வேலுப்பிள்ளைக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதில் உலகம் முழுவதும் தமிழர்கள் முனைப்பு


தமிழீழ தேசியத் தலைவரின் தந்தையான காலஞ்சென்ற திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதில் உலகம் முழுவதும் தமிழர்கள் முனைப்பாக ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் அன்னாருக்கான அஞ்சலி நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் நடைபெறுகின்றன. தமிழகத்தின் வீதிகள் தோறும் வீரவணக்க அஞ்சலிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் புலம் பெயர் தமிழர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்கள் எல்லாமே அஞ்சலி செலுத்தி வருகின்றன.

திரும்பிய திசையெல்லாம் வேலுப்பிள்ளை அவர்களுக்கான அஞ்சலிகளாகவே தெரிகின்றன. புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகள் எங்கும் புதிய திருப்பம் காணப்படுகிறது. இதுமாத்திரமல்லாமல் மலேசியா, மத்தியகிழக்கு, தென்னாபிரிக்கா என்று உலகம் முழுவதும் விடுதலை நெருப்பு பொறிகக்குவதைக் காணமுடிகிறது.

தன்மானத் தமிழனாக வாழ்ந்து தளராத வயதிலும் சாதனை படைத்துள்ளார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் என்று தமிழர்கள் அன்னாரை மனமார வாழ்த்துவதை எங்கும் காண முடிகிறது. விடுதலை வீரன் ஒருவனைப் பெற்ற தந்தை என்ற தளராத சிறப்புடன் வேலுப்பிள்ளை அவர்கள் உலகத் தமிழரால் போற்றப்படுகிறார். புதுமாத்தளனுக்குப் பின் சோர்வுற்றிருந்த விடுதலை நெருப்பு அனல் வீசிப்பறக்க வேலுப்பிள்ளை தன் மரணத்தால் புதுவலு கொடுத்துள்ளார்.

Comments