ஆட்சி மாற்றத்துக்காக தமிழரிடம் கையேந்துவதும் அரசியல் தீர்வு என்று வந்தவுடன் அவர்களைத் தொப்பென்று கை விடுவதும் தென்னிலங்கையின் அரசியல் பாரம்பரியம்.
ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தில் மதில் மேல் பூனையாக இருந்து வந்த மனோ கணேசன் இப்போது சரத் பொன்சேகாவின் பக்கம் திரும்பியுள்ளார். அவர் ஏற்கனவே தமிழ் பேசும் கட்சிகளுடன் இணைந்து ஒரு அணியாக இயங்க முயற்சித்த அதேவேளை, இன்னொரு புறத்தில் ஐக்கிய தேசிய முன்னணியிலும் முக்கிய பங்கை வகிக்க முற்பட்டிருந்தார்.
இரண்டு தோணியில் கால் வைப்பது அவரது நோக்கம். ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் ஏதாவதுதொரு அணிக்குச் சென்றாக வேண்டும் என்ற நிலை.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட முன்னரே- சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவாக முன்னரே- அவருக்கு ஆதரவு வழங்குவது பற்றிப் பேச ஆரம்பித்தவர் மனோ கணேசன். இந்த வகையில் அவர் சரத் பொன்சேகாவின் பக்கம் திரும்பியிருப்பது ஆச்சரியமான விடயமல்ல. வேறுபல தமிழ்க் கட்சிகள் மகிந்த ராஜபக்ஸவின் பக்கம் சாய்ந்து கொள்ளும் நிலையில் மனோ கணேசனின் தெரிவு வேறு விதமானதாக அமைந்துள்ளது.
ஆட்சி மாற்றம் ஒன்றையே குறியாகக் கொண்டிருக்கிறார் அவர்- அதுவே அவரது இந்த நிலைப்பாட்டின் அடிப்படை. ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினால் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்பது போல அவர் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். ஆட்சிமாற்றங்கள் தமிழரின் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று நம்பிய காலம் மலையேறி விட்டது. ஐதேகவின் ஆட்சி மாறி சந்திரிகா பதவியேற்ற போதும், சந்திரிகாவின் ஆட்சியில் வெறுப்படைந்து ரணில் விக்கிரமசிங்கவின் அரசு பதவியேற்ற போதும் இதைவிடப் பெரிய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருந்தன. ஆட்சி மாற்றம் நிகழ்வது தமிழருக்கு இலாபம் என்ற கற்பனைக்கு இந்த இரு சம்பவங்களும் முடிவு கட்டின.
அதுபோலவே இப்போது மனோ கணேசன் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றத்தினூடாகவும் எதையும் சாதிக்க முடியாது. சந்திரிகா, ரணில் ஆகியோர் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை விட சரத் பொன்சேகா மீது கொண்டிருக்கும் நம்பிக்கை சிறுதுளியே. அதைவிட ஆட்சி மாற்றம் தமிழரின் தலைவிதியை மாற்றியமைக்கும் என்று எந்தவகையிலும் நம்ப முடியாது. ஆட்சி மாற்றம் என்பது இலங்கையின் அரசியல் வரலாற்றில் சாதாரணமான விடயம்.
ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் இந்த இரு கட்சிகளையும் சார்ந்த கூட்டணிகள் என்று தான் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளன.
எனவே இன்னொரு ஆட்சி மாற்றத்தின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்ற நம்பி;க்கை எந்த வகையிலும் சரியானதாகத் தெரியவில்லை. இந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்து விட்டால் தமிழரின் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைத்து விடுமா என்ற கேள்வியினூடே சில விடயங்களை ஆராய்வது பொருத்தம். சரத் பொன்சேகா அடிப்படையில் ஒரு அரசியல்வாதி அல்ல. அவருக்கு என்று ஒரு கட்சி இல்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதில் அவர் உடன்பட்டுள்ளார்.
13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல் தீர்வுக்கு இணங்கியுள்ளார். 17வது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த இணங்கியுள்ளார்.
இப்படி பல சாதகமான இணக்கப்பாடுகளைக் கூறியே மனோ கணேசன், சரத் பொன்சேகாவுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறார். அதேவேளை இது இரண்டு இராவணர்களுக்கு இடையிலான யுத்தம் என்றும்- இதில் சின்ன இராவணன் யார்- பெரிய இராவணன் யார் என்று பார்த்து வாக்களிப்பதே பொருத்தம் என்பதும் அவரது நிலைப்பாடு தான்.
- மனோ கணேசனின் கருத்துப்படி பார்த்தால்- சின்ன இராவணனுக்குத் தலையைக் கொடுப்பதா- பெரிய இராவணனுக்குத் தலையைக் கொடுப்பதா என்று தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் தமிழ்மக்கள் இருக்கிறாரகள்;. அதாவது ஒரு மரணதண்டனைக் கைதியிடம் தூக்கில் போடவா- சுட்டுக் கொல்லவா என்று கேட்பது போல இருக்கிறது. அது புறத்தில் இருக்க, சரத் பொன்சேகாவே ஜனாதிபதியாகி விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதன் மூலம் தமிழர்களுக்கு அவர் எதைக் கொடுக்கப் போகிறார் என்பது கேள்வி. ஆறு மாதங்களே நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருக்கப் போகிறவரிடம் இருந்து தமிழ் மக்கள் எதனைப் பெற முடியும்? நிச்சயமாக அந்தக் குறகிய காலத்துக்குள் அரசியல் தீர்வு கிடைக்கப் போவதில்லை. வடக்கையும் கிழக்கையும் அவர் ஒரு போதும் இணைக்க முன்வரப் போவதும் இல்லை.
அவரே பிபிசிக்கு வழங்கிய பேட்டியொன்றில் தான் ஒரு உண்மையான சிங்களவன் என்றும் சுத்தமான பௌத்தன் என்றும் அழுத்தமாகக் கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவர் கிழக்கில் குடியேற்றப்பட்ட சிங்களவர்களின் நலனுக்கு விரோதமாக நடந்து கொள்ளவோ, கிழக்கை வடக்குடன் இணைக்கவோ ஒரு போதும் முன்வர மாட்டார். அதுபற்றிய உறுதிமொழிகள் எதையும் மனோ கணேசனுக்கோ அல்லது வேறெந்தத் தரப்புக்கோ அவர் கொடுக்கவும் இல்லை.
அடுத்து அவர் சிறுபான்மை தமிழர்கள் பற்றி சில மாதங்களுக்கு முன்னர் கனடிய பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்ட கருத்துகளையும் மறந்து விடமுடியாது. இப்போது அரசியலுக்கு வந்து தமிழ்மக்களின் வாக்குகளை இழக்கும் நிலை வந்துவிடுமோ என்ற அச்சத்தில்- பேட்டி எடுத்த பத்திரிகையாளர் தனது கருத்தை திரிபுபடுத்தி விட்டதாக கூறியிருக்கிறார். முன்னதாக அந்தக் கருத்துக்கு தான் மறுப்போ வருத்தமோ வெளியிடப் போவதில்லை என்று கூறியவர் சரத் பொன்சேகா.
- சரி சரத் பொன்சேகா தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வருகிறார் என்றே வைத்துக் கொண்டாலும் அது சாத்தியமான வழிமுறையாக இருக்குமா என்று பார்க்கலாம். பல எலிகள் தோண்டினால் வளை எடுக்காது என்று ஒரு பழமொழி.
சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகள் அனைத்துமே ஒன்றிணைந்த ஒரே நோக்கம்- மகிந்த ராஜபக்ஸவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான். இதில் தான் ஒன்றுபட்டு நிற்கின்றனவே தவிர, பொதுவான கொள்கையின் அடிப்படையில் அல்ல. வரலாற்றிலேயே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியாத கட்சிகள் என்றால் அதற்கு ஐதேகவையும் ஜேவிபியையும் உதாரணம் சொல்வது வழக்கம். ஆனால் இப்போது இந்தக் கட்சிகள் இரண்டும் இணைந்து ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு வந்திருக்கின்றன. இதற்கான பெருமை மகிந்தவையே சாரும். மகிந்த ராஜபக்ஸ மீதான வெறுப்பின் பிரதிபலிப்பே இது.
மகிந்த ராஜபக்ஸவின் குடும்ப அரசியல் ஆதிக்கம் தென்னிலங்கை கட்சிகள் அனைத்துக்கும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருவதால் தான் இந்தளவு வேகத்தில் இவர்கள் செயற்பட முனைகின்றனர். ஆனால் சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்கி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழித்து விட்டால் ஐதேகவின் கூட்டுக்குள் ஜேவிபி இருக்காது. ஜேவிபி எப்போதும் தாமே ‘கிங் மேக்கர்’ என்ற பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறது. “நாம்; விரும்பியவரை ஆட்சியில் ஏற்றுவோம்- விரும்பாதவரை கீழே இறக்குவோம்.”என்பது தான் அதன் கொள்கை. சரத் பொன்சேகா அரசியல் தீர்வு காண முனைந்தால் ஜேவிபி அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்குமா என்ற கேள்வி இருக்கிறது.
சந்திரிகாவுடனும், பின்னர் மகிந்தவுடனும் கூட்டுக் சேர்ந்து கொண்டு அவர்களை ஆட்சியில் ஏற்றிய ஜேவிபி செய்தது எல்லாமே சமாதான முயற்சிகளைச் சீர்குலைக்கும் வேலைகளைத் தான். சுனாமி நிவாரண பொதுக்கட்டமைப்புக்கு தடைவிதிக்கவும், வடக்கு-கிழக்கு மாகாணங்களின் பிரிப்புக்கும் காரணமாக இருந்தது ஜேவிபியே. இது போன்றே அரசியல் தீர்வு முயற்சிகளுக்கும் ஜேவிபி குறுக்கே நிற்கப் போவது தெளிவு. 13வது தீருத்ததுச் சட்டத்துக்கு எதிர்ப்பு, அதிகாரப் பகிர்வுக்கு எதிர்ப்பு, சமஷ்டிக்கு எதிர்ப்பு இப்படியே ஜேவிபியின் தமிழர் அபிலாஷை விரோதப் போக்கு நீளமானது.
இனப்பிரச்சினையே கிடையாது- பொருளாதாரப் பிரச்சினை தான் இருக்கிறது என்று கூறி வந்த ஜேவிபியிடம்- தமிழரின் இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண வருமாறு சரத் பொன்சேகாவினால் கேட்க முடியாது. அந்தக் கட்டத்தில் ஜேவிபியின் விருப்பத்துக்கு முரணாக நடக்க முனைந்தால் சரத் பொன்சேகாவைப் பதவியில் இருந்து இறக்க அடுத்த அணியுடன் சேர்ந்து விடும் ஜேவிபி. இது தான் அரசியல் யதார்த்தம்.
ஆட்சி மாற்றத்துக்காக தமிழரிடம் கையேந்துவதும் அரசியல் தீர்வு என்று வந்தவுடன் அவர்களைத் தொப்பென்று கை விடுவதும் தென்னிலங்கையின் அரசியல் பாரம்பரியம். பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு, சர்வகட்சி மாநாடு, வட்டமேசை மாநாடு என்ற சொற்களினூடாக தமிழரின் இனப்பிரச்சினையை இழுத்தடிக்க முயற்சிகள் நடக்கிறதே தவிர தீர்வு நோக்கி நகர்த்தப்படுவதில்லை. தமிழரின் தாயகக் கோட்பாடை அங்கீகரிக்கும், தமிழரின் தேசியத்தை அங்கீகரிக்கும், தன்னாட்சி உரிமையை ஏற்றுக் கொள்ளும் எந்தவொரு வேட்பாளருக்கும் தமிழ் மக்கள் வாக்களிப்பது பொருத்தமுடையதாகவே இருக்கும். ஆனால் இவற்றை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு மகிந்தவோ சரத் பொன்சேகாவோ இருக்கப் போவதில்லை.
சரத் பொன்சேகா தனியே மகிந்தவின் குடும்ப ஆட்சிக்கு எதிராகக் கிளம்பியவர் அல்ல. எனவே அவர் ஏதோ ஒரு கட்டத்தில் ஏதாவதொரு அரசியல் கட்சிக்குள் உள்வாங்கப்படுவார். அதனூடாக அதன் கொள்கைகளை நடைமுறைபடுத்த முனைவார். எனவே சரத் பொன்சேகாவை சின்ன இராவணனாகப் போடக் கூடிய கணக்கு தப்பாகவே அமையும். அதற்காக மகிந்தவைச் சின்ன இராவணனாகவோ அவரைத் தெரிவு செய்யலாம் என்றோ இந்தப் பத்தி கருதவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் இரு பிரதான வேட்பாளர்களுக்கும் முக்கியமானது. அதற்காக அவர்கள் எதையும் சொல்வார்கள். ஆனால் சொன்னதைச் செய்வதற்கு அவர்களிடத்தில் துணிவும், பலமும் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.
ஒரு வேட்பாளர் எவ்வளவு பலமாக இருக்கிறார் என்று பார்ப்பதை விட, அவரது பலவீனத்தால் தமிழருக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் என்ன என்று பார்ப்பதே முக்கியம். ஆட்சி மாற்றம் என்ற கோசத்தினூடாக அரசியல் நடத்துவதன் ஊடாக சாதிக்கப் போவது ஏதுமில்லை.
கபில் இன்போதமிழ்
Comments