சதுரங்கப் போட்டியில் தமிழ்கூறும் நல்லுலகு...

பெருந்துன்பம் கொடுங்கனவாய் நீடித்துக் கொண்டிருக்கிறது. முட்கம்பி வேலிகளுக்குள்ளும் திறந்த வெளிச் சிறைச்சாலையிலுமாக இனி வன்னி மக்கள் தங்களின் வாழ்வை கழிக்க நேரிடும், காலம் முழுக்க காணாமல் போன ஏதோ ஒருவரை அவர்கள் இனி தேடிக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் இந்த உலகில் ஏதாவது ஒரு நிலப்பகுதியில் வாழ அலைந்து கொண்டிருக்கிறார்கள். உலகம் அவர்களை கள்ளக் குடியேறிகள் என்றும் சட்டவிரோத ஊடுருவல் காரர்கள் என்றும் பழி சுமத்துகிறது. பல நேரங்களில் இயற்க்கை அனர்த்தனங்களில் சிக்கி கடலிலேயே இவர்கள் சமாதியாகிப் போகிறார்கள். மனித குலத்தின் கடைசி இரக்கமேனும் இம்மக்களிடம் காட்டப்படுமா? என்று தெரியவில்லை. இவர்களை வைத்தே நாம் இத்தனை காலமும் கதையாடினோம். ஈழம் பேசினோம். பெருமை பேசினோம். இன்று அம்மணமாக்கப்பட்டுள்ள அம்மக்களை மறந்து தோல்வி பற்றிய மீழாய்வு இல்லாமல் பழைய கதைகளையே பேசிக் கொண்டிருக்கிறோம்.

அந்த பழையகதைகள் நான்கு விதமான சிந்தனை ஓட்டங்களாக புலத்து மக்களிடமும் தமிழக மக்களிடமும் உள்ளது.

  • ஒன்று புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்துகொண்டு உண்மையை புரியாது புலம்பும் சில ஊடகங்களின் வெறித்தனமான கற்பனை வாதம் ஐந்தாம் கட்ட ஈழப் போர் வெடிக்கும்.

  • இரண்டு சரத்பொன்சேகா சிறுபான்மை மக்கள் மீது அக்கறை கொண்டவர். அவருக்கு தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க மறுத்த ராஜபக்ஸவை பிடிக்காது.

  • மூன்று மாவீர நாள் உரையும் அதனை ஒட்டிய ஊடக கர்த்தாக்கள் புலத்திலிருந்து எழுதும் புராண இதிகாச கதைகளும் அதை பிரசுரித்து தாங்கள் இதுவரை கட்டிக்காத்த நன்மதிப்பை இழக்கும் ஊடகங்கள்..

  • நான்காவதாக இலங்கை அரசு மேற்கொண்ட தமிழ் மக்கள் மீதான படுகொலை தொடர்பாக சொன்ன ஏராளமான பொய்களை அம்பலப்படுத்தத் தயங்குகின்ற தமிழ் ஊடகங்கள் ஊடக கர்த்தாக்கள். அல்லது அதற்கு திராணியற்று வீண் பெருமை பேசுகின்றனர்.

நடேசனும் சமாதானச் செயலகப் போராளிகளும் சரணடையும் போது ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்படதன் பின்னர் தமிழர்களின் எதிர்காலமே கேள்விக்குறியானது.

இறுதிப்போர்களத்தில் இலட்சியவான்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு மாண்டிருக்கவேண்டும். அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது குறித்துப் பேசுகிறவர்கள் அவர்களின் உடலை நிர்வாணமாக்கி அவமானப்படுத்தியபோது அவ் மனித உரிமைகளுக்கு எதிரானச் செயலை கண்டிக்கத் தவறுகிறார்கள்.

மனித உரிமைகளுக்கு நேரத்தைச் ஒதுக்கி அல்லல் படுபவர்களுக்காகவும் கொல்லப் பட்டவர்களுக்காகவும் குரல் கொடுக்காமல் கற்பனைக் கதைகளையும் புராணக்கதைகளையும் எழுதி மக்களைக் குழப்பிய வண்ணம் இருக்கின்றார்கள். ஒருபோராட்டத்தின் வாசனையே தெரியாத இவர்கள் உண்மைபுரியாமல் நாடக கதைவசனம் எழுதுவது வேதனையானது.

இப்படி மற்றவரை துரோகி என்று குற்றம் சாட்டி எழுதும் இந்த வசனகர்த்தாவை முன்பு கஸ்பராஸ் அடிகளாரோடும் தமிழ் ஒளி குகநாதனோடு சேர்ந்து காசை கொள்ளையடித்தவர் என்று குற்றம் சாட்டியபோது இவரின் மனம் எவ்வளவு துன்பப்பட்டிருக்கும் என்பதை இந்த வசனகர்த்தா சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும்.

  • தவிரவும் இறுதிக்கட்டப் போரின் வழிமுறைகளில் நமக்கு ஏராளமான வடுக்கள் உண்டு. ஏற்றுக் கொள்ள முடியாத அல்லது ஜனநாயக விழுமியங்களுக்கு முரனான பல செயற்பாடுகளை புலத்தில் முன்னெடுத்த பலர் களமுனைக்கு புலம் சார்ந்து புலத்து அரசுகள் சார்ந்து தவறான தகவல்களை வழங்கியதன் விளைவை. இன்று ஒட்டு மொத்தத் தமிழினமும் கண்ணீரோடு அனுபவிக்கிறது.

இவற்றுக்கும் அப்பாலும் முப்பதாண்டுகாலம் எதிரிகளிடம் கடைசி வரை சரண்டையாமல் போராடி மடிந்த உத்தமர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய அஞ்சலியை இன்று வரை எவரும் செலுத்த முன்வரவில்லை. அஞ்சலியை செலுத்த தமிழ் மக்களை அனுமதிக்கவும் இல்லை.

  • முதலில் தொடர் பாடல் பிரச்சனையால் மே 17 ம் நாள் தகவல்களை அறிவித்த கே,பி பின்னர் 17/18 ம் திகதி போர்களத்தின் இறுதி கொடுமையான சம்பவங்களை அறிவித்த போது கே.பி. துரோகியாக்கப்பட்டார். இன்று அவர், ரகசிய வதை முகாமில். உண்மையில் கே.பி. இராம், நகுலன் சார்ந்து எமக்குள் பல வேதனைகள் இருப்பினும் உண்மையை உறுதிப்படுத்தாமை ஒரு விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள் மீது வசை பாடுதல் என்பது ஏன்? என்ற கேள்விகள் எல்லாம் எமக்குள் இருந்தாலும் இதற்கு மேல் கேட்டால் நாமும் துரோகியாக்கப்படுவோம்.

  • ஆனால் ஈழ மக்களின் அரசியல் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல முடியாதவர்கள், அல்லது அது குறித்து தெரியாதவர்களே இன்றும் ஈழ விடுதலைப் போராட்டம் சார்ந்து கதை வசனம் எழுதி அடுத்தக் கட்ட ஈழப் போராட்டம் வெடிக்கும் என்கிறார்கள்.

அதுவரை நாம் என்ன செய்ய வேண்டும்? அமைதியாக இருக்க வேண்டும். ஆமாம் மயான பூமியில் நிலவுவது அமைதியல்லாமல் வேறேன்ன? எம்மக்களின் அடிமை வாழ்வு குறித்தோ, அவர்களின் அரசியல் கோரிக்கை குறித்தோ யரும் பேச வேண்டியதில்லை. முப்பதாயிரத்திற்கும் அதிகமான மாவீரர்களை ஈன்றளித்த இம்மக்கள் பஞ்சைப் பாரிகளாய் வன்னிக்குள் இராணுவ கண்காணிப்பின் கீழ வாழும் போது, அவர்களுக்காகப் பேசாமால் அவர்களின் பிள்ளைகளான மாவீரர்கள் நினைவைப் போற்றுவதோடு ஈழத் தமிழர்களின் புலத்து தமிழர்களின் கடமை முடிந்து போனதாக கருதுகிறார்கள்.

இந் நாட்களில் இவர்கள் சில அரசியல்வாதிகளை அழைத்து வந்து அவர்களின் வீரவசனங்களைக் கேட்டு விசிலடித்து கைதட்டி ஆர்பரித்ததோடு சரி.

  • மாவீரர் நாளை ஒட்டி இரு மாவீரர் உரைகள் வந்தன ஆச்சரிப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க புலத்து இலங்கை தூதரகங்களும் தயாராகவே இருக்கின்றன. இதே வேளை வன்னிக்குள் எஞ்சியிருக்கும் புலிகள் சார்பில் தளபதி ராம் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது அறிக்கை ஒன்று. இது உண்மையானதா? பொய்யானதா? என்ற எண்ண ஓட்டங்கள் இன்று புலம்பெயர் மக்களிடமும் விரவிக் கிடக்கிறது. ராம் என்பவரும் எங்கிருந்து அறிக்கை விடுகிறார். உண்மையிலேயே போராளிக் குழுதானா? அல்லது அரசின் வேலைத் திட்டத்தின் கீழ் இப்படியான அறிக்கைகள் விடுகிறாரா? என்றும் தெரியவில்லை. என மக்கள் தவிக்கின்றார்கள். இந்த தவிப்பை உணராத ஊடகங்கள் சில மக்களை மேலும் குழப்புகின்றன. அன்று கே.பி இன்று ராம் நாளை? ஊடகங்களின் வெறித்தனமான கற்பனை வாதங்கள்

அடுத்து இதில் மிக முக்கியமாக பேசப்பட வேண்டிய இன்னொரு விஷயம், சரத் பொன்சேகா நல்லவரா? ராஜபக்ஸ நல்லவரா? என்கிற உளவியல் அரசியல் தான். வன்னிப் போர் முடிவுக்கு முன்னர் புலிகளின் மீதான சிங்களதின் வன்மம் என்பது 2002 சாமாதான ஒப்பந்தத்தில் இருந்தே துவங்குகிறது. ரணில்தான் புலிகளின் கோட்டைக்குள் ஊடுருவி அவ்வமைப்பில் உடைப்பை உருவாக்கிய முதல் சிங்கள மகாபுருசரானார். இன்றைய யுத்தத்தின் வெற்றி என்பதை அதன் நேரடிப் பொருளில் பார்க்காமல் பின்னணியோடு பார்த்தால் ரணில் வன்னிப் பின்னடைவுக்குப் பின்னணியில் பணியாற்றியிருப்பது புலப்படும்.

  • ஒரு வழியாக 2006 மார்ச்சில் மாவிலாறு அணைக்கட்டை புலிகள் மூடியதும், 2006 ஜூன் 8 ஆம் திகதி மீட்பு நடவடிக்கை என்ற பெயரில் அரசு போரைத் துவங்கி 2009 மே மாதம் முடித்து வைத்தவரையிலான போரின் இன்றைய நாயகன் ராஜபக்ஸ. இத்தகைய ஒரு சூழலில் இலங்கையைச் சுற்றி பின்னப்பட்டுள்ள மௌனமே பெரும் கொலைகளை நடத்த உதவியாக இருந்தது. ஐம்பதாயிரம் மக்கள் வரையான படுகொலைகொலைக்குப் பின்னர் போர் முடிவுக்கு வந்த போது அது பெரும்பான்மை வாதமாக மாற்றப்பட்டு விட்டது. சிங்களம், பௌத்தம் இணைந்த அரசு சர்வாதிகராமாக உருவாகியிருக்கிறது. அந்த பெரும்பான்மைவாதமே பம்பலப்பிட்டியில் ஒரு மன நோயாளியை அடித்தே கொல்லத் தூண்டுகிறது. சிறையில் மோதலைத் தூண்டுகிறது. இந்த பெரும்பான்மை வெற்றியை தமதாக்கி தேர்தலில் அறுவடை செய்து ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? என்கிற போட்டிதான் ராஜபக்ஸவுக்கும், பொன்சேகாவுக்குமிடையிலான போட்டி. இன்னும் விரிவாக இது குறித்து ஆராய்ந்தால் எதிர் காலத்தில் தமிழ் மக்கள் அத்தீவில் எத்தனை அபாயங்களை எதிர் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

நடந்து முடிந்த கொலைகளுக்கு பெரும்பான்மை சமூகத்திடம் உரிமை கோருகிற ராஜபக்ஸ ஒரு பக்கம், அந்த வெற்றி என்னால்தான் சாத்தியமானது எனக்குத்தான் பதவி வேண்டும் என்று நிற்கிற சரத் பொன்சேகா மறுபக்கம். இருவருமே பதவிக்கான போட்டியில் பெரும்பான்மை சமூகத்திடம் தங்களின் நம்பிக்கைகளை நிறுவ இன்னும் கொஞ்சம் தமிழ் மக்களைக் கொன்றொழிக்க மாட்டார்கள் என்பதற்கு ஏதேனும் உத்திரவாதம் உண்டா?

சிறுபான்மை இனத்தை எவ்வளவுக்கெவ்வளவு துன் புறுத்துகிறோமோ, அவ்வளவுக்கவளவு பெரும்பான்மை சமூகத்திடம் தங்களின் நம்பிக்கையை உறுதிப் படுத்திக் கொள்ள முடியும் என்கிற பெரும்பான்மை பௌத்த சிங்கள கூட்டின் உளவியல் தான் இப்போது சிங்களத்தை ஆட்டிப் படைக்கிறது.

கிளிநொச்சியின் வீழ்ச்சியை ஒட்டி கிளிநொச்சி வீழ்ந்த பிறகு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு அவசியமில்லை என்றது ஜே.வி.பி. சர்வக் கட்சி நாடகங்கள் முடிவுக்கு வந்தது. இப்போது அரசியல் தீர்வு, அனைத்துக் கட்சி மாநாடு என்ற பேச்சு உப்புக்குக் கூட அத்தீவில் இல்லை. ராஜபக்ஸ 13வது சட்டத்திருத்ததிற்கு அப்பால் சென்று ஒரு தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்குவோம் என்கிறார். இன்றைக்கு ராஜபக்ஸவுக்கு எதிராக திரும்பியிருக்கும் யுத்தக் குற்றவாளி சரத் பொன்சேகாவோ வன்னியில் வைத்து வடக்கில் மக்களுக்கு தனியான அரசியல் தீர்வு தேவையில்லை தெற்கில் மக்கள் என்ன விதமான உரிமைகளை அனுபவிக்கிறார்களோ அதுவே வடக்கு மக்களுக்கும் போதுமானது என்கிறார்.

அரசியல் தீர்வே தேவையில்லை என்று சொல்லும் ஜே.வி,பியும், அதே கருத்தைக் கொண்ட சரத்பொன்சேகாவும் எதிர்கட்சிகளோடு ஒன்றிணைந்து சரத்பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளார்கள்.

ஜே,வி.பி உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு இப்போது தேவை இரத்தக் கறைபடிந்த ஒரு முகம். அது ஒன்றே இன்னொரு இரத்தக் கறைபடிந்த ராஜபக்ஸவை எதிர் கொள்ள உதவும். யார் கைகளில் அதிகமான தமிழ் மக்களின் இரத்தம் இருக்கிறது என்று சிங்கள மக்களால் நம்பப்படுகிறதோ அவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். இதுதான் இன்றைய போட்டி.

ஆனால் ஈழத் தமிழ் மக்களிடமும், தமிழகத்திலும் ஒரு பிரமை இருக்கிறது. சரத்பொன்சேகா, ரணில் ஆகியோர் ராஜபக்ஸவுக்கு எதிரானவர்கள்,அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்வார்கள் என்று. உளவியல் ரீதியாக எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முட்டாள்தனமான அணுகுமுறையை நோக்கி தமிழர் அரசியல் மீண்டும் நகருகிறது.

தமிழக ஊடகங்களில் சமீபத்தில் சரத்பொன்சேகா, ரணில் ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இலங்கை அரசுத் தரப்பில் கடும் கோஷ்டிப் பூசல் நிலவுவதைப் போன்று எழுதுகிறார்கள். இப்படி எழுதுவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் ஓர்மைகளை திசை திருப்பலாம் என நினைக்கிறார்கள். ராஜபக்ஸ ஆட்சி மாறி சரத்பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களை வென்றேடுக்கலாம் என்கிற தந்திரமும் இதில் ஒன்று.

இப்போது தமிழ் கட்சிகளிடையே இணக்கம் பேணுவதற்காக பேச்சுக்கள் துவங்கியிருக்கின்றன. சிறுபான்மை என்னும் ஒற்றை அடையாளமே இவர்களை ஒருங்கிணைக்கிறது. உண்மையில் இலங்கையில் தமிழர்கள் தேசிய இன அடையாளத்துடனேயே வாழ்ந்தார்கள் ஆனால் சிங்கள ஆளும் வர்க்கம் மீண்டும் தமிழர்களை சிறுபான்மையினர் என அழைக்க ஆரம்பித்துள்ளது. அதனால் தான் சம்பந்தனும், டக்ளஸ் தேவானந்தாவும் கருணாவும்,ரவூப்க்ஷ்கீமும் ஒரே மேசையில் அமர்ந்து பேசவைக்கிறது.

எது எப்படி இருந்தாலும் வருகிற தேர்தலில் தமிழ் தேசீய கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் ஒன்று இருக்கும். ஏனென்றால் வடக்கு மக்களின் வாக்குகளை குறிவைக்க ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் போட்டி போடக்கூடும். ஆனால் இவர்கள் நேரடியாக கொலையில் பங்கேற்காமல் கொழும்பில் இருந்து கொண்டே படை ஏவிய ராஜபக்ஸவை ஆதரிக்கப் போகிறார்களா?

அல்லது நேரடியாக கொலைச் செயல்களில் ஈடுபட்ட இராணுத்தை வழி நடத்திய சரத் பொன்சேகாவை ஆதரிக்கப் போகிறார்களா?

அதாவது ஆதரிப்பது நல்ல பாம்பையா? அல்லது நாக பாம்பையா?

Comments