முள்ளை முள்ளால் எடுத்தல்

இரு தரப்புடனான நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தயாராகிவிட்டது. மகிந்தவும் சரி, சரத் பொன்சேகவும் சரி தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்றை வழங்கிவிடக் கூடியவர்கள் அல்ல.

இருவரும் ஒன்றிணைந்துதான் தமிழினப் படுகொலையைப் புரிந்தவர்கள். இவர்களிடம் தமிழ் மக்களுக்கான நியாயத்தினைத் தேடுவதென்பது இருட்டறையில் கறுப்புப் பூனையைத் தேடும் குருடனின் நிலைக்கு ஒப்பானதுதான். ஆனால், இன்றைய காலத்தில் மகிந்த அரசின் ஆட்சியை அகற்றவேண்டிய ஒரு அவசியதேவை தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. கூட்டுக் குடும்ப ஆட்சியாக நடைபெறும் இவர்களின் ஆட்சியில் தமிழ் மக்கள் மிக மோசமான அவலங்களையும், அழிவுகளையும் சந்தித்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த அவலங்களில் இருந்து சற்று மீள்வதற்கு தமிழ் மக்களுக்கு ஒரு கால அவகாசம் தேவைப்படுகின்றது.

அந்தக் கால அவகாசத்தை பெறுவதாயின் ஆட்சி மாற்றத்தின் தேவை இன்று இன்றியமையாததாக இருக்கின்றது. இந்த ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தக் கூடியவர்களாக தமிழ் மக்கள் இருக்கின்றார்கள் என்பதுதான் இங்கு மிகவும் முக்கியமானது. கடந்த சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் மக்கள் வாக்களிக்காமையே மகிந்தவின் வெற்றிக்கு காரணம் என சொல்லப்படுகின்றது. விடுதலைப் புலிகளே தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்தார்கள் என்று புரிந்துகொள்ளாமல் புலம்புகின்றவர்களும் இருக்கின்றார்கள்.

கடந்த தேர்தலை விடுதலைப் புலிகள் புறக்கணித்தார்கள் என்பதல்ல, விடுதலைப் புலிகள் ஒதுங்கியிருந்தார்கள் என்பதே உண்மை. விடுதலைப் புலிகள் ஒதுங்கியதால், அவர்களை தங்கள் தலைமைத்துவமாக ஏற்றிருந்த தமிழ் மக்களும் தேர்தலில் வாக்களிக்காமல் ஒதுங்கிக்கொண்டார்கள். அதனால், தமிழ் மக்களின் வாக்குகள் இன்றி ரணில் தோல்வியைத் தழுவ, சிறீலங்கா ஜனாதிபதி வரலாற்றில் மிகக் குறைந்த வாக்குகளுடன் மகிந்த ராஜபக்ச வெற்றியைப் பெற்றார். சமாதானப் பிரியராக ஆரம்பத்தில் தன்னைக் காட்டிக்கொண்ட மகிந்த மிக வேகமாவே, போர் நிறுத்தத்தை மீறி, உடன்படிக்கையை கிழித்தெறிந்து, மிகமோசமான இன அழிப்புப் போரை நடத்திமுடித்தார்.

இலட்சக்கணக்கான மக்கள் இதனால் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர். ஆயிரக் கணக்கான போராளிகளும், விடுதலை விரும்பிகளும் சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்த மக்களையும் போராளிகளையும் விடுவிக்க வேண்டிய அவசியம் இன்று தமிழ் மக்களுக்கு எழுந்துள்ளது. அதனை இந்தத் தேர்தல் மூலம் சாத்தியமாக்கிக்கொள்ள தமிழ் மக்களுக்கு ஒருவாய்ப்புக் கிடைத்துள்ளது. சரத் பொன்சேகாவுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடன்பாடு காணப்பட்ட முக்கிய விடயங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகளின் விடுதலை முக்கியமானதாக உள்ளது. இவர்களின் விடுதலைக்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்வதை தமிழர் கூட்டமைப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது.

அத்துடன், உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதும் முக்கியமானதாகும். யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டு, தமிழ் மக்களின் நிலம் நிரந்தரமாகப் பறிக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் மூன்றில் ஒரு பகுதி பிரதேசங்கள் உயர் பாதுகாப்புவலயங்களாகவே இருந்துவருகின்றன. இவற்றை காலம் தாழ்த்தாது உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனவே, ஆட்சி மாற்றம் ஒன்றே இதற்கு வழிவகுக்கும். அதற்காக சரத் பொன்சேகா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றிவிடுவார் என்றோ, தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கிவிடுவார் என்றோ யாரும் நம்பத்தேவையில்லை.

இது ‘முள்ளை முள்ளால் எடுக்கும்’ ஒரு நடவடிக்கை. தமிழ் மக்களின் உயிர்வாழ்தலுக்கு பெரும் அச்சுறுத்தலாகிவிட்ட மகிந்த எனும் முள்ளை அகற்றுவதற்கு, தமிழ் மக்கள் இன்னொரு முள்ளான சரத் பொன்சேகவை கையில் எடுக்கவேண்டியது விரும்பியோ விரும்பாமலோ இன்றைய காலத்தின் தேவையாகியுள்ளது. இலங்கையில் தமிழினப் படுகொலையில் ஈடுபட்டிருந்த இந்திய இராணுவத்தை வெளியேற்ற, 1989 காலப்பகுதியில் இதேபோன்றதொரு நடவடிக்கையை விடுதலைப் புலிகளும் எடுத்திருந்தார்கள். அப்போது, இந்திய இராணுவ முள்ளை அகற்றுவதற்கு, தமிழ் மக்களுக்கு எந்தவித தீர்வையும் தரமாட்டார்கள் என்று தெரிந்துகொண்டும் விடுதலைப் புலிகள் பிறேமதாசா அரசுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு அந்த முள்ளை அகற்றினார்கள் என்பது வரலாறு. இந்த வரலாற்றை தமிழ் மக்கள் இன்றைய காலத்தில் புரிந்துகொள்வதே சாலச்சிறந்தது.

ஆசிரியர்-தலையங்கம்

நன்றி:ஈழமுரசு

Comments