தமிழ் வேட்பாளர் அல்லது பகிஷ்கரிப்பு; இரண்டுமே தமிழருக்கு பயன்தர மாட்டா!

"இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதோ அல்லது பகிஷ்கரிப்பதோ தமிழர்களுக்கு எந்தப் பயனையும் தரா. அப்படி நாங்கள் தமிழ் மகன் ஒருவனுக்கு வாக்களித்தாலோ அல்லது பகிஷ்கரித்தாலோ அது எங்கள் ஜனநாயக உரித்தை நாங்களே விட்டுக் கொடுத்தவர்களாக அமைந்துவிடும்.

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். கூட்டமைப்பை வழிநடத்தும் ஒருவரின் வழி காட்டலுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும்.'' இவ்வாறு வலியுறுத்திச் சுட்டிக்காட் டியிருக்கின்றார் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்.

மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழகம் சென்றிருந்த அவர் சில தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பியிருந்தார். தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து முன்னர் பேசப்பட்டபோது, அதற்கு நீதியரசர் விக்னேஸ்வரனின் பெயரும் சில தரப்புகளால் சிபார்சு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்தேர்தல் தொடர்பில் அவரது நிலைப்பாட்டை அவரைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.

அப்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு:

தமிழர்கள் இன்று தமது அரசியல் தலைமைத்துவத்தை இழந்து நிற்கின்றார்களோ என்று எண்ணத் தோன்றியுள்ளது. தனிப்பட்ட மனிதர்களின் சுயநலம் மேலோங்கி, அவர்களின் பொறுப்பற்ற வார்த்தைகளினால் தமிழ் மக்களின் மனங்கள் கலக்கத்திலும் குழப்பத்திலும் நீந்திக்கொண்டிருக்கின்றன.

நான் அண்மையில் இந்தியாவில் இருந்தபோது வெளிநாட்டில் இருந்து சில அன்பர்கள் என்னுடன் தொடர்புகொண்டு, தமிழ் மக்கள் சார்பில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் நான் நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு நான்கூறிய பதில் இதுதான்:

1. ஒரு தமிழ் மகன் தனித்துவமாக ஜனாதிபதித் தேர்தலில் நின்று, எல்லாத் தமிழ்ப் பேசும் மக்களும் அவருக்கு வாக்களித்தாலும் கூட எந்த நன்மையும் எமக்குக் கிட்டப் போவதில்லை. முக்கியமான இருவரில் ஒருவர்தான் பதவிக்கு வரப்போகின்றார். தனக்கு விரும்பியதைத்தான் அவர் செய்யப் போகின்றார்.

2. நாங்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தாலும் அதே நிலைதான்.

3. இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் கையாலாகாத் தன்மைøயையே வெளிக்காட்டும். மேலும் தங்களின் ஜனநாயக உரித்தை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை என்பதையும் அது எடுத்துக்காட்டும்.

4. இதுவரை காலமும் தேர்தல்களில் தமிழ் மகன் ஒருவரை நிறுத்துவது, தேர்தலைப் பகிஷ்கரிப்பது என்பன போன்ற காரியங்கள், தமிழ் மக்களின் பின்னணியில் ஆயுதம் தாங்கியோர் உறுதுணையாக இருக்கின்றனர் என்ற எண்ணத்தில், தமது தனித்துவத்தைக் காட்டும் விதத்தில், நடைபெற்றிருக்கலாம். ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில் அதே வழிமுறைகளைப் பின்பற்றுதல் சரிதானா என்று யோசிக்க வேண்டும்.

5. இந்த நிலையில் பதவிக்கு வர எத்தனிக்கும் இருவரையும் சந்தித்துத் தமிழ் மக்களுக்கு அவர்களிடமிருந்து பெற்றுக் கொடுக்கக்கூடிய ஆகக்கூடிய நன்மைகள் என்னவென்பதை ஆராய்ந்து பார்ப்பதே சிறந்தது.

இப்படி நான் அவர்களுக்குப் பதில் கூறினேன்.

இன்று இதைத் தமிழ்த் தேசியக் கூட்மைப்பு உணர்ந்து செய்வதையிட்டு மகிழ்வுறுகிறேன். இருவரிடமும் பேசிப் பார்த்து எவ்வாறு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தியம்ப வேண்டும். கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகப் பேசுவதை நிறுத்தவேண்டும். கூட்டமைப்பை வழிநடத்தும் ஒருவரின் வழிகாட்டலுக்கே முதலிடம் கொடுக்கவேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம். நாங்கள் தமிழ் மகன் ஒருவருக்கு வாக்களித்தாலோ, தேர்தலைப் பகிஷ்கரித்தாலோ எங்கள் ஜனநாயக உரித்தை நாங்கள் விட்டுக் கொடுத்தவர்களாகவே அது அமையும்.

எங்கள் கைகளில் "வாக்கு" என்ற பலத்த ஆயுதம் ஒன்று இருப்பதை நாங்கள் மறத்தலாகாது. சௌமியமூர்த்தி தொண்டமான் மலைநாட்டுத் தமிழ்ச் சகோதர, சகோதரிகளை வழிநடத்தியபோது "வேலைநிறுத்தம்" என்ற பாரிய ஆயுதத்தைப் பாவித்தார். முஸ்லிம் சகோதரர்கள் தங்கள் உரித்துகளைப் பெற்றெடுக்க மத ரீதியாகத் தமக்கு உதவி செய்யக்கூடிய நாடுகள் இருப்பதை ஒரு ஆயுதமாகவே பாவித்தனர். ஆனால் இலங்கைத் தமிழ் மக்கள் ஆயுதத்தில் நம்பிக்கை வைத்து இன்று செய்வதறியாது இருக்கின்றனர். அப்படி இருப்பினும், தமிழ் மக்கள் எல்லா ஆயுதங்களையும் இழந்த நிலையில் இருக்கின்றார்கள் என்று தப்புக்கணக்குப் போட்டுவிடக் கூடாது. ஜனநாயக ரீதியில் பார்த்தால் தமிழ்ப் பேசும் மக்களின் ஒற்றுமை ஒரு பெரிய ஆயுதம். உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோமானால் வரும் "பொதுத் தேர்தலில்" இரு பெரிய கட்சிகளும் கிட்டத்தட்ட சமபலம் பெற்றிருந்தால் அவர்களில் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கின்றார்களோ அவர்களே அரசு அமைக்கத் தமிழ் மக்கள் உதவுவர்.

சென்ற தடவை 22 பேர் நாடாளுமன்றுக்குத் தெரிவானார்கள். இம்முறை அந்த ஒற்றுமையை நாம் இழந்து விடுவோமானால் எங்களின் ஒரே ஆயுதத்தையும் நாங்களே விட்டெறிந்த நிலைக்கு வந்துவிடுவோம். தமிழ் மக்களின் ஒற்றுமை இந்த நாட்டின் ஜாதகத்தைக் கணிக்க உதவும்.

பதவியில் இருக்கும் ஒருவரைக் கீழே இறக்கவும், இன்னொருவரை மேலே ஏற்றவும் தமிழ்ப் பேசும் மக்களால் முடியும் என்பதைச் சிலர் அறிந்திருக்கின்றபடியால், தமிழ்ப் பேசும் மக்களிடையே வேற்றுமைகளை விதைக்க அவர்கள் பாடுபடுகின்றனர். எங்களின் வேற்றுமைகள் அவர்களுக்கு உதவும். எங்கள் ஒற்றுமை எங்களுக்கு உதவும். இவ்வளவுதான் என்னால் கூறமுடியும்.

என்றார் நீதியரசர் ஸி.வி. விக்னேஸ்வரன்.

Comments