தமிழ் பேசும் மக்களின் வாக்குகளின் முக்கியத்துவம்


ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் சகல பகுதி மக்களும் சுதந்திரமாக வாக்களிக்கக் கூடிய சூழ்நிலை உறுதிப்படுத்தப்பட்ட முன்னைய சகல சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்களின் வாக்குகளே வெற்றி பெறுபவரைத் தீர்மானித்தன. இறுதியாக நடைபெற்ற 2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் வாக்களிக்க முடியாமல் போய்விட்டது. விடுதலைப் புலிகள் அறிவித்த தேர்தல் புறக்கணிப்பே இதற்குக் காரணமாகும். தமிழ் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் அந்தத் தேர்தலின் முடிவே வித்தியாசமானதாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளைப் பெறுவதில் அக்கறை காட்டாமல் சாத்தியமான அளவுக்கு கூடுதல் பட்சம் சிங்கள மக்களின் வாக்குகளைக் கைப்பற்றுவதற்கான அரசியல் தந்திரோபாயத்தை வகுத்துச் செயற்பட்டதைக் காணக் கூடியதாக இருந்தது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த வேளையில் நோர்வேயின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாடே ராஜபக்ஷவின் பிரசாரங்களை அன்று ஆக்கிரமித்திருந்தது. சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளைப் பெறுவதில் நாட்டம் காட்டாமல் சிங்கள வாக்காளர்களைக் கவருவதற்கான கொள்கைத் திட்டங்களைத் தேர்தலின் போது முன் வைக்குமாறு ராஜபக்ஷவுக்கு ஆலோசனை வழங்கியவர்களில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் காலஞ்சென்ற லக்ஷ்மன் கதிர்காமரும் ஒருவர் என்று அந்தக் காலகட்டத்தில் பேசப்பட்டது. அதிகப் பெரும்பான்மையான சிங்கள வாக்குகளைப் பெற்று தேர்தலில் ராஜபக்ஷ வெற்றி பெற்ற போது நாட்டின் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் தமிழ் பேசும் மக்களே தீர்க்கமான காரணியாக இருக்கிறார்கள் என்ற மாயை தகர்க்கப்பட்டுவிட்டது என்று பேரினவாத அரசியல் சக்திகள் இறுமாப்புடன் பேசியதையும் காணக்கூடியதாக இருந்தது.

ஆனால், மீண்டும் தமிழ் மக்களின் வாக்குகளின் முக்கியத்துவம் உணரப்படுகின்ற ஒரு அரசியல் சூழ்நிலை தற்போது தோன்றியிருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை ஊடக நிறுவனங்களின் தலைவர்களையும் பத்திரிகை ஆசிரியர்களையும் அலரிமாளிகைக்கு அழைத்து காலை விருந்தளித்துக் கலந்துரையாடிய மகிந்த ராஜபக்ஷ தனது முதலாவது பதவிக் காலம் முடிவடைவதற்கு இன்னும் இருவருடங்கள் இருக்கின்ற போதிலும் கூட, அடுத்த ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்குத் தீர்மானித்தமைக்கு நாட்டின் ஏனைய பகுதி மக்களுடன் சேர்ந்து ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு வடக்கு, கிழக்கு மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்ற தனது அக்கறையும் ஒரு காரணம் என்று கூறியிருந்தார். விடுதலைப் புலிகள் தடுத்ததன் விளைவாக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனதால் அந்தத் தேர்தலின் முடிவின் பெறுமதி குறித்து சந்தேகங்கள் கிளப்பப்பட்டதையும் சுட்டிக்காட்டிய மகிந்த ராஜபக்ஷ போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து தற்போது தேசியத் தேர்தல்களில் முழு நாட்டு மக்களும் சுதந்திரமாக வாக்களிக்கக் கூடிய சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரின் விளைவான அவலங்களிலிருந்து இன்னமும் மீளமுடியாமல் அல்லாடும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நாட்டின் ஏனைய பகுதிகளின் மக்களுடன் சேர்ந்து ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புக்காக இப்போது ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஜனாதிபதிக்கு யார் தான் சொன்னார்களோ தெரியவில்லை. போர் வெற்றியை சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து சகல மாகாண சபைகளின் தேர்தல்களிலும் பெரு வெற்றியைப் பெற்று வந்திருக்கும் அரசாங்கத்தரப்பினர் அதே சூட்டோடு ஜனாதிபதித் தேர்தலையும் அடுத்து பாராளுமன்றத் தேர்தலையும் நடத்தி மகத்தான வெற்றியைப் பெற முடியுமென்று நம்பிக்கை கொண்டிருந்தனர்.

இராணுவ வெற்றியை மக்கள் மறந்து விடுவதற்கு முன்னதாக தேசியத் தேர்தல்களை நடத்துவதில் அக்கறை கொண்டிருந்த ஆளும் கட்சியினருக்கு அதிர்ச்சியொன்று ஏற்பட்டுவிட்டது. மகிந்த ராஜபக்ஷ வுடன் முரண்பட்டுக் கொண்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக நிறுத்துவதற்கு எதிரணியின் பிரதான கட்சிகள் தீர்மானித்ததையடுத்து அரசாங்கத் தரப்பினர் தடுமாறிப் போயிருக்கிறார்கள். முன்னைய ஜனாதிபதித் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களுக்கு கிடைத்திராத அளவுக்குக் கூடுதல் சதவீதவாக்குகளைக் கைப்பற்றி மகிந்த ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சரித்திரம் படைப்பார் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்றத் தேர்தலில் முன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றிபெறும் என்றும் சில மாதங்களுக்கு முன்னர் ஆரவாரத்துடன் பேசிய அமைச்சர்கள் இப்போது சற்று அடக்கி வாசிப்பதை அவதானிக்க முடிகிறது.

போர் வெற்றிக்கு கூட்டாக உரிமை கொண்டாடிய மகிந்த ராஜபக்ஷ வும் ஜெனரல் பொன்சேகாவும் இப்போது தனித்தனியாகப் பிரிந்து நிற்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தல் இரு "போர் வெற்றி நாயகர்களுக்கு இடையிலான பலப் பரீட்சையாக மாறப்போகிறது. போர் வெற்றிக் களிப்பில் சிங்கள மக்களை மிதக்கவிட்டு வாக்குகளை அறுவடை செய்யும் அரசியல் தந்திரோபாயத்தை தொடர்ந்தும் கடைப்பிக்க முடியாத நிலை மகிந்த ராஜபக்ஷக்கும் அரசாங்கத் தரப்பினருக்கும் ஏற்பட்டிருக்கிறது. போர் வெற்றிக்கு பிரத்தியேக உரிமை கோரும் ஜெனரல் பொன்சேகா எதிரணியின் பொது வேட்பாளராக களத்தில் குதிக்கும் போது சிங்களத் தேசியவாத உணர்வுடைய வாக்காளர்களின் ஆதரவுக்கு ஏகபோக உரிமையைக் கொண்டாட முடியாமல் போய்விடும் என்று அரசாங்கத்தரப்பினர் அஞ்சுகிறார்கள். இதன் விளைவுதான் தமிழ் மக்களின்பால் அரசாங்கம் அண்மைக் காலமாக காட்டிவரும் அக்கறை.

வவுனியாவில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த மக்களைச் சுதந்திரமாக நடமாட அனுமதிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானம் தொடக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை வன்னிக்கு செல்ல அனுமதித்தது வரை பல சமிக்ஞைகள் அரசாங்கத்தினால் காட்டப்பட்டிருக்கின்றன. ஜெனரல் பொன்சேகா இலங்கையில் சிறுபான்மை இனங்களின் அந்தஸ்து பற்றி எத்தகைய அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தார் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். அவரும் கூட, இடம்பெயர்ந்த மக்களின் துரித மீள் குடியேற்றம் உட்பட தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் தொடர்பில் அக்கறையுடையவராகத் தன்னைக் காட்டிக் கொள்வதற்கு பிரயத்தனம் செய்கிறார். தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளையும் அவர் நடத்துகிறார்.

அரசியல் அனுகூலத்துக்காக தமிழ் மக்களுக்கு "நல்லிணக்கத்துக்கான கரங்களை நீட்டுகின்ற அதேவேளை, கடந்த 4 வருடகாலமாக கடைபிடிக்கப்பட்ட கொள்கைகள் காரணமாக தென்னிலங்கை மக்கள் மத்தியில் வலுவடைந்திருக்கும் இராணுவ வாத அரசியல் உணர்வுகளை மழுங்க விடக்கூடாது என்பதிலும் மகிந்த ராஜபக்ஷவும் ஜெனரலும் அக்கறை காட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. போர் வெற்றியைப் பயன்படுத்தி உச்சபட்ச அரசியல் ஆதாயம் பெறுவதற்கு முயற்சித்ததன் விளைவாகத் தோன்றிய துரதிர்ஷ்டவசமான நிலைவரம் இது. மகிந்த ராஜபக்ஷவும் ஜெனரலும் மாத்திரமல்ல, தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் கூட திரிசங்கு நிலையில் தான் இருக்கின்றார்கள். ஆனால், தமிழ் மக்கள் பெருமளவுக்குதெளிவுடன் இருக்கக் கூடும் என்றே நாம் நம்புகிறோம்.

-ஆதவன் -

Comments