வடக்கு மக்கள் மீது திரும்பும் ஜனாதிபதி மகிந்தவின் பார்வை

ஜெனரல் சரத் பொன்சேகாவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் களமிறங்கக் கூடிய ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்காளர்களின் வாக்குகள் தான் மிகவும் முக்கியமானவையாக இருக்கப் போகின்றன. வெற்றியைத் தீர்மானிப்பதற்கான சக்தியாக தமிழ் வாக்காளர்கள் இருக்கப் போகின்றனர் என்ற கருத்து வலுவாகக் காணப்படுகிறது. இந்த நிலையில் அரசாங்கத்தினதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினதும் கவனம் வடக்கில் உள்ள தமிழ்மக்கள் மீது திரும்ப ஆரம்பித்துள்ளது.

கடந்த வாரம், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியிடங்களுக்குப் பயணம் செய்வதற்கு பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறையை அரசாங்கம் நீங்கியிருக்கிறது. இது ஜனாதிபதி மகிநத ராஜபக்ஸவின் பிறந்தநாள் பரிசு என்று அறிவித்திருக்கிறார் வட மாகாண ஆளனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி.
அத்துடன் அடுத்த மாதத் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் சென்று இலவசப் பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைக்கவும் திட்டமிட்டிருக்கிறார் அவர்.
இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூடப்பட்டிருந்த வவுனியா தடுப்பு முகாம்களின் கதவுகள் தேர்தலுக்காக திறந்து விடப்பட்டிருக்கின்றன.
இபபடி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இப்போது வடக்கின் மீது தனது கவனத்தைத் திருப்பி விட்டிருக்கிறார்.

தமிழ் மக்களையும், தமிழ்க் கட்சிகளையும் தன்வசப்படுத்தி- அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிகளைத் தேட ஆரம்பித்திருக்கிறார் அவர்.
ஜனாதிபதித் தேர்தல் அவருக்குச் சவால் மிக்கதாக அமையலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இத்தகைய நிலையில் தான், வடக்கு நோக்கித் தனது முழுக் கவனத்தையும் திருப்பி விட்டிருக்கிறார் ஜனாதிபதி மகிந்த. இந்த மாதத் தொடக்கத்தில் துணுக்காய் மற்றும், முழங்காவில் பகுதிகளுக்கு சென்றிருந்தார் அவர்.

துணுக்காயில் மீள்குடியேற்றப்பட்டு வரும் சுமார் 1200 பொதுமக்களுடன் 65வது டிவிசன் தலைமையத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கலந்துரையாடினார். “நான் உங்களின் தோழன்;- சொந்தக்காரன்;. நீங்கள் என்னை நம்பலாம்;. உங்களுக்கு சகல வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும்.” இப்படி மீள்குடியேற்றப்படும் மக்களின் உணர்வுகளைத் தொடும் வகையில் உரையாடியிருந்தார் மகிந்த. மீளக்குடியேறி வரும் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை உறுதிப்படுத்திக் கொள்வதற்கே இந்தச் சந்திப்பு.

வடக்கில் உள்ள தமிழ்மக்களின் வாக்குகள் தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அடுத்த குறி. தனது எதிர்கால அரசியல் வாழ்வை இவர்கள் மூலம் கட்டியெழுப்ப முனைகிறார் அவர். ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களமிறங்கினால்- அது ஜனாதிபதி மகிந்தவுக்குக் கடும் நெருக்கடியாக அமையும். ஜெனரல் சரத் பொன்சேகா தென்னிலங்கையில் சிங்கள மக்களின் துட்டகெமுனுவாகச் சித்திரிக்கப்படுபவர் என்பதால்- போர் வெற்றி என்ற பூச்சாண்டி ஜனாதிபதி மகிந்தவுக்கு உதவப் போவதில்லை. எனவே தான் அவர் வடக்கு மக்களைத் தன் பக்கம் இழுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு கட்டமே துணுக்காய் பகுதிக்கு அவர் மேற்கொண்ட பயணம். 2005இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெறக் காரணமாக இருந்தது வட-கிழக்குப் பகுதி தமிழ்மக்களே. புலிகளின் விருப்பத்துக்கேற்ப தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணித்ததால் மகிந்த ராஜபக்ஸவால் வெற்றி பெற முடிந்தது.
அதுபோல இந்த முறையும் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணித்து விடக் கூடாது என்பதிலும், தனக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ.

வடக்கில் மட்டும் சுமார் ஒன்பதரை இலட்சம் தமிழ் வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களில் அரைவாசிப் பேரின் ஆதரவைப் பெற்றுக் கொணடாலே ஜனாதிபதி மகிந்தவுக்கு வெற்றி உறுதி. ஜனாதிபதித் தேர்தல் நெருக்கமான போட்டியைக் கொண்டதாகவே அமைவது வழக்கம். எனவே வடக்கில் உள்ள வாக்காளர்கள் தான் துரும்புச் சீட்டாக இருக்கப் போகின்றனர். அதேவேளை, தமிழ் மக்களின் வாக்குகளைத்; தன்பக்கம் இழுத்துக் கொள்வது ஜனாதிபதி மகிந்தவுக்கு ஒன்றும் இலேசுப்பட்ட காரியமாகவும் இருக்காது. வன்னியில் நிழத்தப்பட்ட போர், அதன் விளைவுகள் என்பன ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்குச் சாதகமாக இருக்காது. அதேவேளை, இறுதிக் கட்டப் போரின் போது புலிகள் தரப்பில் கையாளப்பட்ட அணுகுமுறைகளை தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்கு மகிந்த ராஜபக்ஸ முனையலாம்.

ஆனால், வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்திருப்பது இந்த முயற்சிக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தநிலையில் தான் வன்னி மக்களின் வாக்குகளைத் இழுப்பதற்காக துரிதமாக மீள்குடியமர்வுகளை மேற்கொள்ளப்படுகிறது. அதேவேளை, யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி, புனர்வாழ்வு என்று புதிய பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. வடக்கில் யாழ்ப்பாணம் தான் மிகப் பெரிய வாக்கு வங்கியைக் கொண்டது. ஏழு இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் கவனத்தையும் வாக்குகளையும், கவர்வதற்காகவே அமைச்சர்கள் அங்கு அணிவகுத்துச் செல்கின்றனர். பத்து அமைச்சர்களை அங்கு அனுப்பி, பிரதேச செயலகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒருவரைப் பொறுப்பாக நியமித்து அவர்களின் தலைமையில் அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. அந்த அமைச்சர்கள் அதற்குப் பிறகு யாழ்ப்பாணத்துக்கே போகவில்லை.

ஒரு பக்கத்தில் ஈபிடிபி ஊடாக வடக்கு மக்களின் வாக்குகளைக் கவரும் நடவடிககையில் இறங்கியுள்ள ஜனாதிபதி மகிந்த தனிப்பட்ட ரீதியிலும் அதற்கான முயற்சிகளை எடுத்திருக்கிறார். இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அவர் வலை விரிப்பதாகத் தெரிகிறது. அண்மையில் வவுனியா தடுப்பு முகாம்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று காண்பித்து- எல்லாமே திருப்தியாக உள்ளது என்று அறிக்கை விடச் செய்திருக்கிறார். மற்றொரு புறத்தில் அலரி மாளிகைக்கே போய் பிறந்தநாள் வாழத்துத் தெரிவிக்கும் அளவுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொண்டிருக்கிறார் கூட்டமைப்பு எம்;.பி சிவநாதன் கிஷோர். இன்னொரு எம்.பியான சிறிகாந்தா அரசாங்கத்தின் செயலை அவ்வப்போது தட்டிக் கொடுத்து பாராட்டி வருகிறார்.

இவையெல்லாம் வடக்கின் வாக்கு வங்கி மீது குறிவைக்கும் ஜனாதிபதி மகிந்தவுக்கு இனிப்பான விடயங்கள். இந்த அரசியல் சதுரங்க ஆட்டம் பற்றிய தெளிவு பெரும்பாலான தமிழ்மக்களுக்கு இருக்கிறது. எனவே அடித்து விட்டு இனிப்புக் கொடுத்து சமாளிக்கும் இந்த உத்தி அவர்களிடம் எந்தளவுக்கு எடுபடும் என்பதில் நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றன.

சத்திரியன்-

Comments