முள்ளிவாய்க்கால் கடற்கரை மணலில் புதைந்துபோன எமது மக்களின் கனவை நினைவாக்குங்கள்

http://puliveeram.files.wordpress.com/2009/07/tamilgenocide_mullai_15feb2009_06.jpg
ஈழத்தமிழ் மக்களால் 1976களில் முன்வைக்கப்பட்ட சுதந்திர தமிழீழத்திற்கான கோரிக்கை மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நாளை சனிக்கிழமை (19) கனடாவில் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.

நாளை சனிக்கிழமை கனடாவில் வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு- காணொளிகள்


வட்டுக்கோட்டை தீர்மானமும் அதன் உருவாக்கத்திற்கு வழிவத்த காரணிகளும் என்ன?

வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு முன்னர் 1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் நாள் வல்வெட்டித்துறையில் ஒன்று கூடிய தமிழ் அரசியல் கட்சிகள் இலங்கையில் தமிழ் மக்கள் குறைந்தபட்ச பாதுகாப்புடனும், உரிமைகளுடனும் வாழ்வதற்கான ஒன்பது கோரிக்கைகள் அடங்கிய திட்டம் ஒன்றை முன்வைத்திருந்தன. இலங்கை அரசின் அரசியல் யாப்பையும் அவை நிராகரித்திருந்தன.

இனம், மொழி, சமயம், அடிப்படை உரிமைகள் போன்றவற்றின் அடிப்படையில் இந்த திட்டம் வரையப்பட்டிருந்தது. அதன் பின்னர் மீண்டும் இலங்கையின் அரசியல் யாப்பினை நிராகரித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னனி 1972 ஆம் ஆண்டு ஜுன் 25 ஆம் நாள் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கான ஆறு கோரிக்கைகள் அடங்கிய திட்டம் ஒன்றை இலங்கை பிரதமரிடம் முன்வைத்திருந்தது.

அதனை நிறைவேற்ற இலங்கை அரசிற்கு மூன்று மாதகால அவகாசம் கொடுக்கப்பட்டதுடன், நிறைவேற்றாதவிடத்து தன்னாட்சி அதிகாரமுள்ள தீர்வுக்கான அகிம்சைப்போர் முன்னெடுக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் ஐக்கிய தமிழர் விடுதலை முன்னனி முன்வைத்திருந்தது.

எனினும்; சிறீலங்கா அரசு அதனை உதாசீனப்படுத்திய போது 1975 ஆம் ஆண்டு காங்கேசன்துறை பகுதியில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் தமிழ் மக்கள் சிறீலங்கா அரசின் அரசியல் யாப்பை முற்றாக நிராகரித்ததுடன், தமிழீழத்திற்கான ஆணையையும் தந்தை செல்வாவிடம் வழங்கியிருந்தனர்.

இருந்த போதும் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள பண்ணாகத்தில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னனியின் முதல் தேசிய மாநாட்டில் தமிழீழம் தான் தீர்வு என உறுதிபட வரையறுக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் சிறீலங்கா அரசும், இந்திய அரசும், அனைத்துலக சமூகமும் பல அரைகுறையான தீர்வுகளை தமிழ் மக்களின் மீது திணிக்க முற்பட்ட போதும் அவை அனைத்தும் தோல்வியையே தழுவியிருந்தன.

அதற்கான காரணியாக விடுதலைப்புலிகளின் போரிடும் வலு இருந்தது. தற்போது அந்த வலுவை இந்த உலகம் முன்நின்று சிதைத்துள்ள போதும், அவர்களால் கட்டிவளர்க்கப்பட்ட புலம்பெயர் சமூகம் என்ற பெரும் சக்தி இறுதிப்போராட்டத்தை நகர்த்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.

எந்த மக்களின் ஆணைக்காக விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தினார்களோ அதே ஆணையை மீண்டும் ஒரு தடவை நிருபிக்க புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் தயாராகி விட்டதுடன், அதற்கான ஆணைகளையும் மக்கள் பெருமளவில் வழங்கி வருகின்றனர்.

இந்த வருடத்தின் மே மாதம் நேர்வே பகுதியில் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் 99 விகித வாக்குகளை வழங்கிய தமிழினம் கடந்த 12 ஆம் மற்றும் 13 ஆம் நாட்களில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 99.23 விகித வாக்குளை வழங்கி தமது அரசியல் அபிலாசைகளை உறுதிபட தெரிவித்திருந்தனர்.

இந்த மாபெரும் சக்தியை ஆயுத வலுக்கொண்டோ, பயங்கரவாத சாயம் பூசியோ இந்தியா என்ற பிராந்திய வல்லரசினாலும், சிறீலங்காவினாலும் சிதைத்துவிட முடியாது. இந்த சமுகத்தின் ஊடாக முன்மொழியப்படும் தீர்வுத்திட்டத்திற்கு நிட்சயமாக ஒரு பெறுமதி உண்டு. அதனை மேற்குலகம் தெளிவாக புரிந்து கொண்டுள்ளது.

எனவே, எமது உரிமைகளுக்கான தீர்வு என்ன என்பதை அவர்களிற்கு புரியும் ஜனநாயக வழிகளில் நாம் மீண்டும் ஆதாரங்களுடன் கூறும் களமாக வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பாக கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு அமைந்துள்ளது. அதனை நேர்வேயும், பிரான்சும் வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டிவிட்டன.

நாளை சனிக்கிழமை (19) கனடா மக்கள் தமது தீர்மானத்தை தொளிவாக கூறப்போகின்றனர். கனடாவின் முடிவுகள் மிக முக்கியமானவை ஏனெனில் புலம்பெயர் தமிழ் சமூகத்தில் ஏறத்தாள மூன்று இலட்சம் மக்களை கனடா தன்னகத்தே கொண்டுள்ளது. இது புலம்பெயர் தமிழ் சமூகத்தில் ஏறத்தாள மூன்றில் ஓரு பகுதி, அதன் முடிவுகளை உலகம் உற்று நோக்கும். எனவே அதனை வெற்றியடையச் செய்வதற்கு நாம் எமது முழு வளங்களையும் பயன்படுத்த வேண்டும்.

ஒரு பலமான அரசியல் கட்டமைப்பை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் உருவாக்கி கொள்வதற்கு இந்த தேர்தல் நடவடிக்கைகள் முதற்படி. எனவே அதன் வெற்றி என்பது எமது அரசியல் தீர்வுக்கான மிக முக்கிய பாதையாகும் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொண்டால் அதன் வெற்றியின் முக்கியத்துவம் எமக்கு புரியும்.

எனவே, எந்த இடர்வரினும் அதனை தாண்டி உங்கள் வாக்குகளை கொடுத்து ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுங்கள். முள்ளிவாய்க்கால் கடற்கரை மணலில் புதைந்துபோன எமது உறவுகளினதும், போராளிகளினதும் கனவை நினைவாக்குங்கள்.

சங்கதிக்காக செய்தி ஆய்வு: வேல்சில் இருந்து அருஸ்

Comments