கேள்வி:- சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான வலுவான நடவடிக்கைகளை அனைத்துலக சமூகம் மேற்கொள்ளத் தொடங்கியிருப்பது போன்று அவற்றின் அண்மைய நடவடிக்கைகள் காணப்படுகின்றன. மனித உரிமையாளராக, இவற்றின் சாத்தியப்பாடுகள் குறித்து விளக்க முடியுமா?
பதில்:- ஒரு நாட்டினுடைய மனித உரிமை மீறல்கள் அல்லது நிலைமை, சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு அந்த நாட்டுடைய அரசியல், பொருளாதார கொள்கைகளிலேயே தங்கியுள்ளது. இந்த அடிப்படையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்காவின் அரச படைகளினால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை, சர்வதேச ரீதியாக குறிப்பாக ஐ.நாவின் மனித உரிமை பிரிவு உட்பட பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் நீண்ட காலமாக அவதானித்து வந்தன.
விசேடமாக கடந்த இரு ஆண்டுகளாக தமிழ் மக்களுடைய மனித உரிமைகளை மிக மோசமாக மீறப்பட்ட காரணத்தினால், ஏற்கனவே அக்கறை காட்டிய அமைப்புக்கள் மீண்டும் பெரியளவில் குரல் கொடுத்ததுடன், சில மேற்கு நாடுகளும் குரல் கொடுத்தன. ஆனால் ஒரு நாட்டின் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையோ அல்லது பாதுகாப்புச் சபையோ இன்றுவரை சிறீலங்கா மீது எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பது மிக கவலைக்குரிய விடயம். காரணம், சிறீலங்காவினுடைய அரசியல் பொருளாதார கொள்கைகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவத்தை கொண்ட சீனா, ராஷ்யாவுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
ஏன், சில வருடங்களுக்கு முன் பிரித்தானியா, அமெரிக்கா கூட சிறீலங்காவுடன் மிக நெருக்கமான உறவை கொண்டிருந்தன. அடுத்து ஐ.நா பொதுச் சபையில் மிக செல்வாக்கை கொண்டுள்ள சீனா, ராஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், கியூபா, வெனிசூலா உட்பட பல தென் அமெரிக்க, ஆபிரிக்கா, ஆசிய நாடுகளுடன் சிறீலங்கா நெருங்கி அரசியல் பொருளாதார உறவை கொண்டுள்ளது. இந்த அடிப்படையில் சிறீலங்கா மீது ஒரு சர்வதேச அழுத்தத்தை கொண்டுவருவது என்பது அவ்வளவு சுலபமான விடயம் அல்ல.
கேள்வி:- மேற்படி நடவடிக்கைகளில் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் செயற்பாடுகள் குறித்து கூற முடியுமா?
பதில்:- தமிழர் மனித உரிமைகள் மையம் கடந்த இருபது ஆண்டுகளாக மனித உரிமை விடயத்தில் வேலை செய்து வந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் அடிப்படையில் மனித உரிமை மீறல்கள் பற்றிய பட்டியல்கள் அறிக்கைகளை தயாரித்து முக்கிய புள்ளிகளுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரிவுகளுக்கும் விநியோகித்து வந்துள்ளோம். நாம் தமிழ் மக்களுக்காக வேலை செய்யும் அமைப்பாக இருந்த போதிலும், எமது இருபது வருட காலத் தொடர்புகளும் செயற் திட்டங்களும் சர்வதேச ரீதியானவை.
ஐ.நா. அதிகாரிகளிலிருந்து, நாட்டின் தலைவர்கள், உலகின் முக்கிய புள்ளிகள், புத்திஜீவிகள், கல்விமான்கள், சர்வதேச சட்டத்தரணிகள், சர்வதேச ஊடகவியாலாளர்கள் என எமது உறவுகள் பரந்தவை. எமது செயற்பாடுகள் குறித்து மேலும் விபரமாக கூறுவது மிகவும் ஆபத்தான விடயம். காரணம் சிறீலங்கா அரசும் அதன் கையாட்கள் மட்டுடல்லாது, நம்மவர் சிலர் எமது அமைப்பு மீதும், அதன் பிரநிதிகள் மீதும் கொண்ட எரிச்சல், பொறாமையினால் பல தீய செயல்களை எமக்கு எதிராக செய்யுமாறு பலரை துண்டிவருகின்றனர். நாம் ‘நிலவை கண்டு பரதேசம் போனவர்களோ, அல்லது ஆனாதைகளோ அல்ல’ இத்துடன் இவ் வினாவுக்கான பதிலை நிறுத்தி கொள்கிறேன்.
கேள்வி:- தொடர்ந்து சிறீலங்கா அரசின் இனப்படுகொலைகளை அம்பலப்படுத்தி வரும் 'சனல் 4', 'இன்னர் சிற்றி பிரஸ்' என்பவற்றுடன் நீங்கள் தொடர்புகளைப் பேணுகிறீர்களா? இது குறித்து அக்கறைப்படும் வேறு அமைப்புக்கள் குறித்து கூற முடியுமா? அவற்றுடன் எமது தமிழ் அமைப்புக்கள் எவ்வாறு தொடர்பு கொள்வது அல்லது எப்படி இணைந்து பணியாற்றுவது என்பது குறித்து விளக்கமாகக் கூறமுடியுமா?
பதில்:- மிக நல்ல கேள்வி, இதற்கு பதில் கூறினால் எம் மீது பல பழிகள் சுமத்தப்படும். சர்வதேச ரீதியாக மனித உரிமை விடயத்தில் மிக நீண்ட காலமாக வேலை செய்யும் ‘சர்வதேச மன்னிப்புச்சபை’‘மனித உரிமை கண்கணிப்பகம்’ போன்ற பல அமைப்புகளுடன் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் வேலை செய்ய முடியும். முதலாவதாக, இவற்றுடன் அங்கத்தவர்களாக இணைந்து தொண்டர்களாக சேவை செய்யலாம்.
இரண்டவதாக, ஒரு குறிப்பிட்ட மனித உரிமை மீறல் சம்பவம் பற்றிய உண்மையான, நேர்மையான தகவல் இருப்பின், அவற்றை இவ் அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளலாம். மூன்றவதாக பணம் படைத்த அமைப்புக்கள், சர்வதேச அமைப்புகளுக்கு நன்கொடைகளை கொடுத்து அவர்களது வேலை திட்டங்களை ஊக்குவிக்கலாம்.
கேள்வி:- சிறீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட இனப்படுகொலைகளுக்கான ஆதராங்கள் பல உள்ளன. அண்மையில் பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரனும் காணொளி ஆவணத்தை உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து மௌனம் காத்து வருவது ஏன்?
பதில்:- ஒரு நாட்டுடைய மனித உரிமை மீறல்கள் அல்லது நிலைமை, அந்த நாட்டுடைய அரசியல் பொருளாதார கொள்கைகளை பொறுத்தே ஐ.நா. அங்கத்துவ நாடுகள் பரீசீலனைக்கு எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். ‘சபை வைப்பவர் நம்
மாளாயிருந்தால், நடுச் சபையிலிருந்தால் என்ன நுனிச் சபையிலிருந்தலென்ன?’ என்பது தமிழ் பழமொழி. அதுபோல் ‘ஐ.நாவில் நடவடிக்கை எடுக்குமாறு து£ண்டும் நாடுகள், நமது நண்பர்களாயிருக்கும் பொழுது, நாம் மனித உரிமையை மீறினலென்னா, மிக மோசமாக மீறினாலென்ன!’ ஒரு பிரச்சினையும் இல்லையென்பது சிறீலங்காவின் கருத்து.
கேள்வி:- ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் செயற்பாடுகள் சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றன. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- ஐ.நா.வில் உள்ள பிரிவுகளின் செயற்பாடுகளை நாம் இரண்டாக பிரிக்கலாம். ஒன்று அரசியல் மயப்படுத்தப்பட்ட செயற்பாடு, மற்றையது அரசியல் கலப்பற்ற செயற்பாடு. இந்தவகையில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பதவியும் செயற்பாடுகளும் அரசியல் கலப்புகொண்டவை. செயலாளர் நாயகம் ஐ.நா அங்கத்துவ நாடுகளின் நட்புறவை பேண வேண்டிய முக்கிய கடமையை கொண்டுள்ளார்.
இதன் அடிப்படையில் செயலாளர் நாயகம் அங்கத்துவ நாடுகளின் சில நடவடிக்கைகளை கண்டும் காணாதவர் போல் நடிப்பது அவர்களின் இராஜதந்திரம். ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மற்றும் பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரன் போன்றோரின் செயற்பாடுகள் அரசியல் கலப்பற்றவை. இதன் அடிப்படையில், மனித உரிமை விடயத்தில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் (தற்சமயத்தில்) திருமதி நவநீதம்பிள்ளை அவர்கள் கூறும் விடயத்திற்கே முன்னுரிமை உண்டு. அவர் சிறீலங்காவின் மனித உரிமை விடயத்தில் மிக கடுமையாக உள்ளார். இவரை பலமுறை சந்தித்து உரையாடியுள்ளேன்.
இவரின் அணுகுமுறையும் இராஜதந்திரமும் போற்றப்பட வேண்டியது. முன்பு இப்பத விகளை வகித்த திருமதி மேரி றோபின்சனும், திருமதி லூயிஸ் ஆபாரும் தமது பதவிக்காலங்கள் முடியும் முன்னரே பதவியிலிருந்து விலகிக்கொண்டவர்கள். ஏன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன்.
கேள்வி:- ஐ.நா வின் மௌனத்தைக் கலைப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்:- சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், கியூபா, வெனிசூலா உட்பட பல செல்வாக்குள்ள தென்அமெரிக்க, ஆபிரிக்கா, ஆசிய நாடுகளின் ஆதரவை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
கேள்வி:- சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பான வலுவான நடவடிக்கைகளை அனைத்துலக சமூகம் மேற்கொள்ளும் போது தான் தமிழினம் தான் சந்தித்த இன அழிப்பு நடவடிக்கைகளை வெளியுலகிற்கு நிரூபிக்க முடியும். இது தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்களின் நடவடிக்கைகள் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
பதில்:- முதலில் ஒவ்வொருவரும் தாம் வாழும் நாடுகளின் சட்ட திட்டங்களை மதித்து செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். அடுத்து, அமைப்புக்களிடையே ஒருங்கிணைக்கப்பட்ட செயற்திட்டம் தேவை. இச் செயற் திட்டங்களை விடயம் விளங்கியவர்கள், மொழித் திறன் கொண்டவர்கள், இராஜதந்திரம் தெரிந்தவர்கள் கையாள வேண்டும். இவை இரண்டும் தற்பொழுது பெரும்பான்மையான தமிழ் அமைப்புகளிடையே இல்லை.
அடுத்து விழிப்பு போராட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் நடத்தும் அமைப்புக்கள் இதனால் ஏற்படும் பலன்களை முன்கூட்டியே மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். இது செய்யத் தவறும் அமைப்புக்கள், தமது சுயநலத்திற்காக மக்களை குளிர், பனி, மழை போன்றவற்றில் அலைக்கழிக்கப்பது ஆக்கபூர்வமான விடயம் அல்ல! மறைந்த மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் முன்பு கூறியது போல், ‘தமிழ் சங்கம், சங்கம் தமிழ்’ என்ற வகையில் பெயர்கள் சூட்டப்பட்டு நாளுக்கு நாள் தமிழ் அமைப்புக்கள் சர்வதேச ரீதியாக அதிகரிக்கின்றனவே தவிர, அங்கு உருப்படியான செயற் திட்டம் ஒன்றும் நடைபெறுவது இல்லை.
பொதுவுடமையின் தத்துவஞானியும், சமூக விஞ்ஞானியுமான பிறைட்றிச் ஏன்
ஞல்ஸ் அவர்கள், ‘ஒரு அவுன்ஸ் செயற்பாடு, பல தொன் தத்துவங்களை விட மேலானது’ என ஒரு தடவை கூறியிருந்தார். இதை தமிழ் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் அறிந்திருக்க வேண்டும். போலியான வேலைகளை செய்பவர்கள் தாமும் ஏதோ வேலை திட்டம் செய்கிறோம் என்று மக்களை ஏமாற்றக்கூடாது.
கேள்வி:- அயர்லாந்தின் தலைநகரான டப்பிளின் நகரில் நடைபெறவுள்ள சிறீலங்கா அரசு மீதான போர்க்குற்ற விசாரணைளை தமிழ் மக்கள் எவ்வாறு செயற்திறன் மிக்கதாக மாற்றவேண்டும், அது தொடர்பில் அனைத்துலகிலும் பரந்து வாழும் தமிழ் அமைப்புக்களின் பங்களிப்புக்களின் அவசியத்தை சற்று விளக்க முடியுமா?
பதில்:- என்னைப் பொறுத்த வரையில், சிறீலங்கா அரசு மீதான போர்க்குற்ற விசாரணைகள் எதுவாக இருந்தாலும் எந்த தமிழரும் அதில் முன்னிற்பது நிட்சயம் பாதிப்பையே ஏற்படுத்தும். காரணத்தை நான் விளக்க வேண்டிய அவசியமில்லையென நம்புகிறேன். டப்பிளின் நகரில் நடை
பெற்ற போர்க்குற்ற விசாரணை போன்று வேறு எங்கு நடைபெற்றாலும், எம்மிடம் அதற்கு ஏற்ற உண்மையான நேர்மையான சாட்சியங்களிருப்பின் அவற்றை உரியவர்களிடம் கையளிப்பதே எமது கடமை.
இதற்கு மேல் அதில் பங்களிக்க நாம் விரும்பினால், இவ் சர்வதேச விசாரணைகளுக்கு தேவையற்ற பெயர்களை சிறீலங்கா அரசு மிகவும் சுலபமாக சூட்டிவிடும். எம்மால் முடியுமானால், இவ் விசாரணைகள் பற்றிய செயற்திட்டங்களை, சர்வதேச ஊடகங்கள் வெளியிட திரைமறைவில் உதவலாம். கடந்த வாரம் டப்பிளின் நகரில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணையின் செய்திகளை, சர்வதேச ஊடகங்கள் வெளியிடாதவாறு, சிறீலங்கா அரசின் தூதுவரலாயங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி - ஈழம்நியூஸ்
Comments