சுதந்திர இறைமையுள்ள தமிழீழத் தனியரசிற்கான போராட்டத்தையே அவர்கள் முன்னெடுத்தார்கள். பண்ணாகத்தில் தந்தை செல்வா மேற்கொண்ட தீர்மானத்தை ஆதரித்து மக்கள் வாக்களித்தார்கள். அரச பயங்கரவாதத்திற்கெதிராக, ஆயுதம் தாங்கிய வன்முறைப் போராட்ட வடிவம் மக்கள் மீது சுமத்தப்பட்டது. ஏதிரி எம்மீது திணித்த தெரிவும் அதுவாக அமைந்துவிட்டது. எந்த வடிவத்தை நாம் கையிலெடுக்க வேண்டுமென்பதை எதிரியே தீர்மானித்தான். ஆகவே பிராந்திய நலன்பேணும் சில உலக வல்லரசாளர்களின் ஆதரவுடன் ஆயுதப் போராட்டம் சிதைக்கப்பட்ட நிலையில், இந்த உலக சமூகத்திற்கு, எமது தீர்வு தமிழீழமே என்கிற முடிவினை உரத்துச் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் தமிழ்மக்களுக்கு ஏற்படுகிறது.
இதனை, தடம்புரளும் நடவடிக்கையாகவும், உள்முரண்பாடு காரணமாக, தொலை நோக்கற்ற வகையில் செயற்படும் சில தனிநபர்கள், குழுக்களின் செயற்பாடாகவும் சித்தரிக்க சிலர் விரும்புகிறார்கள். பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை ஜனநாயக வாக்களிப்பினூடாகத் தெரிவிப்பது, தடம்புரளும் அரசியல் நடவடிக்கையாகக் கருதமுடியாது. ஒற்றையாட்சிக்குள் சமஷ்டிமுறை வேண்டுமாவென்று வாக்கெடுப்பு நடாத்தினால், அந்நகர்வினை, இலட்சியத்திலிருந்து விலகிச் செல்லும் தடுமாற்ற அரசியலாகக் கருதலாம். தமிழீழத் தனியரசிற்கான மக்கள் ஆணையைப் பெறுவது தேவையற்ற, அர்த்தமில்லாத விடயமென்று கூறுபவர்கள், தமிழீழக் கோட்பாட்டை நிராகரிக்கிறார்களென்றே கூறவேண்டும்.
ஏற்கனவே 1976இல் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மீள்வாக்கெடுப்பு தேவையில்லையென்றால், தனியரசிற்கான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டமும் தேவையற்றதாகவே இவர்களால் கருதப்படும். அவ்வாறாயின் ‘தமிழீழ அரசு' என்கிற பெயரில் செயற்படும் நாடு கடந்த அமைப்புக்களின் இருப்பும் கேள்விக்குள்ளாக்கப்படும். சரத்திற்கா அல்லது மகிந்தருக்கா வாக்களிக்க வேண்டும் என்கிற, கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு இங்கு நிகழ்த்தப்படவில்லை. மாறாக ஜனநாயகக் கோட்பாடுகளை உயர்த்திப் பிடிப்பதாகக் கூறியவாறு, முள்ளிவாய்க்கால் இன அழிப்பினை வேடிக்கை பார்த்த சர்வதேசத்திற்கே இச் செய்தி சொல்லப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவும் 13வது, 17வது சட்டத் திருத்தத்தை, தீர்விற்கான வழிமுறையாகத் தெரிவிக்கின்றது. இத் திருத்தச் சட்டங்கள், நிர்வாகப் பரவலாக்கத்தினை அடிப்படையாகக் கொண்டவையே தவிர, தன்னாட்சி உரிமையுள்ள அதிகாரப் பகிர்விற்கு வழி சமைக்கப் போவதில்லை. அதேவேளை தாயகக் கோட்பாட்டின் அடிநாதமாக விளங்கும், வட - கிழக்கு இணைப்பினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென சரத்தும், மகிந்தரும் தமது தேர்தல் பிரச்சார மேடைகளில் முழங்கி வருகின்றனர். முன்னாள் பிரதம நீதியரசரும், வட-கிழக்கைப் பிரிக்கும் தீர்ப்பினை வழங்கியவருமாகிய சரத்,என்.சில்வாவின் ஆலோசனையின் அடிப்படையில், புதிய அரசியல் சாசனமொன்று உருவாக்கப்படுவதாக, கண்டி மல்வத்த மற்றும் அல்கிரீய பீடாதிபதிகளை சந்தித்தபோது கூறியதாக ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொல்வின் ஆர்.டி.சில்வா உருவாக்கிய குடியரசு யாப்பினைவிட, இப்புதிய சாசனம், பௌத்த சிங்கள இறைமையை வலியுறுத்தும் வரைபாகவே இருக்கும். ஆகவே ஜனநாயக கருத்துக் கணிப்பின் ஊடாக, தமிழித்தேசிய இனத்திற்கு, பூர்வீக தேசிய இறைமை உண்டென்பதை வெளிப்படுத்தலாம். பிரிந்து செல்லும் பிறப்புரிமை கொண்டவர்கள் நாம் என்பதை, ஜனநாயக வாக்கெடுப்பினூடாக எடுத்துச் சொன்ன பல தேசிய இனங்கள், விடுதலை அடைந்திருக்கின்றன. இத்தகைய வாக்கெடுப்பொன்றை தாயகப் பிரதேசத்தில் மேற்கொள்ள முடியாத இறுக்கமான சூழ்நிலையன்று காணப்படுகிறது. அதனை இந்தியா உட்பட மேற்குலகோ அல்லது சீனாவோ நடாத்த உடன்படாது. இந்நிலையில், புலம்பெயர்ந்து வாழும் ஏறத்தாள 12 இலட்சம் ஈழமக்கள், கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு முறைமையூடாக, தமது தீர்வினை வெளிப்படுத்தி, பிறதேசங்கள் எம்மீது திணிக்க முற்படும் -சிங்கள இறைமையை ஏற்றுக்கொள்ளும் தீர்வினை நிராகரிக்கிறோமென்கிற செய்தியை கூறவேண்டும்.
இந்தமாதம் 30,31ம் திகதி பிரித்தானியாவில் நடைபெறும் வட்டுக்கோட்டைத் தீர்மான மீள் வாக்கெடுப்பினை, தமிழ்த்தேசியசபையினர் மேற்கொள்கின்றார்கள். இதற்கு தமிழீழ செயற்பாட்டுக்குழு, தமிழ் இளையோர் அமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் நா.க.அரசினை உருவாக்க முற்படும் செயலணிக் குழு என்பன ஆதரவினை வழங்குகின்றன. இதேபோன்று, சுவிஸ், ஜேர்மனி, நெதர்லாந்தில் நடைபெறும் சுதந்திர இறைமையுள்ள தமிழீழத்திற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நிகழ்விலும், அந்தந்த நாடுகளிலுள்ள மேற்குறிப்பிடப்பட்ட அமைப்புக்கள் தமது ஆதரவினை வழங்கவேண்டும். இலட்சியத்தில் முரண்பாடான கருத்துநிலையற்ற இவ்வமைப்புக்கள், இந்த வாக்கெடுப்பினை நடாத்த வேண்டுமா இல்லையாவென்கிற தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து, ஒன்றிணைந்திருப்பது, மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
அடுத்த கட்டப் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்கிற வழிமுறைகுறித்து, ஆரோக்கியமான கலந்துரையாடல்களும் விவாதங்களும் நிகழ்த்தப்படவேண்டும். மக்களின் விருப்பிற்கு ஏற்ப, அவர்கள் வழங்கும் ஆணையை அடிப்படையாகக்கொண்டு, போராட்ட வடிவங்கள் முன்வைக்கப்படுவதே மக்கள் ஜனநாயகமாகும். தமிழர் தாயகத்தின் இறைமையை, தனதாக்கிக் கொள்ளும் நகர்வுகளையே, பௌத்த சிங்கள பேரினவாதம் எப்போதும் மேற்கொள்ளும். 62 வருடகால, இலங்கை தேசிய இன முரண்பாட்டு சிக்கல்கள் கூறும் அரசியல் செய்தி இது. ஆகவே எமக்குச் சாதகமாக இருக்கும் தளங்களைப் பயன்படுத்தி, தாயக இறைமையை நிலைநாட்டும் செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.
இதயச்சந்திரன்
நன்றி்:ஈழமுரசு
வட்டுக்கோட்டை ,நாடுகடந்த அரசு திரைமறைவு யுத்தம் ஒரு பார்வை
அறிமுகம்:
இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய தமிழர் தாயகத்தின் சுதந்திரத்தையும் இறைமையையும்; ஒரு தேசிய இனமாக எமது அரசியல் இலக்கை நாமே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமை ஈழத் தமிழர்களுக்கு உண்டு என்பதையும்,விரிவாக
23,24,30 திகதிகளில் சுவிஸ், நெதர்லாந்து,ஜேர்மனி, பிரித்தானியாவில் வட்டுக்கோட்டைத் தேர்தல் - காணொளிகள்
Comments