அரசியல் விவேகத்தின் அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டிய தருணம்

election-mahinda-sarath

கடந்த மே மாதம் இலங்கையில் போர் நிறைவுபெற்ற பின்னர் ஆறு மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் மக்கள் முகாம்களில் இருந்து வெளியே செல்வதற்கான அனுமதியை கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை அரசு வழங்கியுள்ளது.

இறுதியாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 128,000 தொடக்கம் 135,000 மக்கள் வவுனியாவில் உள்ள மனிக் பாம் முகாம் உள்ளிட்ட முகாம்களில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அனுமதிகள் பெற்று வெளியில் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்வது என்பது இயலாத காரியம், போர் நடைபெற்ற பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் இராணுவ வலையங்களாகவே உள்ளன. அங்கு பாதுகாப்பு நடைமுறைகள் அதிகம்.

அரசாங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை முகாம்களில் உள்ள மக்களை வெளியே செல்ல அனுமதித்த போதும் 12,000 மக்களே முதற்கட்டமாக வெளியே சென்றிருந்தனர்.

பெரும்பாலானவர்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாது உள்ளதுடன் முகாம்களில் இருந்து வெளியேறும் மக்களுக்கான உதவிகளும் மிகவும் குறைவாகவே உள்ளதாக அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

மெனிக் பாம் முகாமில் இருந்து மக்கள் பேருந்துகளில் ஏற்றப்பட்டு வீதியோரங்களில் அநாதரவாக கைவிடப்பட்டுள்ளதாக திருச்சபையை சேர்ந்த உதவி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கை அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

கடந்த மே மாதம் போர் நிறைவுபெற்ற போது ஏறத்தாழ 300,000 மக்கள் வவுனியா மற்றும் வடபகுதிகளில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். எனினும் அனைத்துலக அமைப்புகளினாலும், மனித உரிமை அமைப்புக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களைத் தொடர்ந்து 130,000க்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடிமர்த்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

தற்போது எஞ்சியிருந்த முகாம்களை திறந்த முகாம்களாக மாற்றுவதாக அரசு திடீரென அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவித்தல்களை மேற்குலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் வரவேற்றுள்ள போதும் இதனை முழுமையான சுதந்திரமாக கொள்ளமுடியாது என அவை தெரிவித்துள்ளன.

முகாம்களில் இருந்த மக்கள் மூன்று வகையான நடைமுறைகளின் ஊடாக முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றே கருத முடியும்.

முதலாவதாக மீள்குடியேற்றம், இரண்டாவதாக முகாம்களில் இருந்து வெளியேறி வெளியில் தங்கும் வசதிகளை ஏற்படுத்துதல், மூன்றாவதாக முகாம்களில் உள்ள மக்களை குறிப்பிட்ட காலம் மட்டும் வெளியில் செல்ல அனுமதித்தல்.

முதலாவது படிமுறையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவில்லை, அவர்கள் படையினரின் கண்காணிப்புகளின் கீழ் உள்ள பிரதேசங்களில் அவர்களின் கண்காணிப்புகளின் கீழ் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இரண்டாவதாக முகாம்களுக்கு வெளியில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காவல் நிலையங்களில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மூன்றாவது வகையினர் மீண்டும் முகாம்களுக்கு திரும்பி வரவேண்டும் என்ற அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்

இதனை பூரண சுதந்திரமாக கொள்ள முடியாது என்பது மனித உரிமை அமைப்புகளின் வாதம். மேலும் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட இடங்களில் மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள், ஊடகவியலாளர்கள் போன்றவர்கள் சுயமாக சென்றுவரும் அனுமதிகளும் இல்லை.

எனவே மக்கள் தொடர்ந்தும் பல அழுத்தங்களின் மத்தியில் வாழ்வதாகவே கொள்ளப்படும்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதிக்கான தேர்தலை முன்னிட்டே மேற்கொள்ளப்பட்டதாக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாது அரசின் நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தின் பேச்சாளர் கோடன் வைஸ் கூட தெரிவித்திருந்தார்.

மேற்குலக ஊடகங்கள் கூட இதே கருத்தைத் தான் முன்வைத்துள்ளன. அதாவது ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர்களில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் தென்னிலங்கையில் கடும் போட்டி நிலவும் எனவும், இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் வாக்குகள் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தவல்லது எனவும் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த ரைம்ஸ் நாளேடு தனது செய்தியில் கடந்த வியாழக்கிழமை குறிப்பிட்டுள்ளது.

எனவே நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் மட்டுப்படுத்தப்பட்ட பங்களிப்பை மேற்கொள்ள முடியாது. எதிர்ப்பு நடவடிக்கையாகவோ அல்லது கோபத்தின் அடிப்படையில் வெறுப்புடன் அரசியல் செய்யும் நேரமும் தமிழ் மக்களுக்கு இதுவல்ல எனவும் கூறப்படுகின்றது. அவர்கள் தமது விவேகத்தின் அடிப்படையில் முடிவை மேற்கொள்ளும் கட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் மட்டுமல்லாது, மேற்குலகமும் அதிக அக்கறை கொண்டுள்ளது. அதன் மூலம் தான் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது பழைய வாழ்க்கையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், இலங்கையை வன்முறைகள் அற்ற நாடாக மாற்றமுடியும் எனவும் அவர்கள் நம்புகின்றனர்.

மத்தியில் ஒரு ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்துவது தமிழ் மக்களுக்கு முக்கியமானது என்பதை தமிழ் மக்களும் உணர்ந்து கொண்டுள்ளனர். அதனை எல்லா தமிழ் பேசும் மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக மலையக தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் இலங்கை முழுவதிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் அதற்குள் அடக்கம்.

இலங்கை அரசியலில் ஜனாதிபதித் தேர்தல் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துவதுண்டு. பிரிவினையின் அடிப்படையில் அல்லாமல் ஒரு பொதுவான கொள்கையின் அடிப்படையில் கணிப்பீடுகளை மேற்கொள்வது இந்த தருணத்தில் முக்கியமானது.

தரமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் நிகழ்காலத்தை தவறவிடலாகாது என்பதே இன்று தமிழ் மக்கள் உச்சரிக்க வேண்டிய வாசகம். தமது அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்கு எல்லா தமிழ் பேசும் மக்களும் உறுதியாக ஒரு அணியில் ஒருங்கிணைய வேண்டும் என்பதுடன் மனித உரிமைகளுக்காக போராடும் அமைப்புகளையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

மேற்குலகத்தைப் பொறுத்தவரையில் இலங்கையை முற்றுமுழுதாக ஒரு ஜனநாயக நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றது. தமிழ் மக்கள் தமக்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே பலரினதும் கருத்தாக உள்ளது.

தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஆட்சிமாற்றத்திற்காக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் எனவும், வடக்கில் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மேற்கொள்ளப்படும் பேச்சுக்களைத் தொடர்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ள கருத்துகளும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆயுதப்போராட்டம் நிறைவுபெற்ற பின்னர் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் இராஜதந்திர ரீதியிலான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டங்களின் ஒரு வடிவமாகவே இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் அரசியல் நகர்வும் அமையப்போகின்றது.

- வேல்ஸிலிருந்து அருஷ்

நன்றி - வீரகேசரி வாரவெளியீடு

Comments