தேர்தலைப் புறக்கணிப்பதா? எதிர்கொள்வதா?

election-mahinda-sarathபடபடக்கும் இதயங்களுடன் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன தென்னிலங்கை அரசியல் தலைமைகள். எதிர்வரும் தேர்தலில் எப்படியாவது அரியாசனத்தை இறுகப்பற்றவேண்டும் என்ற வக்கிரத்தில் தென்னிலங்கைச் சக்திகள் இருக்க தமிழ் மக்களின் நிலை என்ன?

நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெல்வார்கள்? எதிர்மாறான முடிவுகள் வந்தால் அதனைச் சரியான முறையில் கையாள்வது எப்படி போன்ற குழப்பமான சூழல், வல்லரசு நிலையில் இருக்கும் சில நாடுகளின் கொள்கை வகுப்புச் சக்திகளிடம் தலைதூக்கியுள்ளதாக பரவலாகப் பேசப்படுகின்றது.

காரணம் இலங்கையைப் பொறுத்த மட்டில் தற்போதைய சூழ்நிலையில் யார்க்கும் அடங்காத மகிந்த ராஜபக்ச தற்போது ஆட்சிக் கதிரையை குடும்பத்தினர் சூழ பற்றிப்பிடித்துள்ளார். அவர் யார் சொல்லும் வேத வாக்குகளையும் கேட்பதாக இல்லை. இந்நிலையில் அவரை ஆட்டங்காண வைக்கக் கூடிய மற்றொரு தலைமை யார்? என்று பார்த்தால் அது இலங்கையின் அதியுயர் இராணுவப்பட்டத்தைத் தனதாக்கிய ஜென்ரல் சரத்பொன்சேகா. மகிந்த நிராகரிக்கப்பட்டு சரத் பொன்சேகா ஆட்சியில் அமர்ந்தால் அது இராணுவ ஆட்சி நிலைக்கு நாட்டைக் கொண்டு சென்று விடும். அதுவும் தமது தாளத்திற்கு ஆட்டம் போடும் நாயகனை கதிரையில் அமர்த்தாது என்று குழம்பிப் போய் அந்த நாடுகள் தலைகளைப் பிய்த்துக் கொள்வதாக தென்னிலங்கை ஊடகங்கள் சொல்கின்றன.

இதே தேர்தலில் கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மகிந்தவைத் தோற்கடிக்காது விட்டால் மகிந்த குடும்பத்தின் பரம்பரை ஆட்சிமுறைக்குள் நாடு உட்பட்டுவிடும் வாழ்நாளில் ஜனாதிபதி மாளிகையைக் கூட எட்டிப் பார்க்க முடியாது என்ற பயத்தினால் சரத்பொன்சேகாவை ஆதரிக்க ரணில் விக்கிரமசிங்க முடிவெடுத்துள்ளார்.

தம்மை எதிர்த்து நிற்கின்ற விமல் வீரவன்சவையும் அவரின் பரிவாரங்களையும் ஏற்றுக் கொண்டிருக்கின்ற மகிந்தவிற்கு சரியான பாடம் புகட்ட ஒரு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த ஜே.வி.பியின் சோமவன்ச அமரசிங்கவும் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென முடிவுக்கு வந்துவிட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தையாவது கெட்டியாகப் பிடித்துக்கொள்வோம் என்று சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் மங்கள சமரவீரவும் பொன்சேகாவை ஆதரிப்பதில் மிகுந்த நிம்மதியடைந்துள்ளார்.

வழமைபோல் ஆளும் கட்சிகளுக்கு மட்டுமே ஆதரவு கொடுக்கின்ற பெ. சந்திரசேகரனின் மலையக மக்கள் முன்னணியும், ஆறுமுகன் தொண்டமானின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் மகிந்தவிற்கு ஆதரவு வழங்கப் போவதாக அறிக்கைவிட்டுவிட்டனர்.

இவர்களுடன் புளொட் அமைப்பின் சித்தாத்தனும் இணைந்து கொண்டுள்ளார். அவரின் ஆதரவு நிலைப்பாட்டிற்கு அவர் தெரிவிக்கும் காரணம் தான் நகைப்பிற்குரியது. மீள் குடியேற்றம் தொடர்பில் மகிந்தராஜபக்ச எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் தமக்கு மிகுந்த திருப்தி அளிப்பதாகவும் ஏனைய விடயங்களிலும் தமக்குத் தீர்வு வழங்குவார் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டுள்ளார். அவரின் கருத்துப்படி பார்த்தால் அறுபது ஆண்டுகளைக் கடந்து தமிழ் மக்கள் முன்னெடுத்துவருகின்ற விடுதலைப் போராட்டம் எல்லாம் தனியே மக்களின் மீள் குடியேற்றத்திற்கானதா?

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களை தமது பகுதிகளுக்கு மகிந்தவின் அரசாங்கம் குடியமர்த்தி வருவது தற்போது இடம்பெறுவது ஏன்? என்ற கேள்விக்கான பதில் தேர்தல். அதில் தமிழ் மக்களின் வாக்குகளைச் சுரண்டுவது என்பதுதான் அதன் நோக்கம் என்பது அவருக்கு விளங்கவில்லை என்பது தான் வேடிக்கையானது. சரி குடியமர்த்தல் என்பது கூட முழுமையில் இடம்பெறவில்லை. இன்னமும் ஓர் இலட்சத்து ஐம்பதனாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் மக்கள் குடியேற்றம் இடம்பெற்று வருகின்றது என்று அரச ஊடகங்கள் நுனிக்காலில் நின்று கூச்சலிடும் போது முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் எந்தப் பகுதிகள் என்று திருப்பிக் கேட்க அரசின் கால்களை ஏந்தி நிற்கும் உங்களுக்குத் தோன்றுவதே இல்லையா? முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய்ப்பிரதேசம் மட்டும்தானா? கிளிநொச்சியில் பூநகரி, முழங்காவில் மட்டும்தானா? பிரதேசங்கள்??

ஒரு விடயம் மட்டும் உண்மையானது. தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் எதிர்வரும் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெல்வதும் ஒன்றுதான் சரத் பொன்சேகா வெல்வது என்பதும் ஒன்றுதான். தமிழ் மக்களின் தற்போதைய நிர்க்கதியான நிலைக்குக் காரணமானவர்கள் இந்த இரண்டு பிரதான வேட்பாளர்களுமே. அவர்கள் மேற்கொண்ட ஈவிரக்கமற்ற, உலகிலேயே கேவலமான போர் அநீதி என்பது தமிழ் மக்களின் வரலாற்றில் என்றும் மறந்துவிட முடியாத பதிவாகவே இருக்கும். மக்கள் சந்தித்த அவலம் என்பதை வன்னியின் ஒவ்வொரு துரும்பும் சொல்லும்.

இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைக்கும் என்று யாரிடமும் எதிர்பார்க்க முடியாது. மகிந்த ஆட்சியில் இருக்கும் போதே தமிழ் மக்களை ஏமாற்றும் வகையிலான வாக்குறுதிகளை வழங்கிவந்திருப்பதை யாரும் மறந்துவிடமுடியாது. வன்னி மீதான போர் முடிவடைந்ததும் தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படும் என்று கூறிய மகிந்த அந்த மக்களையே அகதிகளாக்கி அவர்களையே மீள் குடியேற்றம் செய்கின்றேன் என்று அந்த விடயத்தையே பூதாகாரமாக்கி இழுத்தடித்து தனது இரண்டு சந்தர்ப்ப ஆட்சியில் ஒரு முறையை நிறைவுக்கும் கொண்டு வந்துவிட்டார். இனிவரும் காலத்தில் அவர் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம்.

மாறாக புதியவர் வருகிறார் அவர் வெட்டி விழுத்துவார் என்று தமிழ்மக்கள் யாரும் எண்ணிவிட முடியாது. காரணம் அவர் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இலங்கையில் தமிழர்கள் வாழலாம். ஆனால் அவர்கள் நாட்டில் பங்கு கேட்க முடியாது. இது பௌத்த சிங்கள நாடு என்று இராணுவத்தில் இருக்கும் போதே கூறியிருந்ததை உணர்வுள்ள தமிழன் யாரும் மறந்துவிடப் போவதில்லை.

ஆக ஆட்சி அதிகாரத்தின் ஏணிகளாக பாவித்து விட்டு ஏறியதும் எட்டி உதைக்கும் ஆட்சியாளர்களை அரியணையில் ஏற்ற தமிழ் மக்கள் முன் வரக் கூடாது. இதனால் தேர்தலை நிராகரிப்பது என்பதே தமிழ்மக்கள் தரப்பின் பொதுவான நிலைப்பாடாக இருக்கும் எனக் கருதலாம்.

மாறாக இன்னொரு தெரிவும் உள்ளது. அந்தத் தெரிவு தற்போதைய சர்வதேச நிலைப்பாடுகளின் அடிப்படையில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பதாயும் அமைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. அந்தத் தெரிவு எது என்றால் தமிழ் பேசும் மக்களால் ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டு அவருக்கான வாக்குகளை தமிழ் மக்கள் வழங்கலாம். இதன் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை சூறையாடும் பெருவிருப்பில் போட்டிபோடும் சிங்கள வேட்பாளர்களுக்கு சாட்டையடியாக அமையும். அதேவேளை தமிழ்த் தரப்பு ஒருமித்த கருத்தை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லலாம்.

எது எவ்வாறு இருப்பினும் தமிழ்பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்த்தலைமைகள் நல்ல முடிவுகளை எடுக்கக் கூடிய முதிர்ந்த அரசியல் அனுபவம் உள்ளவர்களாக திகழ்வதால் அவர்கள் எந்த முடிவினையும் தேசியத்திற்குச் சாதகமாயே எடுப்பார்கள் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

- இராவணேசன்

Comments