கூட்டமைப்பின் அடுத்தகட்ட சதிமுயற்சியை முறியடிக்க அனைவரும் அணிதிரள்வோம்

கடந்த 26-01-2010 அன்று நடைபெறவிருந்த சனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட இரண்டு பிரதான வேட்பாளர்களும் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களை படுகொலை செய்த கொலையாளிகள் என்று நன்கு தெரிந்த நிலையிலும் கூட புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் சிலரும் புத்தியீவிகள் சிலரும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பொன்சேகா என்ற கொலையாளியை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தனர்.

ஒருபுறத்தில் புலம்பெயர்ந்த மக்கள் வாழும் நாடுகளில் இடம் பெறும் வட்டுக்கோட்டைத் தீர்மானததினை முழுமையாக வரவேற்று மக்களுக்கு கொள்கை கோட்பாட்டு விளக்கங்களை கொடுத்து தமிழர்களுக்கு இலங்கைத் தீவில் தமிழீழ தனியரசு ஒன்றே தீர்;வு என்று முழங்கியவர்கள் தமது அந்த நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையில் சிங்கள தேசத்தின் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருக்க வேண்டியவர்கள் தலைகீழாக நின்று ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கருத்துக்களை முன்வைத்தது கட்டுரைகளையும் எழுதினர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் கNஐந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் செல்வராசா கNஐந்திரன் ஆகியோர் வரப்போகும் சிங்கள தேசத்திற்கான தேர்தலை தமிழ் தேசம் பகிஸ்கரிக்க வேண்டும் என்ற கருத்துக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சிக் கூட்டங்களில் ஆணித்தரமாக வலியுறுத்திய பொழுது அவர்களின் கோரிக்கைகளில் இருக்க கூடிய நியாயப்பாடுகளை புரிந்து கொள்ளமால் அவர்களது முடிவு சிறுபிள்ளைத்தனமான முடிவு என்று விமர்சனங்களை முன்வைத்தனர்.

மறுபுறத்தில் பெருமளவான தமிழ் தேசிய ஆர்வலர்கள் மற்றும் புத்தியீவிகள் போன்றோர் தொலைக்காட்சிகளிலும் வானோலிகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை பற்றி அதிகளவுக்கு வலியுறுத்தினரே தவிர அதன் கொள்கைகளை கைவிடக் கூடாது என்ற எந்தக் கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.

கொள்கை பற்றிய எந்த வற்புறுத்தல்களும் இல்லாமல் வெறுமனே ஒற்றுமை பற்றி மட்டும் வலியுறுத்தப்பட்டமையை சம்பந்தன் மாவை, சுரேஸ் போன்றோர் தமது நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டதாகவும் அறிய முடிகின்றது.

கடந்த காலத்தில் கொள்கையை வலியுத்தி வந்த மக்கள் புலிகள் பலமிழந்த பின்னர் கொள்கையை கைவிட்டுள்ளனர் என்றும், அவர்கள் கிடைக்கின்ற எந்த தீர்வையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளனர் என்றும் வியாக்கியானங்களையும் விளக்கங்களையும் கொடுக்கத் தொடங்கினர்.

அது மட்டுமன்றி தாயகத்தில் இருந்தும் புலம்பெயர் தேசத்தில் இருந்தும் சில புத்தியீவிகளும் ஊடகவியலாளர்களும் கூட ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்தமையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாகவும் அறிய முடிகின்றது.

இந்த தேர்தலில் சரத்பொன்சேகாவை வெல்ல வைப்பதற்ன் மூலம் சில சர்வதேச சக்திகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுகின்ற அதே வேளை சரத்பொன்சேகா வென்றபின்னர் அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலை தொடர்ந்து அமைச்சுப்பதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்ததாகவும் அறிய முடிகின்றது.

தமிழ் தேசியம் என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி அதிகாரப்பகிர்வு அடிப்படையில் தீர்வை ஏற்றுக் கொள்ளவும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வதனையும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதும் இவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மக்களை ஏற்றுக் கொள்ளவைக்க வேண்டுமாயின் தாங்கள் எடுத்த முடிவு சரியானதும், தீர்க்க தரினம் மிக்கதும், என்று மக்களை நம்ப வைக்க வேண்டிய தேவை இவர்களுக்கு எழுந்துள்ளது.

அதன் மூலம் பிரபாகரனின் தலைமைத்துவத்திற்குப் பின்னால் தனிநாடு வேண்டும் என்று திரண்டிருந்த மக்களை அவரை நிராகரித்துவிட்டு கூட்டமைப்பிற்குப் பின்னால் அணிவகுக்க செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்வதற்கு பிரபாகரன் எடுத்த முடிவு முற்றிலும் தவறானது முட்டாள் தனமானது என்று மக்களை நம்ப வைக்க வேண்டியிருந்தது.

அந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே 2005 ம் ஆண்டு பிரபாகரன் எடுத்த முடிவு மிகவும் பிழையானது என்ற கருத்தை சம்பந்தன் வெளிப்படையாக கூறினார். அது மட்டுமன்றி விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டது சர்வதேச சமூகமே தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பு இல்லை என்றும் துணிச்சலான ஒரு பொய்யை கூறியிருந்தார்.

அத்துடன் கடந்த 2004 ம் ஆண்டு கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு மீறி அதற்கு எதிராக அதிகாரப்பகிர்வு அடிப்படையிலான தீர்வுத்திட்டம் ஒன்றை தான் பெற்றுக் கொள்ளப் போவதாகவும் கூறியிருந்தார்.

எல்லாவற்றையும் மொனமாக இருந்து அவதானித்த மக்கள் ஒரு விடயத்தினை நன்றாக விளங்கிக் கொண்டிருந்னர்.

76 ம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தமிழீழ தீர்மானம் இயற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 ல் பாராளுமன்ற தேர்தலில் அதற்காக மக்கள் ஆணையையும் பெற்றது. அவ்வாறு தீர்மானம் எடுத்ததன் விளைவாக பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் அந்த மக்கள் ஆணையை நிறைவேற்ற ஆயுதமேந்தி போராட விடுதலை இயக்கங்களில் இணைந்து கொண்டனர். அவர்களது போராட்டம் முனைப்புப் பெறத் தொடங்கிய வேளையில் 1981ம் ஆண்டு தமது கொள்ளை கோட்பாடுகள் அனைத்தையும் புதைத்துவிட்டு இளைஞர்களை பயங்கரவாதிகள் என்று கூறிக் கொண்டு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து 1981 ல் மாவட்ட சபையை ஏற்க கூட்டணியினர் தலைப்பட்டனர்.

தனிநாடு உருவாக்கும் நோக்கில் ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் இவர்களை துரோகிகள் என்று கூறி தண்டிக்க முற்பட்ட பொழுது இந்தியாவிற்கும் கொழும்புக்கும் ஓடிச் சென்று தஞ்சமடைந்து கொண்டனர்.

1987 ம் ஆண்டு இந்தியப்படை இலங்கைக்கு வந்து தமிழ் மக்களுக்கும் போராளிகளுக்கும் எதிராக யுத்தத்தினை ஆரம்பித்த பின்னர் நிலைமை மோசமடையத் தொடங்கிய பொழுது கொழும்பில் தங்கியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி முக்கியஸ்தர்களுடன் தொடர்பு கொண்ட தமிழ் தேசிய ஆர்வலர்கள் சிலர் இந்தியாவுடன் கதைத்து யுத்தத்தை நிறுத்துமாறு கோரிய பொழுது கூட்டணியின் முக்கியஸதர்கள் கூறினார்களாம் - தாய்க்கோழி குஞ்சுகளை கொத்துவது அழிப்பதற்ககா அல்ல இந்தியா எங்களது தாய்தானே அது என்னத்தை செய்தாலும் எங்களது நன்மைக்காகத்தான் என்று கூறி மொனமாக இருந்து மூன்று ஆண்டுகள் இந்தியப் படை எமது மண்ணில் செய்த அத்தனை அட்டூழியங்களையும் இரசித்துக் கொண்டிருந்தனராம்.

அன்று அவர்களின் எதிர்பார்ப்பு புலிகளை அழித்து ஆட்சியை தம்மிடம் பெற்றுத் தருவார்கள் என்பதாக இருந்துள்ளது.

அன்று கூட்டணி செய்த அதே தவறை இன்று கூட்டமைப்பு செய்யப் போகின்றது என்பதனை நன்றாக புரிந்து கொண்ட மக்கள் தேர்தலினூடாக நல்லதொரு பாடத்தினை புகடடியுள்ளனர்.

கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவானது சம்பந்தன் மாவை சுரேஸ்பிறேமச்சந்திரன் ஆகிய முவரினதும் முடிவுகள் ஏனையவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளதாகவே அறிய முடிகின்றது.

மேற்படி மூவரினதும் முடிவுகள் பிழை என்று தெரிந்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலர் அவர்களை எதிர்த்து கருத்துக் கூற விரும்பிவில்லையாம், காரணம் எதிர்த்து கருத்துக் கூறினால் அடுத்துவரும் பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதற்கான ஆசன ஓதுக்கீடுகள் கிடைக்காமல் போய்விடும் என்பதனாலேயே ஆகும் என்றும் அறிய முடிகின்றது.

கூட்டமைப்பு சரத்பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் அதற்கு தமது முழுமையான ஆதரவு உண்டு என்றும் புலம்பெயர்ந்த பல தமிழர்கள் தம்மிடம் கூறியதாக கூட்டமைப்பின் முக்கியஸதர்கள் அதன் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கூறியுள்ளனராம். குறிப்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கூட ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கருத்துக்களை கூறியதாகவும் சுறியுள்ளனர். எனவே தாங்கள் புலத்திலும் தாயகத்திலும் வாழும் மக்களின் விருப்பங்களின் அடிப்படையிலேயே அந்த முடிவுக்கு வந்துள்ளதாவும் நியாயம் கற்பித்துள்ளனர்.

அத்துடன் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து வெளிவரும் சில இணையத்தளங்கள் தமிழ் மக்களால் விரும்பி வாசிக்கப்படுகின்றது. அந்த இணையத் தளச் செய்திகளை மக்கள் நம்புகின்றனர். அவ்வாறு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள இணையத் தளங்கள் தேசியம் என்ற கொள்கை நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தாமல் தமிழ் தேசியத்தை சிதைக்கும் வகையில் மக்களின் உறுதிப்பாட்டை குலைக்கும் வகையில் அனைத்துச் செய்திகளையும் தங்களது இணையத்தளங்களில் பிரசுரித்து வந்தன. இந்த செய்திகளை கூட்டமைப்பு தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளதுடன் மக்களையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

கூட்டமைப்பு ஒரு பிழையான ஓர் வரலாற்றுத் தவறான முடிவை எடுத்து எல்லாம் நடை பெற்று முடிந்த பின்னர் அதனை விமர்சித்துக் கொண்டிருப்பதால் இனி எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

இனிவரும் மாதங்களில் கூட்டமைப்பு மேற்கொள்ள இருக்கும் மாபெரும் துரோகத்தினையாவது முன்கூட்டடியே தடுத்து நிறுத்த புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் அறிஞ்ஞர்கள், தேசிய ஆர்வலர்கள் அனைவரும் இக்கணத்தில் இருந்தே செயற்படத் தொடங்க வேண்டும்.

தமிழ் மக்களது தாயகம், தேசியம், இறைமை என்ற விடயங்களை கைவிட்டு ஸ்ரீலங்கா என்ற நாட்டையும் அதன் இறைமையையும் அங்கீகரித்து அதிகாரப்பகிர்வு அடிப்படையில் தீர்வுத்திட்டம் ஒன்றை தயாரித்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடனோ அல்லது தாயகத்திலுள்ள மக்களுடனோ எவ்வித கருத்துப் பரிமாற்றலும் இல்லாமல் இறுதி செய்துள்ளார் சம்பந்தன் என்றும் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே இவ்வாறான ஓர் தீர்;வுத்திடம் ஒன்றினை சம்பந்தன் சமர்ப்பிக்கும் வரை காத்திருந்துவிட்டு பின்னர் காட்டுக் கூச்சல் போட்டு நாங்கள் மட்டும் தான் தமிழ் தேசியத்தில் பற்றுள்ளவர்கள் ஏனையவர்கள் எல்லோரும் துரோகிகள் என்று கூட்டமைப்பினர் மீது குற்றச் சாட்டுக்களை முன்வைப்பதால் எந்த நன்மையும் தமிழ் மக்களுக்கு ஏற்படாது. இந்த ஆபத்தை உணர்ந்து இப்பொழுதே இதனை தடுத்து தமிழ் மக்களின் அபிலாசைகள் அடங்கிய தீர்;வுத்திட்டம் ஒன்றினை கூட்டமைப்பு முன்வைக்கக் கூடிய சூழலை உருவாக்க அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

சனாதிபதித் தேர்தல் விடயத்தில் செயற்பட்டது போன்று தீர்;வுத்திட்ட விடயத்திலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தரப்பு இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்க கூடாது.

அதற்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கூட்டமைப்பினால் இலங்கையின் 6ம் திருத்தச் சட்டத்திற்கு உட்பட்டு முன்வைக்கக் கூடிய தனித்தேசத்தின் இறைமை என்ற அடிப்படையிலான தீர்;வுத்திட்டத்தினை தனது கொள்ளையாகவும் மாற்றிவிட முயலக் கூடாது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது அதன் கொள்கையை இன்னமும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவில்லை.

கூட்டமைப்பின் ஆட்சிமாற்றம் என்ற முடிவுக்கு மறைமுகமாக சம்மதம் தெரிவித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசுத் தரப்பு ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்திய மற்றும் அமெரிக்க ஐரோப்பிய தரப்புக்களின் ஆதரவுடன் கூட்டமைப்பினால் முன்வைக்கப்படவிருந்த அதிகாரப்பகிர்வு என்னும் ரயிலில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை எவ்வித ஆட்சேபனையும் இன்றி ஏற்றிக் கொள்ள முடியும் என்ற திடடத்தில் இருந்ததா என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது.

நாடு கடந்த அரசு இன்னமும் தமிழ் தேசியவாதிகளின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ளவில்லை அது தனது கொள்கையாக சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசு என்ற நிலைப்பாட்டை வரித்துக் கொள்ள வேண்டும்..

கூட்டமைப்பு சில சர்வதேச சக்திகளுடன் இணைந்து மேற்கொள்வுள்ள அதிகாரப்பகிர்வு என்ற சதியை முறியடிக்க அனைவரும் உடனடியாக அணிதிரள வேண்டும்.

நன்றி

சங்கிலி

Comments