வளமான மண்ணிலிருந்து வரண்ட நிலத்திற்கு

படங்களால் ஒரு செய்தி

வளமான தங்கள் பாரம்பரிய மண்ணிலிருந்து போரின் பெயரால் பிடுங்கி எடுக்கப்பட்ட கிழக்குத் தமிழர்கள் "மீள்குடியேற்றம்" என்ற பெயரில் தரிசு நிலங்களில் வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றர்கள்.



வட பகுதியில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு என்ன நடைபெறப் போகின்றது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இது அமைகின்றது.

கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடம் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட போதும் - அங்கிருந்து போர் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களில் 6,000 பேர் இன்னும் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவில்லை.

கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் [Centre for Policy Alternatives - CPA] அண்மையில் நடத்திய ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த இந்த இடம்பெயர்ந்த மக்கள் 2 ஆண்டுகளாக இடைத் தங்கல் முகாம்களிலேயே நாட்களை ஓட்ட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

2007ஆம் ஆண்டு யூலை மாதம் கிழக்குப் பிரதேசம் முழுவதும் விடுதலைப் புலிகள் வசம் இருந்து மீட்கப்பட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்திருந்தது.

அதன் பின்பு - அனல் மின் நிலையம் அமைப்பதற்காக சம்பூர் மற்றும் மூதூர் கிழக்குப் பகுதிகள் சிறிலங்கா அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதனால், அந்தப் பகுதிகள் அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு தமிழ் மக்களின் பாரம்பரியக் காணிகள் சிறிலங்கா அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு விட்டதாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க. துரைரத்தினசிங்கம் குற்றம் சாட்டுகின்றார்.

அவரது விபரமான உரை படங்களின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள படங்கள் பன்னாட்டுத் தொண்டர் நிறுவனம் ஒன்றின் பணியாளர் டொக்டோறன்டஸ் சரஜேவோ அவர்களால் எடுக்கப்பட்டவையாகும்.

சம்பூர் மற்றும் மூதூர் கிழக்கு பகுதிகள் "அதியுயர் பாதுகாப்பு வலயம்" என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட பின்பு - வளமான அந்த நிலங்களிலிருந்து துரத்தப்பட்ட தமிழ் மக்கள் - "நவரத்தினபுரம்" எனப் பெயரிடப்பட்டுள்ள தரிசு நிலம் ஒன்றில் குடியேற்றம் செய்யப்படுகின்றனர்.

இந்த வரண்ட நிலத்தில் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் அங்கு தமது முதன்மைத் தொழிலான விவசாயத்தினை மேற்கொள்வதற்குச் சிக்கல்படுகின்றனர்.

"நவரத்தினபுரம்" மீள்குடியமர்வு மற்றும் அது தொடர்பான கட்டுமானப் பணிகள் ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

மக்களின் விவசாய நிலங்களோடு அவர்களுக்கு நீர் வளத்தை வழங்கி வரும் குளங்களும் "அதியுயர் பாதுகாப்பு வலய"த்திற்குள் மாட்டிக் கொண்டுள்ளன.

"நவரத்தினபுரம்" மீள்குடியேற்றப் பகுதியில் தமது எதிர்காலம் பற்றிய பல கேள்விகளோடு தான் மக்கள் தமது நாட்களை ஓட்ட ஆரம்பித்துள்ளனர்.

தம்மைச் சூழ நடக்கும் சதியை உணர்ந்து அறிய முடியாத இளம் வயதில் "நவரத்தினபுரம்" பகுதியில் விளையாடும் குழந்தைகள்.

"நவரத்தினபுர"த்தைச் சேர்ந்த மக்கள் ஒரு விநாயகர் கோயில் கட்டிவருகிறார்கள்.

ஏதாவது முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதற்காக - "நவரத்தினபுரம்" மீள்குடியேற்றப் பகுதியில் பயிர்ச் செய்கைக்காக நிலம் தயார்ப்படுத்தப்படுகிறது.

நல்ல ஒரு எதிர்காலம் கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கும் சிறுவர்கள்.

மேலும் சில படங்கள்:





17.11.2009 ஆந் திகதி மீள் குடியமர்த்துகை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் குறை நிரப்புப் பிரேரணை விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் ஆற்றிய உரையின் சில பகுதிகள்:


2006 ஏப்ரல் 25 ஆம் திகதியிருந்து மேற்கொள்ளப்பட்ட பல்குழல் எறிகணைத் தாக்குதல்களினால், திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கு, வெருகல் ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் இரவோடு இரவாக உடுத்த உடையுடன் வீடுவாசல்கள், உடைமைகள், தோட்டங்கள், வயல்கள், கால்நடைகளையும், உறவுகளையும் இழந்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்தார்கள்.

இவர்கள் அனுபவித்த துன்ப துயரங்களை வார்த்தைகளினால் எடுத்துக் கூறமுடியாது. இரண்டு வருடங்களுக்குப் பின் மீள்குடியேற்றப்பட்ட போதும் நன்கு திட்டமிட்ட மீள்குடியேற்றமும், புனர்வாழ்வும் இம்மக்களுக்கு வழங்கப்படவில்லை. அரச சார்பற்ற நிறுவனங்களினால் அரைகுறையாகத் திருத்தப்பட்ட வீடுகளில்தான் இன்றும் மக்கள் வாழ்கின்றனர்.

பலருக்கு இவ்வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை. வைத்தியம், போக்குவரத்து, மின்சாரம் போன்ற வசதிகள் இன்றியும் வாழும் வாழ்க்கை தொடர்கின்றது. பாடசாலைகளும் திருத்தப்படவில்லை. தளபாடம், கற்பித்தல் உபகரணங்கள், ஆசிரியர்கள் வளங்கள் இன்றியும் பல பாடசாலைகள் நடைபெறுகின்றது.

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், நுண்கலை ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்களின்றியே பல பாடசாலைகள் பெயரளவில் இயங்குகின்றன. கல்வி, பொருளாதாரத்தில் திட்டமிட்டு இப்பிரதேச மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

மூதூர் கிழக்கு சம்பூர், கூனித்தீவு, சூடைக்குடா, நவரத்தினபுரம், கடற்கரைச்சேனை, சம்புக்களி ஆகிய கிராமங்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலான பழமை வாய்ந்தது. இக்கிராமங்களில் வாழ்ந்த சுமார் 2000 மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 7500 மக்கள் தமது வாழ்விடங்களிலிருந்து பாரிய இராணுவ நடவடிக்கைகளினால் விரட்டியடிக்கப்பட்டனர்.

இவர்கள் இடம்பெயர்ந்தபோது வீடுவாசல்கள் முற்றாக அழிக்கப்பட்டு தோட்டநிலங்கள் சேதப்படுத்தப்பட்டன. இங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்று கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேணை ஆகிய இடங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும், பொது இடங்களிலும் வசதிகள் வாய்ப்புகள் இன்றி துன்பவாழ்கை வாழ்கின்றனர்.

இவர்களின் பிள்ளைகளுக்கு ஒழுங்கான கல்வி வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. விவசாயம் செய்தவர்களை தோப்பூர், பள்ளிக்குடியிருப்பு கிராமத்துக்கு அண்மையில் உள்ள சின்னக்குளம் என்ற இடத்தில் மீளக்குடியமர்த்துவதற்கு அம்மக்களின் விருப்பமின்றி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இப்பிரதேசம் குடியிருப்புக்கோ, பயிர்ச்செய்கைக்கோ அறவே பொருத்தமற்ற பிரதேசமாகும். அரிகற்கள் நிறைந்த களிநிலம். அத்துடன் 30 – 40 அடி ஆழத்துக்கு மேல் கிணறுகள் அமைத்தாலும் நீர் பெறுவது கஷ்டம்.

நிலத்துக்கு அடியில் நீர் ஊற்றும்மில்லை. ஏக்கர் கணக்கில் இருந்த வளமான நிலத்திலிருந்து விரட்டி அடித்துவிட்டு வளமற்ற இடத்தில் 20 பேர்ச் காணியை ஒதுக்கியிருக்கும் தாராள மனப்பான்மையை எண்ணிப் பார்க்கின்றோம்.

மீன்பிடித் தொழில் செய்தவர்களுக்கும் இதே கதிதான். மூதூர் இறால்குழி, நாவலடி என்ற இடங்களுக்கு இடையில் உள்ள உப்பு நிலத்தில் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. சில குடும்பங்கள் வலுக்கட்டாயமாகக் குடியமர்த்தப்பட்டுமுள்ளனர்.

மகாவலிகங்கை பெருக்கெடுக்கும் பொழுது 3 - 4 அடி நீர் வழிந்து கடலில் சேரும் பள்ளமான பிரதேசம். இங்கும் ஒரு குடும்பத்திற்கு 10 பேர்ச் காணி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களின் விருப்பத்துக்கு மாறாகக் கட்டாயப்படுத்தி, மீள்குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது அப்பட்டமான மனிதஉரிமை மீறல் செயற்பாடாகும்.

மூதூர் கிழக்கில் மக்கள் வாழ்ந்த வீட்டுக் காணிகள், தோட்ட நிலங்கள், வயல் காணிகள், குளங்கள், மேய்ச்சல் நிலங்கள் என 10000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் உயர்பாதுகாப்பு வலயமாகவும், வர்த்தக வலயமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு வாழ்ந்த மக்களை விரட்டியடிக்கப்படும் பொழுது அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இந்த இராணுவ நடவடிக்கை “இங்கு வாழ்ந்த மக்களின் நன்மை கருதியே நடை பெறுகின்றது” என்று பகிரங்கமாக ஊடகங்களின் மூலம் கூறியிருந்தார்.

இக் கூற்றை அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் மெய்பிக்க வேண்டும் என்பது தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்பாகும். இவ்வளவு கூடுதலான மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு மக்கள் மீள்குடியேறமுடியாது உயர்பாதுகாப்பு வலயம், சுதந்திர வர்த்தகவலயம் என்று பிரகடனப்படுத்தியிருப்பது மூதூர் கிழக்கில்தான். அங்கு வாழ்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக தமிழர்கள் என்ற காரணத்தினாலா இத் தடை உத்தரவு?

தொடர்புபட்ட செய்தி: Sampur IDPs 'still in camps'

Comments