தமிழகத்தில், சிறீலங்காப் பொருட்கள் புறக்கணிப்புப் போராட்டம்

ஈழத்தமிழர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் சிறீலங்கா அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து, அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தூக்கியெறிய வேண்டும் என்று கோரி நடத்தப்படும் போராட்டத்தில் பங்கேற்க வலியுறுத்தி சென்னையில் "ஸ்பென்சர் பிளாசா" உள்ளிட்ட பல பகுதிகளில் "சேவ் தமிழ் - Save Tamil" அமைப்பின் சார்பில் துண்டு பிரசுரங்கள் அளிக்கப்பட்டன.

"ஸ்பென்சர்" பகுதியில் வருவோரிடம் இந்த பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இனவொழிப்புக் குருதியில் ஊறிய சிறீலங்காப் பொருட்களை மக்கள் வாங்கக் கூடாது. ஒரு பொருள் சிறீலங்காவில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால் அதைத் தூக்கியெறியுமாறு மக்களிடம் கூறுங்கள்'' என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா ஆகிய நாடுகளில் தொடங்கப்படவுள்ள சிறீலங்காப் பொருட்களுக்கு எதிரான புறக்கணிப்புப் போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். தமிழீழத்தைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகளுக்கு நிம்மதியும், நீதியும் கிடைக்க வேண்டுமென்ற உங்கள் வேட்கை அசைக்க முடியாத உறுதி பெற வேண்டும்.

சிறீலங்காப் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் பொருளாதார ரீதியில் சிறீலங்காவை மண்டியிடச் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஈழத் தமிழர்களின் மரியாதைக்காக போராட நாம் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். ஆயுதப்போர் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதைக்காக அரசியல் களத்தில் நடத்தப்பட்டு வரும் போரில் வென்றாக வேண்டும்.


கண்டனத்திற்குரிய சிறீலங்கா அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும். இதன் மூலம் சிறீலங்கா அரசை மண்டியிடச் செய்ய வேண்டும். சிறீலங்கா அரசின் தலைவர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டு தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக அவர்கள் செய்த குற்றங்களுக்காக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.

சிறீலங்காப் பொருட்களை தூக்கியெறியுமாறு மக்களிடம் கூறுங்கள். இந்த அழைப்பை ஏற்று செயலில் இறங்குங்கள். ஆயிரக்கணக்கானோர் ஆதரவளித்து இந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்யுங்கள். இந்த புறக்கணிப்பில் எங்களோடு சேர்ந்து ஒன்றுபடுவதன் மூலம், அனைத்துத் தடைகளையும் மீறி வெல்வோம்.மேற்கண்டவாறு `சேவ் தமிழ்' அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: வெப்டுனியா

Comments