தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நிர்ணயிக்கும் பலமான சக்தியாக புலம்பெயர் தமிழ் சமூகம் மாற்றமடைந்து வருகின்றது.

ஈழத்தமிழ் மக்களிற்கு சிறீலங்காவில் உள்ள பெரும்பான்மை சிங்கள சமூகத்தினால் இழைக்கப்படும் அநீதிகளிற்கு உரிய தீர்வு சுதந்திர தமிழீழம் தான் என்பதை 1976 - 1977 ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்கள் ஜனநாயக வழிகளில் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அன்று எமக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் இடையிலான தூரம் அதிகம், உலகத்தை சுருக்கி உள்ளங்கையில் வைக்கும் தொழில்நுட்பமும், தகவல் தொடர்புகளும் இருக்கவில்லை. மேலும் இந்தியா எனப்படும் பிராந்திய வல்லாதிக்க சக்தியின் தமிழ் மக்கள் மீதான வெறுப்புணர்வு என்ற சுவரை தாண்டி அதனால் செல்லவும் முடியவில்லை. ஆனால் சிறீலங்கா அரசு தொடர்ந்து தமிழ் மக்களின் ஜனநாயக போரை வன்முறை வழிகளில் நசுக்கியே வந்தது. மக்கள் வழங்கிய ஆணைக்கான ஆயுதப்போர் ஆரம்பமாகியது. 1983 களில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட உக்கிரமான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து ஆயுதப்போரே தமது உயிர்களையும் உரிமைகளையும் பாதுகாக்கும் என்ற நிலைக்கு ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் தள்ளப்பட்டது.

26 வருடங்கள் போரும் சமாதானமும், போரும் சமாதானமும் என்ற சக்கரத்தின் ஊடாக தமிழ் மக்களின் விடுதலைப்போர் நகர்ந்த போதும் போர் நடைபெற்ற காலம் தான் அதிகம். அதனை தான் சிங்கள தேசமும், பிரந்திய வல்லரசான இந்தியாவும் விரும்பியிருந்தன. பேரழிவுகளின் மத்தியிலும் ஈழத்தமிழ் இனம் தனக்கென ஒரு சிறிய நாட்டையும், அதற்கான அரசையும், நிர்வாகத்தையும், படைகட்டுமானங்களையும் உருவாக்கி கொண்டது. எனினும் உலகம் அங்கீகாரம் அற்ற அந்த சிறிய அரசின் மீது சிறீலங்கா அரசு உலக வல்லரசுகளின் உதவியுடன் பெரும் படை கொண்டு மோதியது. பயங்கரவாதச்சாயம், பிராந்திய வல்லாதிக்க போட்டிகள், இந்தியாவின் தமிழ் மக்களிற்கு எதிரான போக்கு இவை தான் ஈழத்தமிழ் மக்கள் மீது ஒட்டுமொத்த உலகமும், ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனத்தின் பின்னால் உள்ள காரணிகள்.

உலகின் இந்த நடவடிக்கையின் முடிவு என்ன என்பதை விடுதலைப்புலிகள் நன்கு கணிப்பிட்டே இருந்தனர். எனவே தான் தமிழ் மக்களின் பிரதான எதிரியான சிறீலங்கா இராணுவத்திற்கு அதிக இழப்புக்களை ஏற்படுத்துவதை முதல் குறிக்கோளாகவும், அனைத்துலகத்தின் குறிப்பாக மேற்குலகத்தினதும், ஐக்கிய நாடுகள் சபையினதும் பிரசன்னத்தை சிறீலங்காவில் ஏற்படுத்துவது என்பதை இரண்டாவது குறிக்கோளாகவும் கொண்டு இறுதி வரை போரிட்டனர். சிங்கள தேசத்தின் சிப்பாய்கள் பெரும்தொகையில் கொல்லப்பட்ட போது சிங்கள அரசு தமிழ் மக்களை பல ஆயிரக்கணக்கில் கொன்றுகுவித்தது. உலகம் வேடிக்கை பார்த்தது, இந்தியா சிறீலங்காவுக்கு ஆசீர்வாதம் வழங்கியது. ஆனால் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் மக்களின் ஊடாக விடுதலைப்போரின் அடுத்தகட்டம் நகரப்போகின்றது என்பதையும், அதன் வலிமையையும் அவர்கள் அன்று உணர்ந்திருக்கவில்லை.

உணர்ந்து கொண்டாலும் பயங்கரவாதம் என்னும் சயத்தை பூசி அவர்களால் அதனை முடக்கிவிட முடியாது என்பதை அகில உலகமும் அறிந்திருந்தது. எந்த மக்களின் ஆணைக்காக விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தினார்களோ அதே ஆணையை மீண்டும் ஒரு தடவை நிருபிக்க புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் தயாராகி விட்டதுடன், அதற்கான ஆணைகளையும் மக்கள் பெருமளவில் வழங்கி வருகின்றனர். இந்த வருடத்தின் மே மாதம் நேர்வே பகுதியில் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் 99 விகித வாக்குகளை வழங்கிய தமிழினம் கடந்த வாரம் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 99.32 விகித வாக்குளை வழங்கி தமது அரசியல் அபிலாசைகளை உறுதிபட தெரிவித்திருந்தனர். இந்த வாக்கொடுப்பை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் வாக்கெடுப்பு தொடர்பாக தனது ஆச்சரியத்தை வெளியிட்டதுடன், உங்களின் நடவடிக்கைகளுக்கு பின்னால் இவ்வளவு தொகையான மக்கள் உள்ளதை நாம் தற்போது தான் உறுதியாக தெரிந்து கொண்டோம் என தெரிவித்திருந்தார்.

ஏறத்தாள 70,000 ஈழத்தமிழ் மக்கள் தெகையை கொண்ட பிரான்ஸ் நாட்டில் 99.32 விகித மக்கள் ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்கான ஒரே அரசியல் தீர்வு தமிழீழம்தான் என மீண்டும் வலுயுறுத்தியுள்ளது எமது பிரச்சனைகள் தொடர்பாக பேசப்போகும் வெளி உலகத்திற்கு காத்திரமான ஒரு செய்தியை வழங்கியிருக்கும் என்பதை நாம் மறுக்க முடியாது. ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குரிய அரசியல் தீர்வு தொடர்பில் பேசும் போது புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் அமைப்புக்களுடனும் பேச்சுக்களை மேற்கொள்ள வேண்டும் எனவும், தாமும் அவர்களுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும் அமெரிக்காவும், பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. இதனை அமெரிக்காவின் துணை வெளிவிவகார செயலாளர் றொபேட் ஒ பிளேக் கூட பல தடவைகள் வலியுறுத்தியிருந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (15) பிரித்தானியா நாடாளுமன்றத்தில் சிறீலங்காவின் தற்போதைய நிலை தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்த பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் கூட அதனை உறுதிப்படுத்தியிருந்தார். சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள இனமுரண்பாடுகளுக்கான தீர்வான அரசியல் தீர்வு தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பிரித்தானியா பிரதமரினால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு பிரதிநிதி நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ் பிரவுண் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேசுவார் எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதாவது புறக்கணிக்க முடியாத பெரும் சக்தியாக புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாள ஒரு மில்லியன் சனத்தொகையை கொண்ட இந்த சமூகம் ஈழத்தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் அழுத்தமாக பேசமுடியும் என மேற்குலகம் நம்புகின்றது.

எனவே அவர்களின் முன் நாம் வைக்கப்போகும் அரசியல் தீர்வு என்ன என்பதை மக்களின் ஆணையுடன் சொல்வது அழுத்தமானது. அதனை தான் வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான கருத்துக்கணிப்பு மூலம் புலம்பெயர்நாடுகளில் உள்ள ஈழத்தமிழ் சமூகம் மேற்கொண்டு வருகின்றது. ஈழத்தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு என்பது 1976 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம், 1985 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட திம்பு பிரகடனம், 2003 ஆம் ஆண்டு முன்வைக்கப்படட இடைக்காலத்தன்னாட்சி அதிகாரப்பகிர்வு என்பவற்றின் ஊடாகவே அழுத்தம் திருத்தமாக பல தடவைகள் முன்வைக்கப்படடிருந்தது. எனினும் அனைத்துலக சமூகத்திற்கு அதனை மீண்டும் உறுதிப்படுத்தும் முகமாக கருத்துக்கணிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு முன்னர் 1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் நாள் வல்வெட்டித்துறையில் ஒன்று கூடிய தமிழ் அரசியல் கட்சிகள் இலங்கையில் தமிழ் மக்கள் குறைந்தபட்ச பாதுகாப்புடனும், உரிமைகளுடனும் வாழ்வதற்கான ஒன்பது கோரிக்கைகள் அடங்கிய திட்டம் ஒன்றை முன்வைத்திருந்தன. இலங்கை அரசின் அரசியல் யாப்பையும் அவை நிராகரித்திருந்தன. இனம், மொழி, சமயம், அடிப்படை உரிமைகள் போன்றவற்றின் அடிப்படையில் இந்த திட்டம் வரையப்பட்டிருந்தது. அதன் பின்னர் மீண்டும் இலங்கையின் அரசியல் யாப்பினை நிராகரித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னனி 1972 ஆம் ஆண்டு ஜுன் 25 ஆம் நாள் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கான ஆறு கோரிக்கைகள் அடங்கிய திட்டம் ஒன்றை இலங்கை பிரதமரிடம் முன்வைத்திருந்தது.

அதனை நிறைவேற்ற இலங்கை அரசிற்கு மூன்று மாதகால அவகாசம் கொடுக்கப்பட்டதுடன், நிறைவேற்றாதவிடத்து தன்னாட்சி அதிகாரமுள்ள தீர்வுக்கான அகிம்சைப்போர் முன்னெடுக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் ஐக்கிய தமிழர் விடுதலை முன்னனி முன்வைத்திருந்தது. எனினும் சிறீலங்கா அரசு அதனை உதாசீனப்படுத்திய போது 1975 ஆம் ஆண்டு காங்கேசன்துறை பகுதியில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் தமிழ் மக்கள் சிறீலங்கா அரசின் அரசியல் யாப்பை முற்றாக நிராகரித்ததுடன், தமிழீழத்திற்கான ஆணையையும் தந்தை செல்வாவிடம் வழங்கியிருந்தனர். இருந்த போதும் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள பண்ணாகத்தில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னனியின் முதல் தேசிய மாநாட்டில் தமிழீழம் தான் தீர்வு என உறுதிபட வரையறுக்கப்பட்டது.

ஆனால் அதன் பின்னர் சிறீலங்கா அரசும், இந்திய அரசும், அனைத்துலக சமூகமும் பல அரைகுறையான தீர்வுகளை தமிழ் மக்களின் மீது திணிக்க முற்பட்ட போதும் அவை அனைத்தும் தோல்வியையே தழுவியிருந்தன. அதற்கான காரணியாக விடுதலைப்புலிகளின் போரிடும் வலு இருந்தது. தற்போது அந்த வலுவை இந்த உலகம் முன்நின்று சிதைத்துள்ள போதும், அவர்களால் கட்டிவளர்க்கப்பட்ட புலம்பெயர் சமூகம் என்ற பெரும் சக்தி இறுதிப்போராட்டத்தை நகர்த்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த மாபெரும் சக்தியை ஆயுத வலுக்கொண்டோ, பயங்கரவாத சாயம் பூசியோ இந்தியா என்ற பிராந்திய வல்லரசினாலும், சிறீலங்காவினாலும் சிதைத்துவிட முடியாது. இந்த சமுகத்தின் ஊடாக முன்மொழியப்படும் தீர்வுத்திட்டத்திற்கு நிட்சயமாக ஒரு பெறுமதி உண்டு.

அதனை மேற்குலகம் தெளிவாக புரிந்து கொண்டுள்ளது. எனவே எமது உரிமைகளுக்கான தீர்வு என்ன என்பதை அவர்களின் ஜனநாயக வழிகளில் நாம் மீண்டும் ஆதாரங்களுடன் கூறும் களமாக வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பாக கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு அமைந்துள்ளது. அதனை நேர்வேயும், பிரான்சும் வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டிவிட்டன. ஈழத்தின் கனவுடன் வீழந்த வேங்கைகளும், மக்களும் விட்டுச்சென்ற பணிகளிற்கான செயல்திட்டத்தின் முதல் அடியை அவர்கள் தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்து வைத்துள்ளனர். எதிர்வரும் வாரம் கனடா மக்கள் தமது தீர்மானத்தை தொளிவாக கூறப்போகின்றனர். அதனை தொடர்ந்து பல நாடுகளில் இது தொடரப்போகின்றது.

எனினும் கனடாவினதும், பிரித்தானியாவினதும் முடிவுகள் மிக முக்கியமானவை ஏனெனில் புலம்பெயர் தமிழ் சமூகத்தில் ஏறத்தாள மூன்று இலட்சம் மக்களை கனடாவும், ஒன்றரை இலட்சம் மக்களை பிரித்தானியாவும் கொண்டுள்ளது. இது புலம்பெயர் தமிழ் சமூகத்தின் அரைப் பங்காகும், அதன் முடிவுகளை உலகம் உற்று நோக்கும் எனவே அதனை வெற்றியடையச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஏராளம் என்பதுடன் அதற்காக மக்களின் ஆதரவுகளும் அதிகம் தேவை. ஒரு பலமான அரசியல் கட்டமைப்பை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் உருவாக்கி கொள்வதற்கு இந்த தேர்தல் நடவடிக்கைகள் ஒர் முதற்படி. எனவே அதன் வெற்றி என்பது எமது அரசியல் தீர்வுக்கான மிக முக்கிய பாதையாகும்.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்

நன்றி:ஈழமுரசு

Comments