ஒருகணம் வழித்தடம் திரும்பி... வீறுகொண்டெழுவோம்!


2010.. இது புத்தாண்டு!
வாசல் திறந்து வரவேற்கின்றோம்.

ஆனால்...
வண்ணக்கோலமிட முடியவில்லை.
வளைதோரணம் கட்டவும் இயலவில்லை.
வாசல் தொலைத்து வாடிக்கிடக்கின்றோம்.
அந்நியன் வாசலில் யாசகம்செய்து –
‘புத்தாண்டே வாராய்!’
என்று இரு கரம்நீட்டி அழைக்கின்றோம்.

பத்தோடு பதினொன்றாக ஆண்டுகள் வருவதுண்டு.
வந்தவழியே திரும்பிப் போவதுமுண்டு.
நாங்களும் வரவேற்போம் - முந்நூற்றறுபத்தைந்து நாட்கழித்து ஒவ்வோராண்டும் கடந்து சென்றுவிடும்.

2009 வந்தது.
உள்ளம் பட்டாம் பூச்சியாக சிறகு விரித்துப் பறந்தது.
கண்கள் அகலத்திறந்து வாசல் நோக்கி விரிந்தது.
இது எங்கள் ஆண்டு!
இது எங்களுக்கான ஆண்டு! என்றன்றோ அப்பொழுது திளைத்தோம்?

ஆனால்...
ஆண்டும் வந்தது.
கூடவே கூற்றுவனும் விரைந்து வந்தான்.
விடியல் தேடிய எம்தேசம் சுடுகாடானது.
உயிர்வேலி அமைத்துத் தாய்மண் களமாடியது.
கிளிநொச்சி விழ எம்வேர் உழன்றது.
கந்தக வாடை நாசியைத் துளைக்க...
முல்லையில் சிங்களம் கால்பதித்தது.
இடப்பெயர்வு...
ஏதிலி வாழ்வு...
என நீண்டது எமது வேர்களின் வாழ்வு.

பசி விளையாட பஞ்சம் தாண்டவமாடியது.
தமிழ் குருதி வழிந்தோட சிங்களம் நரபலி வேட்டையாடியது.
ஒன்று... இரண்டு.. ஐந்து... பத்து என்று எண்ணிய நாட்கள் போய்...
ஐம்பது... நூறு... முந்நூறு... ஆயிரம் எனப்பெருகி...
மூவாயிரம்... இருபத்தையாயிரம் என்று பல்கியது எமது சாவு.
அன்று விகாரமாதேவியின் இரத்தவெறிக்கு – ஒற்றைத் தமிழனின் குருதி விருந்தானது.
இப்போ துட்டகாமினிகளின் கோரப்பசிக்கு – ஒன்றரை இலட்சம் தமிழ் உயிர்கள் இரையாகின.

இந்தியா துணைக்கு வருமென்றிருந்தோம்...
திரும்பிப் பார்க்கவேயில்லை!
முத்தமிழ் வித்தகர் சீறியெழுவார் என்று எண்ணினோம்...
உளியின் ஓசையில் அவர் மூழ்கிப் போனார்!
ஒபாமா கைதருவாரென்று நம்பினோம்...
கைகிடைக்கவேயில்லை!
ஐ.நா. வருமென்றிருந்தோம்...
கடைசிவரை வரவேயில்லை!

முள்வேலி முகாம்களுக்குள் வதைபட்டோம்.
ஐயகோ... என்று அழுதோம்.
இறைவா... என்று கதறினோம்.
வந்தார் பான் கீ-மூன்.
தரிசனம் தந்தார் நாராயணன்.
கருணை காட்டினார் கருணாநிதி.
அத்தனையும் எமக்காகவா?
எல்லாம் துட்டகாமினிகளுக்காக அல்லவா?

முள்ளிவாய்க்கால் வாழ்வு முள்வேலிக்குள் முடங்கி இன்றோடு மாதங்கள் ஏழரை!
போர் முடிந்ததாக உலகம் ஆசுவாச மூச்சிடுகின்றது.
வெற்றிவாகை சூடியதாக சிங்களம் மார்தட்டிக் கொள்கின்றது.
ஆனாலும் என்ன?

இன்னமும் நாங்கள் ஊர்திரும்பவில்லை.
ஊர்வாசலில் கால்பதிக்கவேயில்லை.
எங்கள் கோயில்களில் மணியொலிக்கவில்லை.
தேவாலயங்களும் திருப்பலி கொடுக்கவில்லை.
பொங்கிக்கிடந்த வயல்கள் வரண்டு கிடக்கின்றன.
பொங்கல் நாள் நெருங்கியும் கதிர்கள் விளையவில்லை.
சல சலத்தோடிய எங்கள் வாய்க்கால்கள் வற்றிக்கிடக்கின்றன.
நிமிர்ந்துகிடந்த எங்கள் மனைகள் சரிந்துகிடக்கின்றன.
மனையாளை இழந்த துணைவனும்...
துணைவனை இழந்த துர்ப்பாக்கியவதியும்...
தனையனை இழந்த தந்தையும்...
தந்தையை இழந்த தனையனும்...
தங்கையை இழந்த அக்காளும்...
அண்ணனை இழந்த தம்பியும்... என எங்கள் பட்டியல் நீள்கின்றது.
கூடவே எங்கள் கைகளும், கால்களும், கண்களும்!

அன்று பிரமாண்டமாய் விரிந்துநின்ற இரணைமடு இன்று கூனிக்கிடக்கின்றது.
கிழக்கே பிணக்காடாய் நந்திக்கடலும், புதுமாத்தளனும்...
ஆனையிறவு மீண்டும் அந்நியனுக்கு அடிமையாக வீழ்ந்து கிடக்கின்றது.
எங்கள் புலிக்கொடியேறிய கோட்டை வாயிலில் அந்நியன் கொடி.
யாழ்ப்பாணம் வரவேற்கும் செம்மணியில் எங்கள் புதைகுழிகள்.
இராவணன்வெட்டு இப்போ சிங்களவன் பிடியில்.
கோணச்சரத்திற்கும், கேதீச்சரத்திற்கும் அதே கதி!
மீன்பாடும் தேனாடோ மிலேச்சர்கள் ஆட்சியில்!

நாங்களோ இங்கு அந்நியன் வாசலில் அநாதையாய் கிடக்கின்றோம்.
எங்கள் கதறல்கள் எவரது செவிகளையும் துளைக்கவில்லை.
எங்கள் ஆர்ப்பாட்டங்கள் எவர் கல்நெஞ்சையும் இளக்கவில்லை.
நாம் சொரிந்த கண்ணீரும்...
நாம் எழுப்பிய ஒப்பாரியும்...
எமது மன்றாட்டங்களும்...
செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று!
இதுதான் எமது விதியா?

‘நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நடப்பது நன்றாக நடக்கட்டும்.’ என்று கீதா உபதேசம் பெறுவது எமது முடிவல்ல!
நாம் என்ன துறவறமா பூண்டுள்ளோம்?
புதுவிதி செய்வதும்...
எழுதப்பட்ட விதியை மாற்றியெழுதுவதும்..
எமது விதி!

இது புத்தாண்டு.
ஆங்கிலப் புத்தாண்டாயினும் நாம் வரவேற்கும் ஓராண்டு!
2010.
இது எமது ஆண்டல்ல! உண்மை.
அப்படி நாம் பிரகடனம் செய்யப் போவதுமில்லை.

ஆனால் வீறுகொண்டெழுவோம்!
வீரியம்கொண்டெழுவோம்!
அக்கினிப் பறவைகளாக உயிர்த்தெழுவோம்!

சூரியத்தேவனே எம்மெதிர் வருக!
புத்தாண்டில் ஒளிதந்து வழிசெய்க!

-பதிவு இணைய ஆசிரியர் குழு-

Comments