முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போரின் இறுதிக் கட்டத்தில் சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை (86 வயது) நேற்று புதன்கிழமை இரவு சாவடைந்ததாக சிறீலங்கா அறிவித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக யாரும் சந்திக்க முடியாதவாறு வேலுப்பிள்ளையும் அவரது மனைவியும் இரகசிய இடங்களில் வைக்கப்பட்டிருந்தனர். வவுனியா கொண்டுவரப்பட்ட இவர்கள், மேலதிக விசாரணகளுக்காக பின்னர் அங்கிருந்து கொழும்பிற்கு கொண்டுசெல்லப்பட்டு சிறீலங்கா பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் பிரத்தியேகமான இடம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்தாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவர்கள் கொழும்பு 4ம் மாடி எனப்படும் தமிழர்களை சித்திரவதைக்கு உள்ளாக்குவதற்கென அமைக்கப்பட்ட சித்திரவதைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே செய்திகள் பல வெளியாகியிருந்தன. தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஊடகங்களும் இதனை உறுதிப்படுத்தி செய்தியை வெளியிட்டிருந்தன.
பாதிக்கப்பட்டு, வயோதிப நிலையில் இருந்த அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை வழங்காமல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வந்ததாக செய்திகள் வெளிவந்திருந்த நிலையில், இவரது சாவினை சிறீலங்கா இன்று அறிவித்துள்ளது. இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக சிறீலங்கா இராணுவப் பேசாளார் கூறியுள்ளார். இவரது சாவு தமிழ் மக்கள் மத்தியில் பலத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, தமது தந்தையின் பூதவுடலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் கையளிக்குமாறு கனடாவிலுள்ள மகள் கோரியுள்ளதாக தெரியவருகின்றது. இதனையடுத்து அவரது பூதவுடலை பொறுப்பேற்கும் நடவடிக்கையில் சிவாஜிலிங்கம் இறங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இயற்கை மரணம் எனத் தெரிவிக்கபட்டாலும் இவரது மரணம் குறித்து விசாரணை நடத்துவதுடன், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது பூதவுடலை கனடாவிலுள்ள அவரது மகளிடமோ, டென்மார்க்கிலுள்ள அவரது மகனிடமோ அல்லது இந்தியாவிலுள்ள அவரது மகளிடமோ அனுப்புவது சாத்தியமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
கனடாவிலுள்ள அவரது மகள் என்னைத் தொடர்பு கொண்டார். அவரிடம் நான் தெரிவித்தேன் கனடாவிலுள்ள சிறீலங்கா துணை தூதரகத்தை தொடர்புகொண்டு, இலங்கையிலுள்ள எமது உறவினர் சிவாஜிலிங்கத்திடம் பூதவுடலை கையளிக்குமாறும், இதற்கு நாம் அனுமதி தருவதாகவும் தெரிவிக்குமாறு கூறினேன்.
இதனையடுத்து துணைத்தூதரகம் விடுக்கும் அறிவுறுத்தலுக்கமைய, அரச தரப்புடன் கலந்தாலோசித்து அனுமதி பெற்று, நான் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலுடன் அவரது மனைவியையும் அவர்களது சொந்த இடமான வல்வெட்டித்துறைக்கு கொண்டுசென்று இறுதிக்கிரியைகளை நடத்துவேன். அதேவேளை அவரது மனைவி ஒரு பாரிசவாத நோயாளி. எனவே அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் அவரை இந்தியாவிலுள்ள அவரது மகளிடம் அனுப்ப நடவடிக்கை எடுப்பேன்.
இந்தியா அனுமதி மறுக்குமாயின் கனடாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பேன். அதுவரையில் அவர் கொழும்பில் தங்குவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசுடன் கதைத்து ஏற்படுத்திக் கொடுப்பேன். இது குறித்து உரிய தரப்பு அதிகாரிகள், தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்" எனத் தெரிவித்தார்.
இதேவேளை, இவரது மரணத்திற்கு காரணம் என்ன என்பதை இதுவரை சிறீலங்கா அரசு வெளியிடவில்லை. ஏற்கனவே, தமிழீழத் தேசியத் தலைவரையும் அவரது குடும்பத்தினரையும் அழித்துவிட்டதாக பிரச்சாரம் செய்துவரும் மகிந்த அரசு, இவரது சாவினையும் தென்னிலங்கை மக்கள் மத்தியில் பிரச்சாரமாக்கி தேர்தல் வெற்றிகளை பெறமுயலக்கூடும் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Comments