முள்ளிவாய்காலில் ஒரு முற்றுகைப் போரை உலகம் ஒன்றுதிரண்டு நடத்தி பெரும் மனிதப் பேரழிவை தமிழ் மக்கள் மீது மேற்கொண்டபின்னர், எஞ்சிய மக்களை சிறைப்பிடித்து முட்கம்பி வேலிகளுக்கும் அடைத்துவைத்தது சிறீலங்கா அரசு. வரலாறு காணாத பெரும் துயரங்களை தமிழ் மக்கள் சந்தித்திருந்த வேளையில், அந்த மக்களின் பாதுகாவலர்களான விடுதலைப் புலிகளையும் அதன் தலைமையும் முற்றாக அழித்துவிட்டதாக அது எகத்தாளமிட்டது. சிறீலங்காவின் கூற்றை உறுதிப்படுத்துவதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் வருடத்தில் ஒருமுறை தோன்றும் மாவீரர் நாளை எதிர்பார்த்து காத்திருந்தது உலகம்.
சிறீலங்காவின் மீதான போர்க் குற்றத்தை எல்லாம் மறந்துவிட்டு தங்கள் சுட்டு விரல்களை புலிகளை நோக்கி நீட்டுவதற்காக வல்லரசுகள் சிலவும் காத்திருந்தன. காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம்தான் பதிலாகக் கிடைத்திருக்கின்றது. தலைவர் இல்லையென்று சொன்வர்களுக்கு அவர் வராமை மகிழ்வை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், இருக்கின்றார் என்று நம்பிய கோடிக் கணக்கானவர்கள் மத்தியில் இது ஏமாற்றத்தையும் சோர்வையும் ஏற்படுத்தியிருக்கும். ஆனால், இந்த மாவீரர் நாளில் உரையாற்றுவதா இல்லை தற்போதுபோன்று ஏதுமற்ற ஒரு வெறுமை நிலையினை தொடர்வதா என்ற முடிவை தீர்க்கரிசனத்துடன் தலைவர் எடுத்திருப்பார்.
உலக நிகழ்சி நிரலைக் கவனத்தில் எடுத்து, தமிழ் மக்களை சிங்கள அடக்குமுறையாளர்களிடம் இருந்து மீட்டெடுக்க அவர் சரியான பாதையே தேர்ந்தெடுத்திருப்பார் என்பது தமிழ் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த வருடம் அவர் உரையாற்றாது போனாலும், கடந்த மாவீரர் தின உரையில் தலைவர் இன்று சொல்ல வேண்டிய பல விடயங்களை மிகத் தெளிவாகவே அன்று சுட்டிக்காட்டியிருந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறீலங்கா கட்டவிழ்த்துவிட்டுள்ள போர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் அல்ல என்றும் இது தமிழர்களுக்கு எதிரான போர். ஒரு தமிழின அழிப்புப் போர் என்பதை சுட்டிக்காட்டியிருந்த தலைவர், தமிழ் மக்களின் அழிவிற்கு சர்வதேசத்தின் தவறான, ஒருதலைப்பட்சமாக மேற்கொண்ட முடிவுகளே காரணம் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தார்.
உலகம் ஒன்றுபட்டு நின்று தமிழருக்கு எதிராக போரைத் தொடுத்துள்ளபோதும் தனித்து நின்று தமிழ் மக்களின் தார்மீக பலத்தில் நின்று போராடுகின்றோம் என்று கூறியிருந்த தலைவர், எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர் கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காக தொடர்ந்து போராடுவோம் என்று உறுதியாகத் தெரிவித்திருந்தார். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.
இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக என்று புலம்பெயர்ந்த மக்களின் கைகளில் இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை ஒப்படைத்துவிட்டுச் சென்ற தலைவரின் தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொண்டு, தமிழ் மக்களை குழப்புவதற்கென்றே அறிக்கைகளையும், ஆய்வுகளையும் வெளியிடும் புல்லுரிவிகளை அடையாளம் கண்டுகொண்டு, சிங்கள அடக்குமுறையில் இருந்து தமிழ் மக்களுக்கான விடுதலையை வென்றெடுக்க உழைப்பதே தேசியத் தலைவரின் சிந்தனைக்கும், மாவீரர்களின் கனவிற்கும் நாம் அளிக்கும் மதிப்பாக இருக்க முடியும்.
ஆசிரியர் தலையங்கம்-ஈழமுரசு
நன்றி்:ஈழமுரசு
Comments