வெற்றிவீரப் பேச்சுகளை நம்பிச் மாண்டு மடிந்தவர் வாழ்வு, மறந்த கதைகளா? அல்லது மறைக்கப்பட்டு வரும் கதைகளா?
பல கேள்விகளுக்கு பதில் தரவேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு...!
அண்மையில் எனது பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் சமூக அரசியல் விடயங்களில் அதிக அக்கறையும் அவற்றை ஆழ்ந்து நோக்கும் தன்மையும் கொண்டவர். இருவரும் தற்போதைய இலங்கை அரசியல் நிலைமை பற்றி ஒரு சிறிய அரசியல் அலசல் நடத்தினோம். எமது உரையாடலிடையே ஒரு கூற்றினை அந்நண்பர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் தொடர்ச்சியாக இருந்து வரும் சாபக்கேடு அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் தான். அவற்றின் அடிப்படைகளையும் இருப்பையும் அரசியல் ரீதியில் மக்கள் உரியவாறு அடையாளம் காணாதவரை இந்நாட்டில் எவருக்கும் விமோசனம் வரப்போவதில்லை என்பதே அவரது கூற்றாக இருந்தது.
ஆழமான அரசியல் அர்த்தமுடைய அக்கூற்றுடன் தற்போதைய அரசியல் நிலைமையினையும் குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல் விவகாரங்களையும் பொருத்திப் பார்க்கும் போதுதான் பல்வேறு விடயங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து பார்க்க வேண்டியுள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இடம்பெறவுள்ளது. ஜனவரி 26 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஆளுந்தரப்புக் கட்சியும் எதிர்க்கட்சிகளும் தத்தமது ஜனாதிபதி வேட்பாளர்கள் யார் என்பதைத் தீர்மானித்து விட்டார்கள். ஏனைய சிறு கட்சிகளும் தனிநபர்களும் இறங்க முடிவு செய்து வருகின்றனர். பல அரசியல் கட்சிகள் பிரதான இரு வேட்பாளர்களில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பதில் தீர்மானம் மேற்கொண்டும் வருகின்றன. முடிவுக்குவராத கட்சிகளுக்கு வலை வீசுவதில் பிரதான இரு வேட்பாளர்களுக்கான கட்சிகளும் மும்முரமாகி நிற்கின்றன. ஓரிரு கட்சிகள் மதில் மேல் இருந்து வருகின்றன. ஆனால், வெளிப்படையாகவோ அன்றி மறைமுகமாகவோ ஏதாவது ஒரு பக்கம் இறங்கிக் கொள்ளவே செய்து கொள்ளும். இவ்வாறு ஒவ்வொரு பாராளுமன்றத்தை நோக்கிய கட்சிகள் ஒவ்வொன்றும் தனியே புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக மட்டும் தத்தமது ஆதரவை வழங்க முன்வரவில்லை. அதற்கு ஊடாகத் தத்தமது எதிர்கால இருப்புக்கும் பதவிகள் உட்பட பாராளுமன்றம் செல்வதற்கான பாதை அமைப்பதிலும் இவ் ஜனாதிபதித் தேர்தலைக் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன.
இன்று ஆளுந்தரப்பாக இருந்து வரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் தற்போதைய ஜனாதிபதியைத் தமது வேட்பாளராக அறிவித்து விட்டது. அக்கட்சிகளுக்கு மீண்டும் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வரவேண்டும் என்பது அவசியமான தேவையாகும். ஏனெனில் பாராளுமன்றப் பதவிகளும் அதன் மீதான அமைச்சர் பெரு மக்களினதும் தொடர்ச்சியான அனுபவிப்புகள் எவ்வகையிலும் இழக்கப்படக் கூடாதவைகளாகும். இதுவரையான நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளில் தற்போதைய நான்கு வருடகால ஜனாதிபதியின் கீழ் தான் அவரைச் சுற்றியுள்ள கணிசமான கூட்டத்தினருக்கு அதிகபட்ச வாய்ப்புகள், வசதிகள், அனுபவிப்புகள் கிடைத்து வந்துள்ளன என்று கூறப்படுவதில் உண்மைகள் இருக்கவே செய்கின்றன.
யுத்தச் சூழலும் அதனால் கட்டப்பட்ட திரைகளும் ஆளுந்தரப்பினர் வெவ்வேறு நிலைகளில் பல்வேறு அளவுகளில் வசதி வாய்ப்புகளை அனுபவிக்கக் கூடியவர்களாகிக் கொண்டனர். ஆதலால் மாற்றங்கள் எதுவும் செய்யப்படாத நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் அதில் மகிந்த ராஜபக்ஷ மீளவும் ஜனாதிபதியாக வருவதும் தேவைப்படுகிறது. இத்தகைய சூழலில் அங்கு எந்தக் கட்சியும் எந்தத் தனிநபரும் மக்கள் சார்பாகவோ அல்லது நாட்டின் எதிர்காலம் பற்றியோ யாரும் வாய் திறக்க முடியாத நிலையுள்ளது. ஏனெனில் யாராவது கேள்வி கேட்கத் துணிந்தால் அடுத்து வரும் பாராளுமன்றத்திற்கான வரப்பிரசாதங்களை இழக்க வேண்டியவர்களாகிவிடவே நேரிடும் என்பதில் ஆளுந்தரப்பில் மிக அவதானமாகவே உள்ளனர்.
அதேவேளை, அங்கு கொள்கை,கோட்பாடு என யாராவது தமக்குள் இரகசியமாகப் பேசிக் கொண்டாலும் அவற்றுக்கும் நியாயங்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் பழைய இடதுசாரிகள் எனப்படுவோர் அமெரிக்க மேற்குலக எதிர்ப்பும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பும் என்ற இரண்டு கடதாசி அட்டைகளைக் கைகளில் வைத்துக் காட்டி நிற்கின்றனர். ஆனால், இதே அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளில் யுத்தச் சூழலுக்கும் நிதி ஆதாரத்திற்கும் ஆயுதக் கொள்வனவுக்கும் அமெரிக்க மேற்குலகை அண்டிநின்று உதவிகள்,ஒத்துழைப்புப் பெற்று வந்தன என்பது பேசப்படாத விடயங்களாக மறைந்து காணப்படுகின்றன. அதேவேளை, இத்தகைய அமெரிக்க மேற்குலக எதிர்ப்பு என்று கூறப்படுவதில் அரை உண்மை கூட இல்லாத நிலையில் பிராந்திய மேலாதிக்க வல்லரசான இந்தியாவின் பக்கம் இன்றைய அரசாங்கம் முற்று முழுதாக அடிபணிந்து நிற்பது பற்றி அரசாங்கத் தரப்பு இடதுசாரிகளோ, தேசப்பற்றாளர்களோ வாய் திறப்பதில்லை. இவை யாவும் யுத்த வெற்றிக்கு உரிமை கொண்டாடி நிற்கும் மகிந்த ராஜபக்ஷ சகோதரர்களின் குடும்ப ஆட்சிக்கு ஆதரவு தருவோருக்கு எவ்வகையிலும் பிரச்சினைக்குரிய விடயங்கள் அல்ல. இவ்விடத்திலே தான் யாருக்காக,யாரால்,எவ்வாறு ஜனாதிபதி ஆட்சி நடத்தப்படுகிறது என்பது கேள்வியாகிறது.
அடுத்த தரப்பிலே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கட்சிகள் முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவை சிக்கெனப் பிடித்து பொதுவேட்பாளர் என்ற பெயரில் தமது வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதனது கூட்டாளிக் கட்சிகளுக்கும் கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதமாகும். ஏனெனில் 19.05.2009 இன் யுத்த வெற்றிக்குப் பின் காலிமுகத்திடலிலே இடம்பெற்ற இராணுவ வெற்றி விழாவில் ரணில் விக்கிரமசிங்க தவிர்க்க முடியாது கலந்துகொண்டு கூனிக்குறுகியவாறு தான் இருந்தார். அவ்வேளையிலும் கூட ஜனாதிபதித் தேர்தல் வரும் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. யுத்த வெற்றியின் முழுப் பலாபலன்களும் தமக்கு மட்டுமே என்ற இறுமாப்பே அரசாங்கத் தரப்பிலும் ஜனாதிபதியிடமும் இருந்து வந்தது. அதன் பின்பான நகர்வுகளின் போதே சரத் பொன்சேகா ஓரங்கட்டப்படவும் அச்சந்தர்ப்பத்தை ரணில் தலைமையிலான சக்திகள் தமக்குரிய வாய்பாக்கிக் கொண்டனர்.
இதனால் ஒரே உறையில் இரத்தம் காய்ந்த நிலையில் காணப்பட்ட இரண்டு வாள்கள் எதிர் எதிர் நிலைக்கும் வந்தன. ஒரே யுத்தத் தேரில் நின்று வந்தவர்கள் தமக்குள் நேரெதிர்த் தேர்களுக்கு மாறிக் கொண்டனர். யுத்த வெற்றி இப்போது துண்டாடப்பட்டுள்ளது. துட்டகைமுனுப் பட்டமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு முரண்நிலை வரும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் ஆட்டுவிப்பார் இருந்தால் ஆடக்கூடியவர்கள் முன்வரவே செய்வார்கள் என்பது இன்று நிரூபணமாகி உள்ளது. இவற்றை எல்லாம் நாட்டின் ஏகப்பெரும்பான்மையான சாதாரண மக்கள் தீர்மானிப்பதில்லை. நாட்டின் பத்து வீதத்திற்கு உட்பட்ட சொத்து சுகம் சுரண்டல் நடத்தும் உயர் வர்க்கத்தினரும் அவர்களின் ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளும் இவர்களுக்கெல்லாம் மேலே உள்ள அந்நிய மேலாதிக்க சக்திகளுமே தீர்மானிக்கின்றன என்பதைச் சாதாரண மக்கள் எங்கே அறிந்து கொள்ளப்போகிறார்கள்.
இவ்வாறு இரண்டு தரப்பாகியுள்ள பேரினவாத முதலாளித்துவ சக்திகளின் இரண்டு பிரதான வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது என்பதில் தமிழ் முஸ்லிம் கட்சிகளிடையே இழுபறியும் எந்தப் பக்கம் எடுத்தலும் இடம்பெற்று வருகின்றன. இதுவரை அரசாங்கம் சார்பாக இருந்து வந்த தமிழ்க் கட்சிகள் எதுவும் தமது நிலைப்பாட்டைக் கைவிட்டு எதிர்த்தரப்புக்கு ஆதரவாக வரத் தயாராக இல்லை. அவை மகிந்தவிற்கான விசுவாசத்தை வெளியிட்டு வருகின்றன. அவ்வாறே முஸ்லிம் கட்சிகளும் தீர்மானம் மேற்கொண்டு வருகின்றன. மலையகத்தின் பிரதான தொழிற்சங்கப் பாராளுமன்றக் கட்சிகள் இரண்டும் தமது ஆதரவை மகிந்தவிற்குத் தெரிவித்துள்ளன. வடக்கில் ஈ.பி.டி.பி.யும் புளொட் கட்சியும் தமது ஆதரவை வழங்க முன்வந்துள்ளன.
- இச்சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைதான் நெருக்கடிக்கு உள்ளாகி நிற்கிறது. பகிரங்கமானதும் உறுதியானதுமான முடிவை மேற்கொள்ள முடியாது தடுமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தனியொரு கட்சியல்ல. ஐந்து கட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றப் பிரதிநிதிகளைக் கொண்டதே அக் கூட்டமைப்பாகும். இவ் ஐந்தில் புலிகளின் நேரடிப் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். அவர்கள் உட்பட ரெலோவின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் தங்கியிருந்து விட்டு இப்போது ஏதோ வகையான சமரச உத்தரவாதத்துடன் நாடு திரும்பியுள்ளனர். இவர்களது வெற்றிவீரப் பேச்சுகளை நம்பிச் சென்ற பல ஆயிரம் பேர் மாண்டு மடிந்தனர். ஆயிரம் பேர் வரை சிறைகளில் விசாரணையின்றி இருந்து வருகின்றனர். இவையெல்லாம் மறந்த கதைகளா அல்லது மறைக்கப்பட்டு வரும் கதைகளா என்பதுதான் புரியாத புதிராக இருந்து வருகின்றன. இத்தனைக்கும் பிற்பாடுதானும் ஏதாவது புதிய திருப்பு முனைவரும் என இலவுகாத்து நிற்போர் இன்னும் இருக்கவே செய்கின்றனர். ஆனால், தலைமைகள் மாறுவதாக இல்லை. இதற்கிடையில் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ராகத்தையும் தாளத்தையும் மாற்றியமைத்தும் வருகின்றனர். இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஜனாதிபதித் தேர்தலில் ஒரு முகப்பட்ட முடிவின் அடிப்படையில் எந்த வேட்பாளரையும் ஆதரிக்க முடியாத அவலச் சூழலுக்குள் சிக்கி நிற்கிறது.
இவர்கள் 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது ஐந்து கட்சிகளும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்களா என்பதே தமிழ் மக்கள் கேட்கும் கேள்வியாகும். அண்மையில் கூட்டமைப்பின் பாராளுமன்றத் தலைவர் இரா.சம்பந்தன் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசியுள்ளார். தான் முன்வைத்தவைகளுக்குத் தெளிவான பதில்கள் கிடைக்கவில்லை என சம்பந்தன் கூறியுள்ளதாகவே செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால், இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதயசுத்தியோடு தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பல பத்துப் பிரச்சினைகளைப் பட்டியலிட்டு அவற்றில் தீர்க்கப்பட வேண்டிய உடனடியானவற்றை இரு பிரதான வேட்பாளர்களுக்கும் முன்னால் வைக்கும் எத்தகைய முயற்சிகளையும் செய்யவில்லை.
- பாராளுமன்ற உறுப்பினர் என்ற பட்டயத்தை வைத்துக் கொண்டு ஆளுக்கு ஆள் அறிக்கை வெளியிட்டு வருகிறதையே காண முடிகிறது. சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவுச் சமிக்ஞை காட்டுகிறார்கள். வேறு சிலர் சரத் பொன்சேகாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக சமிக்ஞை காட்டுகிறார்கள். இவர்கள் தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளா? என்றே தமிழ் மக்கள் கேட்கிறார்கள். வடக்கு,கிழக்கு மக்கள் இதுவரை அனுபவித்த இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்ப,துயரங்கள் பற்றித் தமிழ்க் கூட்டமைப்பினருக்கு நேர்மையான மனப்பூர்வமான அக்கறையிருப்பதாக உணர முடியவில்லை. அவர்களது அக்கறைகள் யாவும் தற்போது தம்வசம் வைத்திருக்கும் பாராளுமன்றப் பதவிகளை எப்படி அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுத் தக்கவைத்துக் கொள்வது என்பதேயாகும். அதற்கான சுழியோட்டங்களும் சுற்றிவளைத்த நியாயங்களுமே வெளிவந்து கொண்டிருக்கின்றன.
- முகாம்களில் இருந்து வெளியே விடப்பட்டு மீள்குடியேற்றத்திற்கு எவ்வித திட்டமும் இன்றி அநாதைகள் போல் இருந்துவரும் மக்களுக்கு என்ன மாற்றுத் திட்டம்?
- அதேபோன்று முகாம்களுக்குள் இன்னும் முடக்கி வைக்கப்பட்டுள்ள மக்களின் விடுவிப்பு எப்போது?
- காணாமல் போனோர் பற்றிய விபரமறிய முடியாது. தவித்து நிற்கும் உறவுகளுக்கு என்ன பதில்?
- கண்முன்னே தம் உறவுகளை கொலைக்களங்களில் பலிகொடுத்துவிட்டு உடலாலும் உள்ளத்தாலும் புண்பட்டு நிற்போருக்கு எத்தகைய ஆறுதலை வழங்குவது அல்லது உத்தரவாதம் கொடுப்பது?
- பல வருடங்களாக விடுதலை இன்றி சிறைகளிலும் சித்திரவதை முகாம்களிலும் இருந்து வருவோரின் விடுதலைக்கு யாது செய்வது?
- இவற்றுக்குக் காரணமான அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றை உடன் இரத்துச் செய்ய வேண்டும் எனக் கேட்க வேண்டாமா?
- உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக்குடியமரச் செய்வதற்கு வற்புறுத்த வேண்டாமா? பொருளாதாரம்,கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அன்றாட வாழ்வை இழந்து நிற்கும் மக்களுக்குரியவற்றை எத்தகைய கோரிக்கை வடிவிலே முன்வைத்துள்ளார்கள்?
இவையனைத்தையும் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் முன்வைத்து இவற்றுக்கான உத்தரவாதத்தைப் பெறுவதற்குக் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு முடியவில்லை. இதற்கான அடிப்படைக் காரணத்தையே தமிழ் மக்கள் கேட்கிறார்கள். இவற்றுக்குரிய பதில்களைத் தரவேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உண்டு. இதனைக் கடந்து வெறுமனே பாராளுமன்றப் பதவிகளுக்காக நிற்பது மக்களை ஏமாற்றுவதாகவே அமையும்.
- தமிழ் மக்களுக்கு மரணக்குழி வெட்டியதில் இன்றைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கும் இன்றைய அரசியல் அமைப்புக்கு பிரதான பங்குண்டு. எனவே, அது ஒழிக்கப்பட வேண்டும். ஆனால், அதனை சரத் பொன்சேகா ஒழிப்பார் என எவரும் உத்தரவாதப்படுத்த முடியாது. அதேபோன்று தீர்வு எதனையும் தமிழ் மக்களுக்கு வழங்க இருதரப்பு பிரதான வேட்பாளர்களும் முன்வரப்போவதில்லை. ஏனெனில் இருவரும் பௌத்த,சிங்களப் பேரினவாதத்தைத் தலையில் தூக்கி நிற்கும் சக்திகளின் அரவணைப்புப் பெற்றவர்களேயாவர். இவர்களிடம் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் மட்டுமன்றி, உழைக்கும் சிங்கள மக்களும் எவற்றையும் பெற முடியாதவையாகும். ஆட்கள் மாறினாலும் சமூக அமைப்பும் ஆட்சியமைப்பும் நீடிக்கும் வரை இந்நாட்டின் சராசரியான உழைக்கும் மக்களுக்கும் தேசிய இனங்களுக்கும் விமோசனம் எதுவும் கிடைக்க மாட்டாது.
இந்நாட்டு மக்களை இனம்,மொழி,மதம்,பிரதேசம் என்பனவற்றால் ஏமாற்றித் தமது உயர்வர்க்க ஆட்சி நடத்திவரும் சக்திகளை மக்கள் அரசியல் ரீதியில் அடையாளங்கண்டு நிராகரித்து தமக்குரிய அரசியலை முன்னெடுக்க முன்வரும்போதே நாட்டையும் மக்களையும் பீடித்துள்ள அரசியல் சாபக்கேட்டிலிருந்து மீளமுடியும்.
கொழும்பிலிருந்து ஆதவன் இன்போதமிழ்
Comments