புலிகளுக்கு எதிராக வியூகம் வகுத்திருந்த தரப்புகள் பல இருக்கும் போது போரின் வெற்றி யாருக்குச் சொந்தம்? அரசியல் களத்தில் நடக்கும் யுத்தம்!

  • உள்நாட்டு சக்திகள், வெளிநாட்டு சக்திகள் என்று புலிகளுக்கு எதிராக வியூகம் வகுத்திருந்த தரப்புகள் பல இருக்கும் போது- போர் வெற்றிக்குக் காரணம் தாமே என்று உரிமை கோரும் தரப்புகளை பார்க்கும் போது ஆச்சரியமாகவே இருக்கிறது. இந்தப் போர் வெற்றி சாதாரணமாக ஒரு அரசியல் தலைமையால் பெற்று விடக் கூடியதொன்றல்ல.அதேபோல இராணுவத் தலைமையாலும் சாத்தியமாகக் கூடியதல்ல. இவையிரண்டும் இருந்தாலும் சர்வதேச அரசியல் சக்திகளின் ஆதரவு கிடைக்காது போயிருந்தாலும் இதைச் சாதித்திருக்க முடியாது.இவை எல்லாம் கிடைத்து படையினரின் ஆதரவும் அர்ப்பணிப்பும் கிடைக்காது போயிருந்தால் கூட வெற்றி உறுதியாக முடியாது. அப்படியிருக்க, பல தரப்புகள் சம்பந்தப்பட்ட இந்தப் போர் வெற்றிக்கு தனியுரிமை கோரி தென்னிலங்கையில் ஒரு அரசியல் போரே நிகழ்ந்து வருகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர் பேரழிவுகளுடன் முடிவுக்கு வந்து கிட்டதட்ட ஏழு மாதங்கள் ஆகப் போகின்றன. ஆனாலும் இந்தப் போரில் பெற்ற வெற்றி யாருக்குச் சொந்தம் என்ற போர் தென்னிலங்கையில் இதுவரை ஓயவில்லை.போரில் வெற்றி பெற்றதும் அரசாங்கம் அதற்கு தனி உரிமை கொண்டாடியது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அரசியல் தலைமைத்துவமே போரில் வெற்றி பெறக் காரணம் என்று அரசாங்கம் பிரசாரங்களைச் செய்தது.

மகிந்த ராஜபக்ஸவை மகாராஜாவாகச் சித்திரித்தும், அவரை ஒரு அவதார புருஷராக கொண்டாடியும் தென்னிலங்கை மகிழ்ச்சியில் திளைத்தது. போரில் கிடைத்த ஒட்மொத்த வெற்றியும் தமக்கே என்றும், புலிகளை ஒழித்து போரில் ஈட்டிய வெற்றிக்கு கைமாறாக மகிந்த ராஜபக்ஸவே அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு ஆட்சி செய்ய வேண்டும் என்றும் பௌத்த அமைப்புகள் சில தீர்மானமும் நிறைவேற்றின. அதேவேளை, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் விடவில்லை.போரில் கிடைத்த வெற்றிக்கு தாமே காரணம் என்று உரிமை கோரியது.போர்நிறுத்த காலத்தில் புலிகளை சர்வதேச அரங்கில் பலவீனப்படுத்தி அவர்களைப் பொறிக்குள் சிக்க வைத்ததாகவும், கருணாவைப் புலிகளிடம் இருந்து பிரித்து பலவீனப்படுத்தியதாகவும் உரிமை கோரியது.

அப்படிப் புலிகளை பொறிக்குள் தள்ளியதால் தான் இப்போதைய அரசாங்கத்தால் சுலபமாகப் போரில் வெல்ல முடிந்தது என்று- வெற்றியில் சமபங்கு கேட்டது ஐதேக.அதேவேளை, ஜேவிபி இன்னொரு பக்கத்தில் புலிகளை அழித்துப் போரில் பெற்ற வெற்றிக்குத் தாமே காரணம் என்றது.புலிகளுக்கு எதிராகப் போர்ப்பிரகடனம் செய்வதற்கு தாமே தூண்டு கோலாக இருந்ததாகவும், வடக்கு-கிழக்கைப் பிரித்து, சுனாமி நிவாரண பொதுக்கட்டமைப்பை முளையிலேயே கிள்ளி- பேச்சு அரங்கில் இருந்து புலிகளை போர் அரங்குக்குள் தள்ளிச் சென்றது தாமே என்றது ஜேவிபி.போரைத் தொடங்க பின்னடித்துக் கொண்டிருந்த மகிந்தவை முன்னே தள்ளிச் சென்று போர்ப்பிரகடனம் செய்யத் தூண்டியதால் கிடைத்த வெற்றி தான் இது.எனவே இந்த வெற்றியில் பெரும் பங்கு எமக்கே என்று ஜேவிபியும் வரிசை கட்டி நின்றது. இப்படி அரசியல் தலைமைகள் முட்டுப்பட்டுக் கொண்டிருந்த போது வெற்றியின் மூல காரணமாக இருந்த படைத்தரப்பு வாயைப் பொத்திக் கொண்டிருக்க வேண்டியிருந்தது.

அரசியல் தலைமைகளை மீறி இராணுவத் தலைமைகளால் வாய் திறக்க முடியாது போயிருந்தது. இப்போது போருக்குத் தலைமை தாங்கிய சரத் பொன்சேகா அரசியலுக்கு வந்து போர் வெற்றியில் பங்கு கேட்கத் தொடங்கி விட்டார். தமது இராணுவத் தலைமையால் தான் போரை வெல்ல முடிந்ததாக அவர் கருத்து வெளியிட்டு வருகிறார்.
அரசியல் தலைமைகளின் போக்கினால் தான் புலிகளை இதுவரை அழிக்க முடியாது போனதாகவும்- தகுந்த இராணுவத் தலைமையை வழங்கியதாலும் இராணுவத்துக்குள் இருந்து ஊழல்களை ஒழித்ததாலும் போரில் வெற்றிபெற முடிந்ததாக அவர் கூறியிருக்கிறார்.இராணுவ வெற்றியில் பங்கு கேட்க சரத் பொன்சேகா கிளம்பியதை அடுத்து அரசியல் அரங்கு சூடு பிடித்தது. சரத் பொன்சேகாவின் இராணுவத் தோல்விகளைப் பட்டியல் போட்டு இப்படித் தோல்விகளைச் சந்தித்தவர் எப்படி வெற்றிக்கு தனிஉரிமை கோர முடியும் என்று கேள்வி எழுப்பியது அரசதரப்பு.

சரத் பொன்சேகாவின் இராணுவத் தலைமைத்துவத்தால் போரில் வெற்றி கிடைக்கவில்லை- அரசியல் தலைமைத்துவமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று அரசாங்கம் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. இந்தக் கட்டத்தில் இராணுவமும் தன் பங்குக்குக் களமிறக்கப்பட்டிருக்கிறது. இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா படையினர் மத்தியில் தொடர்ச்சியாக உரை நிகழ்த்தி வருகிறார்.

பிராந்திய படைத் தலைமையகங்களுக்குச் சென்று பெரியளவிலான சந்திப்புகளை நடத்தும் போரில் கிடைத்த வெற்றிக்கு சிறந்த அரசியல் இராணுவ தலைமைத்துவமே காரணம் என்று வலியுறுத்தவும் தயங்கவில்லை. புலிகளுடன் நேருக்கு நேர் நின்று சண்டையிட்ட படையினர் மத்தியில்- இழப்புகளை நேரில் சந்தித்த படையினர் மத்தியில் நின்று கொண்டு, போரில் வெற்றி பெற்றதற்கு அரசியல் தலைமையே காரணம் என்று இராணுவத் தளபதி கூறியது எடுபடவில்லை. எனவே தான் அவர் தனது ஆகப் பிந்திய உரைகளில் படையினரையும் வெற்றியின் பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

சாதாரண சிப்பாய்கள் தொடக்கம் மேஜர் ஜெனரல் வரையான அதிகாரிகள் வரைக்கும் போர் வெற்றிக்குப் பங்காற்றியிருக்கும் போது ஓரிருவர் மட்டும் எப்படி பங்கு கோர முடியும் என்று மகிந்தாவும் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் இதன்மூலம் நேரடியாகவே சரத் பொன்சேகாவின் மீது தாக்குதல் தொடுக்கிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தநிலையில் கடந்த வாரம் போரில் அங்கவீனமுற்ற படையினர் மத்தியில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஸ- “நீங்கள் தான் உண்மையாக வீரர்கள்” என்று விளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது சரத் பொன்சேகாவை குத்திக் காண்பிக்கும் வகையிலான உரை இது.

போரில் பெற்ற வெற்றிக்காக பங்குகேட்டு மோதிக் கொள்ளும் நிலைக்கு தென்னிலங்கை அரசியல், இராணுவத் தலைமைகள் போயிருப்பது ஒன்றும் வேடிக்கையானதல்ல. இந்தக் கட்டத்தில் தென்னிலங்கை சிங்கள வாக்காளர்கள் மத்தியில் உண்மையில் போரை வெற்றி கொண்டது யார் என்ற குழப்பநிலை தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.

ஐதேக, மகிந்த ராஜபக்ஸ, ஜேவிபி, சரத் பொன்சேகா என்று பல பக்கங்களில் இருந்தும் தாமே வெற்றிக்குக் காரணம் என்று மார்தட்டும் சூழலில்- யார் தான் வெற்றிக்கு காரணம் என்ற குழப்பம் அவர்களிடத்தில் ஏற்படுவதில் தப்பில்லை. அதேவேளை இந்தப் போரில் தாம் ஒவ்வொருவரும் ஆற்றிய பங்கு என்வென்று இந்தக் கட்டத்தில் ஏதோ விதத்தில் தென்னிலங்கை அரசியல் சக்திகள் ஒப்புக் கொள்வதையும் கவனத்தில் கொள்ளலாம். புலிகளை அரசியல் பேச்சுக்களில் இருந்து போருக்கு இழுத்தது இந்த அரசியல் சக்திகளின் சதிவேலை தான் என்பது இப்போது அவர்கள் மூலமே வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. புலிகள் இயக்கத்தின் சில தவறான அணுகுமுறைகள் தென்னிலங்கையின் இந்தச் சூழ்ச்சிகளுக்கு இன்னும் வசதியாகிப் போனதால் போரில் அரசாங்கத் தரப்பால் வெற்றி பெறுவது சுலபமாகிப் போனது.

  • உள்நாட்டு சக்திகள், வெளிநாட்டு சக்திகள் என்று புலிகளுக்கு எதிராக வியூகம் வகுத்திருந்த தரப்புகள் பல இருக்கும் போது- போர் வெற்றிக்குக் காரணம் தாமே என்று உரிமை கோரும் தரப்புகளை பார்க்கும் போது ஆச்சரியமாகவே இருக்கிறது. இந்தப் போர் வெற்றி சாதாரணமாக ஒரு அரசியல் தலைமையால் பெற்று விடக் கூடியதொன்றல்ல.அதேபோல இராணுவத் தலைமையாலும் சாத்தியமாகக் கூடியதல்ல. இவையிரண்டும் இருந்தாலும் சர்வதேச அரசியல் சக்திகளின் ஆதரவு கிடைக்காது போயிருந்தாலும் இதைச் சாதித்திருக்க முடியாது.இவை எல்லாம் கிடைத்து படையினரின் ஆதரவும் அர்ப்பணிப்பும் கிடைக்காது போயிருந்தால் கூட வெற்றி உறுதியாக முடியாது. அப்படியிருக்க, பல தரப்புகள் சம்பந்தப்பட்ட இந்தப் போர் வெற்றிக்கு தனியுரிமை கோரி தென்னிலங்கையில் ஒரு அரசியல் போரே நிகழ்ந்து வருகிறது.

இது தென்னிலங்கை அரசியல் சக்திகளின் போர் மனோபாவத்தை வெளிப்படுத்துகிறதே தவிர, அமைதியை விரும்புவதற்கான அறிகுறியாகத் தெரியவில்லை. அனைத்து சக்திகளுமே போர்- வெற்றி இவற்றை மனதில் கொண்டே அரசியல் நடத்துகின்றன. அரசியல் தீர்வு என்பது பற்றிய பேச்சே அடங்கி விட்டது அல்லது அடக்கப்பட்டு விட்டது. இது தான் உண்மை நிலை.

சுபத்ரா இன்போதமிழ்

Comments