காட்டிக் கொடுக்கப் போகிறதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?

“ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும். அந்த முடிவு தமிழ்மக்களின் நலன் கருதியதாகவே இருக்கும்- அதற்கு முரணாக இருக்காது. எனவே, இந்த விடயம் குறித்துத் தமிழ்மக்கள் வீணாகக் குழப்பமடையவோ, சஞ்சலப்படவோ தேவையில்லை” என்று அறிக்கை வெளியிடும் அளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னிலை தாழ்ந்து போயிருக்கிறது.

இப்படியொரு அறிக்கையை கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான இரா.சம்பந்தன் வெளியிட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்று ஆராய்ந்து பார்த்தல் அவசியம். தமிழ்மக்கள் மத்தியில் கூட்டமைப்பின் மீதிருந்த நம்பிக்கைகள் தளர்ந்து வந்த நிலையிலேயே இப்படியொரு அறிக்கையை வெளியிட்டு சமாளிக்க வேண்டிய நிலைக்குள்ளாகியிருக்கிறார் சம்பந்தன். முன்னதாக சம்பந்தன் அலரி மாளிகைப் பக்கம் சாய்வதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான பேச்சு இருந்தது. ஆனால் பின்னர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவர் நகர்வுகளை மெற்கொள்வதாக செய்திகள் வெளியாகின. இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனனா பேச்சுகள் வெற்றிகரமாக நடந்திருப்பதாகவும் அவர்களின் ஆதரவைப் பெறமுடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.

நத்தார் தினத்தன்று சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவுடன் நடத்திய பேச்சுகளின் போது- பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. கூட்டமைப்பு இதுவரை அந்தச் செய்திகள் உண்மை என்று ஏற்கவோ- பொய் என்று மறுக்கவோ இல்லை. இந்தப் பேச்சுக்களின் போது சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் அளவுக்கு சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு முடிவெடுத்து விட்டதாகவும் கூடக் கதைகள் உள்ளன.

அதற்குப் பிறகும் இருதரப்பையும் இன்னொரு முறை சந்தித்துப் பேசப் போவதாகவும் கூறினர்- சந்திப்புகளும் நடந்தன. ஒரு கட்டத்தில்- “ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு பேரம் பேசும் முயற்சியில் இறங்கவில்லை- அதற்கான வாய்ப்புகளை வீணடித்து விட்டதாக எழுந்த குற்றசாட்டுகளுக்காகவே இந்தப் பேச்சுக்கள் நடப்பது போலவே தெரிகிறது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது அதில் தனித்துப் போட்டியிட்டுத் தமிழரின் அபிலாஷைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பு என ஒன்று இருந்தது. அதை கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துத் தமிழ்க் கட்சிகளுமே தவறவிட்டன. அப்படியொரு வாய்ப்புக்குள் கூட்டமைப்பு செல்லத் துணியாதது அல்லது முடிவு செய்யாதது ஏன் என்ற கேள்வி இருக்கவே செய்கிறது. இந்த வாய்ப்பை மறுப்பதற்காகவே கடைசி வரை இழுத்தடித்து ஒரு முடிவுக்கு வந்தது. தனியாக வேட்பாளரை நிறுத்துவதில்லை என்பதே அது. அத்துடன் தேர்தல் புறக்கணிப்பும் இல்லை என்ற முடிவும் எடுக்கப்பட்டது.

2005இல் எடுத்த முடிவு தவறென்று இப்போது கூறுவது போல- இதுவும் புத்திசாதுரியமற்ற முடிவு என்பதை கூட்டமைப்பினர் வருங்காலத்தில் உணரக் கூடும். வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாகவே பேரப் பேச்சுக்களை வைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருப்பின் இரு பிரதான வேட்பாளர்களுக்கும் ஒரு அச்சஉணர்வு நிச்சயமாக ஏற்பட்டிருக்கும். பேரப் பேச்சுக்கள் வேட்புமனுக் காலத்துக்குள் முடிவு பெறவில்லையாயின் ஒரு வேட்புமனுவை தாக்கல் செய்து வைத்துக் கொண்டு பேசியிருக்கலாம். எந்த வேட்பாளராவது பொருத்தமான -இணக்கப்பாட்டுக்கு வந்தால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்போம் என்று பேரம் பேசியிருக்கலாம். இதைச் செய்யாமல் போனதால் தான் சுயேட்சையாக சிவாஜிங்கம் இறங்க நேரிட்டது. (சிவாஜிலிங்கத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.)

கூட்டமைப்பில் ஏற்பட்ட முதல் பிளவு அது என்பதும்- அதற்கு சரியான சமயத்தில் சரியான முடிவை எடுக்கத் தவறியதே காரணம் என்பதையும் ஏற்றேயாக வேண்டும். கூட்டமைப்புக்குள் பிளவு இருப்பது வேட்புமனுத் தாக்கலின் போதே உறுதியானது. அந்தக் கட்டத்திலேயே பிரதான வேட்பாளர்கள் இருவருடனான பேரம் பேசுதலில்- கூட்டமைப்பின் தரம் தாழ்ந்து போனது உண்மை. இப்போது கூட்டமைப்பு சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கப் போவதில்லை பொது வேட்பாளரையும் நிறுத்த முடியாது- தேர்தல் புறக்கணிப்பையும் மேற்கொள்ளாது என்பது இரு பிரதான வேட்பாளர்களுக்கும் நன்றாகத் தெரிந்து விட்டது. ஏதாவது ஒரு அணிக்குத் தான் அவர்கள் எப்படியும் வரவேண்டும் என்ற அலட்சிய மனோபாவம் இரு வேட்பாளர்களுக்கும் ஏற்பட்டிருப்பதை ஏற்றேயாக வேண்டும். ஆனாலும் அவர்கள் இருவரும் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற அதிகபட்சமாக முனைவார்கள். ஆனால் அது அவர்களின் நலன் சார்ந்த வகையிலேயே அணுகப்படுமே தவிர தமிழரின் நலன்சார்ந்த அளவுக்குப் பலம் வாய்ந்தாக இருக்க முடியாது.

இதை இப்போது பேரம் பேசச் செல்லும் இரா.சம்பந்தனுக்கும் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களுக்கும் நன்றாக விளங்கியிருக்கும். சரத் பொன்சேகாவுடனான பேச்சுக்களின் போது உள்நாட்டில் தயாராகும் தீர்வுக்கு இணங்கியிருப்பது போல பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதுபற்றி வெளியான பத்திரிகைச் செய்திகளை கூட்டமைப்பு இன்னமும் மறுக்கவில்லை என்பதால் அது உறுதியாகவே இருக்கலாம்.

உள்நாட்டுக்குள் தயாராகும் தீர்வு என்பது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை குழி தோண்டிப் புதைக்கும் சதி என்பதை கூட்டமைப்பு உணராது போனதேன் என்று தான் புரியவில்லை..

  • சர்வதேசத் தலையீடுகள் இல்லாமல் உள்நாட்டுக்குள் அதாவது எமக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்ற இந்த முடிவு தமிழ் மக்களின் தலைவிதியையே தலைகீழாகப் புரட்டி விடப் போகிறது. தமிழ் மக்களின் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தி- சர்வதேச ஆதரவுடன் உரிமைகளை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள்- உயிர்க்கொடைகள் எல்லாதவற்றையும் ஒரே கணத்தில் கேவலப்படுத்தப் போகும் வரலாற்றுத் துரோகம் இது.

  • எமக்கு நியாயமான உரிமைகள் கிடைக்க சர்வதேசம் வழி செய்யவில்லை- ஆனால் எமது நியாயமான உரிமைகளை சர்வதேசம் புரிந்து கொண்டிருக்கிறது. அதற்காக தமிழினம் கொடுத்த விலை- செய்த தியாகங்கள் கொஞ்சநஞ்சமல்ல. சர்வதேசத்தின் பார்வை எம் மீது திரும்பியிருப்பதால் தான் சிங்கள அரசு கொஞ்சமேனும் பயப்படுகிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் சர்வதேசத்தைத் தூக்கியெறிந்து விட்டு- உள்நாட்டுக்குள் எமது பிரச்சினையைத் தீர்ப்போம் என்ற ஒரு முடிவை கூட்டமைப்பு எடுக்குமேயானால் அதற்குப் பிறகு எமக்காகக் குரல் கொடுக்க எந்த நாடும் வராது.

அப்படியொரு நிலையை ஏற்படுத்துவதே சிங்களப் பேரினவாதிகளின் நீண்டகாலக் கனவு. தம்பர அமிலதேரர் சரத் பொன்சேகாவுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் ஒரு பேட்டியில்- சரத்பொன்சேகா ஆட்சிக்கு வந்ததும் சர்வதேச தலையீடுகள் முற்றாக தடுக்கப்பட்டு விடும் என்று கூறியிருந்தார்.

அவர் இந்த விவகாரத்தை மனதில் வைத்துக் கொண்டே அப்படிக் கூறியிருந்தார். வெளிநாடுகள் தமிழருக்காக குரல் கொடுப்பதை- அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கோருவதை சரத் பொன்சேகா போன்ற சிங்களத் தேசியவாதிகளும் சரி- ஜேவிபி போன்ற சக்திகளும் சரி விரும்பவில்லை. அதற்காகவே தமக்கு வசதியான ஒருவரை ஆட்சியில் ஏற்ற முனைகின்றன.

இப்படியான சூழ்ச்சிக்குள் தமிழினத்தைக் கொண்டு போய் நிறுத்துவதற்கு கூட்டமைப்பு முடிவு செய்தால் அது மிகப் பெரிய பேரழிவுகளுக்குள்ளேயே கொண்டு செல்லும். சில வாரங்களுக்கும் முன்னர், சர்வதேசத்தின் உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொண்டு ஏதாவது ஒரு வேட்பாளரை ஆதரிக்கலாம் என்பது போல கூட்டமைப்பினர் கூறி வந்தனர். ஆனால் இப்போது அந்த முடிவைக் கைவிட்டு- எமக்குள்ளேயே பேசித் தீர்க்கலாம் என்று முடிவுக்கு வரும் நிலையில் இருக்கிறது.

  • இதற்காக அந்தக் காலத்தில் இருந்து இந்தக்காலம் வரைக்கும் சிங்க அரசுகள் குப்பையில் போட்ட திட்டங்களையெல்லாம் கிளறி எடுத்து பத்திரப்படுத்த ஆரம்பித்துள்ளது கூட்டமைப்பு. கூட்டமைப்பு தனக்கென ஒரு தீர்வுத்திட்டத்தைத் தயாரித்திருப்பதாகக் கூறியதே அதை ஏன் முன்னிறுத்திப் பேரம் பேசமுனையவில்லை?

  • அந்தத் தீர்வுத்திட்டம் தயாரிக்கப்பட்ட போது இருந்த கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கும் இப்போதைய நிலைப்பாடுக்கும் இடையில் மாற்றங்கள் வந்து விட்டது தான் அதற்குக் காரணமா?

  • உள்நாட்டுக்குள் தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட எத்தனை சமாதான முயற்சிகளைச் சிங்களப் பேரினவாதிகள் சிதைத்து விட்டார்கள்?

  • இதையும் அப்படிச் செய்யமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். சமாதானத்தின் பெயராலும்- உடன்பாடுகளின் பெயராலும் தமிழினம் பலவீனப்படுத்தப்பட்டது தானே வரலாறு. இது கூட்டமைப்புக்கு மறந்து விட்டதா?

  • சரத் பொன்சேகாவுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கலாம் என்ற கோதாவில் இப்படி முடிவெடுப்பதானால்- மகிந்தவுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்று கெஞ்சும் டக்ளஸ{க்கும் கூட்டமைப்புக்கும் என்ன வேறுபாடு?

  • சரத் பொன்சேகா பதவிக்கு வந்த பிறகு எதையும செய்ய முடியாது என்று கைவிரித்த பிறகு இந்தியாவிடமும், அமெரிக்காவிடமும் ஓடியோடிப் புலம்பப் போகிறதா கூட்டமைப்பு?

எமது தலைவிதியை நாமே நிர்ணயிப்போம் என்று தொடங்கிய ஆயுதப்போராட்டம் சர்வதேச அரசியல் சூழலுக்கேற்ப அதன் மாற்றங்களைச் சந்தித்தது உண்மை. ஆனால் இப்போது நாம் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேசத் தலையீடு தான் எமது பலமாக மாறியுள்ளது.

காரணம் நாம் தங்கியிருந்த ஆயுதபலம் இப்போது எம்மிடத்தில் இல்லை. இந்தநிலையில் சர்வதேசத் தலையீட்டைப் புறக்கணித்து ஒரு தீர்வுத் திட்டத்;துக்குள் செல்ல முனைவது- பேச முனைவது போன்ற முட்டாள்தனம் வேறேதும் இருக்க முடியாது. சர்வதேசத் தலையீடுகளில்; உருவான போர்நிறுத்தங்கள்- சமாதான உடன்பாடுகளையே சிங்களப் பேரினவாதம் எப்படிக் கையாண்டது எப்படி என்பதை கூட்டமைப்புக்குத் தெரியாமல் போனதேன்?

சரத் பொன்சேகாவுக்கோ மகிந்தவுக்கோ ஆதரவு வழங்குவது பற்றிய எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்னதாக- தனது பேரம் பேசும் திறனை கூட்டமைப்பு வெளிப்படுதியிருந்தால் அது புத்திசாலித்தனமானது. பேரம் பேசுவதற்கான பாதைகளை அடைத்து வைத்துக் கொண்டு இப்போது அவர்கள் நடத்திக் கொண்டிருப்பது வெறும் கேலிக்கூத்துத் தான்.

கூட்டமைப்பு தன்னிலை தாழ்ந்து எந்தவொரு சிங்களப் பேரினவாத சக்திக்காவது ஆதரவு வழங்குவதற்கு எடுக்கக் கூடிய முடிவும்- தமிழரின் அரசியல் அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைக்கவே உதவப் போகிறது. ஆட்சி மாற்றத்துக்காக சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்குத் தமிழருக்கு என்ன தேவை?

டக்ளஸ் தேவானந்தாவையும், பிள்ளையானையும், கருணாவையும் ஓரம் கட்டுவதற்கு இதுவே ஒரே வழியென்கிறது ஒரு நியாயம். அவர்கள் எப்போதும் ஆட்சி செய்யும் பக்கமே இருப்பார்கள். சரத் பொன்சேகா வந்து விட்டால்; அவருடன் ஒட்டிக் கொள்வார்கள். கருணாவைக் காப்பாற்றியதே ஐதேக தான். இப்போது அவர் மகிந்தவுடன்- நாளை அவர் சரத் பொன்சேகாவுடன் இருப்பார். டக்ளஸ் இரு பக்கத்திலும் அமைச்சராக இருந்தை யாரும் மறந்து விடக் கூடாது.

ஒட்டுண்ணி அரசியல் நடத்துபவர்களுக்குத் தன்மானம் இருக்காது காற்றடிக்கும் திசைக்கு அவர்கள் சாய்வார்கள். இவர்களைத் தோற்படிப்பது தான் தமிழ்த் தேசிய அரசியல் போராட்டமா? தமிழரின் அரசியல் போராட்டத்தில் நாம் எமது அபிலாசைகளைப் பெறுவதே எமது குறி. அதைக் கூட்டமைப்பு நினைவில் வைக்க வேண்டும்.

  • அவர்கள் அந்தப் பக்கம் இருப்பதால் நாம் இந்தப் பக்கம் எனறு முடிவு செய்தால் அதுபோல முட்டாள்தனம் வேறேதும் இருக்க முடியாது. முப்பதாயிரம் மாவீரர்களின் உயிர்களினாலும் இலட்சக்கணக்கான தமிழரின் குருதியினாலும் தான் எமது போராட்டம் இன்று சர்வதேச மயப்பட்டு நிற்கிறது.

  • ஒப்பற்ற விலைகளைக் கொடுத்த எமது உரிமைப் போராட்டத்தை ஒரு சிங்களப் பேரினவாதியை ஆட்சியில் ஏற்றுவதற்காக கூட்டமைப்பு காட்டிக் கொடுக்கப் போகிறதா?

தொல்காப்பியன்

Comments