இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் முழுமையான விடுதலைக்கு ஆட்சி மாற்றம் அவசியமானது


சிறீலங்காவில் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் மட்டுமல்லாது, மேற்குலகமும் அதிக அக்கறை கொண்டுள்ளது. அதன் வெளிப்பாடாகவே ஜெனரல் சரத் பொன்சேகா பொதுவேட்பாளராக மகிந்த ராஜபக்சாவை எதிர்த்து களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்த தேர்தலில் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர் வெற்றிகள் தொடர்பான பரப்புரைகளே தென்னிலங்கையில் அதிகம் முன்வைக்கப்படும் என்பதை உணர்ந்து கொண்டதனால் தான் தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பியும் அவரின் பின்னால் அணிதிரண்டு நிற்கின்றனர். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவருக்கான தேர்தலில் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும், சுதந்திர கட்சிக்கும் இடையிலான கருத்துக்கணிப்பு வேறுபாடுகள் மிகவும் சிறிய வேறுபாட்டை தான் கொண்டிருந்தன. ஏறத்தாள ஐந்து இலட்சம் தமிழ் மக்களின் வாக்குகள் அற்றநிலையில் ஒரு இலட்சம் வாக்குகளினல் மகிந்த ராஜபக்சா வெற்றியீட்டியிருந்தார்.

ஆனால் கடந்த ஜனவரி மாதம் சிறீலங்கா படையினர் கிளிநொச்சி நகரை கைப்பற்றிய பின்னர் மே மாதம் 18 ஆம் நாள் போர் முடியும் வரையிலும் தொன்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிக் கொண்டாட்டங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அரச தலைவருக்கான தேர்தல் நடைபெறுமாக இருந்தால் அது மகிந்தவை அதிக வாக்கு வேறுபாட்டில் இலகுவான வெற்றிக்கு இட்டுச்செல்லும் என்ற கணிப்புக்கள் வலுவாக முன்வைக்கப்பட்டிருந்தன. எனவே தான் நடைபெற்ற போரில் பங்குபற்றியதுடன், போரின் வெற்றிக்கு காரணமானவர் என சிங்கள மக்களால் மகிந்தவிற்கு இணையாக நம்பப்படும் ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகள் முன்நிறுத்தியுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்கா சென்றிருந்த பொன்சேகாவை அமெரிக்க அரசு திருப்பி அனுப்பியதன் பின்னணியும் அதுவாகத் தான் இருந்தது. பொன்சேகா அமெரிக்காவில் தங்கியிருந்த காலப்பகுதியில் சிறீலங்காவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிக்கான துணை வெளிவிவகார செயலாளருமான றொபேட் ஓ பிளேக்குடன் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தொடர்ச்சியாக தொடர்பில் இருந்ததும் இங்கு குறிப்பித்தக்கது. அதாவது மேற்குலகத்தினதும், எதிர்க்கட்சிகளினதும் ஆதரவுகளுடன் பொன்சேகா தேர்தலில் குதிக்கப்போகின்றார் என்ற கருத்துக்கள் வலுவாக எழுந்தபோது அரசு தனது புலனாய்வுதுறையினரின் உதவியுடன் இரு தடவை தென்னிலங்கையில் கருத்துக்கணிப்புக்களை மேற்கொண்டிருந்தது.

நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் மகிந்த ராஜபக்சா 53 விகிதத்தையும், பொன்சேகா 46 விகித ஆதரவையும் பெற்றுள்ளதாகவும், கடந்த ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் மகிந்த 60 விகித ஆதரவை பெற்றிருந்ததாகவும் புலனாய்வுத்துறை தனது அறிக்கையை சமாப்பித்திருந்தது. இந்த கருத்துக்கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் பொன்சேகா உத்தியோகபூர்வமாக தேர்தலில் இறங்கியிருக்கவில்லை. எனவே எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் கருத்துக்கணிப்புக்கள் முக்கியமானவை என கருதப்படுவதுடன், தமிழ் மக்களின் வாக்குகளும் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்த வல்லது என்ற கருத்துக்களும் எழுந்துள்ளது. எனவே நடைபெறப்போகும் அரச தலைவருக்கான தேர்தலில் தமிழ் மக்கள் மட்டுப்படுத்தப்பட்ட பங்களிப்பை மேற்கொள்ள முடியாது.

எதிர்ப்பு நடவடிக்கையாகவோ அல்லது கோபத்தின் அடிப்படையில் வெறுப்புடன் அரசியல் செய்யும் நேரமும் தமிழ் மக்களுக்கு இதுவல்ல. அவர்கள் தமது விவேகத்தின் அடிப்படையில் முடிவை மேற்கொள்ளும் கட்டத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். மத்தியில் ஒரு ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்துவது தமிழ் மக்களுக்கு முக்கியமானது என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். இதனை எல்லா தமிழ் பேசும் மக்களும் உணர்ந்கொள்ள வேண்டும், குறிப்பாக மலையக தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள், கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் சிறீலங்கா முழுவதிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் அதற்குள் அடக்கம்.எனவே பிரிவினையின் அடிப்படையில் அல்லாது ஒரு பொதுவான கெள்கையின் அடிப்படையில் கணிப்பீடுகளை மேற்கொள்வது முக்கியமானது.

தமது அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கு எல்லா தமிழ் பேசும் மக்களும் உறுதியாக ஒரு அணியில் ஒருங்கிணைய வேண்டும். அவர்கள் உறுதியான குரலில் தமது பொதுவான கொள்கையை வெளிப்படுத்த வேண்டும். சிறீலங்கா அரசியலில் அரச தலைவருக்கான தேர்தல் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துவதுண்டு. எனவே தற்போதைய அரச கூட்டணியை மத்தியில் இருந்து அகற்றுவதற்கு தமிழ் மக்கள் தமக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே பலரினதும் கருத்தாக உள்ளது. மேற்குலகத்தை பொறுத்தவரையில் சிறீலங்காவை முற்றுமுழுதாக ஒரு ஜனநாயக நாடாக மாற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றது. அதாவது மகிந்த ராஜபக்சா அரசை பதவியில் இருந்து நீக்கிவிட்டால் அவருடன் இணைந்து இயங்கிவரும் துணை இராணுவக் குழுக்களையும், ஒட்டுக் குழுக்களையும், வன்முறையான அரசியல் கட்சிகளையும் அகற்றிவிடலாம் என்பது அவர்களின் திட்டம்.

இதன் மூலம் மனித உரிமை மீறல்களை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்பதுடன் எல்லா இனங்களும் அமைதியாக வாழும் சூழலை உருவாக்க முடியும் என உலகம் நம்புகின்றது. இந்த சமயத்தில் பொன்சேகா அரச தலைவராக தெரிவுசெய்யப்பட்டால் அவரின் அதிகாரங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. அவரின் அதிகாரத்தை பொறுத்தவரையில் சரத் பொன்சேகா மிகவும் பலமான ஒரு அரசியல் கட்சியை சார்ந்தவர் அல்ல. மேலும் அவரிற்கு பலமான அரசியல் பின்புலமும் இல்லை. எனவே தமிழ் மக்களை பொறுத்தவரையில் எதிர்த்தரப்பு பலவீனமானதாகவே கொள்ளப்படும். ஐ.தே.க மற்றும் ஜே.வி.பி போன்ற கட்சிகளை பொறுத்தவரையிலும் பொன்சேகாவை அரசியல் ரீதியாக சுலபமாக கட்டுப்படுத்தி விடலாம் என கருதுகின்றன.

ஆனால் தற்போதைய அரசை மாற்றுவதற்கு அவரை தவிர வேறு சரியான தேர்வு இருக்க முடியாது எனவும் நம்புகின்றன. தென்னிலங்கையை பொறுத்தவரையில் போருக்கு ஆதரவளித்த பெரும்பான்மை சிங்கள மக்களில் ஒரு பிரிவினர் தற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவின் குடும்ப அரசியலை வலுவாக எதிர்க்கின்றனர். அவர்களை பொன்சேகா மூலம் பிரித்துவிடலாம் என்பது ஜே.வி.பியின் முக்கிய பிரமுகர் ஒருவரின் கருத்து. இருந்தபோதும் தமிழ் மக்களின் வாக்குகள் எதிர்வரும் தேர்தலில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. எனவே தான் சிறீலங்கா அரசும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை அவசர அவசரமாக விடுதலை செய்துள்ளது. அதன் அரசியல் உள்நோக்கத்தை கொழும்பு ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பேச்சாளர் கோடன் வைஸ் கூட உறுதிப்படுத்தியிருந்தார்.

ஆனால் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள மக்களுக்கு அரசு பூரண சுதந்திரம் வழங்கவில்லை. அவர்களை எதிர்வரும் ஜனவரி 31 ஆம் நாள் முற்றாக விடுவிப்பதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ஜனவரி 26 ஆம் நாள் மீண்டும் மகிந்த பதவியை கைப்பற்றி கொண்டால் விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் முகாம்களில் அடைத்து அதன் மூலம் மேற்குலகை மிரட்டுவதற்கே அரசு ஜனவரி 31 ஆம் நாளை தெரிவுசெய்துள்ளதாக கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். எனவே ஒன்று மட்டும் தெளிவானது அதாவது தற்போதைய சிறீலங்கா அரசில் ஒரு மாற்றத்தை கொண்டுவராது தமிழ் மக்கள் மீதான வன்முறை கலாச்சாரத்தை நிறுத்த முடியாது. அதற்கு நாம் எமது அரசியல் விவேகத்தை காலம் தவறாது பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

-வேல்ஸ் இல் இருந்து அருஷ்

நன்றி:ஈழமுரசு

Comments