வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976இன் அடிப்படையில் மீண்டும் வலியுறுத்தும் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு உலகில் உள்ள புலம்பெயர் தமிழர்கட்கு அவசியமா?

வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது 1976 மே மாதம் திகதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் ஏகமனதாக கைக்கொள்ளப்பட்ட தீர்மானமாகும். அதாவது

"1976 மே மாதம் 14ம் திகதியன்று வட்டுக்கோட்டையில் உள்ள பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு இலங்கைத் தமிழர்கள் மங்களின் தொன்மை வாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம் பாரம்பரியம் ஆகியவற்றாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும்வரை பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களில் இருந்து வேறுபட்ட தனித்தேசிய இனமாகவுள்ளாரென இத்தால் பிரகடனப்படுத்துகின்றது.

மேலும் 1972 இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ்மக்களைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஓர் அடிமைத்தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த்தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம் மொழி வாழ்வுடமை பொருளாதார வாழ்க்கை தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச் செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக்கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன் மூலம் தமிழ் மக்களின் தேசியத்துக்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது........ ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான இறைமைபொருந்திய சமயசார்பற்ற சமதர்ம தமிழீழ அரசை மீள உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டு இவ்வறிவித்தல் தவிர்க்க முடியாததாகியுள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது."

உண்மையான பிரச்சனை யாதெனப்பார்த்தோமானால் தமிழ் மக்களது ஜனநாயக முடிவுகள் அரசபயங்கரவாதத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976 இன் முக்கியத்துவம் பற்றி சுருக்கமாகப் பார்போமானால் - தமிழர் ஓர் தேசிய இனம் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் அவர்களது பூர்வீகத்தாயகம் அவர்கட்கு அவர்களது உரிமைகளை நிர்ணயிக்கும் உரிமையுண்டு. இலங்கை சுதந்திரம் அடைந்தபின் தமிழ்பேசும் மக்களின் உரிமைகான போராட்டங்களில் முதலாவது முப்பது வருடங்கள் அகிம்சை வழியிலும் அதைத்தொடர்ந்து அடுத்த முப்பது வருடங்கள் ஆயுதப்போராட்டத்திலும் ஈடுபட்டு பல வெற்றிகளை யுத்தத்தில் கண்டாலும் ஆயுதப்போராட்டம் பின்னடைவில்; முடிவுற்றது. இந்நிலையில் தமிழ்பேசும் மக்கள் அவர்களின் வரலாற்றில் மிகப்பெரியதோர் வெற்றிடத்தில் விடப்பட்டுள்ளனர்.

இச்சுழ்நிலையில் தமிழ் பேசும் மக்களின் தனித்துவத்தையும் அடையாளங்களையும் கலாச்சாரங்களையும் பாதுகாக்கவேண்டிய கடமையும் அவர்களது உரிமைகட்காக ஜனநாயக முறையிலான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய பொறுப்பும் உரிமையும் கடப்பாடும் இலங்கையில் இருக்கக்கூடிய தமிழ் அரசியற்தலைவர்களையும் தமிழ் அறிஞர்களையும் புலம்பெயர்ந்த தமிழர்களையும் சார்ந்ததாகவே இருக்கின்றது. தற்போதைய நிலையில் தமிழ்க்கூட்டமைப்பைத்தவிர்ந்த ஏனைய தமிழ்கட்சிகள் யாவும் ஆளும் கூட்டாட்சியான மகிந்த அரசாங்கத்தோடு இணைந்தே தமது அரசியலை நடாத்துகின்றனர். சென்ற ஆண்டு ஆரம்பத்தில் இருந்து ஆயுதப்போர் பின்னடைவு கண்டநிலையில் தமிழ்பேசும் மக்களது நிலமை மிக மோசமான நிலையிலேயுள்ளது.

இந்நிலையில் தமிழ்மக்களது நிலமை இலங்கை முழுவதுமே வாய்திறக்க முடியாத அளவிற்கு அராஜக ஆட்சியாகவுள்ளது. குறிப்பாக வடகிழக்கு மக்கள் தமது உரிமைகள் சம்மந்தமாக குரல் எழுப்பமுடியாத அளவிற்கு ஓர் சாட்சிகள் அற்ற போர் நடந்து முடிந்துள்ளது. மகிந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமிழர்களின் பிரச்சனைகளான அரசியல் தீர்வுகாணும் விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டை காட்டமுடியவில்லை. போர் வெற்றிக்களிப்பில் சிங்கள மக்களை மிதக்க விடுவதிலேயே தொடர்ந்தும் இவ்வரசாங்கம் அரசியல் தீர்வுக்கான செயல்முறைகட்கு அம்மக்களின் ஆதரவை வென்றெடுப்பதில் எவ்விதமான முயற்சியும் எடுக்கும் என்று நம்புவதற்கில்லை. ஆனால் அரசுசார்பாக இருக்கும் தமிழ்கட்சிகளும் அதன் ஆதரவாளர்களான சில புலம்பெயர்தமிழர்களும் மகிந்தாவின் ஆளும்கட்சிகளுக்கு நோகாமல் அவர்களோடு இணைந்து அவர்கள் தருவதை வாங்குவோம் அதுதான் "யதார்த்தம்" என்ற நிலையில் உள்ளனர். இந்நிலையில் புலம்பெயர் தமிழ்பேசும் மக்கள்; என்ன செய்யலாம்?

இராஜதந்திர முறையிலான போராட்டம்( Diplomatic War)

(இதை எமது மூனறாவது கட்டப்போராட்டமாகவும் எடுத்துக்கொள்ள முடியும். இதில் பலவிதமான போராட்ட முறைகள் இருக்கலாம். அதன் ஒரு கட்டமான போராட்ட நடவடிக்கைதான் புலம்பெயர்நாடுகளில் உள்ள தமிழ் பேசும் மக்களால் நடாத்தப்படவுள்ள 1976 மே மாதம் 14ம் திகதி முடிவெடுக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி வடக்கு கிழக்கு இணைந்த(ஈழம்) தமிழ்பேசும் மக்களுக்கான அரசு ஒன்றை நிறுவுவதற்கான ஆணையை தாம் மீண்டும் ஜனநாயக முறையில் பெற்றுக்கொள்ள அறைகூவல் விடுவதாகவே இந்த கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை நடாத்தவுள்ளோம்.

தமிழரது நிலம் திட்டமிட்டு சிங்களமயமாகிறது.

ஈழப்பகுதிகளிலே தமிழ்பேசும் மக்கள் திறந்த்வெளிச்சிறைச் சாலையில் வாழ்வது போலவே வாழ்கின்றனர். வடகிழக்கு இராணுவ மயமக்கப்பட்டுள்ளது. இங்கு இராணுவ ஆட்சியில் பல இடங்கள் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளது. இவ்விடங்கள் தமிழ் மக்களது பூர்வீக குடியிருப்பு நிலங்களாகும். இவை நிரந்தர உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளதால் அங்கு வாழ்ந்த மக்கள் அகதிமுகாம்களில் 1995ம் ஆண்டில் இருந்து வாழ்ந்து வருகின்றனர். இக்காலகட்டத்தில் ஆங்காங்கே புத்தவிகாரைகள் வரத்தொடங்கிவிட்டன, தெருக்கள் வீதிகள் சிங்களப் பெயராக மாற்றம் பெற்றுவிட்டன, நடந்த முடிந்த போரினால் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தடுப்பு முகாம்களில் முட்கம்பிகளுக்கு நடுவே இராணுவக் காவலில் வைக்கப்ட்டுள்ளனர்.

இவர்களது நிலங்கள் பல இடங்களிள் ‘உயர்பாதுகாப்பு வலயமாக' கொண்டு வரப்பட்டுள்ளதால் இம்மக்கள் தமது நிலங்களுக்கு திரும்பப் போகவே முடியாத நிலைமை ஏற்ப்பட்டுள்ளது. இதோடு இப்படி அரசு திட்டமிட்டு இவற்றைச்செய்வதால் வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கும் தொடற்சி துணடிக்கப்படுகிறது. இடையே இராணுவக் காவலுடன் சிங்களவர்கள் குடியமர்த்தப்படவுள்ளனர். தமிழ் மக்களின் வாழ்வாதரமாக இருந்த வன்னி நிலம் சிங்களவர்களால்; ஆக்கிரமிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கிழக்கு மாகாணம் 33 விகிதத்திற்கு மேல் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தால் பறிபோய்விட்ட நிலையில் வடமாகாணம் அரச பயங்கர வாதத்தால் முற்றுகையிடபட்ட நிலையில் புலம் பெயர் தமிழ் பேசும் மக்களை சிந்திக்க வேண்டுகிறோம்.

தமிழ் மக்களது இறைமையை மீளப்பெறும் போராட்டம்

உலகு இலங்கையை ஓர் ஜனநாயக நாடு என்று கூறுகின்றது. ஆனால் 60 வருடங்களுக்கு மேலாக ஓர் இனப்பிரச்சினை இருப்பதை ‘உள்நாட்டுப்பிரச்சினை' என மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றது. 1956ம் ஆண்டின் பின்னர் ஒவ்வொரு பாராளுமன்றத்தேர்தலிலும் தமிழ்பேசும் மக்கள் சமஷ்டி முறையை ஆதரித்து வாக்களித்து வந்தனர். ஆனால் சிங்கள இனவாத அரசு இதனைக் கண்டுகொள்ளவில்லை. இதன் பின்னரே வட்டுக்கோட்டைத தீர்மானமும் அதனைத் தொடர்ந்து நடந்த 1977 பொதுத்தேர்தலும் அதில் மக்கள் அமோகமாக தனிநாட்டுக்காக வாக்களித்ததுமாகும். எனவே மக்கள் தமது கருத்தை மிகத்தேளிவாகவே கூறியிருந்தனர்.

ஆயுதப்போராட்டத்தாலும் அரசு எதையும் செய்யாத போதும் இலங்கையில் ஓர் இனப்பிரச்சினை இருக்கின்றது அங்கு அத்தமிழ்த் தேசிய இனத்துக்குரிய அரசியல் அந்தஸ்து வழங்கப்படவில்லை என்ற உண்மை உலகிற்கு நன்கு தெரியவந்துள்ளது. இப்போது இதை உணர்ந்த உலக நாடுகள் தமிழ்பேசும் மக்களுக்கு ஓர் ஜனநாயக முறையிலான அவர்கள் ஏற்கக் கூடியதான ஓர் தீர்வை முன்வைக்க வேண்டுமென இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றன. அண்மையில் UN,UK,USA,EU மற்றும் இந்தியா போன்றன இப்படியான அறிக்கைகள் விட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். விடுதலைபுலிகளின் பாதையில் பல பிழைகள் இருக்கலாம்.

ஆனால் அவர்களின் அடிப்படைப்போராட்டத்தின் பின்னணியில் ஓர் நியாயம் இருந்தது. தமிழ் மக்களுக்கு அவர்களுடைய அரசியல் அந்தஸ்து இந்நாட்டில் வழங்கப்படவில்லை என்ற உண்மை இருந்தது. கடந்த 60 ஆண்டுகளில் எவ்வித அரசியல் அந்தஸ்துக்களும் கிடைக்காவிட்டாலும் உலகிற்கு இலங்கையில் ஜனநாயகம் என்ற போர்வையில் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாத அராஜக ஆட்சி நடைபெறுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளோம். இலங்கையில் அமைதி திரும்பவேண்டுமானால் தமிழர் பிரச்சினை அவர்களது ஜனநாயக அபிலாஷைகளுக்கேற்ப தீர்க்கப்படவேண்டும். மகிந்த அரசு தாம் இந்த இன மோதலில் விடுதலைப்புலிகளை வென்றுவிட்டதால் தமிழர்களை அடக்கி ஆளலாம் என முடிவுகட்டிவிட்டார்கள்.

முல்லைத்தீவில் முள்ளிவாய்காலில் விடுதலைபுலிப் போராளிகளையும் 50'000 மக்களையும் புதைத்தது போல் தமிழர்களது உரிமைப் போராட்டத்தையும் புதைத்துவிட்டடோம் என மகிந்த ‘இந்து' பத்திரிகைக்கு கூறியிருந்ததையும் அவரது அமைச்சர்கள் இதேபோல் கூறிவருவதையும் பார்த்திருப்பீர்கள். உண்மையில் ஜனநாயகம் எப்போதோ புதைக்கப்பட்டுவிட்டது. மகிந்த ஆட்சியில் இலங்கையில் இரண்டு விதமான மக்களே வாழமுடியும். முதலாவது சிங்கள-புத்த அரசை ஏற்று அதை மதித்து நடப்பவர்கள். அவர்களே நாட்டுப்பற்றாளர்கள். இரண்டாவது- அதை எதிர்பவர்கள. இவர்கள் நாட்டின் துரோகிகளாகக் கணிக்கப்படுகின்றார்கள் என மகிந்த பல மேடைகளில் பேசி வருவதைப் பார்க்கின்றோம். இப்படியான இனவாதப் பேச்சு இலங்கையில் தமிழ்பேசும் மக்களை முற்றாக அழிக்கும் திட்டத்தில் உருவானதாகும். மகிந்த அரசின் நடவடிக்கைகளை கவனித்தீர்களானால் இதை நீங்கள் நன்கு ஊகிக்க முடியும். எனவே எம் அன்பான மக்களே சிந்தியுங்கள்.

இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு போராட்டத்தின் அவசியம்.

இலங்கை அரசின் அராஜக நடவடிக்கைகட்கு எதிராகவும் அவர்களது இரகசியத்திட்டங்கட் எதிராகவும். புலம் பெயர் தமிழ் பேசும் மக்கள் தொடர்ந்து தொடர்பாக போராடவேண்டும். வன்னியில் நடந்த போரை நிறுத்தக் கோரி உலகளாவிய புலம் பெயர் தமிழர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடாத்தினார்கள். பிரிட்டனில் 73 நாட்களாக பாராளமன்ற முன்றலில் தொடர்ந்த மறியல் போராட்டங்கள் உண்ணாவிரதம் நடாத்தினோம். அவற்றால் ஒரளவு அனுதாபம் ஏற்ப்பட்டாலும் போர் முடியும் வரை, எந்த ஒரு நாடும் உருப்படியாக எதையும் செய்யவில்லை. அவர்கள் எம் மக்களைப் பயங்கரவாதிகளாகவே பார்த்தனர்.

இந்நிலையில், இந்த வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைச் சுட்டிக்காட்டும் எமது போர் பயங்கரவாதப் போர் அல்ல. எமது சுயநிர்ணய உரிமைக்கான போர். மக்கள் அதற்காக பலதடவை வாக்களித்துள்ளனர். அதை திரும்பவும் நினைவூட்ட முனைவதுதான் இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடவடிக்கை என்று கூறிவைக்கவேண்டும். இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய வழி எதுவுமே இல்லை. அங்கே 1948ம் ஆண்டில் இருந்து ஓர் அராஜக ஆட்சியே நடை பெறுகின்றது. இதை மாற்றவேண்டுமானால் புலம் பெயர் தமிழர்களால் தொடர்ந்து தொடர்பாக பலவிதமான போராட்டங்களும் நடாத்தப்படவேண்டும். அதில் முக்கியமானதொன்றுதான் இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு. இதன் மூலம் எமது இழந்த உரிமைகளைப் பெறும் உரிமைப்போராட்டத்தை தொடர முடியும்.

உண்மை நிலையை உலகிற்கு உணர்துதல்

எமது ஜனநாயக நிலையை உலகிற்கு உணர்த்த இப்பொது வாக்குக்கணிப்பு அவசியமாகும். அதோடு இது ஈழவரின் உண்மையான அரசியல் நிலமையை உலகறியச் செய்யும். மேலும் இலங்கையிலும் வட-கிழக்கில் அவர்களது உரிமையை நிர்ணயிக அங்கும் ஓர் பொதுமக்கள் வாக்குக்கணிப்பு நடாத்தப்படவேண்டு மென்று இலங்கை அரசை நிர்பந்திக்க முடியும். உலகில் பொது மக்கள் வாக்குக்கணிப்பு மூலம் பல இனங்கள் தமது சுயநிர்ணய உரிமையை நிர்ணயிக்க முடியுமானால் தமிழ்பேசும் மக்களால் ஏன் முடியாது. இன்று இலங்கையில் தமிழ்பேசும் மக்களுகு நியாயம் வழங்கப்படவில்லை என்பதை உலகம் உணரத்தொடங்கியுள்ளது. ஆதை மேலும் வலுப்படுத்தவே புலம்பெயர் தமிழர்களால் எடுக்கப்படும் நடவடிக்கையே இப்பொதுமக்கள் வாக்குக்கணிப்பாகும்.

ஒன்றுபட்டு போராடுவதின் அவசியம்

எமது நடவடிக்கை காலத்தின் கட்டாயமாகும. ஆகவே அன்பான பொது மக்களே கருத்துவேறுபாடுகள் (Ideology) பிரதேசவாதம் கட்சி வாதங்கள் சமயவாதங்கள் மற்றும் குரோதங்களை மறந்து ஈழவர் பிரச்சினைகள் தீர சகல புலம்பெயர் தமிழ்பேசும் மக்களும் ஒன்றிணைய வேண்டும். அத்தகைய ஒன்றிணைவதற்கான சாத்தியத்தை தடுக்கும் முயற்சிகள் எப்போதோ ஆரம்பமாகிவிட்டன என்பதனை அனைத்து தமிழ்கட்சிகளின் தலைவர்களும் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடப்பார்களாக. முன்பு பல தமிழ் அமைப்புகள் பொது எதிரியான சிறீலங்காவின் அரசுக்கு எதிராக வேலை செய்தார்கள்.

இப்போது இப்பொது எதிரியுடன் சிலர் இணைந்து தமிழ் பேசும் மக்களின் நலனுக்கு எதிராக வேலைசெய்கின்றார்கள். இந்நிலையை அவர்கள் மீளாய்வு செய்யுமாறு தயவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். வெளிநாடுகளில் உள்ள அமைப்புக்கள் யாவும் தாம்பெரிது நீ சிறிது என்று பாகுபாடு காட்டாது இவ்வட்டுக்கோட்டடைத் தீர்மானத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வீர்களாக.தமிழ்மக்கள் கையேந்திப்பிழைப்பவர்கள் அல்லர். அவர்கள் தன்மானத்தோடு தமது தாயகத்தில் ஓர் தேசிய இனமாக சுயநிர்ணய உரிமையோடு வாழவிரும்புகின்றார்கள்.

அவர்களது எண்ணம் ஈடேற இப்பொழுது மக்கள் வாக்குக்கணிப்பு ஓர் பங்கை வகிக்க வேண்டும். இதை வெற்றியளிக்கச் செய்வீர்களாக. ஆகவே பிரித்தானியா வாழ் தமிழ் பேசும் மக்களே! நாமும், நமது உற்றார் உறவினர்களும், எமது சொந்த பந்தங்களினதும், ஈழ உறவுகளினதும் இறைமைக்காகவும், ஜனநாயக உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும், பூர்வீக நிலத்தில் சுயநிர்ணயத்துடன் வாழ்வதற்காகவும் வரப்போகும் வரப்போகும் தை மாதம் 30ம் திகதி நடக்கவிருக்கும் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் கலந்து கொண்டு எமது பெரும்பான்மைத் தீர்வை உலகுக்கு உணர்த்த வேண்டும்.இதுவே ஈழத்தில் வாழும் உங்கள் உறவுகளுக்காக நாங்கள் செய்யும் ஒப்பற்ற கடமையும், உதவியுமாகும்.

தமிழ் தேசிய சபை

www.vkr1976.org.uk

ஸ்ரீரஞ்சன்: 07841 522514

இரகுநாதி: 07807 108318

பரமகுமரன்: 07958 507010

Comments