வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அவசியமும் நாடுகடந்த அரசின் பின்னணியும்

பேராசிரியர் தீரன். ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் இவர் அதிகளவில் பிரபலம் பொறாதபோதும், தமிழீழத் தேசியத்திற்காகவும், ஈழத் தமிழ் மக்களுக்காகவும் இன்றுவரை அயராதுபாடுபடுபவர். 1989ம் ஆண்டளவில் பாட்டாளி மக்கள் கட்சியை (பா.ம.க) உருவாக்கி அதன் தலைமைப் பொறுப்பை வகித்த பெருமை இவரையே சாரும்.

தமிழக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். ராஜீவ் காந்தி கொலையின் பின்னர், தமிழகத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாடு அதாவது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுவதோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசுவதோ குற்றம் என்பதுபோன்று மக்கள் அச்சப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவது பயங்கரவாதமாக, துரோகமானதாக பார்க்கப்பட்ட நிலையில், 1992ம் ஆண்டளவில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை மூன்று நாட்கள் நடத்தி, மாநாட்டின் முடிவில் தமிழீழத் தேசியத் தலைவரின் உருவப்படங்களைப் பெருமளவில் தாங்கிய பிரமாண்டமான பேரணியை நடத்தி தமிழக மக்களின் உணர்வலைகளை ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக மீண்டும் திருப்புவதில் பெரும் வெற்றி கண்டவர்.

1995ம், 1997ம் ஆண்டுகளிலும் இவ்வாறான மாநாடுகளை நடத்தி தமிழக மக்களின் உணர்வலைகளை ஈழத் தமிழர்கள் பக்கம் வைத்திருப்பதில் பெரும்பங்காற்றியவர். இதனாலேயே, 1998ல் பா.ம.கவின் தலைவர் பதவியில் இருந்து இவர் வெளியேற வேண்டிய நிர்ப்பந்த நிலையும் ஏற்பட்டது. ஆனாலும், ஈழத் தமிழர்களுக்கும், தனித் தமிழீழம் அமையவேண்டும் என்பதிலும் இன்னும் உறுதியோடு செயற்பட்டு வருகின்றார். அதற்காக பல நெருக் கடிகளைச்சந்தித்தபோதும், உறுதியோடு அதற்கான பணிகளை முன்னெடுக்கின்றார். தற்போது பசுமைத் தமிழகம் எனும் அமைப்பை உருவாக்கி விவசாயிகளுக்காக அரும்பணியாற்றி வருபவர். அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட இவரை ஈழமுரசு சந்தித்து கலந்துரையாடியது.

இதன்போது தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பும், அதற்கு முற்றிலும் முரணான வகையில் நகரும் நாடு கடந்த அரசின் செயற்பாடும் குறித்து தனது காரசாரமான கருத்துக்களை முன்வைத்தார். நாடு கடந்த அரசின் செயற்பாட்டுக்குப் பின்னால் பல வலிமையான கரங்கள் இருக்கின்றன என்று குற்றம்சாட்டினார். அவருடான சந்திப்பை ஒரு பேட்டி வடிவில் அல்லாமல், அதனை தொடர் கட்டுரை வடிவில் இங்குதருகின்றோம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது, 1976ல் தந்தை செல்வா உட்பட தமிழ் அரசியல் கட்சித்தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி போட்ட தீர்மானம். அந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை கூட அரசியல் தலைவர்கள் போட்டதற்கு ஒரு நெருக்கடி அல்லது பின்புலம் இருக்கிறது. அந்தப்பின்புலம் என்னவென்றால் சிங்கள இனவெறி அரசிற்கு எந்த மொழியில் பதில்சொன்னால் புரியுமோ? அந்தமொழியில் பதில்சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 30 ஆண்டு காலமாக அரசியல் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட நாடாளுமன்ற ஆர்ப்பாட்டங்கள் போராட்ட வடிவமென்பதெல்லாம் அந்தச் சிங்கள இனவெறி அரசிற்கு முன்னால் எடுபடமுடியாது என்ற காரணத்தின் அடிப்படையில் இனவெறி அரசிற்கு முன்னால் இளைஞர்களும், மாணவர்களும் சிந்தித்து ஒரு முடிவிற்கு வந்தனர்.

அதாவது சிங்களவனோடு இனி வாழ முடியாது. அவன் நம் இனத்தை ஒடுக்குகிறான். அதற்கு இராணுவத்தினரைப்பயன்படுத்தி தமிழினத்தை ஒழித்துவரக் கூடிய அந்தச் சிங்களவனுக்கு அவர்கள்பாணியிலே ஆயுதத்தால்தான் பதில்சொல்லவேண்டும் என்ற அடிப்படையில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டு மென்று சொல்லிமாணவர்களும், இளைஞர்களும் முன்வருகிறார்கள். அதற்கு அன்று மாணவராக இருந்த நம்முடைய தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடைய முயற்சி, அவரைப்போல்வந்திருக்கக்கூடிய குழுக்களெல்லாம் அந்த முடிவிற்கு வந்து மக்களிடையே அந்தப்போராட்ட வழிகள் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

மக்களிடம் இதற்கு ஒரு பெரிய வரவேற்பிருக்கிறது. ஏனென்றால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள். இதற்கு இந்த அரசியல் தலைவர்களால் ஒன்றும் செய்யமுடியாத பொழுது இளைஞர்களுடைய ஆயுதப் போராட்டம்தான் அவர்களிற்கு ஒரு சரியான பதிலடியாக இருக்கமென்று கருதி, அன்று மக்கள் இளைஞர்கள் மீதும், மாணவர்கள் மீதும் ஒரு பெரிய ஈடுபாடும், ஆர்வத்தையும் காட்டினார்கள். நம்முடைய தேசியத் தலைவர் அவர்கள் மிகச் சிறப்பாக இந்த ஆயுதப்போராட்டத்தை வளர்த்தெடுத்துக்கொண்டு வருகின்ற அந்தக் காலகட்டத்திலேதான், மக்களிடம் அதற்கான செல்வாக்கிருந்த சூழ்நிலையில்தான் அரசியல்கட்சித் தலைவர்கள் மக்கள் விரும்பக்கூடிய இந்த தனித்தாயக தமிழீழ தனியரசு அமைப்பது ஒன்றுதான் நாம் மக்களிடம் செல்வாக்கைப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கருதி 1977ல் ஒரு தீர்மானத்தை பண்ணாகம் என்ற இடத்திலே நிறைவேற்றுகிறார்கள்.

அந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினுடைய உள்ளடக்கம் என்னவென்றால், வடக்கு - கிழக்கு மாகாண எல்லைப்பரப்புக் கொண்ட அந்த தமிழீழ எல்லைப்பரப்புப் பகுதியில் வாழக்கூடிய தனித்துவமான தமிழ்த்தேசிய இனம் தன்மானத்தோடு வாழ்வதற்கு தன்னுரிமையுடன் கூடிய ஒரு தனித் தாயக தமிழீழ தனியரசு அமைக்கப் பாடுபடவேண்டும். அதற்காக நாம் எதிர்காலத்தில் போராடவேண்டும் என்பதுதான். அடுத்த ஆண்டு (1977ல்) பொதுத்தேர்தல் இலங்கையில் நடைபெறுகிறது. அந்தப் பொதுத் தேர்தலில் தமிழ் அரசியல் தலைவர்கள் இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்துத்தான் போட்டியிடுகிறார்கள். அன்று 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெறுகிறார்கள். அதன்மூலமாக அமிர்தலிங்கத்திற்கு இலங்கையினுடைய நாடாளுமன்ற வரலாற்றிலே முதல்முறையாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற வாய்ப்பும் கிடைக்கிறது.

இதன்பின்னர், இந்தத் தாயகப் போராட்டமானது ஆயுதப் போராட்டமாக 30 ஆண்டுகளுக்கு மேலாக நமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களாலே மிகச் சிறப்பான எந்தவொரு விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் காணமுடியாத அளவிற்கு முன்னெடுக்கப்பட்டுவந்தது. ஒரு கெரில்லாப்படை தரைப்படையை மட்டும் வைத்திருக்கும். ஆனால், ஒரு நாடு எப்படி விமானப்படை, கடற்படை, தரைப்படை என முப்படைகளையும் கொண்டு இயங்குமோ அதுபோன்று, முப்படைகளையும் தன்னகத்தே கொண்டு சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஒரு சரியான பதிலடியை அவ்வப்பொழுது நம்முடைய தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரள் அவர்கள் கொடுத்துக்கொண்டு வந்தார்கள்.

இந்தப் போராட்டத்திலேகூட அவர்கள் வெற்றிகளைத்தான் சந்தித்துவந்தார்கள். இந்தியாவினுடைய அமைதிப்படையை விரட்டியடிப்பதற்கு நம்முடைய தேசியத் தலைவருடைய ஆதரவைப் பெற்றுத்தான் சிறீலங்கா அவர்களை வெளியேற்ற முடிந்தது. இது வரலாறு. தங்களுக்கு நெருக்கடி வருகிற நேரத்திலே சிங்கள இனவெறி அரசானது நம்முடைய தலைவர் அவர்களையும், அவருடைய விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால், தனியரசுக் கோரிக்கைக்காக விடுதலைப் புலிகள் எடுக்கின்ற முன்னெடுப்புக்களை யெல்லாம் சிங்கள இனவெறி அரசு யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் அலட்சியப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

இந்தப் போராட்டம் வெற்றிபெற்று விடக்கூடாது என்பதற்காக சமாதானப் பேச்சுக்களைக்கூட குழப்பியிருக்கின்றார்கள். சமாதான காலத்தில் பிரச்சனைக்குத் தீர்வுகாண் பதற்குப் பதிலாக சிறீலங்கா அரசு ஆயுதங்களை வெளிநாடுகளிலே வாங்கிக் குவிப்பதற்கும், சமாதானப் பேச்சுவார்த்தைக்கு புலிகள் வரவில்லை, அவர்கள் பயங்கரவாதிகள். ஆயுதத்தின்மீது பற்றுக்கொண்டவர்கள் என்றெல்லாம் வெளியுலகத்திற்கு அவதூறு பரப்புவதற்கும் பயன்படுத்தியது. சிலநேரங்களில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறது. ஆனால் எந்தச் சமாதானப் பேச்சுவார்த்தையையும் அவர்கள் மதித்துச் செயற்பட்டதாக வரலாறில்லை.
அத்துடன், சிறீலங்கா எப்போதும் இந்தியாவிற்கு ஆதரவாகச் செயற்பட்டதில்லை.

சிறீலங்கா எப்பொழுதுமே சீனாவிற்கு ஆதரவாகத்தான் இருந்தது. இந்தியாவின் பிரதேசங்களை ஆக்கிரமிப்புச் செய்தது சீனா. மண்ணை இழந்தது இந்தியா. ஆனால் ஒரு நியாயத்தின் பக்கம் நின்றும் பார்க்காமல் அல்லது பக்கத்தில் இருக்கும் நாடு என்றுகூடப் பார்க்காமல் சிறீலங்காவானது சீனாவைத்தான் ஆதரித்தது. அதேபோல் பாகிஸ்தான் போர்கள் நடைபெற்றிருக்கின்ற காலகட்டங்களிலேகூட பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு எதிராகவும்தான் சிறீலங்கா நடந்திருக்கின்றதே தவிர, இந்தியாவினுடைய நியாயங்களை உணர்ந்து அவர்கள் இந்தியாவிற்குச் சாதகமாக நடந்ததில்லை.

இவையெல்லாவற்றையும் இந்தியாவினுடைய பிரதமராக இருந்து கவனித்துக் கொண்டிருந்த இந்திரா காந்தி சிறீலங்கா அரசாங்கத்தை தனது கட்டுக்குள்ளே வைத்திருக்க வேண்டும், சிறீலங்கா மீது ஒரு அச்சுறுத்தலை வைக்கவேண்டுமென்ற அடிப்படையில் ஒரு முடிவிற்கு வருகின்றார். அங்கிருக்கக்கூடிய விடுதலைப் போராளிகளிற்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து அதன்மூலமாக அங்கு ஒரு நெருக்கடி வந்தால், சிங்கள அரசானது இந்தியாவின் உதவியை நாடும் என்ற முடிவிற்கு வருகின்றார். ஏனென்றால் ஏற்கனவே ஜே.வி.பி பிரச்சினையின்போது இந்தியாவின் உதவியை சிறீலங்கா நாடியிருக்கின்றது. எனவே, அவ்வாறு நாடுவார்கள் என்ற அடிப்படையிலேயே போராளிகளுக்கு பயிற்சி கொடுக்கின்றார். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்திரா காந்தி பயிற்சி கொடுக்க முன்வரவில்லை.

ஏனைய இயக்கங்களிற்குத்தான் பயிற்சி கொடுக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தை மட்டும் தனிமைப்படுத்திவிட்டு பிற குழுக்களிற்கு இந்திய இராணுவத்தின் மூலமாக பயிற்சி கொடுக்கின்ற ஏற்பாடுகளை செய்தார்கள். அந்த நேரத்தில் தமிழ்நாட்டிலே எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார். அப்பொழுது, தேசத்தின் குரல் என்று தேசியத் தலைவரால் பாராட்டப்பட்ட மறைந்த அன்ரன் பாலசிங்கம் போன்றவர்களால் அந்தப் பிரச்சினையானது எம்.ஜி.ஆர் அவர்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு, இந்தியாவினதும், இந்திய உளவுத்துறையினதும் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படுகின்றது.

அதன்பிறகுதான் விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்கும் பயிற்சி கொடுக்கின்ற ஒரு முடிவிற்கு இந்திராகாந்தி வருகிறார். இது அப்பொழுது நடைபெற்ற ஒரு சம்பவம். இந்திய அரசாங்கமானது போராளிக்களுக்கு பயிற்சி கொடுத்தமையானது ஒருவகையில் நன்மையாகவும் இருந்தது. இன்னொருவகையிலே அது தீமையாகவும் இருந்தது.

(அடுத்த இதழில் தொடரும்...)

நன்றி:ஈழமுரசு

Comments