தேர்தல் காலத்து சலுகைகளும் மாற்றமடைந்துவரும் தமிழர் தாயகத்தின் பூகோள அமைப்பும்

சிறீலங்காவில் அரச தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி அரசியல் கட்சிகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருவதும், கட்சி தாவல்கள் நடைபெற்று வருவதும் ஒருபுறம் இருக்க பல இராஜதந்திர நகர்வுகளும் திரைமறைவில் நடைபெற்று வருகின்றன.

நடைபெறப்போகும் தேர்தலில் தமக்கு ஆதரவான கட்சிகளை பதவியில் அமர்த்துவதன் மூலம் இந்து சமுத்திர பிரந்தியத்தில் தமது ஆளுமையை உறுதிப்படுத்திக்கொள்ள பிராந்திய வல்லரசுகளும், உலக வல்லரசுகளும் போட்டியிட்டு வருகின்றன. மகிந்தாவை மீண்டும் ஆட்சியில் அமரவைப்பதன் மூலம் மேற்குலகத்தின் ஆளுமையை அகற்றிவிட சீனாவும் - இந்தியாவும் இணைந்து போராடி வருகின்றன. ஆனால் பொன்சேகாவை பதவியில் அமர்த்துவதன் மூலம் ஏற்படுத்தப்படும் ஒரு பொம்மை அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் காய்களை நகர்த்தி வருகின்றது.

அரச தலைவருக்கான தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் அனைத்துலகத்தை சேர்ந்த இராஜதந்திரிகள் சிறீலங்காவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த பத்தி எழுதப்படும் போது சிறுவர்களும், ஆயுத மோதல்களுக்குமான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி பற்றிக் கெமறற், மற்றும் அமெரிக்க துணை வெயியுறவு செயலாளர் றொபேட் ஒ பிளேக் ஆகியோர் சிறீலங்காவில் தங்கியுள்ளனர். றொபேட் ஒ பிளேக் முன்னர் சிறீலங்கா தூதுவராக பணியாற்றியிருந்த போதும், அவர் தற்போது வகிக்கும் பதவி மிக முக்கியமானது. மத்திய மற்றும் தென் ஆசிய பிராந்தியங்களிற்கான துணை வெளியுறவு செயலாளராக அவர் பணியாற்றி வருகிறார்.

எதிர்வரும் காலத்தில் தென்ஆசிய பிராந்தியத்தின் முக்கியத்துவம் கருதியே பிளேக் இந்த பதவியில் அமர்த்தப்பட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. சிறீலங்காவின் அரச தலைவருக்கான தேர்தலில் பங்குபற்றும் வேட்பாளர்களை குறிப்பாக பிரதம வேட்பாளர்களை சந்திப்பதே பிளேக்கின் தற்போதைய விஜயத்தின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவை பொறுத்தவரையில் ஐக்கிய தேசிய முன்னனியுடன் அதிக நல்லுறவுகளை அது கொண்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் பொன்சேகா அமெரிக்கா சென்ற போது தோன்றியிருந்த பிரச்சனைகளின் போது எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கா றொபேட் ஓ பிளேக்கின் உதவியை அதிகம் நாடியிருந்தார். அதனை போலவே பிளேக் சிறீலங்காவில் பணிபுரிந்த காலத்தில் ரணில் விக்கிரமசிங்காவின் இல்லத்தில் அதிக நேரங்களை செலவிட்டு வந்தாக அரச தரப்பு குற்றம் சுமத்தியிருந்தது.

தற்போது சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிளேக் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் அரசின் நடவடிக்கைகள் முன்னேற்றமான நிலையை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளதுடன், ஊடகவிலயாளர்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும், பலதரப்பட்ட கருத்துக்களும் சிறீலங்காவில் முன்வைக்கப்படுவது அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார். சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேஜர் ஜெனரல் பற்றிக் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2002 ஆம் ஆண்டு வரையிலும் எதியோப்பியா மற்றும் எரித்திரியா பகுதிகளில் ஐ.நாவின் அமைதி படைகளின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.

அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் படைத்துறை ஆலோசகராக பணியாற்றிய அவர் 2005 ஆம் ஆண்டு கொங்கோ நாட்டில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி முயற்சிகளின் போது கிழக்கு பிராந்திய கட்டளை அதிகாரியாக அவர் பணியாற்றியிருந்தார். தற்போது சிறீலங்காவில் தங்கியுள்ள பற்றிக் சிறீலங்கா அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் நிலை தொடர்பாக ஆராய்ந்து வருகின்றார். சிறீலங்காவில் நடைபெற்ற உள்நாட்டு மோதல்களின் நிறைவின் பின்னர் அதில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு தொடர்பாக சில நடவடிக்கைகளை அனைத்துலகம் மேற்கொண்டு வருகின்ற போதும் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு தொடர்பில் எந்த முன்னேற்றங்களும் எட்டப்படவில்லை. சிறிலங்காவில் அரச படையினராலும், அரசினாலும் மேற்கொள்ளப்பட்ட பேரியல் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் அயர்லாந்தின் தலைநகரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனை தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் சிறீலங்கா அரசும், வெளிநாடுகளில் உள்ள சிறீலங்கா இராஜதந்திரிகளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் அதற்குரிய ஆதரவுகளை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களை அந்த ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியம் அளிக்க வைக்கவேண்டிய கடமையும் புலம்பெயர் மக்களின் முன் உள்ளது. ஈழத்தமிழ் மக்களின் அரசியல் நடவடிக்கைகளை பொறுத்தவரையில் அவர்கள் முன் தற்போது இரு பெரும் கடமைகள் உள்ளன. ஓன்று சிறீலங்காவில் நடைபெறப்போகும் அரச தலைவருக்கான தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முடிவு. இரண்டாவது ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான ஒரே தீர்வு தமிழீழம் தான் என்பதை வலுயுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீண்டும் வலுப்படுத்துதல்.

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் நேர்வேயில் நடத்தப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு பெரும் வெற்றிபெற்றிருந்தது, அதனை தொடர்ந்து இந்த வாக்கெடுப்பை எல்லா நாடுகளிலும் மேற்கொள்ள புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் நாட்களில் பிரான்ஸ் இல் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் நாம் எட்டப்போகும் முடிவுகளை அனைத்துலகமும், சிறீலங்கா அரசும் உன்னிப்பாக அவதானிக்கப்போகின்றது எனவே அதனை வலுப்படுத்தி எமது அரசியல் பாதையின் அடுத்த கட்டத்திற்கு நாம் நகர்வதற்கு தேவையான வழியை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். சிறீலங்காவின் தற்போதைய நிலையை பொறுத்தவரையில் அங்கு நடைபெறப்போகும் அரச தலைவருக்கான தேர்தலை மையப்படுத்தியே அனைத்து நடவடிக்கைகளளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிங்கள மக்களின் வாக்குகளை பிரிக்கும் சக்தி கொண்ட இரு வேட்பாளர்கள் அங்கு களமிறங்கியுள்ளதால் தமிழ் மக்களின் வாக்குகள் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என நம்பப்படுகின்றது .எனவே தமிழ் மக்களை ஏமாற்றி தமது அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கு சிறீலங்கா அரசு பல நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டு வருகின்றது. கண்துடைப்பு நடவடிக்கையாக இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் இருந்து அகற்றப்பட்டு வடபகுதியில் உள்ள இராணுவ முகாம்களிற்கு அண்மையாக தற்காலிக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சாரங்களும் மிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் இந்த நடவடிக்கையின் ஒரு அங்கமாக கடந்த புதன்கிழமை (09) சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சா இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கியுள்ள முகாமிற்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுடிருந்தார்.

ஒருபுறம் தமிழர் தாயகப்பகுதிகளை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவரும் சிறீலங்கா அரசு மறுபுறம் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாக்குகளை குறிவைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த செவ்வாய்கிழமை (08) காலை முல்லைத்தீவு மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட இராணுவ தலைமையகத்தை பார்வையிட்ட மகிந்த ராஜபக்சா முல்லைத்தீவிலும், புதுமாத்தளனிலும் போரில் கொல்லப்பட்ட படையினருக்கான நினைவு மண்டபங்கள் திறந்து வைத்திருந்தார். பின்னர் வவுனியா சென்று இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கியுள்ள முகாம்களை பார்வையிட்டுள்ளார். வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய அடையாளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு அதனை ஒரு பூரண இராணுவ வலையமாக மெல்ல மெல்ல மாற்றிவரும் சிறீலங்கா அரசு வடக்கு - கிழக்கு பகுதிகளுக்கு அப்பாலும் தமிழர் வாழ்ந்ததற்கான தொன்மை மிக்க அடையாளங்களை தேடி அழித்தே வருகின்றது.

கடந்த வாரம் காலியில் உள்ள சிவன் ஆலயத்தில் இருந்த 150 வருடங்கள் பழமை வாய்ந்த சிலைகளை இனம்தெரியாத கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ள நிலையில் திருமலையிலும் புராதன இந்து ஆலயங்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. போர் நிறைவுபெற்றுள்ள போதும் வடக்கு - கிழக்கு பகுதிகளில் உள்ள படையினரின் எண்ணிக்கைகள் குறைக்கப்பட மாட்டாது என தெரிவித்து வரும் அரசு வன்னி பகுதியில் புதிய இராணுவ தலைமையகங்களை உருவாக்கி வருவதும் தமிழ் மக்களை அதிக அச்சத்திற்குள் தள்ளியுள்ளது. யாழ்குடாநாட்டில் உள்ள 40,000 படையினரில் படை குறைப்புக்களை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள கோரிக்கையை அடியோடு நிராகரித்துள்ள சிறீலங்கா அரசு முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்கிழமை (8) புதிய இராணுவ தலைமையகம் ஒன்றை திறந்துள்ளது.

எனவே மகிந்த தலைமையிலான தற்போதைய அரசின் தூரநோக்கு சிந்தனையும் பார்வையும் தெளிவானது. ஈழத்தமிழ் இனத்தின் இன விழுமியங்களையும், இன அடையாளங்களையும் முற்றாக அழித்து விடுவதுடன், அவர்களின் தாயகப்பகுதிகளின் பூகோள அமைப்பையும் மாற்றிவிடுவதே அவர்களின் நோக்கம். ஆனால் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள அரச தலைவருக்கான தேர்தலுக்காக இடம்பெயர்ந்து வாழும் மக்களிற்கும், வடக்கு - கிழக்கில் வாழும் மக்களிற்கும் அரசு சில சலுகைகளை வழங்கலாம், அவர்களுடன் கைகுலுக்கி கொள்ளலாம். இந்த அரசியல் சாயங்களுக்கு பின்னால் ஈழத்தமிழ் மக்களுக்கு வரப்போகும் பேரனர்த்தம் ஒன்று நீறுபூத்த நெருப்பாக உள்ளது. எனவே ஒரு நாள் வாழந்து உயிரைவிடும் விட்டில் பூச்சிகளை போல தேர்தல் காலத்து வாக்குறுதிகளிலும், அரசின் நடவடிக்கைகளிறும் மயங்கி 45 நாட்கள் நாம் சலுகைகளிலும் பசப்பு வார்த்தைகளிலும் வாழ்ந்து எமது உரிமையை இழக்கப்போகின்றோமா? அல்லது தெளிவான அரசியல் சிந்தனையின் ஊடாக சிறீலங்காவின் மத்திய அரசமைப்பில் ஒரு நெருக்கடியை உருவாக்கப்போகின்றோமா?

-வேல்ஸ் இல் இருந்து அருஷ்

நன்றி்:ஈழமுரச

Comments