- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்- தமிழ்த் தேசியத்தை விரும்பும் மக்களும் ஒரு விடயத்தை மனதில் நிறுத்திக் கொள்வது நல்லது. தமிழரின் எதிர்காலத்தை- அவர்களின் அரசியல் பலத்தை, வாழ்வாதாரங்களைச் சிதைத்த மகிந்தவுக்கு ஆதரவு கொடுக்கத் துணிவது ஒட்டு மொத்தத் தமிழினத்துக்கே செய்யப்படும் வரலாற்றுத் துரோகமாக கருதப்படும்.
- அதேவேளை, சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுக்க நினைப்பது மூன்று தசாப்தங்களாக உயிரையும் உடலையும் கொடுத்த முப்பதாயிரம் மாவீரர்களுக்கும்- போரின்போது சாகடிக்கப்பட்ட ஒரு இலட்சம் வரையான தமிழ்மக்களுக்கும் செய்யப்படும் துரோகமாக்க கருதப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சவாலாக- அதன் ஒன்றுமைக்கும் கொள்கைக்கும் புதியதொரு நெருக்கடியாக இந்தத் தேர்தல் மாறியிருக்கிறது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகள் தான் தீர்மானிக்கும் சக்கியாக இருக்கும் என்ற கருத்து வலுவாகக் காணப்படுகிறது.
மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் தமிழ்மக்களின் மனதை வென்றெடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருப்பதைக் கொண்டே இந்தக் கருத்தை உறுதிப்படுத்த முடிகிறது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்த அரசாங்கம் இப்போது அவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறது. அவர்களுக்கு வெளியே சென்று வரும் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை மீள்குடியமர்வு முயற்சிகளும் மேற்கு வன்னியில் நடைபெற ஆரம்பித்துள்ளன. அபிவிருத்தி, மீள்குடியமர்வு, உதவித் திட்டங்கள் என்று தமிழ்மக்களின் வாக்குகளைக் கைப்பற்றுவதற்காக அரசாங்கம் எதையெதையோ சொல்லிக் கொண்டிருக்கிறது. அதேவேளை தமிழ்க்கட்சிகளின் ஆதரவுக்காக இரண்டு பிரதான வேட்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டிருப்பதையும் காணமுடிகிறது.
பெரும்பாலான தமிழ்க்கட்சிகள் மகிந்தவின் பக்கமே சாய்ந்து கொண்டிருக்கின்றன. மனோ கணேசன் மட்டும் சரத் பொன்சேகாவுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இன்னும் முடிவுகளை அறிவிக்கவில்லை. இந்த இரண்டு கட்சிகளிலும்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னமுடிவை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பே மிகுதியாகக் காணப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த ஜனாதிபதித் தேர்தல் சவால்மிக்கதாகியிருப்பது உண்மை.
தமிழ்த் தேசியத்தின் வழி செல்வதா அல்லது இணக்க அரசியல் பக்கம் போவதா என்ற குழப்பத்துக்கு விடை காண வேண்டிய கட்டம் அதற்கு வந்திருக்கிறது, ஐந்து தெரிவுகளை முன்னிறுத்தி கூட்டமைப்பு ஆராய்ந்து வருவதாக செய்திகள் வந்தன. ஆனால் இப்போதைய நிலையில் கூட்டமைப்பு தேர்தல் பகிஸ்ரிப்பு என்ற முடிவுக்கு செல்லமாட்டாது என்றே தெரிகிறது. அதேவேளை சரத் பொன்சேகாவுடனும் மகிந்தவுடனும் பேச்சுக்கள் நடத்தப்படுவதாகவும் சொல்கிறது.
தனி வேட்பாளர் பற்றிய பேச்சுக்கள் அடிபட்டன-இப்போது அதுபற்றிய சுருதிகளும் குறையத் தொடங்கியுள்ளன. இந்தக் கட்டகத்தில் கூட்டமைப்பின் பெரும்பாலான முக்கிய தலைவர்கள் மகிந்தவுக்கு ஆதரவு கொடுகவே விரும்புவதாகத் தெரிகிறது. அண்டை நாடான இந்தியாவின் விருப்புக்கமைய மகிந்தவுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்ற கருத்து அவர்களிடம் காணப்படுகிறது.
அதேவேளை இன்னொரு சாரார் மகிந்தவை வீழ்த்த சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்று வலியுறுத்துகின்றது. ஆனால் இந்த அணி பலமாக இருப்பதாகத் தெரியவில்லை. இன்னொரு தரப்பு தனித்துப் போட்டியிடுவதென்ற நிலைப்பாட்டில் இருக்கிறது. இது தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துகிறது.
இதற்கிடையே பொதுவேட்பாளரை நிறுத்தாவிட்டால் சுயேட்டையாகப் போட்டியிடுவேன் என்று சிவாஜிங்கம் கூறியிருப்பதும் கவனிக்;கத்தக்கது.
இப்படியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சவாலாக- அதன் ஒன்றுமைக்கும் கொள்கைக்கும் புதியதொரு நெருக்கடியாக இந்தத் தேர்தல் மாறியிருக்கிறது. தமிழரின் பலத்தை வெளிப்படுத்தக் கிடைத்த சந்தர்ப்பதைப் பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் தவறவிட்டு நிற்கும் நிலையில் இந்தத் தேர்தலானது தமிழரின் பலவீனத்தை, ஒற்றுமையின்மையை வெளிப்படுத்தும் தேர்தலாக மாறியிருப்பது கண்கூடு.
- தமிழரின் வாக்குகள் சிங்கள தேசத்தின் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் வல்லமை பெற்றதாக இருக்கிறது என்று பெருமை பேசிக் கொள்வதை விட- இந்தத்தேர்தல் தமிழரின் ஒற்றுமையைச் சிதைத்து விட்டதே என்ற கவலையே மிகுதியாக இருக்கிறது. இந்தக் கட்டத்தில் மகிந்தவுக்கு ஆதரவு கொடுப்பதோ சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுப்பதோ அந்தந்தக் கட்சிகளின் முடிவாக இருக்கலாம்.
ஆனால் தமிழ்மக்கள் இந்தக் கட்டத்தில் தமக்கு முன் உள்ள தெரிவுகளை சற்று ஆழமாக ஆராய்ந்து பார்ப்பது அவசியம்.
மகிந்தவுக்கு ஏன் ஆதரவு கொடுக்கக் கூடாது? இந்தக் கேள்விக்கு முதலில் விடை காண்போம்.
- சமாதானக் கதவுகளை இறுக மூடிக் கொண்டே-வஞ்சகமான முறையில் போரைத் தொடங்கி தமிழர் தேசத்தை சின்னா பின்னமாக்கியவர். புலிகளை அழிப்பதாகக் கூறிக் கொண்டு ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றொழித்தவர். ஆயிரக்கணக்கானோரை படுகாயப்படுத்தி முடங்களாக்கியவர்.
- இலட்சக்கணக்கான மக்களை வீடு, வாசல்ளை இழந்து அகதிகளாகத் அலைய விட்டதுடன் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து அல்லற்பட வைத்தவர்.
- தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை வேரோடு நசுக்கும் எண்ணத்தைக் கொண்டிருப்பவர். இவையெல்லாவற்றுக்கும் மேலாக 13வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல் தீர்வு என்று சொல்லிச் சொல்லியே ஏமாற்றுபவர். ஆனால் 13வது திருத்தத்தின் படி வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பதை எதிர்ப்பவர்.
- மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களைக் கூட வழங்குவதற்கு விருப்பமில்லாதவர்.
- கிழக்கில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர் என்ற அப்பட்டமான பொய்யின் ஊடாக வடக்கு-கிழக்கு இணைப்பு சாத்தியமற்றதென்றும், கிழக்கு தமிழரின் தாயகமல்ல என்ற புதிய கோட்பாட்டையும் உருவாக்கியிருப்பவர்.
- அரசியல் தீர்வு என்ற பூச்சாண்டிகளின் ஊடாக தனது அதிகாரத்தை நீடிப்பதிலேயே குறியாக இருப்பவர்.
- இவரது நான்காண்டு பதவிக்காலத்தில் அரசியல்தீர்வுக்கான ஒரு அடி கூட முன்னே வைக்காதவர்.
இனிமேலும் இவர் அரசியல்தீர்வுக்கு முயற்சிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. தமிழருக்கு என்ன தீர்வை வழங்கப் போகிறேன் என்று பகிரங்கமாகச் சொல்லக் கூடத் திராணியற்ற இவருக்கு வாக்களிப்பதால் தமிழ் மக்களுக்கு என்ன இலாபம் கிடைத்து விடப் போகிறது?
அடுத்து சரத் பொன்சேகாவுக்கு வருவோம்.
- ஆயிரக்கணக்கான தமிழர்களின் மரணங்களுக்கு நேரடிப் பொறுப்பானவர்.
- தடுப்பு முகாம்களில் தமிழரைத் தடுத்து வைக்க வேண்டும் என்று ஆலொசனையைக் கூறியவரே இவர் தான்.
- இவரது திட்டப்படி தான் தமிழர்கள் ஏழு மாதங்களுக்கு மேலாக தடுப்பு முகாம்களில் சிக்கி அவலங்களை சந்திக்க நேர்ந்துள்ளது.
- போர் நிறுத்த காலத்தில் சமாதான முயற்சிகளைச் சீர்குலைப்பதில் முன்னின்றவர்.
- யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றக் கூடாதென்று அப்போதைய அரசுக்கு அழுத்துமாகச் சிபார்சு செய்தவர்.
- இவரது இறுக்கமான போக்கினால் தான் முதற் கட்டப் பேச்சுக்களின் போது உருவாக்கப்பட்ட பாதுகாப்புக் குழு செயலிழக்கும் நிலை ஏற்பட்டது. சமாதானப் பேச்சுக்கள் இழுபறிக்குள்ளாகி சீர்குலைய நேரிட்டது.
- உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்ற முடியாதென்ற பிடிவாதப் போக்குக்கு இவர் இழுத்து வந்த சாட்சி தான் ஜெனரல் சதீஸ் நம்பியார். அண்மைய பேட்டியொன்றில் சரத் பொன்சேகா, தனது நெருங்கிய நண்பர் என்று விளித்துக கொண்ட அதே நம்பியார் தான் இவர். இந்த இரு நண்பர்களும் சேர்ந்து உயர்பாதுகபாதுகாப்பு வலயங்களை அகற்றக் கூடாதென்று இலங்கை அரசுக்கு சிபார்சு செய்தனர். அதன் விளைவாக இருதரப்பு நம்;பிக்கையீனம் வளர்ந்து கடைசியில் அது போராக உருவெடுக்கக் காரணமாகியது.
- விடுதலைப் புலிகளுக்கு எதிரான புலனாய்வுப் போரை ஆரம்பித்து வைத்து அதைத் தமிழருக்கு- தமிழ்த் தேசியத்துக்கு எதிரான புலனாய்வுப் போராகக் கொண்டு நடத்தி பெருமளவானோரைக் கொன்றொழித்தவர்
- தமிழர்கள் வந்தேறு குடிகள். சிங்களவருக்கே இந்த நாடு சொந்தம் என்றும், தமிழர்கள் எங்காவது ஒரு மூலையில் வசிக்கலாம். ஆதைவிட வேறெந்த உரிமையும் கோர முடியாது என்று இராணுவத்தில் இருந்த போது கர்ஜித்தவர்.
- இப்போது அதுவே தனக்கு எதிராகத் திரும்பும் என்றவுடன் பேட்டியைத் திரித்து வெளியிட்டு விட்டதாக பல்டி அடித்திருப்பவர்.
- உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றக் கூடாது என்று அழுத்தமாக நின்ற அவரிடம் இருந்து உயர் பாதுகாப்பு வலய மீள்குடியமர்வை எதிர்பார்க்க முடியாது. மணலாறில் சிங்களக் குடியேற்றங்களைப் பாதுகாத்தவரிடம் இருந்து வடக்கு-கிழக்கு இணைப்புக்கு ஆதரவை எதிர்பார்க்க முடியாது.
- வடக்கு கிழக்கை பிரிக்கக் காரணமாக இருந்த ஜேவிபியுடன் இணைந்திருப்பவர்- அதை மீளவும் இணைக்க உதவுவார் என்று எப்பத்தான் நம்ப முடியும்?
- 13வது திருத்தத்துக்கு அப்பாற் செல்லப் போவதாக இப்போது கூறியிருக்கும் அவர் நாளைக்கே அதையும் பத்திரிகைகள் திரித்து வெளியிட்டு விட்டதாகக் கூற மாட்டார் என்று எப்படி நம்ப முடியும்?
- விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விட்டதாக கூறிய அவரே இப்போது ஆயிரம் புலிகள் வரை தப்பிச் சென்றிருக்கலாம் என்கிறார். இதைக் காரணமாக வைத்து தமிழ் மக்கள் மீதான அடக்குமறைகளைத் தொடர்வதற்கும் உயர்பாதுகாப்பு வலயங்கள், அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவறைப் பிள்ளையார்சுழி போட்டிருப்பவர்.
இப்படி இரு பிரதான வேட்பாளர்களுக்கும் தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்பதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன.
- தமிழரின் நடமாட்ட சுதந்திரத்தை- சொந்த இடத்தில் வாழும் உரிமையை நசுக்கியிருப்பவர்களுக்கு-தமிழருக்காகப் போராடி உயிரையும் உடலையும் கொடுத்த முப்பதாயிரம் மாவீரர்களின் கல்லறைகளைச் சிதைத்து, அவர்களை நினைவு கொள்ளும் சுதந்திரத்தைக் கூடப் பறித்தவர்களுக்கு -தமிழரின் அரசியல் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று தெளிவாகப் பதில் கூற முடியாத வேட்பாளர்களுக்கு கால்பிடிக்க எந்தத் தமிழ்க்கட்சி முனைந்தாலும் அவர்களை வரலாறு மன்னிக்காது.
- இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்- தமிழ்த் தேசியத்தை விரும்பும் மக்களும் ஒரு விடயத்தை மனதில் நிறுத்திக் கொள்வது நல்லது. தமிழரின் எதிர்காலத்தை- அவர்களின் அரசியல் பலத்தை, வாழ்வாதாரங்களைச் சிதைத்த மகிந்தவுக்கு ஆதரவு கொடுக்கத் துணிவது ஒட்டு மொத்தத் தமிழினத்துக்கே செய்யப்படும் வரலாற்றுத் துரோகமாக கருதப்படும்.
- அதேவேளை, சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுக்க நினைப்பது மூன்று தசாப்தங்களாக உயிரையும் உடலையும் கொடுத்த முப்பதாயிரம் மாவீரர்களுக்கும்- போரின்போது சாகடிக்கப்பட்ட ஒரு இலட்சம் வரையான தமிழ்மக்களுக்கும் செய்யப்படும் துரோகமாக்க கருதப்படும்.
கூட்டமைப்பு இந்தக் கட்டத்தில் வரலாற்றுத் துரோகம் இழைத்த குற்றச்சாட்டில் சிக்கி- தமிழ்த் தேசியத்துக்கே சேறு பூசப் போகிறதா? அல்லது தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றப் போகிறதா?
தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு ஆட்சி மாற்றம் தீர்வைத் தருமா?
தொல்காப்பியன்
Comments
புலம் பெய்யர்த்த தமிழனைவிட இவர்கள் எவொலோ மேல்
இலங்கைல் போர் நடத்தலும் அங்கு உள்ள தமிழ் கிறிஸ்தவர்கள் ஆன்மிகம் வேறுன்றி உள்ளது இந்த தளத்தை பார்க்கவும் http://csijaffnadiocese.com/