இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நாடுகடந்த அரசாங்கத்தின் செயற்குழு தனதுகொள்கை விளக்க கூட்டத்தை லண்டனில் நடத்தியிருந்தது. நாடுகடந்த அரசாங்கம் அமைய இருக்கும் நிலையில் அதன் செயற்குழுவினரும், அறிவுரை கூறும் குழுவினரும் கூடி கொள்கைகளை விளக்கியுள்ளனர். பிரித்தானியாவில் நாடுகடந்த அரசாங்கத்தின் சார்பாகச் செயல்படவுள்ள செயற்குழுவினர் பத்திரிகையாளரைச் சந்தித்து இன்று மாநாடொன்றை நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து திரு விஸ்வநாதன் ருத்திரகுமார் தொலைதூர உரையாடல் மூலம் (வீடியோவில்) இம் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். அத்துடன் அதிர்வு நிருபர் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், சுதந்திர தமிழீழ தனியரசை நோக்கி நகர்வதே, நாடுகடந்த அரசாங்கத்தின் கொள்கை என தெளிவுபடுத்தியுள்ளார். வரும் ஏப்பிரல் மாதம் தேர்தால் நடைபெற இருப்பதாகவும், வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு அமைவாகவே நாடுகடந்த அரசாங்கம் செயல்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரித்தானிய தமிழர்பேரவையின் சார்பாக திரு சென். கந்தையா அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகையில், நாடு கடந்த அரசாங்கத்திற்கு பிரித்தானிய தமிழர் பேரவை தனது முழு ஆதரவையும் அளிக்கும் என அவர் குறிப்பிட்டார். தொடர்ந்தும் செயல்குழுவினர் மக்கள் தொடுத்த கேள்விகளுக்கும் பதிலளித்தனர், மனித உரிமை ஆர்வலர் கரன் பாக்கர் அவர்களும் இதில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார். பிரித்தானியாவில் வட்டுக்கோட்டை தீர்மானம் குறித்து மீள் வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. இது குறித்து ஊடகவியலாளர் மொளலி அவர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுவினர் சரிவரப் பதில் ஏதுவும் கூறவில்லை.
இருப்பினும் பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் வட்டுக்கோட்டை தொடர்பான மீள் வாக்கெடுப்பு தேவையில்லாத விடையம் என நாடுகடந்த தமிழஏழ அரசாங்கம் கருதுவதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 1977 ல் தமிழீழ மக்கள் ஏகமனதாக வாக்களித்து வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதனை மீள் வாக்கெடுப்புக்கு ஏன் விடவேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்க விடையமாகும் .
Comments