இலட்சியக் கனவு கலையாது



விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால் தமிழர்களின் தமிழீழக் கனவு கலைந்துபோய்விடும் என்ற சிங்கள பேரினவாதத்தினதும், வல்லாதிக்க சக்திகளினதும் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கின்றார்கள் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள்.

தமிழீழம் என்பது விடுதலைப் புலிகளின் இலட்சியக் கனவு. அந்த மண்ணை அடையும் கனவு தமிழ் மக்களுக்கு இல்லை. தமிழ் மக்கள் சிங்கள தேசத்துடன் இணைந்து வாழவே விரும்புகின்றார்கள் என்று சொல்லி வருகின்றது சிறீலங்கா அரசும் அதன் இனவாத சக்திகளும். தங்களின் இந்தக் கருத்திற்கு வலுச்சேர்க்க தங்களுடன் ஒட்டுண்ணியாக ஒட்டியிருக்கும் ஒட்டுக் குழுக்களையும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றார்கள். ஆனால், அவர்களின் பிரச்சாரங்களுக்கு ஆப்பு வைத்து வருகின்றனர் புலம்பெயர்ந்த தமிழர்கள். தாயகத்தில் தமிழ் மக்களின் பேச்சுரிமை, நடமாடும் உரிமை, கருத்துரிமை என அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன.

திறந்தவெளிச் சிறையில் அடக்குமுறைக்குள், உயிரச்சுறுத்தலுடன் வாழும் அந்த மக்களிடம் இருந்து தமிழீழம் என்ற கருத்து எழ முடியாது என்பது யாவரும் உணரக்கூடியது. ஆனால், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் கருத்துக்களை சொல்வதற்கு இங்கு தடையேதும் இல்லை. அதனால், தங்கள் விருப்புக்களை அவர்கள் ஆணித்தரமாக எடுத்து வைக்கின்றார்கள். இது சிறீலங்காவின் பொய்யான பரப்புரைகளுக்கும், செயற்பாடுகளுக்கும் அதன் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றது. விடுதலைப் புலிகளின் ஆயுத வழிப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, 1976ம் ஆண்டு தனித் தமிழீழமே தமிழர்களின் முடிவு என்பதை இந்த உலகிற்கு அறிவித்திருந்த தமிழ் மக்கள், இப்போது விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகின்ற 2009 இலும் தங்களது கனவு தனித் தமிழீழம் அமைப்பதே என்பதை தங்கள் வாக்குகளினால் இந்த உலகிற்கு அறைந்து சொல்லி வருக்கின்றார்கள்.

நோர்வே, பிரான்ஸ் என புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் தமிழீழத்திற்கான ஆதரவு பெருகிக்கொண்டிருக்கின்றது. பிரான்சில் கடந்த சனியன்று வாக்களிப்பு நிலையத்திற்கு முதலாளாகச் சென்று தாங்கள்தான் தமிழீழத்திற்கு ஆதரவான முதல் வாக்கை அளிக்கவேண்டும் என்று முண்டியடித்த மக்களையும், தள்ளாடும் வயதிலும் தளராது தமிழீழ விடுதலை தாகம் எனச் சொல்லும் அளவிற்கு வாக்களிக்க வந்திருந்த வயோதிபர்களையும், தமிழீழ மண்ணில் பிறக்காத போதும் தங்கள் தாய் மண்ணை அடைவதே தங்கள் இலக்கென்று கூறி வாக்களிக்க வந்ததுமட்டுமல்ல, இந்த வாக்களிப்பை முன்னின்று நடத்திய இளையோர்களையும் பார்த்தபோது தமிழ் மக்களின் கனவு கலையாது,

ஆயிரமாயிரம் மாவீரர்களும், அந்த மண்ணுக்காக வீழ்ந்த மக்களும் கொண்ட கனவுகள் ஒருபோதும் கலைந்துபோய்விடாது என்பதை உணர்த்தியிருந்தது. ஆனால், ஜனநாயக வழியில் நடைபெறவிருந்த இந்தத் தேர்தலைக்கூட நடத்த விடாமல் தடுத்து நிறுத்த சிங்கள தேசம் தனது தூதரகம் மூலமாக தடுக்க மேற்கொண்ட மிகவும் கேவலமான, வெட்கக்கேடான பல நடவடிக்கைகளையும், முயற்சிகளையும் முறியடித்து தேர்தலில் மக்கள் உற்சாகத்தோடு கலந்துகொண்டு வாக்களித்தமையானது தமிழர்களின் தாகம் என்றுமே தணியாது என்பதைப் பறைசாற்றியுள்ளது. அத்துடன், விடுதலைப் புலிகளே தமிழீழத்தை கோருகின்றனர் என்ற சிறீலங்காவினதும், சில சர்வதேச நாடுகளினதும் பொய்ப் பரப்புரையை இந்த வாக்களிப்பு பொய்யாக்கியுள்ளது.

தமிழ் மக்களின் முடிந்த முடிவே தமிழீழம் என்பதை நோர்வேயைத் தொடர்ந்து பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் மீளவும் உறுதியாக்கியுள்ளனர். இந்த உறுதியை மேலும் வலுப்படுத்த ஏனைய ஐரோப்பிய மற்றும் கனடா, அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களும் தயாராகி வருகின்றனர். விழுந்துள்ள இந்த வாக்குகளும், இனி விழப்போகின்ற வாக்குகளும் இந்த உலகிற்கு சில விடயங்களை மிக அழுத்தமாகச் சொல்லும் என்றே நம்பலாம். அது விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்று அந்தக் கோரிக்கையை நிறைவேற்றவே ஆயுத வழிப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள் என்பதையும், அதற்காகவே அவர்கள் விலை மதிப்பற்ற தங்கள் உயிர்களை அர்ப்பணித்துப் போராடினார்கள் என்பதையும் இந்த உலகத்திற்கு புரியவைத்திருக்கும்.

ஆசிரியர்-தலையங்கம்

நன்றி:ஈழமுரசு

Comments