மகிந்தவின் கொடிய ஆட்சியை வாக்கு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி வீழ்த்துங்கள்!

எதிர்வரும் சனவரி 26 ம் நாள் அன்று ஒரு சர்வாதிகார ஆட்சியை, ஊழல் ஆட்சியை, கொடுங்கோல் ஆட்சியை, குடும்ப ஆட்சியை, வெள்ளை வான் கலாச்சார ஆட்சியை, தமிழர்களைக் கொன்றொழித்து அவர்களது குருதி குடித்து வெடிகொளுத்திக் கொண்டாடிய கொடிய ஆட்சியை தமிழ் மக்கள் தங்கள் கையில் இருக்கும் வாக்கு என்ற ஆயுதத்தைப் துணிச்சலோடு பயன்படுத்தி வீழ்த்த வேண்டும் என அன்போடு மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

சிறிலங்காவில் நடைபெறும் ஆட்சித்தலைவர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே எஞ்சியுள்ளன. இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தத் தேர்தல் ஒற்றைக் குதிரை ஓட்டமாக இருந்தது. இப்போது போட்டி கடுமையாக இருக்கிறது. வெற்றி தோல்வி தமிழ்மக்களது வாக்குகளில் தங்கியிருக்கிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.

நாம் முன்னர் கூறியது போல ஆட்சிமாற்றம் தேவை என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை நாங்கள் நூறு விழுக்காடு ஆதரிக்கிறோம்.

மகிந்த ராசபக்சேயின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்படி முற்றுப் புள்ளி வைக்கவேண்டும் என்றால் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

முன் எப்பொழுதும் இல்லாதவாறு சிங்கள தேசம் தனக்குள் முட்டி மோதிக் கொண்டுள்ளது. இதனை நாம் சாணக்கியத்தோடு எமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கான ஆயுதம் எம்மிடம் உள்ள வாக்குச் சீட்டாகும்.

இந்தத் தேர்தல் சிங்கள தேசத்தில் நடைபெறும் தேர்தல். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என சிங்களவாகள் முடிவு செய்யட்டும் என்று நாங்கள் ஒதுங்கியிருக்க முடியாது. தேர்தலில் வெற்றி பெற்று வருகிற ஆட்சித்தலைவரின் அதிகாரம் வவுனியாவுக்கு இப்பால் நின்றுவிடாது. திருகோணமலை மட்டக்களப்பு எல்லைகளோடும் நின்று விடாது. எனவே தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படிச் செய்வது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது. அது போலவே சிவாஜிலிங்கத்தின் தனி ஆர்வத்தனத்துக்கும் இடம் இல்லை. அவருக்குப் போடுகிற ஒவ்வொது வாக்கும் மகிந்த இராபக்சேயை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தவே உதவும்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள – பவுத்த வெறியரான மகிந்த இராசபக்சே ஆட்சியில் தமிழ்மக்கள் வரலாறு காணாத உயிரழிவையும் உடைமை அழிவையும் சந்தித்துள்ளார்கள். போரின் இறுதிக் காலத்தில் குண்டடி பட்டும் செல்லடி பட்டும் மக்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்பட்டார்கள். போர் விதிகளை மீறி நச்சு வாயுக் குண்டுகள் வீசப்பட்டன. கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. மருத்துவமனைகள் குண்டு வீசித் தகர்க்கப்பட்டன.

உலக மக்களின் கண்களைக் குருடாக்கி, காதுகளை செவிடாக்கி 2007 – 2009 மே மாதம் 19 ஆம் நாள் வரையிலும் 50,000 க்கும் மேலான மக்களை சிங்கள அரசு கொன்று குவித்தது. நந்திக்கடல் குருதியால் செங்கடலாகியது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற இரும்புத்திரைக்குப் பின்னால் தமிழ் மக்கள் ஈவிரக்கமின்றி கொன்று குவித்த பகுதிகளுக்கும் அவர்களை அடைத்து வைக்கப்பட்டுள்ள வதை முகாம்களுக்கும் அரச சார்பற்ற அமைப்புக்களும் உள்ளுர் – வெளியூர் செய்தியாளர்களும் செல்வதற்கு சிங்கள அரசு தடை விதித்துள்ளது.

மகிந்த இராசபக்சே குடியரசுத் தலைவராக இல்லாமல் வெறிபிடித்த கொடிய அரசின் தலைவராக ஆணவத்தோடு வலம் வருகிறார். ஏன் என்றால் சிறைவாசம், இம் என்றால் வனவாசம் என்பதே சட்டமாக இருக்கிறது.

வதை முகாம்கள்

மகிந்த இராசபச்சே அரசு உயிருக்கு அஞ்சித் தஞ்சம் அடைந்த 3 இலட்சத்திற்கும் மேலான தமிழ்மக்களைச் சிறைப்பிடித்து வதை முகாம்களில் அடைத்து வைத்தது. இன்றும் கூட 135,000 – 150,000 ஆயிரம் அளவிலான எமது உறவுகள் வதை முகாம்களில் தொடர்ந்து அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

முகாம்களில் இருந்து மீள் குடியமர்த்துகிறோம் என்று கூட்டிச் சென்றவர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள். கூரைக்கு ஐந்து தகரங்களும் ரூபா 25,000 மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

சட்டத்துக்கு முரணாக அடைத்து வைக்கப்பட்டுள்ள இந்த ஏழை மக்களைப் பார்க்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மகிந்த இராசபச்சே அரசு அனுமதி மறுத்துள்ளது. எமது மக்களைப் போன்றே 12,000 போராளிகளும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

ஊடகவியலாளர்கள் கொலை

சிங்கள அரசின் தமிழின அழித்தொழிப்புக்கு (Genocide) கொலை வெறிக்கு 34 ஊடகவியலாளர்கள் பலியானார்கள். இவர்களில் சிங்கள செய்தியாளர்கள் மூவரும், முஸ்லிம் செய்தியாளர் ஒருவரும் அடங்குவர். பிபிசி செய்தியாளர்கள் தருமரத்தினம் சிவராம் (தராக்கி) மட்டக்களப்பு ஜி. நடேசன், ‘சன்டே லீடர்’ இதழின் ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்கா, ‘உதயம்’ இதழின் செய்தியாளர் செல்வராசா இரவிவர்மன், ‘ஈழநாடு’ நாளிதழின் ஆசிரியர் சின்னத்தம்பி சிவமகராசன், ‘யாழ் தினக்குரல்’ ஆசிரியர் சுப்ரமணியம் இராமச்சந்திரன போன்றவர்களின் பட்டியல் தொடர்கிறது. 29 செய்தியாளர்கள் உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டு ஓடிவிட்டார்கள்.

‘அவுட்ரீச்’ இதழின் ஆசிரியர் ஜெயப் பிரகாஷ் சிற்றம்பலம் திசநாயகம் அமைதிக்காலத்தில் அரசை விமர்ச்சித்து இரண்டு கட்டுரை எழுதியதற்கு ஒரு சிங்கள நீதிபதியால் 20 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது பல திசைகளில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக அவர் பிணையில் விடப்பட்டுள்ளார். ‘சுடரொளி’ நாளிதழின் ஆசிரியா நடேசபிள்ளை வித்தியாதரன் வெள்ளைவானில் வந்தவர்களிடம் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார். இன்னும் பலர் அரசு ஏவிய குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை

மகிந்த ராசபச்சேயின் ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசேப் பரராசசிங்கம், நடராசா ரவிராஜ், கிட்டினன் சிவநேசன், தியாகராசா மகேஸ்வரன் ஆகியோரது கொலையாளிகள் இன்னும் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை. யோசேப் பரராசசிங்கத்தைக் கொலைக்கு கருணாவின் கையாட்களே காரணம் எனப் பரவலாகப் பேசப்பட்டது.

நேற்றுக்கூட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனுக்கு நாட்டைக் காக்கும் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பினால் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் 5 மாணவர் படுகொலை

திருகோணமலையில் சனவரி 02, 2006 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட 5 தமிழ்மாணவர்களது கொலையாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இவர்களைச் சுட்டவர்கள் காவல்துறை சிறப்பு அதிரடிப்படை என சாட்சியங்கள் இருந்தும் யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதே போல் ஓகஸ்ட் 4, 2006 இல் மூதூரில் பிரான்ஸ் நாட்டு பட்டினிக்கு எதிரான தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 தமிழர்கள் (ஒருவர் முஸ்லிம்) படுகொலை செய்யப்பட்ட வழக்கில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்தக் கொலையை சிங்கள இராணுவமே செய்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்

யாழ்ப்பாணப் பல்கலைக் கலைக்கழக விரிவுரையாளர்கள் நான்கு பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் இந்தக் கிழமை நாட்டைக் காக்கும் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பினால் இரவு நேரத்தில் பல்கலைக்கழக ஆண் மாணவர்கள் தங்கும் விடுதிக்குள் வீசப்பட்டிருக்கிறது.

வட – கிழக்கில் சிங்களக் குடியேற்றம்

வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களைக் குடியேற்றி அந்த மாகாணங்களில் தமிழர்களை சிறுபான்மை ஆக்கும் முயற்சியில் சிங்கள அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழர்களது காணிகள் வலோத்காரமாகப் பறிக்கப்பட்டு சிங்களவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

வடக்கிலும் – கிழக்கிலும் ஆளுநராகவும் அரச அதிபர்களாகவும் ஓய்வு பெற்ற சிங்கள படைத்தளபதிகளே நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல் சிங்​க​ளவர்​கள் தொழில் முனை​வர்​க​ளாகவும் தொழி​லா​ளர்களாகவும் அதி​கா​ரி​க​ளாகவும் அரசு ஊழி​யர்​க​ளாகவும் வணிகர்களாகவும் முதலீட்டாளர்களாகவு்ம் குடி​ய​மர்த்​தப்​ப​டு​கின்​ற​னர். இவர்​க​ளில் பெரும்​பா​லானவர்களுக்கு ஏதா​வது ஒரு வழி​யில் அரசு மூலமே பணம் வழங்கப்படுகிறது.

போருக்​குப் பிறகு பொரு​ளா​தார வளர்ச்​சிக்​கான திட்​டங்​களை மேற்​கொள்​ளும் சாக்​கில் இந்தப் புதிய தொழில் முக​வர்​க​ளும் தொழி​லா​ளர்​க​ளும் குடி​ய​மர்த்​தப்​ப​டு​கின்றனர். கிழக்கு மாகா​ணத்​தில் வெளிமாகாண சிங்​க​ளவர்களே தொழிற்​சா​லை​க​ளில் தொழி​லா​ளர்​க​ளா​க​வும் சுற்​று​லாத் தலங்​க​ளில் ஊழி​யர்​க​ளா​க​வும் பணி​யில் சேர்க்​கப்​ப​டு​கின்​ற​னர்.

குச்சவெளியில் சிங்களவர்களுக்கு உணவு விடுதிகள் கட்டக் காணிகள்

திருகோணமலையில் இருந்து 7 கிமீ தொலைவிலுள்ள குச்சவெளி கடற்கரையோரத்தில் இருக்கும் தமிழருக்கு சொந்த மான காணிகளை பயன்படுத்தாத காணிகள் என்ற வரையறைக்குள் உட்படுத்தி 400 – 500 வரையான காணிகளை அரசாங்கம் கைப்படுத்தி அதில் உணவு விடுதி கட்டுவதற்கு 50 சிங்களவர்களுக்கு சுற்றுலா அமைச்சு கொடுத்துள்ளது. இந்தக் காணப் பங்கீடு பற்றி மாகாண அரசுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

சம்பூரில் அனல் மின் நிலையம்

வட – கிழக்கில் புதிய தொழிற்​சா​லை​க​ளுக்கு சிங்கள அரசு கொழும்பி​லி​ருந்​த​ப​டியே அனு​மதி வழங்குகிறது. திருகோணமலை, சம்பூர் பகுதியில் அமைக்கப்படவுள்ள நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உடன்படிக்கை இந்த வாரம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய நிலக்கரி மின் உற்பத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன இணைந்து இந்த அனல் மின் உற்பத்தி நிலையத்தை 500 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவுகின்றன.

500 மில்லியன் டொலர் செலவில் கட்டப்படும் இந்த மின் நிலையம் ஆயிரம் மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. சம்பூர் அனல் மின்நிலையம் அமையும் பகுதியானது சம்பூர், கடற்கரைச்சேனை, கூனித்தீவு, சூடைக்குடா ஆகிய நான்கு கிராமங்களை உள்ளடக்கிய 10,000 ஏக்கர் வளமான நிலப்பரப்பாகும்.

செப்டெம்பர் 2006 இல் யுத்தத்தினால் சம்பூர் பிரதேசத்தை ஒட்டிய 30 ஊர்களில் வாழ்ந்த 1632 குடும்பங்கள் வாகரையை நோக்கி விரட்டப்பட்டதால் அனல்மின் நிலையம் அமைப்பதற்கு உகந்த இடமாகச் சம்பூரை சிங்கள அரசு தெரிவு செய்தது. இக்கிராமங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்கள் தெருவோரங்களில் ஏதிலிகளாக வாழ்கிறார்கள்.

மூதூர் கிழக்கிலுள்ள சம்பூர், சேனையூர், கடற்கரைச்சேனை, இலக்கந்தை, சூடைக்குடா, கூனித்தீவு, பாட்டாளிபுரம் ஆகியவை மொத்தம் 675 ச.கி.மீ (260.5 ச.மைல் பரப்பளது கொண்ட உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கும் அனல்மின் நிலைய இடத் தெரிவிற்கும் பலத்த தொடர்பு உண்டென்பது சொல்லாமலே விளங்கும். . நேற்று வரை தமது பூர்வீக நிலங்களில் வாழ்ந்து வந்த தமிழ்மக்கள் இந்த அனல்மின் நிலையம் வெளியே கக்கும் நிலக்கரித் துகள்களாலும் நச்சு வாயுக்களாலும் பாதிப்படைவார்கள்.

அரசியல் தீர்வுக்கு அரோகரா

பிரிக்கப்படாத ஒரு ஒருங்கிணைந்த ஒற்றையாட்சி முறையே இலங்கையில் இருக்கும். 13 + ஆவது சட்ட திருத்தத்தின் கீழேயே அதிகாரப் பரவலாக்கல் கொண்டுவரப்படும். ஆனால் காவல்துறை அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட மாட்டர்து. வட – கிழக்கு இப்போதுமட்டுமல்ல எப்போதம் இல்லை என்று திட்டவட்டமாக மகிந்தா இராசபச்சே அறிவித்துள்ளார். இதனால் மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் இணைப்பாட்சி என்றுமே பிரிக்க முடியாத வடக்கும் – கிழக்கும் என்று வாய் வீரம் பேசிய டக்லஸ தேவானந்தாவுக்கு இராசபக்சே பட்டை நாமம் போட்டுள்ளார்!

புத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும்

கிழக்கைப் போலவே வடக்கிலும் முழத்துக்கொரு புத்த விகாரையும் புத்த சிலைகளும் சிங்கள இராணுவத்தால் நிறுவப்பட்டு வருகின்றன.

அரகர மகாதேவா என்பதற்குப் பதில் புத்தம் சரணம் கச்சாமி ஓதல் கேட்கிறது. இதனால் தமிழர்களின் பண்பாடுகள் அழிக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் சீரழிக்கப்பட்டும் வருகின்றன என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் கண்டித்துள்ளார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் 50,000 இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளார்கள்

அவசரகாலச் சட்ட விதிகள்

போர் முடிந்த பின்னரும் அவசரகால விதிகளும் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழர்கள் பூசா தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் ஆண்டுக்கணக்காக விசாரணை எதுவுமின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். பதினைந்து அகவையில் பிடிபட்ட ஒரு இளைஞர் கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல்கலைக் கழகங்களில் படித்துக் கொண்டிருந்த 140 தமிழ் மாணவர்கள் காணாமல் போயுள்ளனர். கடந்த நொவெம்பர் மாதம் பேரதேனியா பல்கலைக் கழகத்தில் காணாமல் போன இராசையா துவாரகா என்ற மாணவி பூசா தடுப்பு முகாமில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தேசியத் தலைவர் தாய் தந்தையர்

எண்பது அகவையைக் கடந்த தேசியத் தலைவர் பிரபாகரனது தாய் தந்தையர் இருவரையும் இதயமே இல்லாத மகிந்த இராசபக்சே கைது செய்து பனாகொட இராணுவ முகாமில் அடைத்து வைத்தார். தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை கடந்த 7 ஆம் நாள் இறந்துவிட்டார் என அரசு அறிவித்தது. அவரது சாவு இயற்கைச் சாவு என்று இராணுவம் அறிவித்தாலும் தனிமை, உளவியல் தாக்கம், தக்க மருத்துவம் இல்லாத காரணங்களாலேயே அவர் இறந்திருக்கிறார்.

ராசபக்சேவின் ஊழல் அரசு

மகிந்த இராபச்சேயின் அமைச்சரவையில் 51 அமைச்சர்கள், 39 அமைச்சரவை அல்லாத அமைச்சர்கள், 19 துணை அமைச்சர்கள் மொத்தம் 109 அமைச்சர்கள் இருக்கிறார்கள். காலையில் கட்சி தாவின நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாலையில் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. இது ஒரு உலக சாதனையாகும். இதேபோல் மகிந்த இராசபக்சேயின் நெருங்கிய 368 உறவினர்களுக்கு வரிப்பணத்தில் பதவி, பட்டம் கொடுக்கப்பட்டுள்ளன. கோத்தபாய இராசபக்சே பாதுகாப்புச் செயலாளராக இருந்தாலும் அவர் பாதுகாப்பு அமைச்சர் போலவே நடந்து கொள்கிறார். பொதுப் பணத்தில் சம்பளம் பெறும் அவா தேர்தல் பரப்புரையில் தாராளமாக ஈடுபடுகிறார்.

அனைத்து இனத்தவருக்கும் நீதி வழங்குவோம், மாகாணங்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குவோம், நிறைவேற்று அதிகாரம் படைத்த ஆட்சித்தலைவர் பதவியை ஒழிப்போம், ஊழலற்ற நல்லாட்சி வழங்குவோம், விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம் என்று கூறிப் பதவிக்கு வந்த இராசபக்சே இவற்றில் ஒன்றைக்கூடச் செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் சாடுகின்றன்.

எனவே தமிழ்மக்களுக்கு மகிந்த இராசபச்சேயின் கணக்கைத் தீர்க்க ஆட்சித்தலைவர் தேர்தல் அரிய வாய்ப்பை அளித்துள்ளது. வைரத்தை வைரத்தால் வெட்டுவது போல அழித்தவனை வைத்தே அழிக்கச் செய்தவனை அழிப்பதற்கான உத்தியாகவே இந்தத் தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டும்.

இனப்பேரழிவை நிகழ்த்தியவனுக்கு சொத்துகளை சூறையாடியவனுக்கு இனத்தை பிளவுபடுத்தி பிரித்தாள நினைப்பவனுக்கு தமிழினத்தின் பொது எதிரியை காலத்தின் கட்டாயம் கருதி தோற்கடித்து தமிழ்மக்கள் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

தேர்தலை புறக்கணித்து தம்மை அழிக்கச் சொன்னவனை நிரந்தரமாக தம்மை அடிமைப்படுத்த அனுமதிப்பதை விடவும் கிடைத்துள்ள வாய்ப்பை சாணக்கியத்தோடும் மதிநுட்பத்தோடும் சரியாகப் பயன்படுத்தி தம்மை அடிமைப்படுத்த நினைத்தவனை அழிக்கும் புது வியூகம் இது.

எதிர்வரும் சனவரி 26 ஆம் நாள் அன்று ஒரு சர்வாதிகார ஆட்சியை, ஊழல் ஆட்சியை, கொடுங்கோல் ஆட்சியை, குடும்ப ஆட்சியை, வெள்ளை வான் கலாச்சார ஆட்சியை, தமிழர்களைக் கொன்றொழித்து அவர்களது குருதி குடித்து வெடிகொளுத்திக் கொண்டாடிய கொடிய ஆட்சியை தமிழ் மக்கள் தங்கள் கையில் இருக்கும் வாக்கு என்ற ஆயுதத்தைப் துணிச்சலோடு பயன்படுத்தி வீழ்த்த வேண்டும் என அன்போடு மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் படைப்பாளிகள் கழகம்

Comments