நிபந்தனையின்றி மகிந்தருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள இக் குழுக்கள், நிரந்தர அரசியல் தீர்வுகுறித்து பேச விரும்பவில்லை. கருணா' என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி, முரளிதரன், சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவர்களில் ஒருவராக இருப்பதால், கட்சியின் முடிவிற்கே தீர்வுத்திட்ட விவகாரத்தை ஒப்படைத்துள்ளார். தீர்வுகுறித்துப் பேசி, மகிந்தரின் பேரினவாதக் கோபத்தை கிளறினால், மறுபடியும் இவரைக் காப்பாற்ற இன்னொரு `அலிசார்' வரமாட்டார். மட்டக்களப்பில் அடிக்கடி மோதும், பிரதேச ஆதிக்கப் போட்டியாளர் பிள்ளையானும், மகிந்தரைத் தாங்கிப் பிடிப்பதற்கு, கருணாவுடன் சமரசம் செய்கிறார்.
மகிந்தர் ஆட்சியை இழந்தால், கருணா-பிள்ளையானின் அரசியல் வாழ்வு சூனியமாகிவிடும். வடக்கின் தலைவரின் நிலையும் அதுதான். இனிப் புலி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுத்த, ஆயுதம் தாங்கிய தமிழ்க் குழுக்கள், அரக்கு தேவையில்லை. பேரினவாத சிங்கள அரசியலில், இவர்கள் பெரும் சுமையாகவே கருதப்படுவார்கள். கூட்டமைப்பு போன்று சக ஆசனங்களோ, அல்லது குறைந்தது 4 ஆசனங்களோ இருந்தால், நாடாளுமன்ற பெரும் பான்மைக்காக, இவர்களின் ஆதரவு ஆளும் தரப்பிற்கு தேவைப்படலாம். எந்தவிதத்திலும், பிரயோசனமற்றவர்களை வைத்துக் காப்பாற்ற வேண்டிய அவசியம் ஆட்சியாளர்களுக்குக் கிடையாது. மகிந்தர் வெற்றி பெற்றால், இத்துணை இராணுவக் குழுக்களின் இருப்பும் தக்க வைக்கப்படும்.
கூட்டமைப்பிற்கு எதிராக, அதை உடைப்பதற்கு பயன்படுத்தப்படுவார்கள். அதேவேளை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பதவிக்கான வெற்றிடம் அதிகரிக்கப்பட்டு, ஏனைய தமிழ்க்குழுத் தலைவர்கள் அதனுள் உள்வாங்கப்படுவார்கள். ஏற்கனவே யாழ் மாநகரசபைத் தேர்தலில், தேவானந்தாவின் இதயவீணை, புழுதியில் வீசப்பட்டுவிட்டது.ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம், மகிந்தருக்கு விதித்த 10 நிபந்தனைகள் தனியரசு அமைக்க வழிகோலுவதாக, ஜே.வி.பியின் ரில்வின் சில்வா அச்சமுறுகிறார். நிபந்தனைகள் விதிப்பது போன்று சித்தரிப்பது, தமிழ்மக்களை ஏமாற்றி, மகிந்தருக்கு வாக்களிக்க வைக்கும் இராஜதந்திரமென்பதை ரில்வின் சில்வா புரிந்துகொள்வார்.
மகிந்த - தேவோ. விவகாரத்தை சிங்கள மக்கள் முன் போட்டுடைத்து, சரத்தின் வாக்கு வங்கியை அதிகரிக்கலாமென்பதே ஜே.வி.பியின் ஓட்டுப் பொறுக்கும் சோசலிச அரசியலாகும். வாழ்வா, சாவா என்கிற போராட்டத்தில் குதித்துள்ள, மகிந்தரின் தமிழ் இராணுவக் குழுக்கள், தாயக மக்களின் வாக்குகளை எவ்வாறாயினும், மகிந்தருக்கு விழச்செய்ய வேண்டுமென தலையால் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.ஆனாலும் விரக்தியின் விளிம்பு நிலையிலுள்ள தமிழ்பேசும் மக்கள், இன அழிப்புப் பிதாமகர்கள் இருவரையும் ஏறெடுத்துப் பார்க்கும் மனநிலையில் இல்லை. சர்வதேசத்திற்குச் செய்தி சொல்லப் புறப்பட்டிருக்கும், சுயேட்சை வேட்பாளர் சிவாஜிலிங்கம் குறித்து மக்கள் அக்கறை கொள்ளவில்லை.
இறுதிப்போரில் நிகழ்ந்த, மாபெரும் மனிதப் பேரவலத்தைக் கண்டும் காணாதது போல் முகத்தைத் திருப்பிக்கொண்ட வல்லரசாளர்கள், சிவாஜிலிங்கத்திற்கு விழும் வாக்குகளை வைத்து, தமது போக்கினை மாற்றிக்கொள்ளமாட்டார்கள். சனாதிபதி தேர்தல், எமக்கான அரசியல் களமல்ல. எமது விடுதலைப் போராட்டத்தை நிராகரித்த அல்லது அழிவிற்கு உதவி புரிந்த, மேற்குலக-பிராந்திய வல்லரசுச் சக்திகள் மோதும் களமிது. இம்மோதலில் இரண்டு முகாம்கள் களமிறக்கப்பட்டுள்ளன. மகிந்த சகோதரர்கள், தமிழ் இராணுவக் குழுக்கள், இந்தியா - சீனா என்பன ஒரு முகாமிலும், சரத்பொன்சேக்கா-இரணில் மற்றும் மேற்குலகம் என்பன எதிர்முகாமிலும் போட்டியிடுகின்றன. பிராந்திய ஆதிக்கம் என்கிற வகையில், மகிந்தர் - துணைக்குழுக்கள் - இந்தியா என்ற கூட்டு மிகப் பலம் வாய்ந்தது.
தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அழிப்பதில், முன்னின்று செயற்பட்டதுதான் இந்தக் கூட்டு. மகிந்தர் வெற்றி உறுதிப்படுத்த, இந்திய பரப்புரை புத்தி ஜீவிக்குழுவொன்று கொழும்பில் இறங்கியுள்ளது. தேசியத் தலைவரின் மகள் என்று கூறப்படும் ஒரு பெண்ணின் படத்தை இணையத்தளங்களில் கசியவிட்டு, தமிழ் மக்களின் உளவுரணைச் சிதைக்கும் சதிகளில் இவர்கள் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படுகின்றது. அதேவேளை தேசியத் தலைவர், விடுதலைப்புலிகள் அமைப்பு, மாவீரர்களின் அர்ப்பணிப்பு என்பவற்றை, தமிழினத்தின் போராட்ட வரலாற்றுப் பதிவுகளிலிருந்து அழிப்பதற்கு, பாதாள உலக தமிழ் தேசியவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து இந்திய உளவு அமைப்பு செயற்படுவதுபோல் தெரிகிறது. புலம்பெயர் நாடுகளில் தினமொரு செய்தியாக, இச்சேறடிப்பு செயற்பாடுகள் உலாவருகின்றன.
அர்த்தமில்லை... அர்த்தமில்லையென்பதே... உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், வட்டுக்கோட்டை தமிழீழத் தீர்மானத்தில் அர்த்தமில்லையென்பது போன்று பரப்புரைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. கேணல், ஹரிஹரனிற்கு, அர்த்தமுள்ள ஆபத்தாகத் தெரியும் தனியரசுத் தீர்மான வாக்கெடுப்பு, எம்மில் சிலருக்கு அவமானமாகத் தெரிகிறது. ஆனாலும் புலம்பெயர் நாடுகளில் இடம்பெறும் குழப்பங்களிற்கு, ஜனவரி 26அதிபர் தேர்தலின் முடிவுகள், புதிய பரிமாணங்களையும் திசைகளையும் காட்டப்போகிறது.
பலமான கூட்டு எதிரிகளை அழிப்பதற்கு, சரத்பொன்சேக்காவிற்கு, பல்லைக்கடித்துக்கொண்டு வாக்களிப்பதே இராஜதந்திரமென்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனூடாக தமிழ் இராணுவக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி இடலாமெனவும், இந்திய வல்லாதிக்கத்தின் வகிபாகத்தை சிக்கலடைய வைக்கலாமெனவும் கூறப்படுகிறது. தமிழ் மக்களுக்கு, இவ்வகையான இராஜதந்திர நகர்வுகள் நன்றாகவே புரியும். ஆனாலும் இத்தனை அழிவிற்கு காரண கர்த்தாக்களாக இருந்த சாடிக்கும் மூடிக்கும் எவ்வாறு புள்ளடி போடுவது என்பதே சற்று நெருடலான விடயமாக இருக்கிறது.
-இதயச்சந்திரன்
நன்றி்:ஈழமுரசு
Comments