தடுமாறும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தடம்மாறப் போகிறதா?

tna-undecidedதாயகத்தில் ஏற்பட்ட பேரழிவை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலமாகவாவது தமிழ்த் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்தி தமிழ் மக்களுக்கான உரிமைகளை ஒரே குரலில் நின்று பெற்றுக்கொள்ளமுடியும் எதிர்பார்ப்பு அனைத்து மட்டங்களிலிருந்தது. ஆனால் தற்போது எதிர்பாராமல் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே வெவ்வேறான நிலைப்பாடுகள் இருப்பது வெளிக்காட்டப்பட்டுவருகின்றது.

ஒரு தலைவனின் வழிகாட்டலில் உறுதியாக பயணித்த ஈழத்தமிழினம் தற்போது மாறிய களநிலைமையில் வழிதெரியாது தடுமாறுகின்ற நிலைமையே இன்றுள்ளது. அரச தலைவர் தேர்தலில் என்ன முடிவை தமிழர் தரப்புகள் எடுக்கவேண்டும் என்பதை ஆறப்போட்டு அலசி ஆராய்ந்து வருவதாகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் சம்பந்தன் தெரிவித்துவருகின்றார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது நான்கு கட்சிகளை – தமிழரசு கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னர், தமிழீழ விடுதலைக் கழகம், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - இணைத்து உருவாக்கப்பட்ட தமிழர்களுக்கான அரசியல் கூட்டமைப்பாகும்.

எத்தனையோ வேறுபாடுகள் இருந்தபோதும் தமிழர்களின் பொதுக்கொள்கையின் அடிப்படையில் இணைக்கப்பட்ட இவர்கள் தற்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பயணிக்க புறப்பட்டு விட்டார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

தாயகத்தில் நிகழ்ந்த மனிதப் பேரழிவும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் மனித பேரவலத்தின் பின்புன் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நடந்த உள்ளாட்சி தேர்தல்களின்போது தமிழ் மக்கள் தேர்தலை எதிர்கொண்ட விதம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. அழிவிலும் அவலத்திலும் தமிழ் தேசியத்திற்காக தமிழர்கள் காட்டிய ஆதரவு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதனை சரியாக பயன்படுத்தி உறுதியாக பயணிக்கமுடியும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது அரச தலைவருக்கான தேர்தல் வந்ததை தொடர்ந்து சிவாஜிலிங்கம் தனிவேட்பாளராக சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இவருடன் இணைந்துகொண்ட சிறிகாந்தா தமிழ்த் தேசியத்தை இதன் மூலம்தான் தக்கவைக்கமுடியும் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது இவ்வருவருடன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏனைய இரு பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதனும் விநோதரலிங்கமும் இணைந்துகொண்டு பெரும்பான்மை கட்சிகளை சேர்ந்த இரு வேட்பாளர்களையும் ஆதரிக்ககூடாது என்ற கருத்தை கொண்டுள்ளனர்.

அத்துடன் சிவநாதன் கிசோர் வெளிப்படையாகவே மகிந்தவுக்கு ஆதரவளிக்க போவதாக தெரிவித்துவருகின்றார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒரேயொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரான ஆர். எம். இமாம் இதுவரை எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் திங்கட்கிழமை கூடிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அரச தலைவர் தேர்தலை புறக்கணிப்பதென முடிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இக்கட்சியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவருகின்றார்.

தமிழர் தரப்பில் தனிவேட்பாளரை நிறுத்துவதன் மூலம் மகிந்தவுக்கே மறைமுகமாக ஆதரவு வழங்கப்படுமென பல்வேறு மட்டங்களிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுவருகின்றது. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன்ஆகியோர் மகிந்தவின் வெற்றி வாய்ப்பை தவிர்ப்பதற்கு சரத் பொன்சேகாவுக்கே ஆதவளிக்கவேண்டுமென்ற கருத்தை கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தியும் கனகசபையும் தற்போது புலத்து தேசங்களில் இருக்கிறார்கள். அவர்களின் கருத்தும் ஆட்சிமாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாகவே இருப்பதாகவே தெரிகிறது. எனவே அவர்கள் சம்பந்தன்-பிரேமசந்திரன்-சேனாதிராஜா என்ற கூட்டுடனே ஒத்துப்போவார்கள்.

இதனைவிட பிரதான இரண்டு வேட்பாளர்களில் ஒருவரைக்கூட ஆதரிக்ககூடாது என்பதில் ஏனைய எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். செல்வராஜா கஜேந்திரன், திருமதி சிதம்பரநாதன், சொலமன் சிறில், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியேந்திரன், தேசியப்பட்டியல் மூலம் தெரிவான சந்திரகாந்தன் சந்திரநேரு, திருக்கோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், அம்பாறை நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம், தற்போதும் தடுப்புக்காவலிலுள்ள வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் ஆகியோர் இரண்டு பிரதான வேட்பாளர்களில் எவரையும் ஆதரிக்ககூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரியவருகின்றது.

சிவாஜிலிங்கத்துடன் மூவரும் சம்பந்தருடன் மூவரும் (இன்னும் இருவரும்) நிற்க சிவநாதன் கிசோரை தவிர்த்து ஏனையோர் சரத் பொன்சேகாவையோ அல்லது மகிந்த ராஜபக்சவையோ ஆதரிக்ககூடாது என்ற நிலைப்பாட்டிலேதான் இருக்கின்றனர் என்ற நிலைதான் தற்போதுள்ளது.

இங்கு சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்பதோ அல்லது சிவாஜிலிங்கத்தை முன்னிறுத்தி தமிழர் தரப்பு நிற்கவேண்டும் என்பதோ அல்லது தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்ற கருத்துநிலையோ முக்கியமானதல்ல. அதனைவிடவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுதியான அடித்தளமே முக்கியமானதாகும். என்ன முடிவை எடுத்தாலும் ஒரே அணியில் நின்று முடிவை எடுக்கவேண்டும். இலங்கைத் தீவில் சிறுபான்மை இனத்தவர்களாகிய நாம் எமது ஒற்றுமையை உலகிற்கு காட்டவேண்டிய முக்கிய வேளையிது. இனிமேலாவது அதனை செய்வார்களா?

- சங்கிலியன்

Comments