தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் மக்களின் உணர்வினைப் பிரதிபலிக்குமா?

அமெரிக்காவின் விருப்பு வெறுப்பிற்கேற்ப ஜே. வி. பி.யும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜெனரல் சரத் பொன்சேகாவைக் களமிறக்கியதாக கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட தலைவர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.

இறுதிப் போரில், விடுதலைப் புலிகளின் சில தலைவர்கள் கொல்லப்பட்டமை குறித்து, சரத் பொன்சேக்கா வெளியிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஐ. நா. சபை இலங்கை அரசு மீது சுமத்தும் குற்றச்சாட்டில், அனைத்துலகத்தின் சதித் திட்டம் இருப்பதாகக் கூறும் குணசேகர இதுபற்றி மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென எச்சரிக்கின்றார். தமிழ் மக்கள் மீது கூட்டுப் படுகொலை நிகழ்த்தப்பட்ட போது, பொதுவுடமைக் கொள்கைகளுக்கு ஓய்வு வழங்கிய சிவப்பு சிந்தாந்திகள் சிலர் பேரினவாதிகளைக் காப்பாற்ற புதிய அவதாரங்களை எடுக்கின்றனர். அமெரிக்காவைத் தவிர, இந்த உலகத்தில் ஏகாதிபத்திய நாடுகளே இல்லை என்பது போலுள்ளது இவரின் கருத்து.

மேற்குலகைத் திட்டித் தீர்த்து, பிராந்திய ஏகாதிபத்தியங்களை புனிதர்களாக்கும் போக்கினை இவர்கள் கைவிட மாட்டார்கள். சீன, வியட்னாமிய முதலீடுகள், நவீன பொதுவுடமைச் சுரண்டல் சித்தாந்தத்தின் அடிப்படையில் நிகழ்வதாக வியாக்கியானமும் கூறுவார்கள். உலகில் இடம்பெற்ற போர்களின்போது மிகப் பெரிய மனிதப் பேரவலங்கள் இடம்பெற்ற 10 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதை பிரான்ஸை தளமாகக் கொண்டியங்கும் எல்லைகளற்ற மருத்துவர்களுக்கென அமைப்பு (எம். எஸ். எஃப்) தெரிவித்துள்ளது. பிரான்ஸில் இவ்வமைப்பு இயங்குவதால் இதுவொரு ஏகாதிபத்தியத்தின் ஊதுகுழல் என இலங்கை கம்யூனிஸ்ட்டுகள் கூறலாம். எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பினையும் இந்த ஏகாதிபத்திய பட்டியலில் இணைத்து விடுவார்கள்.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட போது, சோசலிச முகமூடி அணிந்த நாடுகள் வாய்திறக்கவில்லை. பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்று சொல்லப்படும் உள்நாட்டு யுத்தத்தில் தேசிய இனங்கள் ஒடுக்கப்படுவதும், படுகொலைக்கு உள்ளாக்கப்படுவதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையென்று இவர்கள் நிறுவ முற்படலாம். 60 வருட காலமாகியும், மக்களை அணிதிரட்டி, வெகுஜன அமைப்பொன்றை கட்டிப் போராட்டம் நடத்த முடியாத கையறு நிலையில் இருக்கும் மாக்சிஸம் பேசும் புரட்சிவாதிகள், அறிக்கைப் போர் செய்யும் காகிதப் புலிகள் என்று கூறுவதில் தவறேதும் இல்லை போல் தெரிகிறது.

புதிய உலக ஒழுங்கில், முதலாளித்துவ முகாமும் சோசலிச முகாமும், சந்தைகளைப் பங்கிடும் போட்டிகளிலும் பிராந்தியங்களை கூறுபோடும் யுத்தங்களிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவதை அவதானிக்கலாம். சோவியத் யூனியனை, சமூக ஏகாதிபத்தியமென்று வரையறை செய்த மாவோவின் வாரிசுகள், இன்று அதுவாக மாறி விட்ட சீனாவினை விமர்சிக்காமல் தவிர்க்கிறார்கள். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வட மாகாணத் தலைவர் வி.பொன்னம்பலம், செந்தமிழர் இயக்கத்தினை ஏன் நடத்தினாரென்பதை டியூ குணசேகரா போன்றோர்தத்துவ ஆய்விற்கு உட்படுத்தவில்லை. இலங்கை அரசியலில், பேரினவாதத்தின் ஆளுமை அதிகரித்து, சிறுபான்மை தேசிய இனங்கள் மீது ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகையில் ஒட்டுமொத்த புரட்சி மூலம் தேசிய இன முரண்பாடுகளை தீர்க்கலாமென்று, சகலரோக நிவாரணிச் சித்தாந்த மாயைக்குள் இருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியினர், இன்னமும் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை.

கம்யூனிசத்தை நோக்கிய சோசலிச சமுதாயக் கட்டமைப்பில், புதிய ஜனநாயகப் புரட்சி அவசியமென்கிற, பொதுவுடமை ஆசான் மாஒ சேதுங்கின் ஜனநாயகப் பார்வையை உணர்ந்து கொள்ளாமல், தந்தை செல்வாவின் வாரிசு பிரபாகரனென்று சிறுவட்டச் சிந்தனைக்குள் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை அடையாளப்படுத்தும், தத்துவவாதிகளுக்கும் குணசேகராவிற்கும் இடையே வேறுபாடு அதிகமில்லை. இறுதி நேரத்தில் அமெரிக்காவின் வரவை பிரபாகரன் எதிர்பார்த்துக் காத்திருந்தாரென்று யாரோ ஒரு அரசறிவியலாளர் தெரிவித்த ஊகத்தினை, நிஜமென்று ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருந்தது. ஏனெனில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சார்பான விடயமென்று சொல்வதற்கு வேறெந்த சான்றுகளும் இவர்களுக்கு கிடைக்கவில்லை போல் தெரிகிறது.

ஆனாலும் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் உலக ஏகாதிபத்தியங்கள் இலங்கையில் செலுத்த முற்படும் ஆதிக்க நகர்வுகளிலும் அமெரிக்க எதிர்ப்பினை மட்டுமே இக் கம்யூனிச சக்திகள் முன்னிலைப்படுத்தும். சீனாவும், இந்தியாவும் ஆசியாவின் முற்போக்குச் சக்திகளென்று, பிற்போக்குத் தனமாகக் கூறி, தமது சிந்தாந்த வறுமையை இவர்கள் வெளிப்படுத்துவார்கள். நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல், இருபெரும் ஏகாதிபத்தியங்களுக்கிடையே நடைபெறும் மறைமுக மோதலென்பதால், அமெரிக்காவிற்கு எதிரான அணியுடன் ஒன்று திரளுமாறு இச் சிவப்புக்கள் அறைகூவல் விடுக்கும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு அத்தேர்தலில் பங்கு கொள்வது தவறென்று இன்னொரு சாரார் விளக்கமளிக்கிறார்கள்.

இத்தகைய வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியிலும் யுத்த வெற்றியை தமதாக்கிக் கொள்ளும் போட்டியினை, இரு பிரதான வேட்பாளர்களும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் களத்தில், அமெரிக்காவின் சதிவலைத் திட்டம் என்கிற விவகாரத்தை விட, எவர் விடுதலைப் புலிகளை அழித்தார்கள் என்பதை உரிமை கொண்டாடும் விடயமே முன்னிலை வகிக்கிறது. உலக அரங்கில் இலங்கை அரசை, ஜெனரல் சரத் பொன்சேகா காட்டிக் கொடுத்து விட்டாரென்பதை, சிங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் அதிக கரிசனை கொள்கிறார்கள் தற்போதைய ஆட்சியாளர்கள். அவ்வாறு தான் கூறவில்லையென்று சரத் பொன்சேகா, அரச மரத்தைத் தொட்டு சத்தியம் செய்தாலும் ஆளும் கட்சியினர் விடுவதாக இல்லை. சிங்கள மக்களின் வாக்குகள் சரத்திற்குச் செல்லாமல் தடுக்க இதைவிடப் பெரிய ஆயுதம் ஆட்சியாளர்களுக்கு இனிக் கிடைக்காது.

கப்பல்களைக் கட்டி இழுத்து வந்து புலிகளின் ஆயுதக் கப்பலென்று பிரசாரம் செய்தாலும் அதன் ரிஷிமூலத்தை வெளிப்படுத்துமாறு ரணில் விக்கிரமசிங்க கூறுவது, அரசாங்கத்திற்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. சர்வதேசப் புலிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுக்கிறோம் என்று கூறுவதன் ஊடாக, இனவாத அரசியலை உயிர்ப்புடன் வைத்திருக்க அரசு எத்தனிக்கிறது. இந்நிலையில், தமிழ் மக்களின் கணிசமான அளவு வாக்குவங்கியினை குறி வைத்து, பல பரிமாணங்களில் காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுவதைக் காணலாம். வவுனியா முகாம் மக்களை பார்வையிட இயலாமல் தமது தொகுதிகளுக்கு செல்ல முடியாமல் தடுப்பரண்களால் முடக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது அலரி மாளிகையின் வாசல் அகலத் திறந்துள்ளது. சரத் பொன்சேகாவுடனும், ஜனாதிபதியுடனும் மரதன் ஓட்ட பேச்சுவார்த்தைகளை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மேற்கொள்கிறார்.

வடக்குகிழக்கு இணைப்பு, மீள் குடியேற்றம், தொழில்வாய்ப்பு, இயல்பு வாழ்வு என பல பிரச்சினைகளை கூட்டமைப்பு முன்வைக்கிறது. புலம்பெயர் தமிழ் மக்களின் போராட்டங்கள் பலவற்றில் இணைந்து கொண்ட, சுயநிர்ணய உரிமையை கொள்கையளவிலாவது ஏற்றுக் கொண்ட புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னாவுடன் மட்டும் சம்பந்தர் பேசவில்லை. வெல்ல முடியாதவருடன் பேசிப் பயனில்லையென்று அவர் நினைத்திருக்கலாம். நண்பர்கள் யாரென்பதை இனங்காணும் வரலாற்றுத் தவறுகள் இன்னமும் நீடிப்பதையே இது புலப்படுத்துகிறது. இவை தவிர, 2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தமிழர் தரப்பின் அரசியல் தவறினை சுட்டிக்காட்டும் முயற்சியில் சம்பந்தன் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனை ஒரு சுயவிமர்சனமாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறாயின் ஜனவரி 4 ஆம் திகதி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெளியிடப்படவிருக்கும் அதிபர் தேர்தல் குறித்த நிலைப்பாட்டில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவான செய்தி வெளிவருமென்று சில அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதேவேளை இரு பிரதான வேட்பாளர்களையும், கூட்டமைப்பு ஆதரிக்கவில்லையென்கிற செய்தி வெளியாகலாமென இன்னொரு சாரார் கணிப்பிடுகின்றனர். இருவரையும் ஆதரிப்பதில்லையென கூட்டமைப்பு முடிவெடுத்தால், போட்டியிலிருந்து பின்வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்துள் சிவாஜிலிங்கம் தள்ளப்படுவாரெனவும் ஊகிக்கப்படுகிறது. ஆனாலும் யாழ். மாநகர சபைத் தேர்தலின் எதிரொலி, அதிபர் தேர்தலிலும் கேட்குமென்பதே பலரின் எதிர்பார்ப்பு. ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் மக்கள், அந்த ஒடுக்குமுறை நீடிப்பதை விரும்ப மாட்டார்கள். தமிழ் மக்களின் மனநிலையை கூட்டமைப்பின் முடிவு பிரதிபலிக்குமா என்பதை அடுத்த வாரம் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

-இதயச்சந்திரன்

நன்றி:வீரகேசரி

Comments