மக்களுக்குக் குழப்பமில்லை

தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளுக்கொரு திசையில் இன்று திசைமாறிப் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றது.

பூனை இல்லாத வீட்டில் எலி துள்ளிக்குதித்து விளையாடுவதுபோல், புலிகள் இல்லையென்று சொல்லப்படும் கருத்துக்களால் உள்வாங்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர், தமிழ் மக்களின் ஆணைக்கு விரோதமாக தங்கள் எண்ணம்போல் செயற்படவும் தொடங்கியிருக்கின்றார்கள். மக்களின் கோரிக்கைக்கு விரோதமாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்படத் தொடங்கிய விடுதலை அமைப்புக்களை இனங்கண்டுகொண்டு ஆரம்பித்திலேயே விடுதலைப் புலிகள் அவர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தினார்கள்.

எனினும், காலமாற்றத்தில் தமிழ் மக்களின் கோரிக்கையினைப் புரிந்துகொண்ட இப்போராட்ட அமைப்புக்களில் இருந்த சிலர் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பின்னர் திரும்பியிருந்தனர். இந்த நிலையில்தான், தமிழ் மக்களினதும், விடுதலைப் புலிகளினதும் ஆணையை ஏற்றுக்கொண்டு கடந்த 2004 ஏப்ரலில் நடந்த சிறீலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி பேதங்களின்றி இவர்களை ஒன்று சேர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சி ஒன்றை உருவாக்கி, இவர்களை தேர்தலில் போட்டியிட வைத்து, இராணுவம் மற்றும் இராணுவ ஒட்டுக்குழுக்களின் அச்சுறுதலுக்கு மத்தியிலும் பெரும் வெற்றியை அந்த மக்கள் இவர்களுக்கு பெற்றுக்கொடுத்திருந்தார்கள்.

காரணம், தமிழ் மக்களின் கோரிக்கையான தமிழீழத் தனியரசு எனும் கொள்கையை ஏற்றுக்கொண்டு, அதற்காக ஆயுத வழியில் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக அங்கீகரித்ததனாலேயே மக்கள் இவர்களையும் ஏற்றுக்கொண்டார்கள். அந்த வகையில் 'தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மூவரும், அகில இலங்கைத் தமிழ் கொங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரும், ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த நால்வரும், ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தைச் சேர்ந்த இருவரும் என கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரும் கட்சி சாராத நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரும் என மொத்தம் 22 பேர் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறீலங்கா நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவர்களில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சந்திரநேரு போன்றவர்கள் தமிழ் மக்களின் விடிவிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டமையாலேயே இராணுவ புலனாய்வு மற்றும் ஒட்டுக்குழுக்களால் படுகொலை செய்யப்பட்டனர். எனினும், அந்த இடங்களை தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உறுப்பினர்களே மீண்டும் நிரப்பியிருந்தனர். இப்போது முள்ளிவாய்க்காலில் தமிழீழத் தனியரசுக்கான விடுதலைப் போராட்டம் முற்றுப் பெற்றுவிட்டதாக வெளியிடப்பட்ட சிறீலங்காவின் கருத்துக்களும், அடுத்த ஜனாதிபதிக்கான கதிரைப் போட்டிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் ஆட்டம்காண வைத்துள்ளது. தமது கொள்கை, தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு தங்கள் விருப்பம்போல் அல்லது ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுவதுபோன்று செயற்படத் தொடங்கியுள்ளனர்.

இதனால், தாங்களும் குழம்பி, மக்களையும் இவர்கள் குழப்ப முனைகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிக்கொள்ளாமல் தங்கள் விருப்பம்போல் நடந்துகொள்ளும் இவர்களின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் பாரிய செயற்திட்டங்கள் இருக்கின்றன என்பது மறைப்பதற்கில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகினால் தமிழ் மக்களால் இவர்கள் அங்கீகரிக்கப்படமாட்டார்கள் என்பது தெரிந்திருப்பதனாலேயே, கூட்டமைப்பிற்குள் இருந்துகொண்டே தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று சிங்கள இனவெறியாளர்களின் வெற்றிக்கு வழிவகுப்பதற்கு இவர்கள் முனைந்திருக்கின்றனர்.

பொன்சேகாவை தோற்கடிக்க சிவாஜிலிங்கம்?

ஆனால், தமிழ் மக்கள் மிகத் தெளிவாகவே இருக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகால அரசியல் அனுபவப்பட்டறிவு அந்த மக்களை குழப்பமடையாமல் அடுத்து என்ன நடக்கும் என்பதை புரிந்துகொள்ளும் அளவிற்கு மாற்றியிருக்கின்றது.

எனவே, கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கவலை வெளியிட்டுள்ளது போல், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிடும் மாறுபட்ட கருத்துக்களாலும், செயற்பாடுகளினாலும் இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல உலகம் வாழ் தமிழர்களே குழப்பமடைந்திருப்பதாக கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருக்கின்றது. இங்கே, குழப்பமடைந்திருப்பது மக்களல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே. அவர்களே தெளிவடைய வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

ஆசிரியர்-தலையங்கம்

நன்றி:ஈழமுரசு

Comments