மாவீரர்களுக்கு மரணமேது

பூர்வீக தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைவேட்கை அணையாமல் கடந்த 33 வருடங்களாகப் பாதுகாத்துச் சென்ற மாவீரர்களுக்கு, ஈழத்தமிழ் மக்கள் வீரவணக்கம் செலுத்தும் மாதமிது. இவர்கள் விதைக்கப்பட்டாலும், ஏற்றிவைத்த விடுதலைப் பெருநெருப்பு, தாயக, புலம்பெயர் தமிழர்கள் நெஞ்சில் அழியாச் சுடராய் ஒளி வீசிக்கொண்டிருக்கிறது.

முப்பதினாயிரம் உயிர்ப் பூக்களை உதிர்த்து முள்ளிவாய்க்காலில் அமைதிகொண்ட விடுதலைப்போர் வேரடி மண்ணோடு கலந்துவிட்டதாக பேரினவாதம் பெருமைகொள்கிறது. பன்னாட்டுப் படைக்கலங்களென்ன, பிராந்திய வல்லூறுகளின் வல்லாண்மைச் சக்திகளென்ன, எது வந்தாலும், தாயகக் கனவினைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்க முடியாதென்பதை, சூரியப் புதல்வர்களின், ஒளிபடர்ந்த மக்கள் சக்தி, நிரூபித்துக்காட்டும். இழப்பும், இருப்பும் எதிர்மறைகளின் எதிர்மறையைத் தோற்றுவிக்கும் இயங்கியல் நியதியைத் தன்னகத்தே கொண்டது.

இருப்பின் இயங்கு தளத்தினை, இழப்புக்களே இயங்கச் செய்கின்றன. உயிரணுக்களின் அசைவும், உயிர்ப்பின் தத்துவமும், அறிவியல் கோட்பாட்டின் பிரிக்கமுடியாத அம்சங்களென்பதை, இழப்புக்களே புரியவைக்கின்றன. கடல்காட்டும், வானத்தின் எல்லையில், ஒளிப்பிழம்பாய் சிதறும் மைந்தர்களை புள்ளியாய் தரிசித்தவர்கள் மே 18ல், கைக்கெட்டிய தூரத்தில் கண்டார்கள். "கந்தகம்' சுமந்த மேனியர், விழுப்புண்ணடைந்த போராளிகளிற்கும், மக்களுக்கும் கவசமாகி, தாயகக் காற்றோடு கரைந்துபோனார்கள். ஆயிரம் மில்லர்கள் அதிர்ந்தது இந்நாளில், 6000 படையினர் வீழ்த்தப்பட்டதாக எதிரியும் தலையாட்டினான். அனைத்துலகம் விரித்த வியூகத்துள் களமாடி மரணித்த மாவீரர்கள் எத்தனையோ! அம்பும், அதை எய்தவனும் மாவீரர் இலட்சியத்தை அழிக்க மோதிக்கொள்கிறார்கள்.

பிரிந்த தாயகத்தை ஒட்டவைக்க முடியாதென பிரகடனம் செய்யும் மகிந்தர், விடுதலைப்புலிகளின் தாயகக் கனவினைக் காவியபடி எவரும் தன்னிடம் வரவேண்டாமென ஆணையிடுகிறார். ஆதலால் சுவிசில் கூடிய தளம்பல் கூட்டு, மகிந்தரின் நிலைப்பாட்டை செவிமடுக்கவேண்டும். சுயநிர்ணய உரிமை என்று கூறினால் சிங்களம் சினம்கொள்ளுமென்று ‘ஐ.நா சபையால் வரையறுக்கப்பட்ட சுயநிர்ணய உரிமை' என்கிற, ஒரு நழுவல் சொற்றொடரை இணைத்து விடும்படி கூட்டமைப்பினர் பணிவான வேண்டுகோள் ஒன்றினை விடுத்தனர். ஆயினும் தமிழ்த் தேசியத்திற்கு, தனித்துவ இறைமை கொண்ட சுயநிர்ணய உரிமை உண்டென்கிற மாவீரர் இலட்சியத்தினை, எதுவித சமரசமும் இல்லாமல் அழுத்திக்கூறிய ஒரே ஒரு கூட்டமைப்பின் சார்பாளர் இச் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார்.

பொதுப் பிரகடனத்தில் கைச்சாத்திடவும், அவர் மறுத்துவிட்டதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. முள்ளிவாய்க்காலோடு சிலருக்கு, மனப்பிறழ்வு, மனச்சிக்கல் தத்துவக் குழப்பம் எல்லாம் ஏற்பட்டுள்ளது. களமாடி வீழ்ந்த தேசத்தின் புதல்வர்களுக்கு மட்டும், தெளிந்த மனமும், நேர்கொண்ட இலட்சியப் பார்வையும், எவ்வாறு தேசியத் தலைவரின் தலைமைத்துவதில் உருவாகியதென்பதை இச்சறுக்கல் வாதிகள் மதிப்பிடத் தவறியுள்ளார்கள். ஆயுதப்போராட்டத்தை, வரலாற்றுத் தவறென்று தமது அரசறிவியற்தனத்தால் திரிபுபடுத்த முனைவோர், பெளத்த சிங்கள பேரினவாதத்தின் வன்முறை சார்ந்த அடக்குமுறைக்கு, காலாவதியாகிப்போன காந்தியங்களை துணைக்கழைக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

மே 18 இற்குப் பின்னர் எம்மில் பலர் பின்னடைவிற்கான பிரேத பரிசோதனைகளிலும், புலம்பெயர் மக்களைச் சாடுவதிலும் காழ்ப்புணர்வு வெளிப்படுத்தலை ஆரோக்கியமான விமர்சனங்களாகவும், முன்வைத்து, பேரினவாதத்தின் ஆளுமையை குறைத்து மதிப்பிட முற்படுகிறார்கள். அதேவேளை இந்தவாரம், இலண்டன் தொலைக்காட்சி ஒன்றின் நேரலையில், தோன்றிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா, சம்பந்தர் அவர்கள் தெரிவித்த கருத்துக்களை அவதானிக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழ அரசு பற்றியதான விடயங்கள் குறித்து திரு. சம்பந்தனிடம் வினவியபோது, "தாம் முன்வைக்க இருக்கும் சமஷ்டி வடிவிலான தீர்விற்கு இம் முயற்சிகள் இடையூறாக அமையும்' என்ற கருத்தினை அவர் தெரிவித்திருந்தார்.

சுயநிர்ணய உரிமைக்கும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி என்பதற்கும் இடையிலே உள்ள அரசியல் கோட்பாடு வேறுபாடுகளை உணரமுடியாதவராக சம்பந்தர் இருப்பதையிட்டு கவலை கொள்ளத்தான் முடியும். இவைதவிர, ஒஸ்லோவில் எதுவித கூட்டுப் பிரகடனங்களும் வெளியிடப்படாத யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், "ஒஸ்லோ பிரகடனத்தில், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஷ்டித் தீர்வினை தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டார்கள்' என்று புதிய வியாக்கியானம் ஒன்றையும் அவர் அளித்துள்ளார். விடுதலைப்புலிகள் நோர்வேயில் உடன்பட்ட தீர்வினையே தாம் தற்போது முன்வைக்கவிருப்பதாக கூறுவதன் மூலம், தமிழ் மக்களின் எதிர்ப்புணர்வை திசை திருப்பப்பார்க்கிறார்.

30,000 இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்கள் குறித்து, நேர்காணலில் எந்த இடத்திலும் சம்பந்தர் குறிப்பிடவில்லை. இந்தியா இல்லாமல் தீர்வு இல்லை என்ற கருத்தினையே அடிக்கடி அழுத்திக் கூறியவாறு இருந்தார். 87ல் இந்தியா முன்வைத்த தற்காலிக வட-கிழக்கு இணைப்புள்ள மாகாணசபைத் தீர்வினை, தமிழர் தரப்பு (விடுதலைப்புலிகளையே அவர் குறிப்பிடுகிறார்) ஏற்றுக்கொள்ளாதது ஓர் அரசியல் தவறு என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிள்ளையான் படும் அல்லல்களை தினந்தோறும் பத்திரிகைகளில் வாசித்த பின்னரும், அது ஒரு அற்புதமான தீர்வென்று எதன் அடிப்படையில் அவர் கூற முற்படுகிறார் என்பதை சகல தமிழ் மக்களும் அறிவர்.

ஆனாலும் சிங்கள ஆட்சியாளர்கள் நீங்கள் முன்வைக்கும் சமஷ்டித் தீர்வினை வழமைபோன்று நிராகரித்தால், தமிழீழ விடுதலை நோக்கிய போராட்டத்தை முன்னெடுப்பீர்களா என்று ஒரு நேயர் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில், "தமிழீழ உருவாக்கத்தை இந்தியா விரும்பவில்லை' என்பதாக இருந்தது. ஆகவே கூட்டமைப்பு வைக்கும் சுயநிர்ணய உரிமை கலந்து சமஷ்டித் தீர்வினை சிங்களம் ஏற்றுக்கொள்ளாது. வெளியக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழீழம் உருவாகுவதை இந்தியாவும் உள்வாங்கிக்கொள்ளாது. இந்நிலையில் கூட்டமைப்புச் சொல்லும் தீர்வினை இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், ஐ.நா சபையினுடாக வெளியக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை முன்வைப்போமெனக் கூறுவது, சுயநிர்ணய உரிமை தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாட்டை சரிவரப் புரிந்து கொள்ளவில்லையயன்று கணிப்பிடத்தோன்றுகிறது.

திபெத் சீனாவின் இறைமைக்கு உட்பட்ட பிரதேசமென, சீன மண்ணில் நின்றவாறு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மிகத் தெளிவாகக் கூறிவிட்டார். புகலிட (நாடுகடந்த) அரசு என்கிற, திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா கூறும் கருத்தியல் இங்கு ஓரங்கட்டப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரிற்குப் பின்னான, சுயநிர்ணய உரிமை குறித்த கோட்பாட்டில், ஐ.நா சபையின் நிலைப்பாடு வல்லரசுகளினால் நிர்மாணிக்கப்படுகிறது. ஐ.நாவின் கருத்தியலில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தும் "அண்டோனியோ கசாசே' அவர்களின் புரிதலும் ஒரு நாட்டின் இறைமைக்குள் சிறுபான்மைத் தேசிய இனங்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையையே வலியுறுத்துகிறது.

கொலனித்துவப் பிடியிலிருந்து விடுபடும் நாடுகளுக்கே வெளியக சுயநிர்ணய உரிமை பிரயோகிக்கும் அருகதை உண்டென்பதுதான் "கசாசே'யின் வாதம். ஆகவே வல்லரசுகள் ஆசியாவில் நகர்த்தியுள்ள இராஜதந்திர முறுகல் நிலைமை உலகப் பொருளாதார பின்னடைவு உருவாக்கியுள்ள பரந்துபட்ட சந்தை முதலீட்டு மாற்றங்கள், ஈழவிடுதலைப் போராட்டத்தில் காத்திரமான தாக்கங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தும். இதுவரை மாவீரர்களின், பெரும் அர்ப்பணிப்புக்களால், தமிழ்த் தேசத்தின் இறைமை பல அரசியல் தளங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரிக்கமுடியாத இறைமையானது, சிங்களத்தைப்பொறுத்தவரை நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகச் சித்தரிக்கப்படுகிறது.

பிராந்தியத்தின் கேந்திர நலனிற்காகவும், ஆதிக்கப்போட்டியில் ஆளுமை செலுத்துவதில் ஏற்படும் போட்டியில், வெற்றி பெறுவதற்காகவும், தமிழர் தேசத்தின் இறைமையை இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். எம் தேசத்தின் புதல்வர்கள் தமது வரலாற்றுக் கடமையை இலட்சியத்தில் இருந்து வழுவாது, நேர்த்தியாக நிறைவேற்றியுள்ளார்கள். அதன் ஆழமான உள்ளார்ந்த இலட்சியப் பற்றினை உணர்ந்து, விடுதலையை விரைவாக்கும் பணியில், சகலரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.

-இதயச்சந்திரன்

நன்றி:ஈழமுரசு

Comments