மீண்டும் வரலாறு எமக்குத் தந்த சந்தர்ப்பத்தின நமதாக்கி, சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாட்டினையும் எதிர் கொண்டு தமிழீழ தனியரசிற்கான பணியை விரைவுபடுத்துவோம
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது அளவுகடந்த பாசத்தினையும் பற்றுறுதியினையும் தமிழீழ தாயகத்தின் மீது அதீத நம்பிக்கையும் அதோடினைந்த எதிர்பார்ப்பினையும் கொண்டவர்களாக விளங்கியவர்களுக்கு திருப்தியளிக்கக்கூடியவாறும், தமிழீழ தேசியத்தலைமையினையும், தமிழ் இனத்தினையும் முற்றாக அழித்தொழிப்பதையே முதன்மை நோக்கமாக கொண்டு செயற்பட்டுவரும் சிங்களத்திற்கும் அதற்கு ஒத்தாசை வழங்கி(ய)வரும் வல்லாதிக்க நாடுகளிற்கும், சிங்களத்திற்கு சேவகம் செய்து எஞ்சிய வாழ்நாட்களை விரயமாக்கி வரும் துரோகிகள் கூட்டத்தினரிற்கும் ஏமாற்றம் அளிக்கக் கூடியவாறும் அமைந்து விட்டது இந்த கார்த்திகை 27 மாவீரர் நாள்.
இந்த ஆண்டு மாவீரர் நாள் கொள்கை விளக்க உரையில் என்னவிடயம் இடம்பெறும் என்பதை விடுத்து தலைவர் வெளிப்படுவாரா… இல்லையா… என்று எதிர்பார்த்திருந்த நிலைமாறி எல்லோரும் ஒன்றினைந்து என்றுமில்லாதவாறு புலம்பெயர் வாழ் நாடுகளில் மிகவும் எழுச்சியாக மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுத்து தாயகக் கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து சாவடைந்த மக்களிற்கும் வீரவணக்கம் செலுத்தியது புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
என்றுமில்லாத எழுச்சி
கடந்த இருபது வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்ட மாவீரர் தினத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையில், தேசியத்தலைமையின் வெளிப்பாடு இன்றி இம்முறை இருந்தபோதும் உலகெங்கும் சிறப்பான முறையில் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது மாவீரர்தினம்.
இதுவரை தமிழீழத்தில் மாத்திரமே எழுச்சியோடு நடைபெற்றுவந்த மாவீரர்தின நிகழ்வு உலகெங்கும் பல்வேறு நாடுகளில் உணர்வெழுச்சியோடு அதுவும் இதுவரை மாவீரர் நாள் நிகழ்வு உள்ளிட்ட தமிழர் எழுச்சி நாள் நிகழ்வுகள் இடம்பெறாத நாடுகளில் கூட இம்முறை பேரெழுச்சியுடன் சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஈழவிடுதலைக்கு ஆதரவான அலை கட்டுமீறி வெடித்தெழுந்து தமிழீழம் நோக்கி புறப்பட இருந்த வேளை அதனை நீர்த்துப்போக செய்த பெருமைக்குரியவர்கள் வரிசையில் தமிழக முதல்வர் கருணாநிதி, அ.தி.மு.க.பொதுச் செயலாளளர் செயலலிதா வரிசையில் மூன்றாவதாக இடம்பெற்று அதன் பிரதிபலனாக இன்று லண்டனிலும் அப்பணியை தலைமைதாங்கி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்டிருக்கும் அம்சா மேற்கொண்ட பொய் பரப்புரைகளையும் குழப்பகரமான தகவல்களையும் தாண்டி லண்டனில் நடைபெற்ற மாவீரர் தினத்தில் 50ஆயிரத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் ஒன்று கூடி வீர அஞ்சலி செய்து ஒன்று பட்ட எழுச்சியை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.
இவ்வாறு கனடா, பிரான்சு, செர்மனி, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து, அவுத்ரேலியா, அமரிக்கா, சுவிசு போன்ற நாடுகளிலும் அயர்லாந்து, தாய்லாந்து, சைபிரசு, பெல்யியத்திலும் சிறப்பாக மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் ஈழ ஆதரவு தலைவர்களால் எதிர்ப்புக்களையும் தடைகளையும் மீறி கொண்டாடப்பட்டுவந்த நிலைமாறி ஒட்டு மொத்த தமிழகமே எழுச்சிக்கோலம் பூண்டு ஈழவிடுதலைக்காக தம்முயிரை ஈகம்செய்த தாயக, தமிழக உடன்பிறப்புகளிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செயலலிதாவின் சுழ்ச்சியும், தமிழரின் பிரிவு நிலையும்
மேற்கூறியவாறு தமிழகத்தில் தமிழீழ ஆதரவு நிலை நீர்த்துப் போக காரணமானவர்கள் வரிசையில் தமிழக முதல்வரிற்கும், முன்னால் இந்தியாவிற்கான சிறிலங்கா தூதுவர் அம்சாவிற்கும் இடையே செயலலிதா ஏன் இடம் பெற்றுள்ளார் என்ற கேள்வி இதனை படித்துக் கொண்டிருக்கும் உங்களிற்கு எழுவதில் ஒன்றும் வியப்பில்லை.
கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிய போதுதான் எமது உறவுகள் மீது கொத்துக் குண்டுகள், வெள்ளை பொசுபரசு குண்டுகள் உள்ளடங்கலாக தடைசெய்யப்பட்ட குண்டுகளையும் வீசி ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலை மிகவும் அதிகரித்ததுடன் தொடர்ந்தும் இடம்பெற்று வந்ததனால் தாய்த் தமிழகத்தில் கொதிநிலை ஏற்பட்டது. அது ஆளும் தி.மு.க., காங்கிரசு கட்சிகளுக்கு எதிராக விசுவரூபம் எடுத்திருந்தது. அதன் உச்சமாக 16 தமிழக உடன்பிறப்புக்கள் அக்கினித் தீயில் தம்மை ஆகுதியாக்கிய நிகழ்வு தமிழக மக்களது உணர்வுகளை உலுப்பவிட்டது.
இத்தருணத்தில் திரைப்பட இயக்குனர் பாரதிராசா தலைமையில் செந்தமிழன் சீமான் உள்ளிட்டவர்கள் காங்கிரசு கட்சிக்கு எதிரான பிரச்சாரகளத்தில் குதித்து ஈழஆதரவாளர்கள் ஓர் அணியில் சேர்ந்தால் என்ன என்ற நிலை ஏற்பட்ட போது, தனி ஈழமே ஈழத்தமிழரிற்கு தீர்வாக அமையும் அதனை அ.தி.மு.க. கட்சி ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக நிறைவேற்றும் என வாக்குறுதி அளித்து அந்த உணர்வலையினை தன் பக்கம் திருப்பிக் கொண்டார்.
ஈழ ஆதரவு கொள்கை கொண்டவர்கள் ஒன்றினைந்தால் அ.தி.மு.க.வினது நிலை கேள்விக் குறியாகிவிடும் என அச்சப்பட்ட செயலலிதா வழங்கியிருந்த வாக்குறுதியினை தேர்தல் முடிவு தெரிந்த மறுநாளே காற்றில் பறக்கவிட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.
தமிழர்கள் ஒன்றுபட்டுவிட முடியாதவாறு காலத்திற்கு காலம் இவ்வாறு பிரித்தாளும் தலைமைகள் உருவாகிக் கொண்டு உள்ளதற்கு எமது ஒற்றுமையின்மையே காரணமாகும்.
இந்த மாவீரர் நாள் வரும் வரை மிக மிக மெதுவாக சுழன்ற காலச்சக்கரம் அதன் பின்னர் வேகம் பிடித்து எதிர்வரும் காலங்கள் விரைவாக உருண்டோடிவிடும். நாளை என்பது நாளையும் வரும். ஆனால் இன்று என்பது இன்றைக்கே ஆகையால் நாம் உடனடியாக தமிழீழ தனியரசுக்கான பணியை ஆரம்பிக் வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
முன்னரைப்போன்று அல்லாது மாவீரர் நாளில் கூடியாகிவிட்டது வீரவணக்கம் செலுத்தியாகிவிட்டது இனி அடுத்த எழுச்சிநாள் வரட்டும் எனக்காத்திருக்காது ஒவ்வொருநாளையும் பயனுள்ளதாக மாற்றவேண்டும். இந்த எழுச்சி, ஒற்றுமை தமிழீழ தனியரசு கிடைக்கும் வரை உறுதியாக இருக்கவேண்டும். அப்போதுதான் தமிழீழ தனியரசு என்ற உயர்ந்த இலக்கின எட்ட முடியும்.
எமது இனத்திற்கு விதிக்கப்பட்ட சாபக்கேடுபோல் வரலாற்றுவழிபட்டு வந்து கொண்டே இருப்பது துரோகங்களும், காட்டிக் கொடுப்புக்களும் ஆகும். இந்நிலை எமது ஒற்றுமை இன்மையால் ஏற்பட்டதாகும். நாம் அற்ப காரண காரியங்களை முன்வைத்து பல்வேறு குழுக்களாகவும், இயக்கங்களாகவும், அமைப்புக்களாகவும் பிரிந்து நிற்பதன் விளைவே காக்கை வன்னியர்களும், தேவானந்தாக்களும், கருணா(நிதி)களும் உருவாகுவதற்கு வாய்பாக அமைந்துவிடுகின்றது.
இதனால் நாங்கள் இழந்தது கொஞ்சமல்ல. பல நூற்றாண்டு கடந்தும் அகதிகளாக அவலங்களை சுமந்து பூமிப்பந்தின் மூலை முடுக்கெல்லாம் பரவிவாழும் இந்த நிலைக்கு காரணமும் முள்ளிவாய்கால் பகுதியில் எமது விடுதலைப் போரட்டமும் அதன் கட்டமைப்புக்களும் விலமதிப்பற்ற இலட்சத்திற்கு மேற்பட்ட எமது உறவுகளும் அழித்தொழிக்கப்பட்டபோதும் தடுத்து நிறுத்த முடியாதவர்களாக நிற்கும் கையறு நிலைக்கும் அந்த பிளவு நிலையே காரணமாகும்.
இப்போது கூட தமிழனத்தின் வரலாற்று வழிவந்த தமிழீழ அரசும், அதன் கட்டமைப்புகளும் முள்ளிவாய்க்காலில் புதையுண்டு போயுள்ளன. அதனை அப்படியேவிட்டு விட்டு நாம் இருந்துவிட முடியாது.
மானுட தர்மத்தை மீறி தமிழர்களின் தலைமையினை அழிக்க முற்படும் உலக நாடுகள்
மானுட தர்மத்தின் அடிப்படையில் எம் மக்கள் பக்கம் நின்று நியாயம் பெற்றுத்தர வேண்டிய உலக வல்லரசு நாடுகளினது இன்றைய நிலை சிங்களத்துடன் உறவாடுவதாகவே உள்ளது. சிங்களத்துடன் இனைந்து எஞ்சியுள்ள தமிழர்களது தலைமையினையும் கட்டபை;புகளையும் அழித்தொழிப்பதிலையே குறியாக உள்ளனர். இதனையே அன்மையில் நிகழ்ந்த மூன்று சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன.
ஒன்று: கடந்த மே மாதம் 17ம் நாளுடன் எமது விடுதலைப் போராட்மும், தமிழீழ விடுதலைப்புலிகளும் அழித்தொழிக்கப்பட்டதாக கூறப்பட்டுவரும் நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரித்து அனுப்பியதாக தமிழர் ஒருங்கினைப்புக் குழுவைச் சேர்ந்த 21 பேருக்கு பிரான்சு நீதிமன்றம் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளும் குறைந்த பட்சம் ஆறு மாதங்களும் சிறைத்தண்டை வழங்கி தீர்பளித்துள்ளது.
இந்த நூற்றாண்டு கண்டிராத மனிதப் பேரவலத்தினை முள்ளிவாய்க்கால் பகுதியல் அரங்கேற்றி தமிழர்களை கொன்று குவித்து இராசாயன துகள்களை வீசி சாம்பலாக்கியும் புல்டோசர் ஏற்றி கொன்றும் எஞ்சியவர்களை உயிருடன் குழிகளில் போட்டு மூடியும் மிகப்பெரும் இன அழிப்பை கண்முன்னே நிகழ்த்திவிட்டு தற்போது அதிகார பீடத்திற்காக அடிபட்டு கொண்டிருக்கும் ராசபக்சவையும் அவரது சகோதரர்களையும், சரத்பொன்சேகாவையும் முழு சுதந்திரமாக உலாவ விட்டு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்தவர்களிற்கு தண்டனை வழங்கியுள்ளமை கடைந்தெடுக்கப்பட்ட அயோக்கியத்தனமாகும்.
இரண்டு: தேசியத்லைவரது பிறந்தநாள், மாவீர் தின நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பிப்பதற்காக கனடா சென்ற “நாம் தமிழர்” இயக்கத்தலைவர் சீமானை கைது செய்து நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது கனேடிய அரசு. தேசியத்தலைவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் இளையோர்கள் ஏற்பாடு செய்த நிகழ்வில் பங்குபற்றி கருத்துரையாற்றியதின் அடிப்படையிலையே நாடுகடத்தப்பட்டுள்ளார் சீமான் அவர்கள்.
பதிலுக்கு பதில், இரத்தத்திற்கு இரத்தம் என தமிழர்கள் அனுபவித்த அவலங்களை சிங்களத்திற்கும் திருப்பிக் கொடுக்காது எதிரியின் துப்பாக்கி முணை தன்னருகில் நெருங்கிவந்த போதும் கூட வீரத்துடன் போரிட்டு முற்றுகையினை உடைத்தெறிந்து பலநூறு கரும்புலி வீரர்களது தியாகத்தின் அடித்தளத்தில் தளபதிகளுடன் வெளியேறிச் சென்று தமது இருப்பினை உறுதி செய்துள்ளார் எம்தலைவர்.
சிங்களத் தலைவர்கள் தமது ஆட்சி அதிகாரத்திற்கு வலுச்சேர்ப்பதற்காகத்தானே ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை அழித்தொழித்தார்கள். அவர்கள் சிந்திய இரத்தத்தை பங்கு போட்டு தேர்தல் வெற்றியாக்கி கொள்ளத்தானே அதிபரும் முன்னால் இராணுவத் தளபதியும் துடியாய் துடிக்கின்றனர்.
இதனையே தேசியத்தலைவர் செய்திருந்தால் கிளிநொச்சியை கூடவிட்டு செல்லவேண்டியிருந்திருக்காது. ஒற்றை சிங்களனுக்கும் தீங்கு நேரக்கூடாது என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்து மெய்ப்பித்தவர் எமது தேசியத்தலைவர்.
இதனைத்தானே சீமான் தனது ஆதங்கமாக, மனிதநேயம் குறித்து வாய்கிழிய பேசிவரும் உலக வல்லரசு நாடுகளைப் பார்த்து கேட்டிருந்தார். அது தவறா?
சனநாயக விழுமியங்களை கட்டிக்காப்பாற்றும் நாடுகளில் ஒன்றாக கருதப்படும் கனடாவில் கூட அடிப்படையற்ற குற்றச்சாட்டை சுமத்தி இரு கைகளையும் பின்பக்கமாக வைத்து விலங்கிட்டு ஏதோ அதிபயங்கர குற்றவாளி போன்று நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடாவின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதனால்தான் தொடர்ந்து உரையாற்றுவதற்கு அனுமதிக்க முடியாது என்று கனேடிய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த போதும் விசாரனையை மேற்கொண்டது என்னவோ இந்திய சீக்கிய அதிகாரியே..! அதிலும் குற்றம் சாட்ப்பட்டதற்கு துளியளவேனும் சம்மந்தம் இல்லாத ராசீவ் காந்தி படுகொலை தொடர்பாகவும் விசாரனை நடாத்தியுள்ளமை உங்கப்பன் புதரிற்குள் இல்லை என்பது போன்று சம்பந்தப்பட்டவர்களை இனம் காட்டியுள்ளது.
தமிழர்களை வழிநடாத்தி மீண்டும் ஒன்றினைத்து செல்வதற்கு எந்தத் தலைமையும் உருவாகிவிடக் கூடாது என்பதில் இவர்கள் எல்லோரும் உறுதியாக இருப்பது தெளிவாகிறது.
மூன்று: 2011 ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டினை நடாத்துவதற்கான அனுமதியினை பெற்று, நடாத்தி முடிக்கப்பட்ட தமிழினப்படுகொலைகள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், போர்குற்ற விசாரணைகளில் இருந்து தப்பித்து கொள்வதற்கு முற்பட்ட சிறிலங்காவிற்கு ஆதரவாக 53 நாடுகள் பிரதிநிதித்துவம் வகிக்கும் காமன்வெல்த் அமைப்பினைச் சேர்ந்த 45 நாடுகள் இந்தியாவின் பின்னால் அணிவகுத்துநின்று ஆதரவு தெரிவித்து நின்றனவே..! இந்நிலையினை என்னவென்று சொல்ல? இருப்பினும் லண்டன் பிரதமரின் எதிர்ப்பினை அடுத்து கனடா, நியூசிலாந்து நாடுகளது பிரதமர்களும் இணைந்து கொடுத்த அழுத்தம் காரணமாக அம்முயற்சி தோற்கடிக்கப்பட்டிருந்தமை ஓரளவிற்கு ஆறுதலான விடயமாகும்.
சிறிலங்கா அரசின் தூதரக நெருக்கடிகளுக்கு உட்பட்டு தத்தமது நாடுகளில் உள்ள தமிழர் தலைமைத்துவங்களை வேரோடு அழிக்கும் முயற்சியில் மனிதாபிமானம் பற்றியும் மனிதநேயம் பற்றியும் உலகிற்கு போதனை செய்யும் இவ் உலகநாடுகள் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வரலாறு மீண்டும் எமது கைகளில் தந்திருக்கும் சனாதிபதி தேர்தல் களம்
வரலாறு மீண்டும் மீண்டும் எமது கைகளிலேயே எமக்கான தலைவிதியை தீர்மாணிக்கும் பொறுப்பினை கையளித்து நிற்கின்றது. அவ்வாறு தற்போது எமக்கு கிட்டியிருக்கும் வாய்ப்பு சிறிலங்கா சனாதிபதி தேர்தல் களமாகும்.
“தமிழரின் தேசிய தனித்துவத்தை அங்கீகரித்து அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தை பகிர்ந்தளித்து, அரவணைத்து வாழ சிங்கள தேசம் மறுத்துவருகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இதுகாலம்வரை இந்த அரசியல் புறக்கணிப்பு தொடர்கிறது. வேண்டப்படாத இனத்தவராக ஒதுக்கப்பட்டு, புறந்தள்ளி வைக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து சலித்துப்போன தமிழர், சிங்கள ஆட்சியமைப்பையும் அதன் அதிகாரபீடத்தினையும் ஒதுக்கி புறக்கணிக்கத் தீர்மாணித்து விட்டனர். சிறிலங்காவின் அரச அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாக்களிக்காமை இந்தப்புறக்கணிப்பின் காத்திரமான வெளிப்பாடாகும்” இவ்வாறு கடந்த சனாதிபதி தேர்தல் தொடர்பாக 2005ம் ஆண்டு மாவீரர்தின உரையில் தேசியத்தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
இது முற்றிலும் உண்மை நிலையாகும். சிறிலங்காவினது ஆட்சி, அதிகாரபீடங்கள் எதுவானாலும் தமிழர்களிற்கு விரோதமாவே செயற்பட்டு வந்துள்ளமை கடந்த காலங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்களத்தின் அனைத்து கட்டமைப்புக்களும் ஒன்றிணைந்து தமிழர்களை அழித்தொழித்தும் எஞ்சியவர்களை முட்கம்பி வேலிக்குள் சிறைவைத்து சிதைத்தும் வந்த நிலையில் நாட்டை ஆளுவதற்கான போட்டிக்களத்தை திறந்துவிட்டு அவற்றை மூடிமறைப்பதற்கு முற்பட்டு நிற்கின்றது சிங்கள தேசம்.
இறுதிப்போரில் பயங்கரவாதத்தின் பெயரால் அனைத்துலக நாடுகளும் சிங்களத்துடன் இணைந்து செயற்பட்டு வந்தநிலையில் அதற்கு பின்னரான தீர்வுத்திட்டம் குறித்து வாக்குறுதி அழித்தவாறு சிறிலங்கா அரச தலைமை எந்தவித ஆக்கபூர்வ முன் முயற்சிகளையும் எடுக்காததோடு சிறிலங்காவை முற்றுமுழுதாக சீனத்திடம் அடகு வைக்கும் செற்பாட்டில் முழு மூச்சாக இறங்கியதனை அடுத்து அரசியல், பொருளியல் ரிதியான அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளன இந்த வல்லாதிக்க நாடுகள்.
இவற்றில் முக்கியமாக முட்கம்பி வேலிக்குள் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்ளை அவர்களது சொந்த இடங்களிற்கு திருப்பி அனுப்பவேண்டும், இறுதிப்போர் நடைபெற்ற போது இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் தொடர்பாக அனைத்துலக விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக முன்வைக்கப்படுவதோடு போர்க்குற்ற விசாரணை எத்தருணத்திலும் ஆரம்பிக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் நிலையினையும் தக்கவைத்து வருகின்றன வல்லாதிக்க நாடுகள்.
இதனையே அன்மைக்காலங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சிறிலங்காவிற்கான அனைத்துலக பிரதிநிதிகளின் வருகை உறுதிப்படுத்துகின்றது.
இதனை சற்றும் எதிர்பாராத சிங்களம் அதனை திசைதிருப்புவதற்கும், தற்காலிக ஓய்வுநிலையில் அக்கோரிக்கைகளை வைத்திருப்பதற்குமாகவே சனாதிபதி தேர்தலை அறிவித்துள்ளது.
யுத்தவெற்றியின் பிராதான கதாநாயகனாக சிங்கள மக்களால் கருதப்படும் முன்னால் இராணுவத் தளபதியும் கட்டளை அதிகாரியுமான சரத்பொன்சேகா எதிர்க்கட்சிகளின் பூரண ஆதரவுடன் எதிர்க் களத்தில் நிற்பதனையும், இன்னும் இரண்டு ஆண்டுகள் தனது பதவிக்காலத்தில் எஞ்சியிருப்பதையும் கருத்தில் கொள்ளாது அவசர அவசரமாக சனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதன் நோக்கம் இதுவாகவே இருக்கும்.
மேற்குலக நாடுகளது அச்சுறுத்தலுக்கு மத்தில் எஞ்சிய இரண்டு ஆண்டுகளாக ஆட்சியை நடாத்துவது என்பது மிகவு கடினமான விடயமாகும். இவ் இக்கட்டில் இருந்து சீனாவினால் கூட சிறிலங்காவை காப்பாற்ற முடியாது என்பதுதான் யதார்த்த நிலையாகும்.
சீனாவினால் முதலீடுகளையும் நிதியுதவிகளையும்தான் நேரடியாக வழங்கமுடியும். அவ்வாறே அனைத்துலக நாணய நிதியம் வழங்கிய கடனிற்கு இணையான தொகையை சிறிலங்காவிற்கு வழங்கி தனது நிலையை உறுதி செய்ய முற்பட்டுள்ளது சீனா.
தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆளுமையின் வீச்சு வலுவிழக்கக்கூடியவாறான இந் நகர்வுகளை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது.
அதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள அய்க்கிய நாடுகள் பொதுச்சபை உள்ளிட்ட உலக மன்றங்கறளினூடாக சிங்களத்திற்கு அரசியல், பொருளியல் ரீதியிலான நெருக்கடிகளை ஏற்படுத்த முனைந்து நிற்கின்றது. இந் நெருக்கடியை சீனாவினாலோ அல்லாது தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் பிரசன்னத்தினை விரும்பாத சக்திகளாலோ தடுத்து சிங்களத்தினை காப்பாற்றிவிட முடியாது என்பதே இன்றைய நிலையாகும்.
இதனை முற்றிலுமாக உணர்ந்து கொண்டதனால்தான் சனாதிபதித் தேர்தலை அறிவித்து தற் காலிகமாக தன்னை பாதுகாக்க முற்பட்டுள்ளது சிங்களம்.
தமிழர் சிந்திய இரத்தத்தை வைத்து நடக்கும் சிங்களத்தின் போட்டி அரசியல்
சிறிலங்காவிற்கான சனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கபட்ட பின்னர் தேல்தல்களம் தமிழகத்தையே விஞ்சிவிடும் அளவிற்கு சூடுபிடித்துள்ளது. தமிழின அழிப்பிற்கு யார் மூலகாரணம் என்பது தொடர்பாக, தமிழினத்தினை அழத்தொழித்தவனும் அதற்கு ஆணையிட்டவர்களும், எம்குலப் பெண்களின் கற்பை சூறையாடிவனும் அதற்கு கட்டளையிட்டு வேடிக்கை பார்த்தவர்களும் எதிர் எதிர் களத்தில் நின்று கொண்டு மாறி மாறி கருத்துக்களை கூறி பட்டிமன்றம் வைக்காத குறையாக கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் என்ன வேடிக்கை என்றால் தமிழினத்தை கூண்டோடு அழித்தொழித்த இருவரும் தமிழர்களின் நலனில் அதிக அக்கறை உள்ளவர்காளவும் தமிழர்களை காப்பதற்காக வந்த தேவ தூதர்கள் தாம் தான் என்றும் காட்ட முற்பட்டு தமது நடிப்புத் திறமையினை பரிசோதிக்கும் களமாக இந்த தேர்தல் களத்தினை மாற்றியுள்ளமைதான்.
தமிழீழ விடுதபை;புலிகளை அழித்தொழிப்பதாக கூறி மேற்கொள்ளப்பட்ட போரின் மூலமாக தமிழ் மக்களை அழித்தொழித்த பெருமைக்குரியவன் தான் மாத்திரமே என கூறிக்கொள்ளும் சரத் பொன்சேகா தமிழ் மக்களது வாக்கினை பெற்றுக்கொள்வதற்காக தேசியத்தலைவர் பிரபாகரனது பெற்றோர் ஆதரவு வழங்கினால் கூட ஏற்றுக்கொள்வதாகவும், முன்னால் விடுதலைப்புலிகளது போராளிகள் தளபதிகள் என யாராக இருந்தாலும் தனது வெற்றிக்காக பணியாற்றுவதற்கு முன்வந்தால் முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்து சிங்கள ஆட்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். தேர்தல் தேதி நெருங்கும் போது தமிழகத்தில் சிலர் கூறியது போல் தனித் தமிழீழமே தமிழர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என கூறினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஏன் என்றால் இவர்களது ஒரே இலக்கு சிறிலங்காவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதுதான். இவர்களது பசப்புவார்த்தைகளுக்கு தமிழர்கள் ஒருபோதும் மயங்கமாட்டார்கள் என்பதனை உணரத்தானே போகின்றனர். இந்த நேரத்தில் கடந்த முறைபோன்று நாம் இது எமக்கான தலைமையை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இல்லைதானே என்று ஒதுங்கியருந்து வேடிக்கை பார்க்க முடியாது. அதனால் யாராவது ஒருவரை ஆதரிப்பது என்பதல்ல.
தமிழினம் எதிர்கொண்ட சிங்கள ஆட்சியாளர்கள் எல்லோரையும் ஒருமித்து வடித்தெடுத்தது போன்று தமிழின அழிப்பில் ஈடுபட்டு அதன் உச்சமாக ஏதுமறியாது கருவறைக்குள் இருந்த பிஞ்சுகளைக் கூட தேடியழித்து நரவேட்டையாடிவிட்டு இன்று தமிழ்ச் சிறுவர்களை வாரியணைத்து முத்தம் கொடுத்து கணக்கினை தீர்த்துவிடலாம் என எண்ணும் ராசபக்சவும், தமிழர்கள் சிந்திய குருதியில் நீச்சலடித்து அரசியல் கனவேதுமின்றி இருந்த நிலைமாறி வலுவான சிறிலங்காவின் அதிபர் வேட்பாளராகியிருக்கும் பொன்சேகா அன்னப்பறவையில் பறந்தாலும் இவர்கள் இருவரும் எமது தெரிவிற்கான தகுதியற்றவர்கள். ஏன் என்றால் இருவரும் கடைந்தெடுக்கப்பட்ட அயோக்கியர்களாகவும், அடிப்படையில் சிங்கள பௌத்த பேரினவாதிகளாகவும் இருப்பதனால்தான். இவர்களில் யார் வென்றாலும் எமது துயரநிலை மாறப்போவதில்லை என்பதுதான் உண்மை நிலை.
தமிழர் தரப்பின் பொது வேட்பாளரிற்கான அவசியம்
இருப்பினும் எமது வாக்குப்பலத்தினை நிரூபிப்பதற்காகவும், எமது வாக்குகள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதனை தடுப்பதற்காகவும் நாம் வாக்களித்தே ஆகவேண்டும். அதற்கு தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தவதே சாத்தியமாகும்.
சிறுபான்மையினர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கவராக அப் பொதுவேட்பாளர் அமைவது அவசியமாகும். ஏன் என்றால் ஒரு கோடி நாற்பது இலட்சம் வாக்காளர்களில் சுமார் 25 இலட்சம் வாக்குகள் தமிழர் பகுதியில் அதாவது 6 தேர்தல் மாவட்டங்களில் உள்ளது. அதில் முழுமையாக வடகிழக்கில் எட்டு இலட்சம் தமிழர் வாக்குகளும் ஏனைய பகுதிகளில் சில இலட்சம் வாக்குகளும் முக்கியமாகும். அந்த வாக்குப்பலத்தினை ஒருமுகப்படுத்தி எமது பலத்தினை உறுதிப்படுத்துவோமாயின் அடுத்து நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பயனுள்ளதாக இருக்கும்.
சிங்களத்தின் பிரதான கட்சிகளின் செந்தப்பலம் எழுபது, எண்பது ஆசனங்கள்தான். கூட்டணிபலம் சேர்த்தே அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியும். இந்நி;லையில் சிறுபான்மை இன மக்கள் அனைவரும் ஒருமித்து நிற்போமாயின் சுமார் நாற்பதிற்கு மேற்பட்ட ஆசனங்களை எமதாக்கிக் கொள்ள முடியும். அவ்வாறு சாத்தியமானால் எமது தரப்பு கோரிக்கைகளை வலுவான அரசியல் தளத்தில் நின்று முன்வைத்து நிறைவேற்றிக் கொள்வதற்கு குறைந்தபட்சமேனும் வாய்ப்பிருக்கின்றது.
தற்போதைய நிலையில் மனோகணேசனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனித்தனியே பொது வேட்பாளர் பற்றி அலோசித்து வருகின்றனர். தமிழ்மக்கள், தமிழ்பேசும் முசுலீம் மக்கள், மலையகத் தமிழர்களென எல்லோரும் ஒருமித்து ஏற்றுக் கொள்ளும் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவதன் ஊடாகவே இவை சாத்தியமாகும்.
முன்னர் நடைபெற்ற பல தேர்தல்களில் தனித்து நின்றபலர் தோல்வியடைந்திருந்த நிலையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியம், தன்னாட்சி உரிமை, தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப்புலிகளே என்பதை ஏற்றுக் கொண்டு அதனடிப்படையில் நின்றே 22 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையின் தொடர் வெளிபாடாகவே அன்மையில் நடைபெற்ற யாழ்ப்பாணம், வவுனியா மாநகரசபைத் தேர்தலில் குறைந்த படச சுவரொட்டி பிரச்சாரம் கூட செய்யாது கட்சி அலுவலகத்தில் இருந்து கொண்டே கணிசமான ஆசனங்களை கைப்பற்றியிருந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
இதுவரை தமிழர்களின் தலைமையாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளது தலைமை வெளிப்படாது இருக்கும் இந்நிலையில் பிரிவு நிலை போக்கி எல்லோரும் ஒன்றினைந்து எமது அரசியல் தளத்தினை உறுதி செய்து கொள்ளவேண்டிய தருணமாகும்.வராலாறு நம்கையில் தந்த வாய்பினை முழுமையாக பயன்படுத்தி தமிழர் தரப்பின் அரசியில் இருப்பினை உறுதிசெய்துகொள்ள சம்பந்தப்பட்டவர்கள் முயற்சி எடுக்கவேண்டும்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கொள்கைவிளக்க உரையில் கூறப்பட்டவாறு, தமிழீழ இலட்சியத்தை நோக்கிய எமது மக்களின் போராட்டத்திற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புக்களும் அதன் செயற்பாட்டாளர்களும் எமது இலட்சியமான தமிழீழ தனியரசு கோட்பாட்டில் இருந்து விலகிப்போவதை தமிழ்மக்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என்ற இன்றைய உண்மைநிலையை யாரும் புறந்தள்ளிவிட்டு செயற்பட்டுவிட முடியாது.
இந்நிலையில் இத்தேர்தலில் மகிந்த ராசபக்சவிற்கு முண்டு கொடுப்பதற்கு, சித்தார்த்தனும், டக்ளசு தேவானந்தாவும், சந்திரகாந்தனும்(பிள்ளையான்), தொண்டைமானும் முன்வந்துள்ளமை இனவிடுதலையினைவிட ஆட்சியாளர்கள் வீசும் எலும்புத் துண்டுகளே அவர்களுக்கு முக்கியமாக புலப்பட்டதன் வெளிப்பாடே ஆகும்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முக்கிய ஆதாரமாக கொண்டுள்ள தமிழர்களை அழித்து பெறப்பட்ட போர் வெற்றியை பெற்றுத்தந்த தளபதியையே விரட்டி விட்ட மகிந்த, சகோதரர்களுக்கு இவர்களை விரட்டிவிட எவ்வளவு நேரமாகும் என்பதனை இந்த எலும்புபொறுக்கிகள் உணர வேண்டும்.
எமது அரசியல் நிலையை உறுதி செய்வதற்கான மாபெரும் பணி தாயகத் தமிழர்கள் முன் உள்ளது போன்று தாயகத்தில் நீண்ட காலமாக சிங்கள ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட பொதுமக்களின் கட்டுமானங்களை சீரமைத்து இடம்பெயர்ந்து முட்கம்பி வதைமுகாம்களில் அடைபட்டுள்ளவர்களை மீட்டு மறுவாழ்விற்கு உட்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு உலகத்தமிழர்களுக்கு உண்டு. அதோடு விழிதிறந்த உறக்க நிலையில் இருந்து, எமது மக்களின் அழிவினைப்பார்த்துக் கொண்டிருந்த சர்வதேச நாடுகளை இயங்குநிலைக்கு கொண்டுவந்து சிங்களத்திற்கு தொடர்ச்சியாக நெருக்கடிகளை வழங்க வைக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பும் உண்டு.
ஏன் என்றால் சிங்களத்தை நெருக்கடிக்குள் வைத்துக் கொண்டே எமது விடுதலை நோக்கிய பயணத்தினை மேற்கொள்ள முடியும். இது மிகவும் கடினமான பணியாக இருப்பினும் அவசியமானதாகும். ஆயிரம் மைல்கள் நடைபயணம் செல்பவனும் முதலாவது அடியை எடுத்து வைத்தால்தான் சாத்தியப்படும் என்பதற்கினங்க விரைவாக பணியாற்ற விரைந்திடுவோம்.
“நாம் பூமிப்பந்திலே வாழ்கின்ற தனித்துவமும் விசேட பண்புகளும் கொண்ட ஒரு சிறப்பு வாய்ந்த இனம், மிகவும் தொன்மை வாய்ந்த இனம், தனித்துவமான இன அடையாளங்களோடும் தேசிய இனக்கட்டமைப்போடும் வாழ்கின்ற ஒருஇனம். ஒடுக்குமுறைக்கு எதிராக, விடிவு தேடி, விடுதலை வேண்டி போராடி வருகின்றோம். நாம் காலம் காலமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த எமது சொந்த மண்ணில் எமக்கே உரியதான வரலாற்று மண்ணில் அந்நியரிடம் பறிகொடுத்த ஆட்சியுரிமையை மீள நிலைநாட்டுவதற்காகவே போராடிவருகின்றோம். இழந்துவிட்ட எமது இறையாண்மையை மீள நிறுவ, எமது சுதந்திர தேசத்தை மீள கட்டி எழுப்புவதற்காகவே நாம் போராடிவருகின்றோம்.
எமது மக்களின் இந்த நீதியான போராட்டத்தைச் சிங்கள தேசம் தொடர்ந்தும் ஏற்றுக் கொள்ள மறுத்துவருகின்றது. மாறாக, எம்மண்ணின் மீதும் மக்களின் மீதும் பெரும் இன அழிப்புப் போரை, ஆக்கிரமிப்பு போரை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. அடக்குமுறைக்குட்பட்டு, சாவும் அழிவும் எண்ணில்லா இன்னல்களும் குடிபெயர்ந்த அகதிவாழ்வுமாக எம்மக்களின் அன்றாடச் சீவியம் சீரழிந்த போதும் எமக்காக எந்தவொரு நாடோ, எந்தவோர் அமைப்போ குரல் கொடுக்கவில்லை. ஆதரவோ, அனுதாபமோ தெரிவிக்கவில்லை. உலகமே கண்ணைமூடிக் கொண்டு, பாராமுகமாகச் செயற்படுகிறது.
பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர்கள் பரந்து வாழ்ந்த போதும் எமக்கென ஒருநாடு இல்லாதமைதான் இந்த பரிதாப நிலைக்கு – இந்த மோசமான நிலைக்கு காரணம்”.
அந்த நிலை மாற்றி எமக்;கான தேசமான தமிழீழ தனியரசை நிறுவுவதற்கான பாதையில் எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூகளை எதிர் கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறுவிட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள, அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். தமிழீழம் காண்போம்.
தமிழர் தலைமைகளை தேடியழிப்பதிலும் மறுபுறம் சிங்களத்திற்கு ராசதந்திர ரீதியில் நெருக்கடிகளை கொடுப்பதுமாக செயற்படும் உலகநாடுகளது சவாலை எதிர் கொண்டு தமிழீழ தனியரசிற்கான பணியை விரைவுபடுத்துவோம்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
- நெருடலுக்காக இரா.மயூதரன்
Comments