள முனைத் தளபதிகளுக்கு வழங்கப்பட்டது என்று முன்னாள் இரா ணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா இப்போது விடயத்தைப் போட்டுடைத்துக் கூறியிருக்கின்றார்.
இதில் உண்மையும் இருக்கலாம். பொய்யும் இருக்கலாம். படுகொலை நடவடிக்கைகளை அரசுத் தலைமையோடு சேர்ந்து முன்னெடுத்துவிட்டு இப்போது தாம் நல்ல பிள்ளை போலவும் ஜெனரல் பொன்சேகா பேசக்கூடும்.
ஜெனரல் பொன்சேகா இராணுவத் தளபதி போன்ற படைச் சேவைப் பொறுப்பில் இருந்து விலகும் வரை, இவ்விடயத்தைப் பகிரங்கப்படுத்தும் வாய்ப்பு அவருக்கு இருந்திருக்காது, இப் போதுதான் அந்த வாய்ப்பு வந்திருக்கின்றது, அதனால் அந்தச் சந்தர்ப்பத்தை அது கிடைத்ததும் பயன்படுத்தி உண்மைகளை வெளியிடுகின்றார் பொன்சேகா என்று அவர் தரப்பில் கூறப்படும் நியாயமும் கவனிக்கத்தக்கதே.
ஆகவே, இவ்விடயத்தில் நீதி முறையான விசாரணை நடந்தால்தான் உண்மை அம்பலத்துக்கு வரும் என்பது தெளிவானது. இத்தகைய குற்றச்சாட்டு, சம்பந்தப்பட்ட தரப்பால் பகிரங்கப்படுத்தப்பட்ட பிறகும் இது விடயத்தில் சமாளிப்புகள் சரிவரா. நீதி விசாரணை நிச்சயம் அவசியம்.
சரணடைய முற்பட்ட புலிகளின் தளபதிகள் மற்றும் உறுப்பினர்களின் கதையை முடித்து விடுமாறு உத்தரவிட்டு அதனைச் செயற்படுத்தியமை உண்மை என்றால், இவ்விடயம் சர்வதேச யுத்தக் குற்றமாகவும் விசாரிக்கப்படக்கூடியது.
இந்த விடயத்தில் இன்னொரு முக்கிய பிரதான அம்சமும் உண்டு.
தமது சரணடைவுத் திட்டம் குறித்து புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசனும் ஏனையோரும் அந்தக் கடைசி நாள் களில் அரசுத் தரப்போடு தொடர்பாடலை வைத்திருப்பதற்கு இடையில் முக்கியமான நபர்களாகச் செயற்பட்டவர்கள் என்று சிலரின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்களில் முக்கியமானவர் மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசத்தக்க ஒரு தமிழ் எம்.பி. என்றும் கூறப்படுகின்றது. "வெள்ளைக் கொடியை ஏந்தியபடி நம்பிப் போங்கள். எதுவும் நடக்காது" என்று நடேசனுக்கும் ஏனையோருக்கும் அரசுத் தலைமை சார்பில் உறுதி பெற்றவர் போலத் தம்மைக்காட்டி, அவர்களுக்குக் கயிறு கொடுத்தவர் இந் தத் தமிழ் எம்.பியே என்று கூறப்படுகின்றது.
நடேசன், புலித்தேவன் ஆகியோரின் படுகொலையுடன் அச்சாதனைக்கான "பெருமையோடு" நாட்டைவிட்டே காணாமற்போய், தலைமறைவான அந்த எம்.பி. மீண்டும் தேர்தல் சமயம் என்றதும் ஆறு மாதம் கழித்து இப்போது நாடு மீண்டு ஆங்காங்கே தலையைக் காட்டுகின்றார் என்று கேள்வி. யுத்த சமயத்தில் தக்க வேளையில் தாம் செய்த "பேருதவி"க்குக் கைம்மாறாக இம்முறை சம்பந்தப்பட்ட தரப்பால் நியமனப் பதவி கிடைக்கும் என்ற நப்பாசையில், அதற்கான காரியங்களைத் தற்போது தாம் உள்ள தரப்பு என்று வெளியே காட்டிக்கொள்ளும் தமிழர் பக்கத்தில் ஆற்றி, அங்கு குழப்பத்தை ஒப்பேற்றும் திட்டத்துடன்தான் வந்திருக்கின்றாரோ என்னவோ.....?
எது, எப்படியென்றாலும் இந்த விவகாரத்தில் விசாரணை என்று வரும்போது இவர் எல்லாம் கூண்டில் ஏறவேண்டி வரு வது தவிர்க்க முடியாததாக இருக்கும். அப்போது தன்னும் உண்மை சொல்வாரா, அமுக்கப்பட்ட விடயங்களை அம்பலப் படுத்தத் துணிவாரா, தனது இனத்துக்கு இழைக்கப்பட்ட இந்தப் பெரும் அநியாயத்தை உலகின் முன் கொண்டுவர மனச் சாட்சியுடன் செயற்படுவாரா என்பவையெல்லாம் ஆண்டவனுக் குத்தான் வெளிச்சம்.
இதில் இன்னொரு முக்கிய அம்சமும் உண்டு. இறுதிச் சமர் காலத்தில் முள்ளிவாய்க்காலிலும், புதுமாத்தளனிலும் எத்தனை தமிழர்களின் உயிர்கள் அநியாயமாகக் காவு கொள்ளப்பட, அவர்களின் சடலங்கள் அங்கு மண்ணோடு மண்ணாகிப் புதையுண் டன என்பது தமிழர்களுக்குத் தெரியும். தமிழர்களின் இரத்த உறவு கள் புதையுண்ட அந்த மண்ணிலேயே இன்று போர் வெற்றிச் சின்னத்தை எழுப்பித் திறந்து வைத்து மகிழ்ந்திருக்கின்றார் நாட் டின் தலைவர்.
அதற்காக அவருக்கு அடுத்த எட்டு ஆண்டுகள் நாட்டின் தலைமைப் பதவியைத் தொடர்ந்து உறுதிப்படுத்தத் துடியாய்த் துடிக்கின்றனர் நமது தமிழ் எம்.பிக்கள் சிலர். "கொள்கைகள்", "கோட்பாடுகள்", "பகிஷ்கரிப்புகள்", பொது வேட்பாளர்", "தன்மானம்" என்ற தத்துவங்களைப் பேசி எப்படியாயினும் ஆட்சித் தலைவரின் வெற்றியை உறுதிப்படுத்தத் தலையால் கிடங்கு கிண்டுகின்றார்கள் அவர்கள்.
பெற்ற கையூட்டுக்கு நன்றிக்கடன் செலுத்தவும், தங்களுக்கு எதிரான வழக்குகள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப் பதை உறுதி செய்வதற்காகவும் அதற்காகத் தாம் கொடுத்த வாக்கு றுதிகளை நிறைவு செய்வதற்காகவும், அவர்களுக்கு உள்ள வழி இதுதான்! அதனால், வேறு என்னதான் செய்வார்கள்? பாவம்! "கூட் டமைப்பை" ஒருமாதிரி "கூத்தமைப்பு" ஆக்கி, தமிழர்களுக்கு இருக்கக்கூடிய எச்சசொச்ச வலிமையையும் மண்ணாக்கித் தங்களை தங்கள் சுயநலத்தை காப்பாற்றத் துடிக்கிறார்கள், பொறுத்த சமயத்தில் மக்களை விட்டு ஓடி ஒளிந்துவிட்டு இப்போது தேர்தல் என்றதும் தமிழ் மக்கள் மீது அதீத பாசம் கொள்ளும் இந்தப் பிரகிருதிகள்!
-நன்றி உதயன்-
Comments