"சனல்4" உணர்த்துவதும் கூட ஆட்சி மாற்ற அவசியத்தைத்தான்

னாதிபதித் தேர்தல் நெருங்க, நெருங்க அரசுக்கு ஒருபுறம் மக்கள் செல்வாக்குப் பற்றிய பிரச்சினை. அந்தநேரம் பார்த்து அரசுத் தலைமைக்கு எதிரான சர்வதேச குற்றவியல் விசாரணை பற்றிய கோரிக்கை நெருக்கடியும் அழுத்தத் தொடங்கிவிட்டது.

இலங்கையில் தமிழ் இளைஞர்கள் என்று கூறப்படும் ஒரு தொகுதியினர் நிர்வாண நிலையில், கைகள் பின்புறமும், கண்ணும் கட்டப்பட்ட நிலையில் சீருடை தரித்த படையினரால் தாக்கப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்படும் வீடியோக் காட்சியை பிரிட்டனின் "சனல்4" தொலைக்காட்சி ஒளிபரப்பியமையை அடுத்து எழுந்த சர்ச்சை இப்போது சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் தமிழர் தாயகம் மீது தொடுக்கப்பட்ட கொடூர, குரூர, கோர யுத்தத்தின்போது அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மிக மோசமான மனித உரிமை மீறல்களின் கணக்கு சொல்லுந்தரமன்று. ஊடகவியலாளர் களோ, பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகளோ, சர்வதேச ராஜதந்திரிகளோ தமிழர் தாயகத்தை நெருங்கவிடாமல் தடுத்து, தடை விதித்து, மூடிய இரும்புச் சுவருக்குள் தமிழர் தாயகத்தை முற்றுகை நிலையில் வைத்துக்கொண்டு தான் நினைத்த அடாவடித்தனங்கள், அட்டூழியங்கள் எல்லாவற்றையும் அரங்கேற்றி முடித்தது ஆட்சித்தரப்பு.

இத்தகைய கொடூர மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் எதேச்சாதிகாரமாகப் பதில் கூறித் தப்பிவந்த ஆளும் தரப்பு "சனல்4" ஒளிபரப்பிய விடயத்தில் வளமாகச் சிக்கிக்கொண்டு விட்டது என்பதுதான் உண்மை.

இயன்றளவு தமிழரின் வரலாற்றில் அவர்களின் இனத் தின்மீது மிகமிக மோசமான யுத்தத்தைத் தொடுத்தது மஹிந்த ராஜபக்ஷவின் இந்த அரசுதான் என்பதில் இரண் டாம் கேள்விக்கு இடமில்லை.

அதேசமயம் தமிழர்களுக்கு எதிராகச் சீருடைத் தரப்பினர் இழைத்த எந்தக் குற்றத்துக்காகவும் எந்தச் சிப்பாயையும் தனது நாலாண்டு ஆட்சியில் நீதிமன்றத்தில் நிறுத்தாதவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான்.

திருகோணமலை நகரில் ஐந்து அப்பாவி மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஈவிரக்கமற்ற கொடூரத் தில் தொடங்கி, மூதூரில் பதினேழு தொண்டுப் பணியாளர் கள் கோரமாகப் படுகொலை செய்யப்பட்ட குரூரம் முதல், கடந்த மே நடுப்பகுதி வரை தொடர்ந்த தமிழினப் பேரழிவ நாசங்களில் எதற்காகவும் எந்தச் சிப்பாயும் சட்டத்தின்முன் நிறுத்தப்படவேயில்லை.

இந்தக் கொடூரங்களை ஒட்டித் தனக்கு எதிராக மேற் குலகினால் முன்வைக்கப்பட்ட சர்வதேச விசாரணைப் பிரேரணையை இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உதவியுடன் நிராகரிக்கப்பண்ணிவிட்டு, "கம்" என்று இருந்தது கொழும்பு.

ஆனால், சட்டவிரோதப் படுகொலைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்டொன், கொழும்பை உரிய சிக்கலில் மாட்டிவிடச் செய்துவிட்டார்.

இத்தகைய மனிதப் பேரழிவுக் கொடூரங்களுக்கும் காரணமானவர் இலகுவில் தப்பிப் போய்விட முடி யாதுஉலகை ஏமாற்றிவிட்டு ஒளித்துவிட முடியாதுஎன் பதை பிலிப் அல்ஸ்டொன் கொழும்புக்கு உணர்த்த முற்பட்டிருக்கின்றார்.

திருகோணமலை மாணவர்கள் படுகொலை, மூதூரில் 17 தொண்டுப் பணியாளர்கள் கொலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களான ஜோசப் பரராஜசிங்கம், என்.ரவிராஜ் ஆகியோரின் படுகொலை போன்றவை தொடர்பான விடயங்களில் விசாரணை ஆணைக்குழு என்ற நாடகத்தை நடத்தி காலத்தை இழுத்தடித்து விடயங்களை அமுக்கிப் போட்டமைபோல, "சனல்4" ஒளிபரப்பு விடயத்திலும், உண்மையை அமுக்கிவிடலாம் என்றுதான் கொழும்பு நப்பாசைப்பட்டது. ஆனால் கதை இப்போது கந்தலாகிவிட்டது.

"சனல்4" ஒளிபரப்பு நாடா பற்றிய விடயம் அம்பல மாகிப் பரபரப்புத் தொற்றியபோதே, அதில் உள்ளவை வெறுமனே நடிக்கப்பட்ட காட்சி, அரசுத்தரப்புமீது அபாண்ட மான குற்றச்சாட்டைச் சுமத்தும் கபடத்தனம் என்றெல்லாம் இலங்கை அரசு அறிவித்தது.
அந்தக் காட்சி தொடர்பாக விசாரிக்கத் தமது அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக்கும் குழு ஒன்றையும்தான் கண்துடைப்புக்கு நியமித்தது கொழும்பு.

அந்தக் குழுவும் இலங்கை அரசுத் தலைமை எதிர்பார்த்தபடிவிரும்பியபடிஓர் அறிக்கையை முன் வைத்து அந்த ஒளிப்பதிவு நாடா, போலியானது, நடிப்பின் மீது உருவாக்கப்பட்ட திட்டமிடப்பட்ட சதி என்றெல்லாம் அறிவித்தது.

போதாக்குறைக்கு, அந்த வீடியோக் காட்சியை ஒளிபரப்பியமைக்காக, "சனல்4" மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறது அரசு என்றும்கூட அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்காக இலங்கையின் சட்டமா அதிபர்கூட அண்மையில் பிரிட்டனுக்கு விஜயம் செய்திருந்தார்.

இப்போது "சனல்4" ஒளிப்பதிவு நாடா உண்மையானது, நடந்த கொடூரத்தைத் தத்ரூபமாகவும், யதார்த்தமாகவும் வெளிப்படுத்துகின்றது என ஐ.நா. நியமித்த நிபுணர்கள்குழு பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றது.

இவ்விடயத்தைஒட்டி இலங்கை அரசுத் தரப்பு நியமித்த நிபுணர் குழுவின் சீத்துவத்தை ஐ.நா. தரப்பு நிபுணர்குழு அம்பலப்படுத்திவிட்டது. இனி, அரசு என்ன செய்யப் போகிறது? யுத்தக் குற்றங்கள், கொடூரங்கள் தொடர்பில் சர்வதே சவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐ.நாவின் மீள் வலியுறுத்தலுக்கு அரசுத் தலைமை இணைங்குமா? அல்லது இத்தகைய கொடூரங்களை மூடி மறைக்கும் தனது "பரவணிப்" பழக்கத்தைத் தொடருமா?

தமிழனத்துக்கு எதிராக யுத்தத்தின் பெயரில் இழைக்கப் பட்ட மனிதப் பேரவலக் கொடூரங்கள் இனிமேலாவது அம்பலமாக வேண்டுமானால் அதற்கும்கூட இலங்கையின் ஆட்சித் தரப்பில் மாற்றம் அவசியம். அத்தகைய மாற்றம் வந்தாலாவது இவ்விடயங்கள் பகிரங்கமாக மாட்டாவா என்று ஆதங்கப்படும் தமிழினம், அதற்கான பணியைத் தனது வாக்குப் பலம் மூலம் முயற்சித்துப் பார்ப்பது இன்றைய நிலையில் காலத்தின் கட்டாயமாகும்.

நன்றி - உதயன்

Comments