ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ சுயேச்சையாக போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதல்ல
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் காலத்தின் கட்டாயத்தை கருத்திற்கொண்டு காத்திரமான முடிவெடுப்போம். கடந்த காலங்களைப் போல் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் வகையில் சுயேச்சையாகப் போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதல்ல என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ். ஸ்ரீரங்கன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாறிவரும் உலகில் அரசியல், பொருளாதார அணுகுமுறை மாற்றங்கள் இன்று உலகமயமாதலின் விளைவாக அனைவரையும் அதன் தாக்கத்திற்கு உள்ளாக்குகின்றது.
கடந்த காலங்களில் சர்வதேச நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் எமக்கு விமோசனம் பலர் ஒதுங்கி நின்றோம். ஆனால் உலக வல்லாதிக்கங்களும் பிராந்திய வல்லாதிக்கங்களும் தமது சுயலாப பொருளாதார, அரசியல், இராணுவ நலன் கருதியே அனைத்தையும் நடத்தி முடித்தனர். இன்றும் தமது நலன் கருதியே முட்டி மோதுகின்றனர்.
மறுபுறம் பெரும்பான்மைக் கட்சிகள் தமது இருப்புக்களை உறுதிப்படுத்தவும் தமது சுயநலன் கருதியும் இன்றைய நிலையில் இலங்கையின் இராணுவ பொருளாதார மையங்கள் மேல் உலகநாடுகள் கொண்டுள்ள அக்கறையையும் அதன் மூலம் உலக நாடுகளிடம் எழுந்துள்ள மறைமுக மோதல்களையும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி அணிதிரண்டு நிற்கின்றனர்.
எவ்வாறாயினும் இக்கட்சிகள் மிகப் பெரிய உள்நோக்கங்களுடனும் நீண்ட கால பார்வையுடனும் தமது நடவடிக்கைகளை திடமாகவே மேற்கொள்கின்றனர். அவை சிறுபான்மையினருக்கு எதை தந்திடப் போகின்றன என்பதை இதுவரை எதை எமக்கு தந்தார்கள் என்பதை வைத்து மக்கள் மதிப்பிடட்டும்.
ஆனால்
எம் அன்புக்குரிய மக்களே!
இன்றைய நிலையில் எமது தமிழ்ச் சமூகத்தின் எதிர்கால நிலையை தீர்மானிக்கும் சக்தியாக மக்களாகிய நாம் காத்திரமான முடிவெடுக்க வேண்டும். கடந்த காலங்களைப் போல் மீண்டும் நாம் பிறரால் ஆட்டுவிக்கப்படுபவர்களாக இல்லாமல் எமது விதியை நாமே நிர்ணயிக்க வேண்டும். இதற்காக நாம் எமக்குக் கிடைத்திருக்கும் சிறிய துரும்புச் சீட்டையும் உரிய வகையில் உபயோகிக்க வேண்டும். வீரவசனங்களாலும் வெற்றுப் பேச்சுக்களாலும் காலம் கடத்தும் எமது அரசியல்வாதிகளை உரிய வகையில் நாம் இனங்காண வேண்டும்.
இவர்களில் பலர் பொதுநலன் சார்ந்து நிகழ்கால எதிர்கால நடைமுறை யதார்த்தத்தை புரிந்து கொள்ளாது. தமது இருப்பை பேணுவதை மட்டுமே குறியாகக் கொண்டு மக்களை மீண்டும் துன்பத்தில் தள்ள முயல்கின்றனர்.
எமது புலம்பெயர் உறவுகள் பல தமிழர் பிரதேசத்தின் நடைமுறை யதார்த்தம் புரியாது பல கருத்துக்களை வெளியிடுகின்றனர். அவர்களின் கருத்துக்களை செப்பனிட வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது.
ஏனெனில் எமது பிரதேசத்தின் மீள்கட்டுமானம், பொருளாதாரம், அபிவிருத்தி சார்ந்த முதலீடுகள் என்பன புலம்பெயர் உறவுகளின் நிதி மூலங்களாலேயே கட்டியெழுப்பப்பட வேண்டி உள்ளதோடு எமது நியாயமான அரசியல் அபிலாஷைகளை எமது இனத்திற்கேயான தனித்துவத்தோடு பெற்றெடுக்க அவர்களின் குரல் இன்றியமையாதுள்ளது.
இருவரில் ஒருவரே வெற்றிபெறுவர் என்னும் நிலையில் உள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இன்று வரை முடிவெடுக்காத நிலையில் பல அணிகளாய் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரிந்துநிற்கின்றது. தமிழ் மக்களை கடந்தகாலத்தைப் போல் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் எனக் கூறுவதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதும் அல்ல.
தமிழ் மக்களுக்குரிய பேரம் பேசலை தக்கவைக்க உகந்ததுமல்ல. உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் எவ்வாறான விளைவுகளை பெற்றுத் தரும் என்பதை கடந்த காலம் எமக்கு கற்பித்து விட்டது. மாறிவரும் போக்கினை உணராது வாய்ப்புக்களை தவற விட்டால் எமது இனம் இருள்சூழ்ந்த எதிர்காலத்தையே எதிர்கொள்ள நேரிடும்.
அழிவில் உருக்குலைந்த பல நாடுகள் இன்று உலகிலேயே இராணுவ, பொருளாதார வல்லாதிக்க நாடுகளாக மாறிவிட்டன.
அவர்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ளவேண்டும். அமெரிக்காவால் உருக்குலைந்த ஜப்பான் அமெரிக்காவோடு இணைந்து செயற்பட்டு இன்று அமெரிக்காவை விட முன்னேறிச் சென்றுவிட்டது. ஆனாலும் இன்றுவரை ஜப்பான் தனது நாட்டின் தனித்துவத்தை இழக்கவில்லை.
வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொண்டு எமது உரிமைகளை பெற்றெடுக்கும் வகையில் நாம் செயற்பட வேண்டும். மாறாக தென்னிலங்கை, எம் மக்களை பயன்படுத்தி அதிகாரத்திற்கு வருவதற்கு வழி சமைக்கும் வகையில் எமது அரசியல் கட்சிகள் செயற்படக் கூடாது.
அவ்வாறு செயற்படும் அரசியல் கட்சிகளுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் மக்கள் உரிய தீர்ப்பளிப்பர். தொடர்ந்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் பிரதிபலிப்புக்கள் நிச்சயமாக தமிழ்க் கட்சிகளின் செயல் வீரத்திற்கு முக்கியம் கொடுப்பதாய் அமையுமே தவிர வாய் வீரங்களுக்கு முக்கியம் கொடுப்பதாய் அமையாது.
எனவே முயற்சியை நிறுத்தாத வரையில் தோல்வி முடிவானதல்ல என்பதற்கிணங்க எமது சகத்திற்கு சுபீட்சமான எதிர்காலத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் அரசியல் பேதங்களை மறந்து அனைத்து தரப்பினரும் தொலைநோக்குப் பார்வையுள்ள தீர்மானங்களை எடுத்து ஒன்றிணைந்து செயற்படுவோம்.
அதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் அனைத்து விதமான ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தயாராக உள்ளது என்பதை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துக் கொள்கின்றது.
-யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்-
Comments