அண்மையில் தாய்லாந்தில் கைப்பற்றப்பட்ட விமானம் சிறீலங்காவின் அனுசரணையுடன் ஈரானுக்கு செல்லவிருந்ததாகவும், அவை பின்னர் அங்கிருந்து லெபனான், பலஸ்தீனம், ஈராக், ஆப்கான் போன்ற நாடுகளில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு வினியோகிக்கப்படவிருந்ததாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தாய்லாந்தில் கைப்பற்றப்பட்ட விமானம் வடகொரியாவில் ஆயுதங்களை ஏற்றிய பின்னர் சிறீலங்கா செல்லவிருந்ததாக கைது செய்யப்பட்ட விமானப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆயுதக்கடத்தல்களுக்கு எதிரான ரான்ஸ் ஆர்ம்ஸ் (TransArms) மற்றும் அனைத்துலக அமைதி தகவல் வேவைகள் அமைப்பு (Peace Information Service, or IPIS) அதிகாரிகள் விமானத்தின் கணணி திட்டமிடலை ஆராய்ந்த போது விமானம் கொங்கொங்கை தளமாக கொண்ட யூனியன் ரொப் மனேச்மன்ற் லிமிட்டட் நிறுவனத்திடம் இருந்து வாடகைக்கு பெறப்பட்டுள்ளதும், எண்ணை சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு தேவையான உதிரிப்பாகங்களுடன் வடகொரியாவின் தலைநகரான பியான்யங் இல் இருந்து ஈரானுக்கு பயணமாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இரு அமைப்புக்களும் உலகில் மோதல்கள் நடைபெறும் நாடுகளிற்கு எவ்வாறு ஆயுதங்களும் நிதி உதவிகளும் செல்கின்றன என்பதை ஆய்வு செய்து வருபவை. எனினும் இந்த அறிக்கை தொடர்பாக அமெரிக்காவின் வெளிவிவகார திணைக்கள பேச்சாளர் டார்பி கொலடே தகவல் எதனையும் வெளியிட மறுத்துவிட்டார்.
இந்த ஆயுதங்கடத்தலை ஒழுங்கு செய்தவர்கள் யார் என்பது தொடர்பான கேள்விக்கு இந்த பத்தி எழுதப்படும் வரை விடை கிடைக்கவில்லை. தமது அடையாளங்களை மறைப்பதற்காக விமானம் தேவையற்று நீண்டதூர பயணங்களை மேற்கொண்டுள்ளது. கடந்த 9 ஆம் நாள் ஆஜாபைஜான் நாட்டில் இருந்து புறப்பட்ட விமானம், அதே நாள் ஐக்கிய அரபு இராட்சியத்தில் தரையிறங்கி பின்னர் புறப்பட்டு செல்லும் வழியில் 10 ஆம் நாள் தாய்லாந்தில் எரிபொருளை நிரப்பிய பின்னர் வடகொரியா சென்று ஆயுதங்களை ஏற்றியுள்ளது.
அதன் பின்னர் 11 ஆம் நாள் தாய்லாந்தில் எரிபொருள் நிரப்புவதற்காக அது மீண்டும் தரையிறங்கிய போது அமெரிக்க அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய விமானம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் அதன் பயணப்பாதை நீண்ட தூரமானது. அதாவது விமானம் கைப்பற்றப்படாது விட்டால் அது சிறீலங்கா சென்று, பின்னர் மீண்டும் ஐக்கிய அரபு இராட்சியம் சென்று அங்கிருந்து உக்ரேனுக்கு சென்று பின்னர் ஈரானுக்கு சென்று அதன் பின்னர் மொன்ரோநீக்ரோ சென்றிருக்கும்.
இந்த பயணப்பாதை என்பது விமானத்தை பின்தொடரும் உளவுப்பிரிவினரை ஏமாற்றும் பாதை ஆனால் விமானம் எங்கு ஆயுதங்களை தரையிறக்க முற்பட்டிருந்தது என்பதே தற்போதைய முக்கிய கேள்வி. அதாவது சிறீலங்காவிலா, ஐக்கிய அரபு இராட்சியத்திலா அல்லது ஈரானிலா? எனினும் அதன் காகித ஆவணங்களில் எண்ணை சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு தேவையான உதிரிப்பாகங்கள் (Geothermal rigs spare parts -- model MTEC6) சிறீலங்காவுக்கு கொண்டு செல்லப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதனை ஜோர்ஜியாவை சேர்ந்த ஏயர் வெஸ்ற் லிமிற்டட் நிறுவனத்திடம் இருந்து எஸ்பி ரேடிங் லிமிற்டட் வாடகைக்கு பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் நியூசிலாந்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் ரஸ்யாவின் தயாரிப்பான AN-II-76 சரக்கு விமானத்தில் தாழ்வாக பறக்கும் விமானங்களையும், உலங்குவானூர்திகளையும் தாக்கியழிக்கும் சாம் ரக ஏவுகணைகள், டாக்கிகளையும் பதுங்குகுழிகளையும் தகர்க்கும் உந்துகணை செலுத்திகள் உட்பட பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதில் காணப்பட்ட ஆயுதங்கள் மரபுவழியிலான படையிரை விட கெரில்லாக்களுக்கே அதிக பயன்மிக்கதாக இருப்பதால், ஈரான் ஊடாக ஈராக் மற்றும் ஆப்கானில் மேற்குலக படையினருக்கு எதிராக தாக்குதலை மேற்கொண்டுவரும் தீவிரவாதிகளுக்கு வழங்கும் நோக்கத்துடன் இந்த ஆயுதங்கள் எடுத்து செல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக படைத்துறை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக சீனா- மியான்மார் - ஈரான் - சிறீலங்கா ஆகிய நாடுகளின் நட்புறவுகள் வலுப்பட்டு வருகின்றன. ஈரான் வடகொரியாவுடனும், சீனாவுடனும் அதிக நெருக்கத்தை கொண்டுள்ளது. எனினும் ஈரானின் நடவடிக்கைகளை மேற்குலகம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. கடந்த வருடம் கடல்மூலம் வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு கொண்டு செல்லப்படவிருந்த ஏவுகணைகளும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. மேற்குலகத்தை நேரிடையாக பகைத்துக்கொள்ள விரும்பாத சீனாவும், இந்தியாவும் வடகொரியா ஊடாக ஆசியா பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படையினருக்கு அதிக தொல்லைகளை கொடுத்து வருகின்றன.
ஈராக் மற்றும் ஆப்கான் பகுதிகளில் மேற்குலக படையினருக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டுவரும் கெரில்லாக்களுக்கு ஈரான் முக்கிய ஆயுத வினியோக நாடாக தொழிற்பட்டுவருதாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் பல தடவைகள் குற்றம் சுமத்தி வந்துள்ளன. அண்மைக்காலமாக ஆப்கானில் அமெரிக்க மற்றும் நேட்டோ படையினர் கடுமையான இழப்புக்களை சந்தித்து வருகின்றனர்.
கடந்த செவ்வாய்கிழமை (22) நடைபெற்ற தாக்குதலுடன் ஆப்கானில் 212 பிரித்தானியா துருப்புக்கள் பலியாகியுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது ஆப்கானில் நிலைகொண்டுள்ள மேற்குலக நாட்டு படையினரின் எண்ணிக்கை ஒரு இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிகளவு தாக்குதல் உலங்குவானூர்திகளையும் பிரித்தானியா அங்கு அனுப்பியுள்ளது. மேற்குலகத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈரான் தனது நட்புறவுகளை பயன்படுத்தி சிறீலங்காவை ஈடுபடுத்தி வருவது விமானம் கைப்பற்றப்பட்டதால் அம்பலத்திற்கு வந்துள்ளதாகவும் அவதானிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அதற்கான சான்றாக சிறீலங்காக்கும் ஈரானுக்கும் இடையில் நெருக்கமடைந்துவரும் உறவுகளை அவர்கள் குறிப்பிடுகின்றனர். சிறீலங்காவுடன் தனது அணு தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளப்பேவதாக கடந்த வருடம் வெளிப்படையாக அறிவித்த ஈரான் இந்த வருடம் சிறீலங்காவுக்கு 1.9 பில்லியன் டொலர் உதவிகளை வழங்க முன்வந்திருந்தது. வடகொரியா- சீனா - ஈரான் ஆகிய நாடுகள் மிக நெருங்கிய நட்புறவுள்ள நாடுகள். சீனாவின் நகர்வை பொறுத்தவரையில் அது ஆசிய பிராந்தியத்தில் தனது பொருளாதார பிணைப்புக்களை அதிகரிப்பதன் மூலம் அந்த பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை ஒரு வழியாகவும், ஆசிய பிராந்தியத்தில் உள்ள மேற்குலக படைத்தளங்களை பலவீனமாக்குவதை மறு வழியாகவும் கொண்டு காய்களை நகர்த்தி வருகின்றது.
சிறீலங்காவில் சீனாவின் தற்போதைய முதலீடுகளின் பெறுமதி 6.1 பில்லியன் டொலர்களாகும், அது மட்டுமல்லாது 200 மில்லியன் டொலர் திட்டம் ஒன்றிற்காக 1,000 சீனா நாட்டு பணியாளர்களும் சிறீலங்காவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். எனவே 2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சிறீலங்காவில் 25,000 சீன பணியாளர்கள் ஊடுருவி விடுவார்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் சீனா மேற்கொண்டு வரும் அபிவிருத்தி திட்டங்களில் பணியாற்றும் பொருட்டு 26,000 சீனர்கள் ஊடுருவியுள்ளனர். அவர்களால் தமது நாட்டின் பாதுகாப்புக்கு அதிக அச்சுறுத்தல்கள் எற்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் இந்தியாவை விட 60 மடங்கு சிறிய சிறீலங்காவில் 25,000 சீனர்கள் ஊடுருவுவது மேற்குலகத்திற்கு பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தும் எனபதை மறுக்க முடியாது. அதாவது 800 சிறீலங்கா மக்களுக்கு ஒரு சீனர் என சிறீலங்காவின் குடித்தொகை மாற்றமடையலாம். அது மட்டுமல்லாது அழகு நிலையம், உணவகங்கள் என பல சிறு சிறு தெழில்களிலும் சீனர்கள் அதிகம் ஊடுருவியுள்ளனர். அவர்களின் எண்ணிக்கைகள் மேற்குறிப்பிட்ட தொகையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
ஓரு சில திட்டங்களில் மட்டும் சீனா கவனம் செலுத்தவில்லை வடபகுதிக்கான தொடரூந்து சாலை புனரமைப்பிலும் சீனா கவனம் எடுத்து வருகின்றது. ஓமந்தையில் இருந்து பளை வரையிலான 92 கி.மீ தூரத்திற்கான பாதையை இந்தியா புனரமைத்து வருகையில், பளையில் இருந்து காங்கேசன்துறை வரையிலுமான 56 கி.மீ தூரமான பதையை சீனா புனரமைத்து வருகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து நுரைச்சோலை அனல்மின்னிலையமும் சீனாவின் வசமே உள்ளது.
இந்த நிலையில் ஆசிய பிராந்திய வல்லரசுகளின் பிடியில் வீழந்துள்ள சிறீலங்கா அரசு மேற்குலகத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருவதாக நம்பப்படுகின்றது. அமெரிக்காவினால் கைப்பற்றப்பட்ட இந்த ஆயுத விமானமும் அதனை தான் உறுதிப்படுத்தியுள்ளது. அது மேற்குலகிற்கும் சிறீலங்காவுக்கும் இடையிலான விரிசலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பொருளாதார அபிவிருத்தி என்ற போர்வையில் சிறீலங்காவை முற்றாக தன்வசப்படுத்தியுள்ள சீனாவின் பிடியை தளர்த்தி ஆசிய பிராந்தியத்தில் தனது வலிமையை நிலைநாட்டுவதற்கு அமெரிக்கா மேற்கொள்ளப்போகும் அணுகுமுறைகள் என்ன என்பது தான் தற்போதைய முக்கிய கேள்வி.
இந்த அணுகுமுறையில் தான் அமெரிக்காவின் ஆசிய பிராந்தியம் மீதான ஆளுமை தங்கியுள்ளது. அவர்கள் பொருளதார அபிவிருத்திகளை சிறீலங்காவில் மேற்கொள்ள முடியாது. ஏனெனில் அதனை சீனாவும், இந்தியாவும் போட்டி போட்டு மேற்கொண்டு வருகின்றன. ஆனால் மனித உரிமை மீறல்கள், போரியல் குற்றங்கள், ஜனநாயக சீர்கேடு மற்றும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் என்பவற்றை முன்நிறுத்தி ஐக்கிய நாடுகளின் அமைதிபடை மூலம் சிறீலங்காவில் கால்பதிப்பதற்கான பாதை மட்டுமே அமெரிக்காவுக்கு தற்போது எஞ்சியுள்ளது. அதனையும் அமெரிக்கா தவறவிட்டால் அவர்களுக்கு வேறு மார்க்கங்கள் தற்போதைக்கு இல்லை என்றே கூறமுடியும்.
- சங்கதிக்காக "வேல்ஸ் இல் இருந்து அருஷ்"
Comments