சனல் 4 வீடியோ உண்மையானது: ஐ.நாவில் பிலிப் அல்ஸ்டன் அதிரடி-காணொளி

நேற்றைய தினம் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா மாநாட்டில் உரையாற்றிய பிலிப் அல்ஸ்டன், சனல் 4 இல் ஒலிபரப்பான வீடியோ உண்மையானது எனத் தெரிவித்துள்ளார். சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் மற்றும் யுத்தக் குற்றங்களை விசாரணைசெய்யும் ஐ.நா வின் உயரதிகாரி பிலிப் அல்ஸ்டன் அவர்கள் நேற்றைய தினம் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தியிருந்தார். அதில் அவர் பிரித்தானியாவில் சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோக் காட்சிகள் நிஜமானவை என தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கைகள் கட்டப்பட்ட நிலையில் முழு நிர்வாணமாக, தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொல்லும் காட்சிகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகி இருந்தது. இதனையடுத்து 4 பேர் கொண்ட அவுஸ்திரேலியா வாழ் இலங்கை நிபுணர்களைக் கொண்டு இலங்கை அரசு அந்த வீடியோவை பரிசீலித்து, அது பொய்யான வீடியோ என உலகை ஏமாற்ற முனைந்தது. இதனால் பிலிப் அல்ஸ்டனின் உயரதிகாரிகள் இது குறித்து அவரை ஆராயுமாறு பணித்தனர் என்று கூறுகிறார் பிலிப் அல்ஸ்டன்.

இந்த வீடியோவை ஆராய பிலிப் அல்ஸ்டன் 3 தடய வல்லுனர்களை நியமித்துள்ளார். டானியல் சுமித், என்பவர் தடய வல்லுனர் , பீட்டர் டயட்டாக், வீடியோ வல்லுனர் மற்றும் ஜேஸ் ஸ்பிபாக் ஆயுத வல்லுனர். இவர்கள் மூவரும் சேர்ந்து இந்த வீடியோவை ஆராய்ந்து இது உண்மையான காட்சிகள் அடங்கிய வீடியோ என சான்றிதழ் அளித்துள்ளனர். சுமார் ஜூலை 17ம் திகதி இக் கொலைகள் நடைபெற்றிருப்பதாக அந்த வீடியோக் காட்சிகளை பதிவுசெய்த செல்போன் தேதி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிலிப் அல்ஸ்டன் இலங்கை அரசிடம் விளக்கம் கோரியுள்ளதுடன், சுதந்திரமான விசாரணைகளுக்கு தம்மை அனுமதிக்கவேண்டும் என்றும் கோரியுள்ளார். இதனை இலங்கை அரசு நிராகரித்தால், மேலும் பல பின் விளைவுகளை இலங்கை அரசு சந்திக்க நேரிடும் என அறியப்படுகிறது. பிலிப் அல்ஸ்டன் அவர்களை அதிர்வு இணையம் பிரத்தியேகமாகத் தொடர்புகொண்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இது குறித்து அவர் அதிர்வுக்கு பிரத்தியேக நேர்காணல் ஒன்றைத் தரவுள்ளார்.அவர் நேற்று நடத்திய ஐ.நா மாநாட்டின் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

Comments