அன்பார்ந்த தமிழீழ மக்களே!
எமது தமிழீழ மக்கள் தமது தாயகத்தையும் அதன் விடுதலையையும் நோக்கி பயணிக்க தொடங்கி இன்று 62 வருடங்களாகிவிட்டன. சமத்துவம், சமஸ்டி, என்ற பேச்சுவார்தைகள் மூலமாக கேட்டதும், அதன் பின் சிங்கள அரசு தமது அதிகாரத்தை தம்கையில் வைத்துக்கொண்டு அந்த சனநாயகத்தை வைத்து இனவெறி அரசியலில் ஈடுபட்ட போது, தமிழர்களும் தமது சனநாயகத்தை தம் கையில் எடுத்து 1977ல் தனித்தமிழீழ கோட்பாட்டிற்கு வாக்களித்தார்கள். அந்த நேரத்தில் இனவெறியாட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில் தமிழர்கள் ஆயுதப்போராட்டத்தை கையில் எடுத்தார்கள்.
அந்நிய அரசியலில் எமது போராட்டம் பின்னப்பட்டு, சிதைக்கப்பட்ட நிலையில் இந்த உலகுக்கு காட்டு முகமாக நாம் மீண்டும் எமது தமிழீழ உணர்வையும், எமது மக்கள் எம் நாட்டில் கைதிகளாக்கப்பட்டு, வாய்பேச முடியாது இருக்கும் நிலையில் இன்று புலம்பெயர்ந்து வாழும் மக்கள் அவர்களின் குரலாக தமது உறவுகளின் உரிமைக்காக இப் போராட்டத்தை தம் கையில் எடுத்திருக்கின்றார்கள். அந்த பரிமான மாற்றம் தான் இன்று பிரான்சில் தமிழ்தாயகத்தை வலியுறுத்தும் வாக்கெடுப்பும், அதற்காக மக்களின் பெரும்திரளான வாக்களிப்பும் அங்கீகாரமும் நடந்தேறியிருக்கின்றது. புலம் பெயர்ந்த மக்களின் ஆழ்மனதிலுள்ள தாயகப்பற்றும், அதன் விடுதலை உணர்வையும் சனநாயக ரீதியில் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் இந்த கருத்துக்கணிப்பு இந்த ஆண்டின் நடுப்பகுதியில் பிரான்சில் தமிழ்மக்களை பிரதிநிதிப்படுத்து தமிழர் அமைப்புக்கள் ஓன்று சேர்ந்து நடாத்திய கருத்துக்கணிப்பு வெற்றிகரமாக நடந்தேறியதும்,
அதன் பின்னர் நோர்வே நாட்டிலும் தமிழீழ மக்கள் அதிகமாக பங்கு கொண்டு தமிழீழ தனியரசே தமிழர்களின் தீர்வு என்பதை வாக்களித்து ஆணித்தரமாக தெரிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய நாடுகளில் தமிழ்மக்கள் அதிகமாக வாழும் பிரான்சில் இக்கருத்துக்கணிப்பு தேர்தல் நடைபெறுவதற்கான நாள் தெரிவு செய்யப்பட்டது. சில உணர்வாளர்கள் இக்காலப்பகுதி மிகக்குறைவாக உள்ளன என்பதை தெரிவித்திருந்தபோதும் இந்த செயற்திட்டத்தை நிறைவேற்ற உழைக்க முன்வந்த தமிழீழ மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களும், குறிப்பாக இளையவர்களும் இதனையொரு சவாலாக செய்வதற்கு திடசங்கற்பம் பூண்டனர்.
அதற்கு அவர்கள் வைத்த ஒரேயொரு நம்பிக்கை தமது தேசத்தின் விடுதலைக்காக எந்த நேரத்தில் அழைத்தாலும் அதில் எமது மக்கள் தமது பரிபூரணமான பங்களிப்பை நல்குவார்கள் என்பதேயாகும் இந்த நம்பிக்யுடன் தமது உயர்கல்வியையும், வேலைகளைகளையும் தற்காலிகமாக நிறுத்தி இரவுபகலாக உழைத்துடன். ஒவ்வொரு கிராமங்கள் தோறும் தமிழ்சங்கங்களின் ஊடாக மக்களுடனான சந்திப்புக்கள், விளக்கங்களும் கொடுத்திருந்தனர். இதற்கு பிரான்சு நாட்டின் தமிழர்களின் பத்திரிகைகள், ஈழமுரசு, ஈழநாடும் மற்றும் சங்கதி, பதிவு போன்ற இணையத்தளங்களும், தமிழ்க்கதிர் நேரடியாக மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தன. புலிகளின் குரல், மற்றும் வளரி போன்றவையும், ரிஆர்ரி வானொலியும் தொடர்ச்சியாக தமது ஊடக பங்களிப்பினை வழங்கியிருந்தன.
அதே நேரத்தில் கரங்கொடுப்போம் வடம்பிடிப்போம் எனவும் தமிழ் மக்களுக்காகன எனகூறிக்கொள்ளும், மக்களின் பங்களிப்பில் செயற்பட்டு வரும் தொலைக்காட்சி மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த வரலாற்று பதிவான கருத்துக்கணிப்பு தேர்தல் விளம்பரத்திற்கு எமது தரப்பால் பொருளாதார பங்களிப்பை செலுத்தப்பட்டும் தொலைகாட்சியானது தனது பங்களிப்பை செலுத்தாதது வேதனைக்கும், மக்களின் கேள்விக்கும் ஆளாக்கி பதில் சொல்ல வேண்டியதொரு இக்கட்டான நிலைக்கு எம்மை விட்டுள்ளது.
இவ்வாறு 12ம் 13ம் திகதி காலை 8.00 மணிக்கு 35 சாவடிகளில் இக்கருத்துக்கணிப்பு தேர்தல் பிரெஞ்சு கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. எல்லா வாக்குசாவடிகளிலும் மக்கள் காலைவேளையே வாக்களிக்க வந்திருந்தனர். 10.00 மணியளவில் வாக்குப்பெட்டியில் இருக்கும் மதிப்பீட்டு எண்ணின் படி 300 வாக்குகளை எட்டியிருந்தன. சனிக்கிழமை 20.00 மணிவரை மக்கள் தமது வாக்குகளை பெருந்தொகையாக அளித்திருந்தனர். மறுநாள் ஞாயிறுக்கிழமை காலை வழமையான காலநிலை மாற்றமடைந்து பனிகொட்டத்தொடங்கிருந்ததும், குளிருக்கு மத்தியிலும் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்திருந்தனர்.
விடுமுறை நாளாகவும், முக்கிய கொண்டாட்டங்கள், தமிழர்களின் கலைவிழாக்களுக்கு மத்தியிலும், கடந்த காலங்களில் மண்பற்றின்றி இருந்தவர்களும், விமர்சித்தவர்களும், நான் தமிழன் என்ற தேசிய உணர்வு கொண்ட மக்களாக கூட்டம் கூட்டமாக வாக்களிக்கும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தனர். ஆனாலும் தேர்தல் அறிவிப்பின்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கண்காணிப்பாளர்கள் 15.00 மணிக்கு வாக்குசாவடிகள் நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். எனினும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கண்காணிப்பாளர்களின் அனுமதியுடனும், ஆதரவுடனும் இரண்டு பிரதேசங்களில் வாக்குச்சாவடிகள் பிற்பகல் 17.00 மணிவரை வாக்களிப்பதற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பிரான்சின் வெளிமாவட்ட பகுதியில் வாழும் தமிழ்மக்களும் தமது வாக்களிக்கும் அவாவை காட்டியிருந்ததுடன் பலர் 200, 300 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று தமது தாயகப்பற்றுதலை வாக்களிப்பின் ஊடாக தெரியப்படுத்தியிருந்தனர்.
வாக்களிக்க வரமுடியாதோர் தபால்மூலம் தமது வாக்குகளை அளிக்க ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டிருந்தனர். பரிசின் மத்திய பகுதியில் நடைபெற்ற வாக்குகள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் எண்ணப்பட்டன. இவற்றின் கண்காணிப்பாளர்களாக செயற்பட்டவர்கள் மாநகரசபை முதல்வர்கள், உதவிமுதல்வர்கள், அரச உத்தியோகத்தர்கள், வணபிதாக்கள், அரசசார்பற்ற அமைப்பை சேர்ந்தவர்களும் பணியாற்றியிருந்தனர். எண்ணப்பட்ட வாக்குகளின் முடிவுகள் பாரிசின் மத்திய பகுதியில் அமைந்திருந்த தேர்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குசாவடிகளில் மக்களின் ஆர்வத்தையும், பிற்பகல் வாக்குகளை எண்ணும்போது சில வாக்குகள் எழுதுகோலால் எழுதப்பட்டிருந்ததையும், சிலர் இல்லை என்ற தெரிவாலும் கண்காணிப்பாளர்கள் மனக்கிலேசம் அடைந்ததையும் வெளிப்படையாக கூறச்செய்ததையும் காணக்கூடியதாகவும் இருந்தது.
இதன் மூலம் சனநாயக உரிமை இத் தேர்தல் உண்மையாக கடைபிடிக்கப்பட்டதும் நடந்துள்ளது என்பதை அனைவரும் இதன் மூலம் அறிந்து கொள்ளும் ஒருவாய்ப்பாக அமைந்துள்ளதும், இத்தேர்தலினை குழப்பும் வகையில் பிரான்ஸ் உள்ள சிறீலங்கா தூதுவராலயம் பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டிருந்ததும். மாநில, மாநகர முதல்வர்களுக்கு அலுவலக ரீதியாக தூதரகத்தினால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதும் இதற்கு அப்பிரதேசங்களில் உள்ள சில தமிழர்களும், அவர்கள் சார்ந்த அமைப்புகளும் துணைபோயிருந்தமையும், அவர்கள் வாக்களிப்புக்கு வராமல் பகிஸ்கரித்ததும், பின்னர் தெரியவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவர்களின் தமது இனத்திற்கெதிராக செய்த கெடுதலால் சில பிரதேங்களில் தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அனுமதி கொடுக்கப்பட்டு அரசபீடங்கள் பின்னர் அனுமதியை மறுக்கப்பட்டதும், இதனால் அவ்விடங்களுக்கு மாற்றுவழிகள் தேடப்பட்டு கருத்துக்கணிப்பு நடைபெற்றதும் 12ம் திகதி சனிக்கிழமை மக்களின் உணர்வுபூர்வமான பங்களிப்பை கண்ணுற்ற மறுப்பு தெரிவித்தவர்கள்,
பின்னர் தமது கவலையினை தெரிவித்ததோடு தமது இடத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்குசாவடிகளை அளிப்பதற்கு அனுமதியளித்திருந்தனர். சில மாவட்டங்களில் காவல்துறையினர் சகல வாக்குச்சாவடிகளுக்கு வந்ததும், என்ன பிரச்சனை வந்தாலும் உடன் தம்மை அழைக்குமாறும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிரான்ஸ் மத்திய பகுதியில் நடைபெற்ற கருத்துக்கணிப்பின் வாக்குகள் முடிவுகள் வந்திருந்த போதும் அதிகமான வாக்குகளை அளித்திருந்த பாரிசின் மத்திய பகுதியினதும், 93 பிரதேசத்தின் லாககூர்னோவ் வாக்குச்சாவடி வாக்குகளும் எண்ணி முடிப்பதற்கு தாமதமாகியது.
இவைகள் யாவும் எண்ணப்பட்டு நள்ளிரவு முழுமையான தகவல்களும் முழுமை பெற்றிருந்தன. திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு பாரிசின் 11ல் அமைந்துள்ள யுபுநுஊயு என்ற அமைப்பின் அலுவலகத்தில் தேர்தல் முடிவுகள் யாவும் தமிழீழ மக்கள் பேரவையின் செயலாளரால் வெளியிடப்பட்டது. இத்துடன் முழுமையான விபரம் வெளிமாவட்டங்களின் தபால்மூலமான வாக்குகள் கிடைத்ததும் எதிர்வரும் 14-10-2010 பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் தமிழீழ தனியரசே தமிழ்மக்களின் தீர்வு என்கின்ற அங்கீகாரத்தை சனநாயக வழியில் மக்களின் விருப்புடன் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு வாக்களிப்பின் ஊடாக பிரான்சு நாட்டுக்கும், சர்வதேசத்திற்கும் தெரியப்படுத்தவுள்ளனர்.
எம் அன்பான தமிழீழ மக்களே!
புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களின் தாயக தேசம் மீதான பற்றுதலும், அதன் விடுதலையும், மக்கள் மீதான பற்றும், அவர்களுக்கு உதவிடவேண்டிய வரலாற்று கடமையும் உண்டு என்பதை இக் கருத்துக்கணிப்பு தேர்தலின் ஊடாக தமிழ்மக்கள் எல்லாதரப்பினருக்கும் அறியத்தந்துள்ளனர். இதற்கமைவாகவே உலகம் முழுவதும் உள்ள தமிழர்களாயினும் சரி, தாயகத்தில் உள்ள தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்களும் சரி தம்முடைய முடிவுகளை புலம்பெயர்ந்த மக்களின் கருத்துக்கணிப்பை கவனத்தில் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிறீலங்கா அரசினதோ, அல்லது இந்தியா, அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் அரசியல் நகர்வுகளுக்கேற்ற வகையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை புறம்தள்ளி யாரும் செல்ல முற்படுவார்களாயின் அவர்கள் நிச்சயமாக தமிழ்மக்களால் தூக்கியெறியப்படுவார்கள் என்பது உண்மையாகும்.
இதற்கு இன்று தாயகத்தில் இருந்து வரும் கொடுமை நிறைந்த செய்திகளும், தமிழ்மக்களுக்காக தம்மை கொடையாக கொடுத்தவர்கள் சிங்கள பேரினவாத அரசின் கொலைகாரர்களால் கண்முன்னால் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் உண்மையானவை தான் என்று சர்வதேச நிபுணர்கள் தெரிவித்திருக்கும் இவ்வேளையிலும், தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனஅழிப்பின் சூத்திரதாரிகளில் போட்டிபோட்டு அதிகதமிழர்களை கொன்றொழித்தவர்களான சிறீலங்கா நாட்டின் அதிபரும், அவர்களின் சகோதரர்களும், முப்படைகளின் தளபதியும், ஏனைய தளபதிகளும் தாம் உடந்தையாக இருந்ததையும், போட்டிபோட்டுக்கொண்டு செய்திகளை சர்வதேச ரீதியாக தெரியப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
அதனை நாம் எமக்கு சாதகமாகவும், பயன்படுத்தி இவர்கள் மீது சர்வதேச நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்க வைக்கவும், எமது விடுதலையின் தேவையையும், கொடுமைமிக்க சிங்களவர்களுடன் சேர்ந்து வாழும் மனநிலை இனிமேல் தமிழர்களுக்கு இல்லையென்பதையும். தனியாகவே வாழ விரும்புகின்;றனர், அதனை கருத்துக்கணிப்பு தேர்தல் மூலம் தெரிவித்துள்ளனர் என்பதையும் உரிய இடத்திற்கு தெரிவிப்பதோடு, எமது இனத்தின் மீதும், அவர்களின் போராட்டத்தையும் பயங்கரவாதமாக்கி பயங்கரவாதிகள், அதற்கு துணைபோனவர்கள் என்ற வீண் அவப்பெயரினை கழுவி ஈழத்தமிழ்மக்கள் தாயகம், தேசியம், சுயநிர்ணம் உரிமை கொண்ட மக்கள் என்பதையும் வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் தமிழ்மக்களின் நிலப்பரப்பும் அங்கு சுதந்திரம், இறைமையும் கொண்ட தமிழீழம் அரசும் உருவாக வேண்டும்.
காலம் காலமாக சிறைகளுக்குள்ளே வாடும் எம் சகோதர, சகோதரிகள் விடுதலைசெய்யப்பட வேண்டும். கைது செய்து காணாமல் போனவர்கள், மற்றும் அவர்கள் பற்றிய விபரங்களை பெற்றுத்தர சர்வதேச நாடுகள், அமைப்புக்கள் முன்வரவேண்டும். சிறீலங்கா அரசின் தமிழ்மக்கள் மீதான அவதூறுகளையும், பொய்யான குற்றச்சாட்டுகளையும், பிரச்சாரங்களையும் முதலில் முறியடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இந்த கருத்துக்கணிப்பு வாக்குகள் தமிழீழ மக்கள் பேரவையின் பிரதிநிதிகள் ஐரோப்பிய பாராளமன்ற உறுப்பினர்களை சந்திக்க பெரும் உறுதுணையாக இருக்கும் அதேவேளை இங்குள்ள இளையவர்கள், வல்லுனர்கள், அரசியல்வாதிகள், மொழிசட்டவல்லுனர்கள் இதுவரைகாலமும் இருந்த நிலைபாட்டை மாற்றி மக்களால் வழங்கப்பட்ட ஆணையை தலைமேற்கொண்டு இத்தனை வருடகாலம் எமது மக்களின், மாவீரர்களின் கனவை நனவாக்க உழைக்க வேண்டிய பாரிய பொறுப்பு எம் கையில் வந்துள்ளது.
இதற்கு அனைத்து தரப்பினரும் தங்களின் பூரணமான ஒத்துழைப்பையும் தந்துதவுவார்கள் என்ற நம்பிக்கை கொள்கின்றோம். இக் கருத்துக்கணிப்பு தேர்தலின் மிகப்பெரும் வெற்றிக்காக உழைத்த பிரெஞ்சு மக்கள், மற்றும் ஏனைய வெளிநாட்டு மக்களுக்கும் எமது நன்றியை தெரிவிப்பதோடு,எம் தாயக தமிழ்மக்களின் கரங்களை நன்றி உணர்வோடு இறுக பற்றிக்கொள்வதுடன், தாயகத்திற்கு அடுத்த படியாக அதிகமாக புலம்பெயர்ந்து வாழும் கனடா,லண்டன் மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் இக்கருத்துக்கணிப்பு தேர்தலில் அனைத்து தமிழ்மக்களும் கலந்து கொண்டு தமது தாயகப்பற்றினை தெரியப்படுத்த வேண்டும் என்றும், பெருவெற்றி பெறவும் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை வாழ்த்துகின்றது.
நன்றி
Comments