மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பின் மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்த விவகாரம், கிழக்கு அரசியலில் புதிய உதயத்தை தோற்றுவித்துள்ளது. முழு நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணைந்திருப்பவர், எதிர்க்கட்சி வேட்பாளரை ஆதரிப்பதற்கு மிகுந்த துணிச்சல் தேவை.
மக்களின் உணர்வலைகளைப் புரிந்து கொண்ட ஒருவரால் தான் இத்தகைய முடிவினை மேற்கொள்ள முடியும். சரத்திற்கு ஆதரவு தெரிவித்தவுடன் இவருக்கு வழங்கப்பட்ட சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் அரசால் நிறுத்தப்பட்டுள்ளன.
இத்தகைய பழிவாங்கல் நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் மேற்கொள்வார்களெனத் தெரிந்திருந்தும் தனது முடிவினை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இவரை அரசியலிற்குள் அழைத்து வந்தவர்கள் குறித்து அவர் கவலைப்படவில்லை. குறைந்த பட்ச அதிகாரப் பகிர்வில்லாத உள்ளூராட்சி சபையில் இருப்பதை விட, ஆட்சி மாற்றமொன்று ஏற்படுவதனூடாக, அதிகாரத்தைப் பெறலாமென்கிற நம்பிக்கை சிவகீதாவுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.
புதிதாகப் பாதை அமைப்பதோ அல்லது சீர்செய்வதோ, அபிவிருத்தியின் உச்சமென அரசிற்கு வக்காலத்து வாங்குபவர்கள் மத்தியில் மட்டு. மாநகர முதல்வரின் அதிரடி அறிவிப்பு சற்று வித்தியாசமாகவே தென்படுகிறது.
உணவில் தன்னிறைவும் நேர்மையுள்ள சமூகமும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிரந்தர சமாதானமும் காடுகளையும் விலங்கினங்களையும் சுற்றாடலையும் பாதுகாக்கும் முன்னெடுப்புகளும் மஹிந்த சிந்தனை இரண்டில் கூறப்படுகிறது.
இவையெல்லாம் இந்த நாட்டில் இதுவரை இருந்ததில்லை என்பதனை சிந்தனை இரண்டாம் பாகம் ஏற்றுக்கொள்வது போலுள்ளது.
அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய தீர்வு, சமாதானம், நல்லிணக்கம் போன்ற தேர்தல் கால வார்த்தைகளின் அர்த்தங்களை தமிழ் பேசும் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.
துரையப்பா விளையாட்டரங்கில், மனிதாபிமானமிக்க ஜனநாயகவாதியாகப் புகழாரம் சூட்டப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் “சிந்தனை மூன்றாம் பாகம்’ இனிவரும் காலங்களில் வெளியிடப்படுமா வென்பதை, ஜனவரி 26 ஆம் திகதி தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கப் போகின்றன.
அதேவேளை தமிழர் தரப்பில் ஏற்படும் சடுதியான மாற்றங்கள், ஜனாதிபதியை கலங்கடித்துக் கொண்டிக்கின்றன.
சரத்தை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரம் அதிகார நாற்காலியை இழப்பேனென்று தெரிந்தும் எதிரணி வேட்பாளரின் பக்கம் சாய்ந்த சிவகீதாவின் திடீர் முடிவு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர் மட்டத் தலைவர்களின் வெளியேற்றம் போன்றவை, வாக்குச் சம வலுவில் மாறுதல்களை உருவாக்குமென்பதை அதிபர் புரிந்து கொள்கிறார்.
சமாதான காலத்தில் படைவலுச் சமநிலையில் மாற்றங்கள் ஏற்பட உதவி புரிந்த பிராந்திய வல்லரசாளர்களின் அனுசரணை இருந்தும் ஜனாதிபதியால் தமிழர் தரப்பை வென்றெடுக்க கடினமாக இருப்பதாகத் தெரிகின்றது. இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் துன்பச் சிலுவை சுமந்து நீண்ட தூரம் பயணித்துள்ளனர்.
ஆட்சி மாற்றமென்பது, மூச்சு விடும் நேரத்திற்கான கால அவகாசம் தான். தமிழரசுக் கட்சியின் வருடாந்த தேசிய மாநாட்டில் இரா. சம்பந்தன் தாயகம், தேசியம், தன்னாட்சி என்கிற அடிப்படை கோட்பாடுகளை மீண்டும் வலியுறுத்தி இயல்பு வாழ்வு நிலை நிறுத்தப்பட வேண்டுமென்பதன் அவசியத்தை முன்னிலைப்படுத்தியுள்ளார்.
படை வலுவோ அல்லது அரசியல் பலமோ இல்லாத நிலையில் எஞ்சியுள்ள 22 நாடாளுமன்ற உறுப்பினர்களை முன்வைத்தே அடுத்த கட்ட அரசியல் நகர்வினை மேற்கொள்ள முடியும்.
அதிலும் மக்களின் பங்களிப்போடு இணைந்த அரசியல் போராட்டங்களை நடத்தக்கூடிய சாத்தியமான களச் சூழலும் தற்போதைய ஆட்சியில் இல்லை.
முள்ளிவாய்க்கால் வரை, தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டினை உயர்த்திப் பிடித்துச் சென்ற 3 இலட்சம் மக்களும் சிதறுண்டு போயுள்ளனர். இன்னமும் முள்வேலி முகாம்களுக்குள் இலட்சத்திற்கும் மேற்பட்ட வன்னி மக்கள் வாழ்விழந்து வாடுகின்றனர்.
போராளிகள் என்று அரசால் இனங்காணப்பட்ட 11,000 இளைஞர்களில் 8000 பேர் பெண்கள்.
ஏற்கெனவே கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள், விசாரணை ஏதுமின்றி பல்லாயிரக்கணக்கில் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.
இவை தவிர தேர்தலிற்காக வன்னி முகாம்களிலிருந்து திறந்து விடப்பட்ட மக்கள் போக்கிடமின்றி அலைந்து திரிகின்றனர்.
யாழ். குடாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, குடாநாட்டின் மூன்றிலொரு நிலப் பரப்பை விழுங்கிக் கொண்டிருக்கும், இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்துபேசவில்லை.
“”எல்லோரும் ஒரு தாய் பெற்ற பிள்ளைகள்” என்று கூறும் ஞானோபதேசங்கள், வலி சுமந்த மேனியரின் இரணங்களை ஆற்றுப்படுத்தாது.
கடந்த ஆறு மாதங்களாக விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் தந்தையான 86 வயது நிரம்பிய திருவேங்கடம் வேலுப்பிள்ளையை பனாகொடை முகாமில் தடுத்துவைத்ததை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
மேற்குலக வல்லரசொன்றின் அழுத்தத்தால் 2008 மார்ச் 7ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு 20 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவி யலாளர் திஸநாயகம் 50,000 ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் காலம் நெருங்குவதால் ஏ9 பாதை தானாகத் திறக்கிறது. தென்னாசிய நாடுக ளுக்கே உரித்தான ஜனநாயகத் தேர்தல் வாக்குறுதிகள், பண வீக்கம் போல் பெருத்துச் செல்கின்றன.
அதேவேளை கறுப்புப் பணத்தை வெளியேற்றும் நோக்கில் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல் தொடர்பான சட்டம், தளர்த்தப்பட்டிருப்பதாக ஜே.வி.பி. யின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
பொதுவாகவே ஆட்சி மாற்றமேற்பட்டு புதிதாக ஆட்சி பீடமேறுவோர், திறைசேரி திவாலாகிப் போயுள்ளதென புலம்புவதன் மர்மம் இப்போதுதான் புரிகிறது.
சுயாதீன கருத்துக் கணிப்புகள், சரத்திற்கு ஆதரவான செய்திகளை வெளியிடுவதால் ஆட்சியாளர் மத்தியில் அசைவுகள் காணப்படுகின்றன. தேர்தல் நாள் நெருங்க, அசைவுகள் அதிர்வுகளாக மாறக் கூடும்.
மக்களை நம்பாமல் அரசியல்வாதி களின் கட்சி தாவல்களே தமக்குப் பலம் சேர்க்குமென எண்ணும் தலைமைகள் அதிகரிப்பது, மக்கள் ஜனநாயகத்திற்கு பொருத்தப்பாடான விடயமல்ல.
ஆகவே பெருந்துயர் சுமந்த, அவல வாழ்விற்குள் தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்களின் அத்தியாவசியமான உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.இதில் அரசியல் தீர்வு குறித்து உடனடியாக பேசப்பட வேண்டுமென்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகத் தோன்றுகிறது.
ரணிலோடு விடுதலைப் புலிகள் மேற்கொண்ட உடன்படிக்கையிலும் மக்களின் இயல்பு வாழ்வு குறித்தே பேசப்பட்டது.
அரசியல் தீர்வு பற்றியதான விடயத்திற்கு கால வரையறை நிர்ணயிக்கப்பட வேண்டுமென இலங்கை அரசு நிர்ப்பந்தித்தாலும் விடுதலைப் புலிகளின் தரப்பில் இயல்பு வாழ்வு நிலைநாட்டப்பட வேண்டுமென்கிற விவகாரமே முன்னிலைப்படுத்தப்பட்டது.
இதனடிப்படையில் இரா. சம்பந்தன் கூட்டமைப்பின் சார்பாக முன்வைத்த பத்துக் கோரிக்கைகளை சரத் பொன்சேகா ஏற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
சரத் வெற்றி பெற்ற பின்னர் இக் கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப் படுமாவென்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஆனாலும் உறுதியுரைகளையும் ஒப்பந்தங்களையும் சிங்கள தேசம் கிழித்தெறிந்த வரலாறுகளை நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை.
அரசியல் தீர்விற்கு இந்தியா உதவ வேண்டுமென கோரிக்கை விடும் இரா. சம்பந்தன் சரத் பொன்சேகாவிடம் விடுத்த 10 கட்டளைகளையும் நிறைவேற்ற இந்திய உதவியை நாடலாம்.
-இதயச்சந்திரன்-
நன்றி – வீரகேசரி வாரவெளியீடு
Comments