தமிழருக்கு வேண்டும் அரசியற் திடசித்தம்

சுற்றி வளைக்காமல் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் தமக்கான பொது வேட்பாளரை நிறுத்துதலே சரியான அரசியல் முடிவாக இருக்கும் என இக்கட்டுரை வாதிடுகிறது.

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் தமிழ் பேசும் மக்களுக்கான தெரிவுகள் எவை?

  • ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் டிசெம்பர் 17ம் திகதி நடைபெறுகிறது. இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் ஆளும் கூட்டணி வேட்பாளர் தற்போதய ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச, எதிர்ககட்சிகளின் பொது வேட்பாளர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகிய இருவரில் ஒருவரே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப் போகின்றனர். இவர்களில் வெற்றி பெறப்போபவரைத் தீர்மானிப்பதில் இத் தடவை தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தீர்க்கமான பாத்திரம் உண்டு. இதனால் இத் தேர்தலைத் தமிழ் பேசும் மக்கள் எவ்வாறு எதிர் கொள்ளப் போகின்றனர் என்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவாகும்.

    தற்போதய யதார்த்த நிலையில் பிரதானமான இரு சிங்கள வேட்பாளர்களும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தைத் தலைமை தாங்கி நிற்பவர்கள் எனும் அடிப்படையிலும், தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை நிராகரிப்பவர்கள் என்பதனாலும் இவர்களில் தமிழ் பேசும் மக்களுக்கு கொள்கைரீதியான தெரிவின்மை உண்டு. ஆனால் இந்த ஜனாதிபதிக்கான தேர்தல் முறையின் கீழ் தமிழ் பேசும் மக்களுக்கு இருக்கக் கூடிய ஆகக் குறைந்த பட்ச அனுகூலங்களைக் கருத்தில் எடுத்து செயற்படுதல் யதார்த்தத்தின்பாற்பட்டதாகும்.

    ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் 50.01 விகிதத்தைப் பெறும் வேட்பாளரே ஜனாதிபதியாக முடியும். அத்துடன் இந்த ஜனாதிபதித் தேர்தல் முறையில் மாற்று வாக்கு எனும் இன்னுமொரு அம்சமும் உண்டு. எந்த வேட்பாளுரும் 50.01 விகித வாக்குகளைப் பெறாவிடின் எவருமே முதலாவது சுற்றில் வெற்றி பெற முடியாது. இ;ச் சந்தர்ப்பத்தில் இரண்டாது சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது, முதல் இரண்டு இடத்திற்கும் வந்த வேட்பாளர்களுக்குக் கிடைத்த மாற்று வாக்குகளும் கணக்கிடப்பட்டே ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி தீர்மானிக்கப்படும். தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய இரு வேட்பாளர்களும் ஏறக்குறைய சமபலம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இந்நிலையில் தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் தீர்க்கமான பாத்திரத்தை வகிக்க முடியும்.

    தற்போதய சூழலில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்களுக்கு உள்ள தெரிவுகளை ஆராய்வதற்கு முன்னர் சிறிலங்காவின் ஆட்சியாளாகளைத் தீர்மானிக்கும் போது தமிழ் பேசும் மக்கள் கவனத்திற் கொள்ள வேண்டிய சில விடயங்களை கருத்திற்; கொள்ளல் அவசியமானதாகும். இந்த வகையில் நீண்ட இராஜதந்திர பாரம்பரியத்தைக் கொண்ட சிங்கள தேசம் அனைத்துலக சமூகத்தை வெற்றிகரமாகக் கையாண்டவாறு தமிழ் பேசும் மக்களின் தனித்துவ அடையாளங்களை அழித்து இனக்கபளீகரம் செய்யத்திட்டமிட்டுள்ளது என்பதனை நோக்குதல் பயன் தரும்.

சிங்கள இனக்கபளீகரக் கொள்கை:

  • பொதுவாகத் தேசிய வாதம் என்பது ஒரு ஜனநாயக உரிமைக்கான கோட்பாடாகும். ஆனால் சிங்களத் தேசிய வாதம் கொடிய பேரினவாதமாகத் திரட்சியடைந்து தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதனால் அவர்கள் தமது உரிமைக்காக போராட வேண்டியுள்ளது. எனவே இங்கு ஒடுக்குமுறைதான் முதலாவது. அந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஒடுக்கு முறையின் விளைவே ஆகும்.

    இலங்கையில் சிங்களவர் கூறும் ஜனநாயகம் என்பது சிங்கள ஜனநாயகமாகவே உள்ளது. சிங்கள இனவாதமானது வெறுமனே சிங்கள மயமாக்கல் என்னும் மேலெழுந்த வாரியான போக்கை மட்டும் கொண்டிருக்கவில்லை. அது சிங்கள மயமாக்கலைவிடவும் ஆழமான இனக்கபளீகரம் எனும் இனமாற்றுக் கொள்கையை ((Assimilation) கொண்டுள்ளது. இந்த இனக்கபளீகரக் கொள்கையானது இனப்படுகொலை, இன ஒடுக்கல், அரவணைத்தல், நிர்வாக ஏற்பாடுகள் ஆகிய பல்வேறு அம்சங்களுக் கூடாக நிறைவேற்றப்படுகிறது.

    இந்த வகையில் இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்சினை என்பது வரலாற்றுப் போக்கில் இனமாற்றம் நிகழாது தடுத்துக் கொள்வதற்கான அடிப்படையை முதலாவதாக கொண்டுள்ளது. ஆனால் சிங்கள ஆட்சியாளர் உள்நாட்டு, வெளிநாட்டு, சர்வதேச, பல்நாட்டு நிறுவனங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் தமது இனக் கபளீகரக் கொள்கையை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறார்கள்.

    தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைக்காக போராடுவதை இனவாதம் என்று இழிவுபடுத்துகிறார்கள். இலங்கையில் இனவாதம் பேசாது அனைத்து இனங்களும் ஒத்துவாழ வேண்டும் என்று சொல்கிறார்கள். இலங்கைத்தீவில் சிறுபான்மையினர் என்று எவருமே இல்லை என்றும் தற்போது கூறுகின்றார்கள். ஆனால் அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முதன்மை ஸ்தானம் உண்டு என்றும், அதைப் பேணிப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் அரசின் கடமை என்றும் சட்டத்தால் எழுதி சிங்கள பௌத்த இனவாதத்தை கடைப்பிடித்துக் கொண்டு ஏனைய இனங்களை தமது தனித்துவத்தை பேண வேண்டாம் என்று கூறி அதனை இனவாதமாக இழிவுபடுத்துவது இலங்கை அரசியலில் அனைத்து சிங்கள கட்சிகளினதும் நடைமுறையாக உள்ளது.

சிங்கள ஆட்சியாளர்களின் இராஜதந்திரப்பாரம்பரியம்:

  • 2300 ஆண்டுகளுக்கு குறையாத நீண்ட இராஜதந்திர பாரம்பரியத்தை சிங்கள ஆட்சியாளர் கொண்டுள்ளனர். இந்தியாவிற்கு அருகில் உள்ள சிறிய தீவு என்ற வகையில் பெரிய அந்நிய அரசுகளிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு தந்திரத்தையே தமது பெரும் பலமாக சிங்கள ஆட்சியாளர் வளர்த்தெடுத்துள்ளனர். இந்த வகையில் உள்நாட்டு இனங்களையும் வெளி அரசுகளையும் மிகத் தந்திரமாக கையாண்டு தொடர்ச்சியாக சிங்கள ஆட்சியாளர் வெற்றிவாகை சூடி வருகின்றனர். சுமாராக 2500 ஆண்டுகளாய் இந்தியாவால் வெற்றிகொள்ளப்பட முடியாத அளவிற்கு பெரிய இந்தியாவை தமது தந்திரத்தால் வென்று தக்க வைக்கும் இராஜதந்திர திறன் சிங்கள ஆட்சியாளர்களிடம் உண்டு.

    குறிப்பாக ஒரு நூற்றாண்டுக்கு மேலாய் அனைத்துத் தமிழ்த் தலைமைகளையும் நயத்தாலும் பயத்தாலும் தொடர்ந்து சிங்கள ஆட்சியாளர் தோற்கடித்து வருகின்றனர் என்பது வெள்ளிடை மலையான உண்மை. சேர். பொன்.இராமநான் சகோதரர்கள் தொடக்கம் இற்றை வரை தோல்வியின் கதை நீள்கிறது. இந்த உண்மையை புரிந்துகொள்வதில் இருந்துதான் தமிழ் பேசும் மக்கள் தமது அனைத்து வகை அரசியல் திட்டமிடல்களையும் மேற்கொள்ள வேண்டும்.

தேசிய இனப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினையா?

  • உண்மையில் தேசிய இனப்பிரச்சினை என்பது உள்நாட்டு பிரச்சினை அல்ல. அது எப்பொழுதும் ஒரு சர்வதேசப் பிரச்சினையாகும். இன்றைய உலக ஒழுங்கில் சர்வதேச உறவென்பது சர்வ அரச உறவாக உள்ளதே தவிர சர்வ தேசியங்களின் உறவாக இல்லை. ஆதலால் அரசு உள்ள இனம் அரசற்ற இனத்தைவிடவும் பலம் வாய்ந்த நிலையிலும் அதிகமான வாய்ப்புக் கொண்;ட நிலையிலுமே காணப்படுகின்றது. அரசற்ற தமிழ் பேசும் மக்கள் அரசுள்ள சிங்கள இனத்திற்கு எதிராக போராடும்போது சிங்கள இனம் தனது அரச பலத்தைப் பயன்படுத்தி எனைய அரசுகளின் உறவை வெற்றிகரமாக தன்பக்கம் பயன் படுத்தும் நிலை வெளிப்படையாய் உள்ளது. அதிலும் சிங்கள இராஜதந்திரிகள் இதில் மேலும் மெருகுடன் செற்படக்கூடிய இராஜதந்திரப் பாரம்பரித்;தைக் கொண்டுள்ளனர் என்பதையும் கணக்கில் எடுத்தால் நாம் மேலும் அதிக திறமையுடனும் அதிக அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் என்பது புலனாகும்.

    இன்றைய சிறிலங்கா அரசின் யுத்த வெற்றியானது வெறுமனே ஒர் இராணுவ வெற்றியல்ல. அது உண்மையில் சர்வதேச உறவுகளை கையாண்ட இராஜதந்திர விதம் பற்றிய ஒர் அரசியல் வெற்றியாகும். ராஜபக்ஷவின் யுத்தத்திற்கான வெளியுறவுக் கொள்கையென்பது உண்மையில் ஜே.ஆர்.விட்டுச் சென்ற வெளியுறவுக் கொள்கையின் தளத்தில் உருவான அடுத்த கட்டமே ஆகும். அதாவது இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகக்கும் இடையில் ஜே.ஆர். தனது மெருகான இராஜ தந்திரத்தால் இராணுவ ரீதியான மோதலை உருவாக்கி இரு பாரம் பரிய நண்பர்களான இந்தியாவையும் ஈழத்தமிழரையும் பகை நிலைக்கு தள்ளினார். அந்த பகையை சொத்தாகக் கொண்டே இராஜபக்ஷ தனது வெளியுறவுக் கொள்கையை இலகுவாக கடைப்பிடிக்க முடிந்தது. மேலும் ஆசியப் பரிமாணத்தில் சீனா, பாக்கிஸ்தான் என்பனவற்றையும் இப்பின்னணியில் வெற்றிகரமாக இணைக்கும் போக்கை ராஜபக்ஷ பின்பற்றினார். ஐ.தே.க.வின் மேற்கதேய பரிமாணத்தை விடவும் இது ராஜபக்ஷவுக்கு மேலும் செயல் பூர்வமானதாக அமைந்தது. அதேவேளை மேற்குலகிற்கு ராஜபக்ஷ அரசாங்கத்தை பிடிக்காது போனாலும் இலங்கை அரசை எதிர்கால நோக்கில் அணுக வேண்டிய தேவையின் பொருட்டும் தமது உலகளாவிய நலன்களின் பொருட்டும் ராஜபக்ஷாவை ஆதரிப்பது தவிர்க்க முடியாது அமைந்தது.

    இவ்வாறு நிலைமைகளைத் தமக்குச் சாதகமாக்கி கொள்ள சிங்கள தலைவர்களால் இலகுவில் முடிகிறது. இனிவரும் தேர்தலில் சில புதிய அம்சங்கள் வெளியுறவுக் கொள்கையில் பிரதிபலிக்க உள்ளது. ஆதலால் வெளியுறவுக் கொள்கை சார்பில் இரு ஜனாதிபதி வேட்பாளர்களையும் சீர் தூக்கிப் பார்த்தும் எமது திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது.

    இவற்றைக் கருத்திற்கொண்டு எண்ணிக்கையில் குறைந்தவர்களான தமிழ்; பேசும் மக்கள் அதிக தந்திரங்களையும் கிடைக்க கூடிய வாய்ப்புக்களையும் திறமையாக பயன்படுத்தி தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளோம். இந்த வகையில் ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு அணுகலாம் என ஆராய வேண்டியுள்ளது.

தமிழ் பேசும் மக்கள் முன்னால் உள்ள தெரிவுகள்:

தற்போதய நிலையில் தமிழ் பேசும் மக்கள் முன்னால் ஜனாதிபதித் தேர்தலிலை எதிர் கொள்வது தொடர்பாக 4 தெரிவுகள் உள்ளன:

1. தேர்தலைப் பகீஸ்கரித்தல்.

2. இரு முதன்மை வேட்பாளர்களில் ஒருவரை நிபந்தனை அடிப்படையில் ஆதரித்தல்.

3. இனச் சமத்துவத்தை தமிழ் பேசும் மக்களின் நோக்குநிலையில் நின்று அங்கீகரிக்கக்கூடிய கலாநிதி விக்கிரபாகு கருணாரத்தினவினை கொள்கை நிலையில் நின்று ஆதரித்தல்.

4. தமிழ் பேசும் மக்களின் பொது வேட்பாளரை நிறுத்தல்.


இந் நான்கு தெரிவுகளில் தமிழ் பேசும் மக்கள் எதனைத் தேர்வு செய்யப் போகிறார்கள்? எத் தெரிவினை மேற்கொள்ளல் அவர்களுக்கு கூடுதல் பயன் தரும். சுற்றி வளைக்காமல் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் தமக்கான பொது வேட்பாளரை நிறுத்துதலே சரியான அரசியல் முடிவாக இருக்கும் என இக்கட்டுரை வாதிடுகிறது.

தேர்தலைப் பகீஸ்கரித்தல் நன்மையானதா?

  • சிறிலங்காவின் ஜனாதிபதித் தோதலில் பங்கு பெறுவது என்பது சிங்களத் தேசிய நீரோட்டத்தில் பங்கு பெறுவதாக அமைந்து விடும் என நீண்ட காலமாக அர்த்தப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மேலும் சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் தேர்தலாகவும், தமிழ் பேசும் மக்களில் இருந்து எவருமே வெல்ல முடியாத தேர்தலாகவும் ஜனாதிபதித் தேர்தல் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இவை பகிஸ்கரிப்பு சிந்தனைக்கு அடித்தளமாக உள்ளன. சிங்கள யாப்பின் கீழான தேர்தல்களை பகிஸ்கரிப்பதாயின் பராளுமன்றத் தேர்தலையும் கூடவே பகிஸ்கரிக்க வேண்டும். ஆனால் அதனை நாம் பகிஸ்கரிக்காது கடந்த தேர்தல்களில்; போட்டியிட்டுள்ளோம் என்பதையும் இனிவரும் தேர்தலில் போட்டியிடவுள்ளோம் என்பதையும் இங்கு கவனித்தல் பொருந்தும்.

    தேர்தலை தமிழ் பேசும் மக்கள் பகிஸ்கரிப்பதன் மூலம் முதன்மை வேட்பாளர்களில் பலமான பக்கத்திற்கு அவர்கள் ஆதரவளித்தாகவே அமைந்துவிடும். ஆதலால் நடுநிலை என்பது இறுதி அர்த்தத்தில் வெல்லக் கூடியவருக்கு சேவை செய்ததாகவே அர்த்தப்படும். எனவே ஒருவருக்கு வாக்களிப்பதன் மூலம் குறைந்த பட்ச சாதக நிலையை உருவாக்க இடமிருந்தால் இதனை மேற்கொள்வதில் தவறில்லை.

    ஆனால் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் இருவரிடமும் மோதகத்திற்கும் கொழுக்கட்டைக்கும் இடையிலான வேறுபாடே உண்டு. இருவருமே உள்ளடக்கத்தில் தமிழ் பேசும் மக்களால் ஏறறுக்; கொள்ளப்பட முடியாதவர்கள். அதேவேளை பகிஸ்கரிப்பைச் செய்தால் ஒரு பலவான் இதில் முதலாவது சுற்று தேர்தலில் வெற்றி பெற்று விடுவார். தமிழ் பேசும் மக்களும் எந்தவித அரசியல் முக்கியத்துவம் அற்றவர்களாக மேலும் சிறுமைப்படுவதினைத் தவிர பகீஸ்கரிப்பு மூலம் வேறு எதனையும் சாதிக்கப் போவதில்லை.

தமிழ் பேசும் மக்களின் பொது வேட்பாளரை நிறுத்துவதின் நன்மைகள் எவை?

  • ஒரு தமிழ் பேசும் வேட்பாளரை போட்டிக்கு நிறுத்தி தமிழ் பேசும் மக்களின்; வாக்குக்களை அவருக்கு அளித்தால் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கையோடு பார்க்கும் போது முதலாவது சுற்று வாக்கில் மேற்படி இரு தலைவர்களும் 50.01 என்ற வாக்கை பெறமுடியாது தோல்வி அடைந்து பின்பு இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஒருவர் வெற்றிபெற முடியும்.

    இதில் உள்ள குறைந்த பட்ச இலாபம் என்னவெனில் தமிழ் பேசும் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி என்ற அவப்பெயரும் முதலாவது சுற்று வாக்கெடுப்பில் வெல்லாத ஜனாதிபதி என்ற சிறுமையும்; அவருக்கு கிடைக்கும். இது உலக அரங்கில் ஜனாதிபதியின் மதிப்புக்கு பங்கமாய் அமைவதுடன் தமிழ் பேசும் மக்களுக்கான ஒரு அங்கீகாரமாகவும் அமைந்து விடும்.

    பகிஸ்கரிக்காது ஒரு வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் பல அனுகூலங்கள் உண்டு. தேர்தல் வாயிலாக தமிழ் பேசும் மக்கள் தமது ஒற்றுமையும் பலத்தையும் உலகிற்கும் அரசியல் அரங்கிலும் வெளிப்படுத்த முடியும். முதலாவதாக வடக்கும் கிழக்கும் ஒரு குடையின் கீழ் உண்டு என்பதை நடைமுறையில் காட்டுவதற்கான வாய்ப்பும் நமக்கு உண்டு. அரசியல் பலத்தை ஒன்று திரட்டுவதன் மூலம் அரசியல் வெற்றிடம் இல்லை என்ற தலைமைத்துவ ஆளமையையும் நிரூபிக்க முடியும். இதன் மூலம் ஒர் அரசியல் சக்தியாகி பேரம் பேசும் வலுவை உயர்த்த முடியும்.

    இவ்வாறு வலுவை நிரூபிக்கும் போது சிங்கள வேட்பாளர்கள் இத் தலைமையை நாட வாய்ப்பேற்படும். மாற்று வாக்கு எனும் முறையிருப்பதனால் முதலாவது வாக்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் பொது வேட்பாளருக்கு அளித்து இரண்டாவது வாக்கை பேரம் பேசலின் அடிப்படையில் பிரயோகிக்க இடமுண்டு. உதாரணமாக மீள் குடியேற்றம், சிங்கள குடியேற்றத் தடுப்பு, 20,000 போராளிக் கைதிகளுக்கான பொது மன்னிப்பு போன்ற மேலும் பல விடயங்களை குறிப்பிடலாம். மேலும், யாராவது ஒரு சிங்கள வேட்பாளருக்கு மாற்று வாக்கை அளிப்பது என்ற முடிவை எடுக்கும் போது அயல் நாட்டு, சர்வதேச உறவு (சர்வ அரச உறவு) போன்ற விடயங்களை குறித்த வேட்பாளருடைய நிலைப்பாடுகளுடன் கருத்தில் எடுத்து தீர்மானிக்க வேண்டியதும் அவசியம்.

    மாற்று வாக்கை பயன்படுத்தும் இடத்து முதலாவது சுற்றில் தோல்வியடையும் ஒரு சிங்கள வேட்பாளர் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெறும் போது மாற்று வாக்கு அளிக்கும் தமிழ் பேசும் மக்களின் பலம் உலகரங்கில் பெரிதாக தெரியவருவதுடன் மாற்று வாக்கான தமிழ் பேசும் மக்களின் வாக்கால் வெற்றி பெற்ற ஜனாதிபதி தமிழ் பேசும் மக்களுக்குக் கடமைப்பட்டவராகத் தோற்றமளிப்பார்.

மாற்று வாக்கின் மகிமை:

  • மாற்று வாக்கின் மகிமையினை மதிப்பிட 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து பார்ப்போம். கடந்த தேர்தலில் 1 கோடியே 33 இலட்சத்து 27 ஆயிரத்து நூற்று அறுபது (13,327,160) வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 9,826,778 வாக்காளர்கள் வாக்களிக்க ‐ மகிந்த இரபஜபக்ச 4,887,152 வாக்குகளையும் (50.29 விகிதம்), ரணில் விக்கிரமசிங்க 4,7660,366 வாக்குகளையும் (48.43 விகிதம்) பெற்றிருந்தனர். கடந்த தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் தேர்தலைப் பகிஸ்கரித்திருந்தனர். யாழ் தேர்தல் மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்த 701,938 வாக்காள்ர்களில் 8524 வாக்களர்கள் ‐ ஏறத்தாழ 1.2 விகித வாக்காளர்களே வாக்களித்திருந்தனர். வன்னித் தேர்தல் மாவட்டத்தில் ஏறத்தாழ 34 விகித வாக்காளர்களும் மட்டக்களபு;பு மாவட்டத்தில் 50 விகிதத்திற்கும் குறைவான வாக்காளர்களும் திருகோணமலையில் ஏறத்தாழ 60 விகித வாக்காளர்களும் வாக்களித்திந்தனர். இவ்வாறு வாக்களித்தவர்களில் பெரும்பான்மையினர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே வாக்களித்திந்தனார்.

    ஒரு பேச்சுக்கு கடந்த தேர்தலைப் பகிஸ்கரிக்காது தேர்தலில் ஒரு தமிழ் பேசும் வேட்பாளரை நிறுத்தியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பததைக் கற்பனை செய்து பார்ப்போம். தமிழ் பேசும் வேட்பாளர் குறைந்த பட்சம் 8 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருக்க முடியும். பகிஸ்கரிப்பு செய்தவர்களில் 4 இலட்சம் பேர் கூடுதலாக வாக்களித்திருப்பார்கள். இப்படியாயின் தேர்தலில் போட்டியிட்ட எவருமே 50 விகிதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்றிருக்க முடியாது. இது ஒரு சிறிய கணக்கு. பகிஸ்கரிக்காது விட்டடிப்பின் மொத்தமாக அளிக்கப்பட்டிருக்கக்கூடிய வாக்குகளின் தொகை ‐ (9,826,778 10 400,000) ஸ்ரீ 1,0226,778. அதில் கூடுதல் வாக்குகள் பெற்ற மகிந்த இரபஜபக்ச பெற்றிருக்கக்கூடிய விகிதம் ‐ 47.8 விகிதம். ரணிலுக்கு இன்னும் குறைவாகத் தான் கிடைத்திருக்கும்.

    இவ்வாறு அமைந்திருப்பின் முதற்சுற்று வாக்கு எண்ணிக்னையின் போது எவருமே ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருக்க முடியாது. அப்போது மாற்று வாக்கின் மகிமை அனைவருக்கும் புரிந்திருக்கும்.

    2005 தேர்தல் தொடர்பாகக் குறிப்பிடப்பட்ட விடயங்கள் இத் தடவையும் பொருத்தமானவையே. இத் தடவை ஒரு தமிழ் பேசும் பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படின் அவர் குறைந்த பட்சம் 8 இலட்சம் வாக்குகளைப் பெறுதல் சாத்தியமானது. இதன் மூலம் இரண்டு சிங்கள முதன்மை வேட்பாளர்களும் 50.01 விகித வாக்கைப் பெறமுடியாது தடுக்க முடியும். இதனால் முதற் சுற்றில் ஜனாதிபதியைத் தெரிவு செய்ய முடியாத நிலையினை உருவாக்க முடியும். இது தமிழ் பேசும் பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படுவதன் மூலம் நாம் அடையக்கூடிய முதல் அரசியல் வெற்றி.

வெற்றியைத் தீர்மானிப்பது எவ்வாறு?

  • ஜனாதிபதித் தேர்தல் வெற்றியைத் தீhமானிக்கும் சக்தியாக விளங்கித் தமிழ் பேசும் மக்கள் தமது அரசியல் பலத்தைத் வெளிப்படுத்துவது எவ்வாறு? இதற்கான அணுகுமுறை எவ்வாறு அமைய வேண்டும்?

    தமிழ் பேசும் மக்கள் தேர்தல் வெற்றியைத் தீhமானிக்கும் சக்தியாக விளங்குவதும் முக்கியத்துவம் வாயந்தது. இதனால் நாம் இத் தடவை தேர்தலைப் பகிஸ்கரிக்கக்கூடாது. கொள்கை நிலையில் நின்று, இனச் சமத்துவத்தை தமிழ் பேசும் மக்களின் நோக்குநிலையில் நின்று அங்கீகரிக்கக்கூடிய கலாநிதி விக்கிரபாகு கருணாரத்தினவினை ஆதரித்தலும் நடைமுறையில் பலன் எதனையும் தராது.

    இத் தடவை போட்டியிடும் வெற்றி பெறக்கூடிய இரு முதன்மை வேட்பாளர்களும் தமிழ் பேசும் மக்கள் தமது முதன்மை வாக்குகளை அளிக்கத் தகுதியற்றவர்கள். அதே சமயம் யார் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைப் பெறுகிறார்களோ அவரே வெற்றி வாய்ப்பினைப் பெறுவார். இதனால் தமிழ் பேசும் மக்கள் தமது பொது வேட்பாளருக்குத் தமது முதன்னை வாக்கை அளித்து, தமது மாற்று வாக்கை பேரம் பேசுதல் அடிப்படையிலோ அல்லது அரசியல் கணிப்பின் அடிப்படையிலோ எவருக்கு அளிப்பது எனத் தீர்மானிக்கலாம்.

தமிழ் பேசும் மக்களின் ஒருமைப்பாடு:

  • மேற்படி விடயங்களை கருத்திற் கொண்டு ஒரு தமிழ் பேசும் மக்களின் பொதுவேட்பாளரை நிறுத்தி தமிழ் பேசும் மக்கள் மத்தியிலான ஒருமைப்பாட்டையும் பலத்தையும் வளர்த்து எடுப்பது எமது தலையாய பணியாகும். அல்லது கட்டாறாய் அனைத்தும் ஓடிவிடும்.

    இவ்வாறு ஒரு தலைமை தேர்தல் மூலம் தன்னை ஸ்தாபிப்பதற்கு ஊடாக வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் உரிய வேட்பாளர் பட்டியலை தயாரிக்கவும், பலமாக களத்தில் இறங்கவும் முடியும். இல்லையேல் பல்வேறு சக்திகளும் துண்டு துண்டாக உடைந்து நாடாளுமன்ற ஆசனங்களைப் பிரித்து தமிழ் பேசும் மக்களைப் பலவீனப்படுத்துவதுடன் சில சக்திகள் இலகுவாக விலைபோய்விடவும் முடியும். இவற்றைத் தடுக்க வேண்டும் என்றால் இவ் ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதன் மூலம் தலைமைத்துவத் தளத்தை ஸ்தாபித்து விடலாம். அத்துடன் மக்களுக்கும் எதிர்காலத்திற்கான உளஅரசியல்; பலத்தையும் நம்பிக்கையையும் உருவாக்கலாம்.

    தற்போது இரு பெரும் கட்சிகளிடையே சம பலம் ஏற்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் பலமான ஆசனங்களை கொண்டிருக்கும் போது நாடாளுமன்றத்திலும் தாக்கமான பாத்திரம் வகிக்க முடியும்.

தமிழ் பேசும் பொது வேட்பாளர் நிறுத்தப்படாது விடத்து தமிழ் பேசும் மக்கள் அரசியல் அனாதைகளாய் யாரோவொரு சிங்கள இனவாத தலைவனிடம் கையேந்திப் பின்செல்ல வேண்டிய நிலை ஏற்படும். நமக்கு இப்போது தேவைப்படுவது ஜனநாயகம், ஐக்கியம், அரசியற் திடசித்தம் (Political will) என்பனவாகும். இத்தேர்தலில் ஒரு வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் இவற்றை வளாத்தெடுக்க முடியும்.

பலம் குறைந்த ஒரு மக்கள் கூட்டம் அரசியல் கூர்மையுடனும் சாணக்கியத்துடனும் தீர்க்கதரிசனத்துடனும் தனது அரசியல் முடிவுகளை உரிய நேரத்தில் எடுப்பது அம் மக்கள் கூட்டத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமையும். இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு ஜனாதிபதித் தேர்தலில் தமது பொது வேட்பாளரை நியமிப்பதற்கு இன்னனும் 12 நாள் அவகாசமே உண்டு. ஆனால் மாற்று வாக்கை அளிப்பதா? இல்லையா? அல்லது யாருக்கு அளிப்பது என்பதைத் தீர்மானிப்பதற்கு இன்னும் 42 நாள் அவகாசம் உண்டு. தமக்குக் கிடைத்துள்ள வரலாற்று வாய்ப்பை தமிழ் பேசும் மக்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களா அல்லது தவறவிடப் போகிறார்களா என்பதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

செ.தனபாலசிங்கம்

Comments