தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் ஊடகங்களுக்கு மீள் குடியேற்றம் தொடர்பில் செய்திகளை அரசாங்கம் வெளியிட்டு வருகின்றமையால் தற்போது முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அகதிகளின் நிலை குறித்து எதுவும் வெளிவருவதில்லை.
இந்நிலையில் வவுனியா முகாம்களில் தொடரும் டெங்கு தொற்றுக் காரணமாக பெருமளவான உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வவுனியாவில் செட்டிகுளம் பகுதியில் அருணாசலம், ஆனந்தகுமாரசுவாமி, இராமநாதன், கதிர்காமர், வலயம் - 4, வலயம் - 5 உட்பட்ட பிரதான முகாம்கள் தற்போதும் செயற்பட்டு வருகின்றன.
இந்த முகாம்களில் ஆனந்தகுமாரசுவாமி முகாமில் மட்டும் கடந்த ஒரு சில நாட்களில் 5ற்கும் அதிகமானோர் டெங்கு தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனைவிடவும் ஏனைய முகாம்களிலும் உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளதாக முகாம் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைவிடவும் வவுனியாவின் பாடசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளில் நூற்றுக்கணக்கானோர் தொற்றுக்களுக்கு உட்பட்டதாகவும் இவர்களில் 200ற்கும் அதிகமானோர் கடந்த மாதம் வவுனியா பிரதான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பலர் உயிரிழந்தாகவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு தொடர் நோய்த் தாக்கங்களை எதிர்கொண்டுவரும் முகாம் மக்கள் மற்றொரு பாரிய நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளமை தொடர்பில் எந்த ஊடகமும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. டிசம்பர் 31ம் திகதி முதல் முகாம்களுக்கான பணிகளை பல சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இடை நிறுத்தியுள்ளன என்பது தான் மக்களுக்கான அடுத்த பாரிய நெருக்கடி. அந் நிறுவனங்கள் தெரிவிக்கும் காரணம் தமக்கு முகாம்களுக்கான பணிக்களுக்கான கால எல்லை கடந்த மாதம் 31ம் திகதி வரை மட்டுமே என்பதாகும்.
ஒவ்வொரு பிரதான முகாம்களிலும் 25ஆயிரத்திற்கும் குறையாத மக்கள் வாழ்கின்றனர். தொண்டு நிறுவனங்கள் தமது பணியினை நிறுத்தியதனைத் தொடர்ந்து அவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தண்ணீர் பவுசர்களே நீர் வழங்கிவருகின்றன. இதனால் நீர்ப்பற்றாக்குறை பாரிய அளவில் ஏற்பட்டுள்ளது.
முகாம்கள் நீரேந்து பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மலசலகூடங்கள் நிறைந்து கழிவுகள் வெளியேறி மக்கள் வாழ்விடங்கள் ஊடாகச் செல்கின்ற நிலையும் காணப்படுகின்றது. இதனால் சூழல் மாசடைதல் சம்பவங்கள் அதிகரிக்கின்றன.
மக்களுக்கு அரிசி, மா, சீனி, பருப்பு ஆகிய பொருட்கள் மட்டும் உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்பட்டுவருகின்றன. ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த மரக்கறி வகைகளும் கடந்த 31ம் திகதி முதல் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. மேற் குறிப்பிடப்பட்ட பொருட்கள் மட்டும் வழங்கப்படுகின்ற போதிலும் அவற்றை சமைத்து உண்பதற்கான எரிபொருளோ அல்லது விறகோ பெறுவதற்கான ஏற்பாடு எதுவும் இல்லை. அண்மையில் உள்ள காட்டுப்பகுதிகளுக்கு விறகுக்குச் செல்லவும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. படையினரின் உதவியாளர்கள் விறகுகளை விற்பனை செய்கின்றனர். அவர்களிடம் பணம் கொடுத்து விறகு பெறுவதற்கு மக்களுக்கு உழைப்பில்லை, பணம் இல்லை. இந்நிலையில் அவர்கள் தமது பசியைப் போக்குவது எப்படி?
இன்னும் பெருமளவான நெருக்கடிகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்ற கைக்குழந்தைகள் முதல் முதியோர் வரை தொற்று நோய்த் தாக்கத்தில் இருந்தும் ஏனைய தமது அடிப்படைத் தேவைகளில் இருந்தும் தம் உயிர்களைக் காத்துக் கொள்ளத்துடிக்கின்றார்கள். ஏழைகளை இரட்சிக்க எவர் வருவார் இந்த உலகத்திலே
- இராவணேசன் -
Comments