மஹிந்தவுக்கு ஆதரவளிக்க முடியாது என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை தமிழ் படைப்பாளிகள் கழகம் வரவேற்கிறது
இது தொடர்பாக தமிழ் படைப்பாளிகள் கழகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
எமது முன்னைய அறிக்கைகள் மூலம் மகிந்த ராசபக்சவின் நான்கு ஆண்டு ஆட்சியில் தமிழ்மக்கள் பாரிய அழிவுகளைச் சந்தித்திருக்கிறார்கள். சொல்லொணா துன்பங்களை அனுபவித்துள்ளார்கள், அல்லல்பட்டு ஆற்றாது அழுது கண்ணீர் விட்டிருக்கிறார்கள். எனவே தமிழ் மக்கள் கொஞ்சமாவது மூச்சுவிட வேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் தேவை என வலியுறுத்தியிருந்தோம்.
"சனாதிபதி மகிந்த ராசபக்ச மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பது நாட்டு மக்களின் சிறந்த நலன்களைப் பேணுவதற்கும் குறிப்பாக வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ்ப் பேசும் மக்களின் சிறந்த நலன்களைப் பாதுகாப்பதற்கும் உதவாது. அவர் மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பதற்கான ஆணையை இத்தேர்தல் மூலம் நாட்டு மக்களிடம் விண்ணப்பித்திருப்பதற்கு ஆதரவு அளிக்க முடியாது, ஆதரவளிக்கவும் கூடாது" எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவை நாம் வரவேற்கிறோம்.
ஆட்சிமாற்றம் வேண்டும் என்பதில் பதினெட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஒத்த கருத்து நிலவியதாகத் தெரிகிறது. ஆட்சிமாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றால் தமிழ்மக்கள் சரத் பொன்சேகாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். இல்லை என்றால் அது சாத்தியமாகாது.
எனவே தன்னிச்சையாகத் தேர்தலில் குதித்து குறுக்குச் சால் ஓட்ட நினைக்கும் சிவாஜிலிங்கம் தமிழ்மக்களது எதிர்கால அரசியல் நலன் கருதி அதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். அவருக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் ராசபக்சவின் வெற்றிக்கே உதவும் என்பதை சிவாஜிலிங்கம் அவர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளர் சரத் பொன்சேகா மற்றும் அய்க்கிய தேசியக் கட்சித் தலைவர் இரணில் விக்கிரமசிங்கா இருவரோடும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் பத்துப் பொருள்பற்றி உடன்பாடு காணப்பட்டுள்ளது. பொது நிருவாகத்தையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்தல், துணை இராணுவக் குழுவினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடைசெய்தல், இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல் மற்றும் மறுவாழ்வளித்தல், சிங்களப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தனியார் நிலங்களும் உரியவர்களிடம் மீள ஒப்படைத்தல், குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரமில்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாதத்திற்குள் விடுவித்தல் போன்றவற்றில் உடன்பாடு காணப்பட்டுள்ளது.
இதில் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு அடிப்படையில் மறுவாழ்வளித்தல், மக்களை அவர்களது சொந்த வீடுகளில் மீள்குடியேற்றுதல் முக்கியமானவை ஆகும். கடந்த காலங்களில் தமிழ் மக்கள் சார்பில் சிங்கள அரசியல் தலைமைகளோடு எழுதப்பட்ட உடன்பாடுகள் கிழித்தெறியப்பட்டுள்ளன. இந்த உடன்பாட்டுக்கும் அதேகதி ஏற்படலாம். இருந்தும் ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்பை நாம் நழுவ விடக் கூடாது.
எதிர்பார்த்தது போலவே இந்த உடன்பாடு நாட்டின் பாதுகாப்புக்கு மீண்டும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது, பிரிக்கப்பட்ட கிழக்கை மீண்டும் இணைக்க சரத் பொன்சேகா ஒப்புக் கொண்டுள்ளார் என மொனறாகலையில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மகிந்த ராசபக்ச அலறியிருக்கிறார். தனது ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் வடக்குக் கிழக்கை இணைக்கப் போவதில்லை என அலரிமாளிகையில் செவ்வாய்க்கிழமை தேசிய கவிஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பௌத்த மதப் பாடசாலை ஆசிரியர்கள், கைப்பணிப்பொருள் கலைஞர்கள் ஆகியோர் மத்தியில் உரையாற்றும்போது ராசபக்ச மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இனவெறியின் மொத்த வடிவான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் பிரபாகரன் மீண்டும் உயிர் பெற்று வருவார் எனப் புலம்பி இருக்கிறார்.
சிங்கள - பௌத்த இனவெறியர்கள் இவ்விதமான இனவாதத்தைக் கக்குவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. சரத் பொன்சேகா இந்த உடன்பாட்டின் மூலம் சிங்களவர்களை தமிழர்களுக்கு விலை பேசி மொத்தமாக விற்றுவிட்டார் என்ற வழக்கமான குற்றச்சாட்டும் மிக விரைவில் அவர் மீது வீசப்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.
தமிழ் மக்களின் பாரிய உயிரழிவுக்கும் உடமை அழிவிற்கும் மகிந்த ராசபக்சவும் அவரது குடும்பமுமே காரணகர்த்தர்கள் ஆவர். வைரத்தை வைரத்தினால் மட்டுமே வெட்ட முடியும். ராசபக்சவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க அவரின் முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகாவைப் பயன்படுத்துவதான் எமக்குள்ள ஒரே வழியாகும்.
சரத் பொன்சேகா இன்னொரு ராசபக்ச என்று வைத்துக் கொண்டாலும் முன்னவர் மூலமாக பின்னவரைப் பழிவாங்குவதே அரசியல் சாணக்கியமாகும்.
முன்னெப்பொழுதும் இல்லாதவாறு சிங்கள தேசம் தமக்குள் மோதிக்கொண்டிருக்கிறது. தமிழ் மக்களது வாக்குகளே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் என்ற நிலை இன்று எழுந்துள்ளது. எனவே நாம் அதனைச் சாணக்கியத்தோடு எமக்குச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்.
இரண்டு எதிரிகளில் ஒரு எதிரியை ஒழிக்க . இன்னொரு எதிரியோடு கூட்டுச் சேரவேண்டும். மகிந்த ராசபக்சவைப் பதவியில் இருந்து அகற்றுவதன் மூலம் அவரால் ஊட்டி வளர்க்கப்படும் ஒட்டுக்குழுக்களையும் இரண்டகர்களையும் அரசியல் பாலைவனத்திற்குத் தள்ளிவிடலாம்.
போர் முடிந்த இந்தக் குறுகிய காலத்தில் இனவழிப்புப் போரை நடத்திய ராசபக்சவைப் பழிக்குப் பழிவாங்க இந்தத் தேர்தல் ஒரு அரிய வாயப்பை தமிழ் மக்களுக்கு அளித்துள்ளது. அதனைத் தக்க முறையில் பயன்படுத்த வேண்டும்.
எனவே தமிழ்த் தேசியத்தையும் தேசியத் தலைவரையும் நேசிக்கும் புலம்பெயர் தமிழர்கள், ஊர்ச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள் எல்லோரும் தாயகத்தில் வாழும் தங்கள் உற்றார் உறவினரைத் தொடர்பு கொண்டு ராசபக்சவின் கொடிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர சரத் பொன்சேகாவுக்குத் தங்கள் வாக்கைப் போட வைக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
Comments