“புதிய பாடம் படிக்க வேண்டும்!..., பழைய பாடம் தேவையில்லை!”....

மகிந்தாவின் தேர்தல் முடிவுகளைக் கேட்டவுடன், பல தமிழ் ஆர்வலர்களுக்கு மேற்கூறப்பட்ட பழைய திரைப்படப்பாட்டு ஞாபகத்தில் வரலாம்.

மகிந்தாவின் மகத்தான வெற்றி பல தமிழ் மக்களுக்கு ஆச்சரியமானதாக இருக்க முடியாது. “பழைய கறுப்பன் கறுப்பன்தான்” என்ற வகையில், சிங்களத் தேசத்தின் மக்கள் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றத்தையும் இனஅழிப்பையும் மேற்கொண்ட ஒரு தலைமையைத் தெட்டந்தெளிவாக ஏற்றியிருக்கின்றனர். ஜனநாயக வழியில்ஒரு நாட்டில், இரு இனங்கள் உள்ளன என்பது பழைய கதை (பாடமும் கூட).

மூன்று தடவைகள் தொடர்ந்து தோல்வியடைந்த சர்வதேச சமூகத்திற்கு, உடனடியாகப் படிக்க வேண்டிய புதிய பாடம் காத்திருக்கிறது. சர்வதேச சமூகம், முதலாவதாக போரை நிருத்த முயன்ற போதும், இரண்டாவதாக ஐ.நா அமைப்பில் மனித உரிமை விடயத்திலும், கடைசியாக ஜனநாயக வழியில் ஆட்சி மாற்றம் அமைப்பதிலும் படுதோல்வி கண்டது வெளிப்படையாகிவிட்டது.

இதே கோணத்தில், தமிழ்த்தேசியத்தில் ஒருமித்த கருத்தைச் செலுத்தாது, ஆட்சி மாற்றம் நிச்சயமென இலவுக்காத்த கிளி போல் ஏமாந்த சில அமைப்புகளுக்கும், அவர்களுக்கு ஒத்து ஊதிய சில ஊடகங்களுக்கும் ஒரு பெரிய பாடம் கற்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் “ஜனநாயகத் தீர்ப்பு”, சர்வதேசம் போதித்து வந்த “போரின் பின் தேசியச் சமாதானத்தையும், நல்லுறவையும்” ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு ஓர் பேரிடியாகும். மஹிந்தாவின் ஆட்சிக்கு சிங்கள தேசத்தின் ஆதரவும், பெருபான்மையான தமிழ் மக்களின் புறக்கணிப்பும் இதனை எடுத்துக்காட்டுகின்றன.

இனிமேல் சமாதானம் என்றச் சொல் இரு இனங்களின் தனிப்பட்ட சமாதானமாய் இருக்கவேண்டும் என்ற செய்தியையே தேர்தல் கூறுகிறது. நடுநிலை வகிப்பவர் என்று தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் தமிழ் அரசியவாதிகள், யுத்தத்தின் பின்வரக்கூடிய சமாதானத்தைச் சிங்களவரின் ஆதரவுடன் ஏற்படுத்தலாம் என்று நம்பிக்கை வைத்திருந்த ஒரு சில தமிழ் மக்களுக்குத் தேர்தல் முடிவுகள் ஒரு கண்திறப்பாக அமைந்தன.

தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் ஒரு தெளிவான முடிவை எடுத்திருந்தனர். இதனடிப்படையில் ஒருசில தமிழர்கள் ஆதரவாகச் செயல்பட்டிருப்பினும், பெரும்பான்மையான தமிழ் மக்கள் (இதனை மீறி!) தேர்தலைப் புறக்கணித்தனர். இதை வடக்கில் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கிறது.

கிழக்கில் இருந்த வேறின மக்களின் பரம்பலால், இதுபற்றி உடனே கருத்துக்கூற முடியாத போதும், வாக்களித்த நிலையங்களின் வாக்கு விபரம் இதனை விவரிக்கும். எதுவாகினும், மகிந்தாவை ஆதரிக்கும் ஆயுதக் குழுக்களுக்கும் ஒருசில ஆதரவாளர்களுக்கும் இவர்களைத் தமிழ் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்ற செய்தியை வடக்கு கிழக்கில் வாக்களித்த விபரங்கள் எடுத்துக் கூறுகின்றன.

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள், தமிழ் தேசிய அரசியல் அமைப்புகள் இனி புத்துணர்வோடு செயற்பட வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

கொழும்பை மையமாக வைத்திருப்பவர்கள், தமது முதலீட்டுக் கொள்கைகளில், பெரிய பிளவுகளை எதிர்நோக்கலாம் எனக் கொழும்பு சார் பத்திரிகைகள் கூறுகின்றன.

சீனாவுடன் நிகழும் போட்டியிலும் இறுக்கமான நிலையிலும் உள்ள இந்தியா, இத்தகைய தேர்தல் முடிவுகளால், மேலும் ஓர் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும். மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை அவர்கள் இராணுவத் தலையீடு, இராஜதந்திரத் தலையீடு, மனித உரிமைத் தலையீடு எனக் கிடைக்கப்பட்ட எல்லாச் சந்தர்ப்பங்களையும், தமிழர் பற்றிய தமது சுற்றுமாற்றுக் கொள்கைகளினால் தவறவிட்ட நிலையில், இனிமேலும் தெற்காசியாவில் தென்புறத்தில் ஏதாவது தவறு ஏற்பட்டால் அது வடபுறத்தையும் பாதிக்கும் என ஒரு கொழும்புசார் அரசியல் அவதானி கருதுகிறார்.

இலங்கையில் நடைபெறும் ஜனநாயகத்தின் நிலைமையை சரத் பொன்சேகாவின் “இலங்கையில் சர்வாதிகாரத்தைத் தடுத்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வெளிநாடுகள் முன்வரவேண்டும”. எனச் சமீபத்தில் கூறிய கூற்றிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.

(தமிழ்நெட் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்)

Comments