தமிழீழக் கோரிக்கை உலக அரங்கில் வெற்றி பெறும் வாய்ப்பு ஏன் தனித்துவம் பெறுகிறது? பேராசிரியர் தீரன்

“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்”
[TE_Oath_front+small.jpg]


வட்டுக்கோட்டைத் தீர்மானம் (வ.கோ.தீ).

இலங்கை அரசு, 1948-ல் சுதந்திரம் அடைந்தது முதல் தமிழினப் படுகொலையைத் தனது “தேசியக் கொள்கை” ஆகக் கடைபிடித்தது எனலாம். தமிழர்களின் சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை முன்னிட்டு எடுக்கப்பட்ட எல்லா அரசியல் முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில், 1976ஆம் ஆண்டில் “ஈழத் தமிழர்களின் அபிலாசையும் அதன் இறுதித் தீர்வும் ஒரு சுதந்திர இறையாண்மை பெற்ற தமிழீழமே” என உறுதி மொழிந்தது. இதை ஏற்கும் பொருட்டு 1977 ஆம் ஆண்டுத் தேர்தலை ஓர் கருத்துக் கணிப்பாகப் பாவித்து இக்கொள்கைக்குத் தமிழ் மக்களிடம் பேராதரவைப் பெற்றது.

தமிழீழக் கோரிக்கையை அடக்கும் சட்டங்கள்

தமிழீழக் கோரிக்கைக்குப் பதிலடியாக, இலங்கையரசாங்கம் 1979-ன் பயங்கரவாத தடைச்சட்டங்களின் மூலம் நாட்டைப் பிரிக்க முற்படுதல் ஓர் பயங்கரவாத நடவடிக்கை எனவும், இலங்கையின் அரசியல் யாப்பின் 6வது சட்டத்திருத்தத்தின் கீழ் இலங்கைக்குள்ளோ, வெளியிலோ பிரிவினைவாதத்தை ஆதரித்தல் ஒரு பாரதூரமான குற்றச்செயல் எனக் கொண்டு வருவதன் மூலம், தமிழர்கள் தமது ஜனநாயக வழி அரசியல் உரிமையை தமது தேசிய பிரச்சனைக்கு உபயோகிக்க முடியாதவாறு தடை விதித்தது.

தமிழரின் ஆயுதப் போராட்டத்தின் காரணிகள்

ஜனநாயக வழிமுறைகள் யாவும் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டதை உணர்ந்த இளம் சமுதாயத்தினர், தமது அரசியல் குறிக்கோள்களை அடைய வேறுவழியின்றி, மூத்த அரசியல்வாதிகளின் ஆலோசனைகளையும் மீறி, ஆயுத வழிப் போரில் இற்ங்கினர். இப்போராட்டத்தில், வே.பிராபகரனின் தலைமையில் நடைபெற்ற விடுதலை புலிகள் இயக்கம் முன்னிலையில் நின்று மக்களின் “பாதுகாவலன்” என முழு மனதான ஆதரவைப் பெற்றது.

ஈழப் போராட்டத்தில் சர்வதேச நிர்பந்தங்கள்

ஆயுதப்போராட்டம் நடைபெற்ற 33 ஆண்டுக் காலத்தில், சர்வதேசத்தால் ஈழமக்கள் மீது திணிக்கப்பட்ட தீர்வுத்திட்டங்களான 1985 திம்பு பேச்சு வார்த்தை, 1987 இராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம், 2003 ஆஸ்லோ உடன்பாடு அனைத்தும் தோல்வியிலே முடிந்தன. திம்புவில் “சுயாட்சி எனவும்”இ இராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பு எனவும், ஆஸ்லோவில் “ உள்ளக சுயநிர்ணய உரிமை” எனவும் பேச்சுவார்த்தை என்ற மாயையில் தமிழர் போராட்டத்தின் வலுவை மழுங்கடிக்க முயன்றதல்லாது, சர்வதேச நாடுகள,; சமாதானத்தை நோக்கி வேறொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 2009 நான்காம் கட்ட ஈழப்போர் இறுதிக்கட்டத்தில், சர்வதேச நாடுகள் விடுதலைப் புலிகளை, தமிழீழக் கொள்கைகளை கைவிட்டு சரணாகதி அடையும்படி வற்புறுத்தின. ஆனால் விடுதலைப் புலிகளோ, முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை மௌனித்தார்களே தவிர, ஒருபோதும் சரணாகதி அடையவில்லை. சர்வதேச நாடுகள், தங்களின் நடுநிலை தவறிய காரணத்தால், முள்ளிவாய்க்கால் போரில் ஐ.நா.வினால் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்டப் பகுதிகளில் தஞ்சம் புகுந்த அப்பாவித் தமிழ்மக்கள் 50,000 க்கு மேற்பட்டோரைக் கொன்று குவித்த சிங்கள் இனவெறி அரசின் இனஅழிப்பிற்குத் துணைப் போன களங்கத்தைத் தேடிக் கொண்டன.

விடுதலைப் போராட்டமும் பயங்கரவாதமும்

2001-ல் அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டைக்கோபுர தாக்குதலின் பின்பு, சர்வதேச சமூகம் தமதுஅரசியல் சூழ்ச்சிகளுக்கு அமையும் விதத்தில், தாம் தெரிந்தெடுத்த சில விடுதலைப் போராட்டங்களை, பல அரசியல் விமர்சகர்களின் கொள்கைகளையும் மீறி, பயங்கரவாதமென முத்திரை குத்தினர். இதனால் தாம் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் என்ற போர்வையில், தேசிய விடுதலைப் போராட்டங்கள் பலவற்றை, அரச பயங்கரவாதத்தைக் கடைப்பிடிக்கும் அரசுகள், நசுக்க முற்பட்டன.

மே,2009-ல் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் யுத்தமானது விடுதலைப்புலிகளுக்கு எதிராக, இலங்கை அரசு வெற்றி ஈட்டியது என்ற சாயலை தோற்றுவித்தாலும், சர்வதேச மட்டத்தில், காரசாரமான கேள்விகளை எழுப்பியது. 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில், தேசியத் தலைவர் பிரபாகரனின் வேண்டுகோளுக்கிணங்க, புலம் பெயர்ந்த தமிழர்கள், முள்ளிவாய்க்கால் போர்வரை கைவிடாது பாதுகாத்து வந்த தமிழீழக் கொள்கையை, உலகின் பல்வேறு சமூகங்களிடமும் பரப்பி ஆதரவு தேட முன்வந்தனர்.

கருத்துக் கணிப்பின் மூலம் சுதந்திரம்

1990-ல் இருந்து சுலோவினியா, எரித்திரியா, கிழக்கு தீமூர், கோசோவோ உட்பட பன்னிரெண்டு நாடுகள் மேற்கூறிய கருத்துக் கணிப்பு வழியில் தமது சுதந்திரங்களை அடைந்தனர். இதனால்தான், வட்டுக்கோட்டைத் தீர்மானமும் இந்த அடிப்படையில் கையாளப்பட்டு வருகிறது.

தமிழீழக் கோரிக்கையின் பின் உள்ளடங்கியிருக்கும் நியாயத்தன்மை

கீழ்கண்ட விபரங்களின் மூலம் வேறு சில நாடுகளின் சுதந்திரத்திலும் பார்க்க தமிழீழம் சுதந்திரம் அடையும் வாய்ப்பு மேலோங்கி நிற்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதோடு, தமிழீழக் கோரிக்கையில் எல்லாவற்றிற்கும் மேலாகக் கொண்டுள்ள தனித்தன்மையையும் அறியலாம்.

அ). இனப்படுகொலைகள் நிரூபிக்கப்படுவதற்கான ஆதாரங்கள்

1948-முதல் (இலங்கை சுதந்திரம் அடைந்த வருடம்) தமிழர்கள் தமது வாழ்வாதாரங்களை ஒவ்வொரு துறையிலும் இழக்கத் தொடங்கினர். பூர்வீக தமிழ்; பிரதேசங்களில் சிங்கள குடியேற்றத்தின் மூலம் மக்கட்தொகையியலையும் அமைதியையும் அழிப்பதால் பிரதேசவழி இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. 1949-ல், பத்து இலட்சம் தமிழரின் வாக்குரிமைப் பறிக்கப்பட்டு, அவற்றில் பலர் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டமையுடன் சட்ட பூர்வமான அரசியல் படுகொலை ஆரம்பமானது. 1956-ல் கொண்டுவரப்பட்ட “சிங்களம் மட்டும்” சட்டம் கலாச்சாரப் (மொழி) படுகொலையின் தொடக்கமாகும். 1958-ம் (அதன் பின்பும்) நடைபெற்ற இனக்கலவரம் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார சரீர இனப்படுகொலையாகும்.

பல்வேறு சமூகங்களை உள்ளடக்கிய இலங்கையில், 1972 –ல் கொணரப்பட்ட குடியரசு யாப்பின் மூலம், இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடாக பிரகடனப்பட்டது. 1970-லும் அதன் பின்பும் தமிழ் மாணவரின் மேல்நிலைக்கல்வி முடக்கப்பட்டது. 1981-ல் அரசின் அமைச்சர்களும், இராணுவ போலிஸ் படையினரும் சேர்ந்து யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை எரித்தமை, அரசின் இன அழிப்பு நடவடிக்கையின் உத்தேசத்தை வெளிப்படையாக எடுத்துக் காட்டியது.

பல்வேறு இலங்கை அரசாங்கங்களால் தொடர்ந்து வௌ;வேறு வகைகளில் நடாத்தப்பட்ட இனப்படுகொலைகளை, நாகர்கோவில் விமானக் குண்டுத் தாக்குதல், செம்மணிப் புதைகுழிகள் போன்ற எண்ணிலா நிகழ்வுகள் சாட்சி பகரும். கடந்த சில தசாப்தங்களாக சிங்கள இராணுவத்தால் தொடர்ந்து நடத்தப்பட்ட கொலை, கற்பழிப்பு, சித்திரவதை, காணாமற்போதல் ஆகிய யாவும் ஓர் “சாதாரண நாளாந்தர நிகழ்வு” களாகின.

1958, 1977, 1983-ல் நடைபெற்ற இனக்கலவரங்கள் “உலகப் புகழ்” பெற்ற போதும், அதைவிடப் பல கலவரங்கள் அரசினால் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டு தமிழரின் அழிவை உறுதிபடுத்தின. இவற்றால் பல தமிழர்கள் இடம் பெயர்ந்ததோடு (இறந்தவர்களைவிட) எஞ்சியிருந்தவர்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாக தப்பியோடினர். இனக்கலவரங்களின் மூலம் இலங்கையரசு, கொழும்பில் வாழ்ந்த தமிழர்களை அவர்களது வீடு வாசல்களையும் இழக்கச் செய்தது.

முள்ளிவாய்க்கால் போர் முடியுமுன்னரே போர் பிரதேசங்களுக்கு வெளியே வாழ்ந்த தமிழ் மக்கள் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு அவர்களது நடமாட்டம் தடுக்கப்பட்டது. கொழும்பில் இருந்த தமிழர்கள் சட்டவிரோதமான கைதுகளுக்கும், மிரட்டல்களுக்கும், இடப்பெயர்வுகளுக்கும் உள்ளாகினர்.

விடுதலைப்போரின்போது 35,000 விடுதலைப் புலிகளும், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களும், சர்வதேச விதிமுறைகளையும் மீறிக் கொலை செய்யப்பட்டனர். பொதுமக்களின் மீது, பாஸ்பெரிக் (நச்சு) குண்டுகளும், கொத்துக் குண்டுகளும் நாளுக்கு நாள் வீசப்பட்டன. ஐ.நா-வினால் “பாதுகாக்கப்பட்ட பிரதேசம” எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் 50,000 – ற்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் உட்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கப்பட்டனர்.

போர் முடிவுற்றபின் மூன்று இலட்சம் பொது மக்கள் உணவு, குடிநீர், மருந்து, கழிப்பறை வசதிகள் ஆகிய அடிப்படை வசதிகளின்றி மாதக் கணக்கில் முள்வேலிக்குள் அடைக்கபட்டதுடன், அவற்றிற் பலர் சித்திரவதைகளுக்கும், பாலியல் வதைகளுக்கும், காணாமற் போதலுக்கும் உள்ளாயினர். சமீப காலத்தில் மட்டும் 4 பாராளுமன்ற உறுப்பினர்கள், 20க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், பல அரசு சாரா அமைப்பின் ஊழியர்கள் (சர்வதேசம்) கொல்லப்பட்டனர். பல சர்வதேச நாடுகள், நிறுவனங்கள் கோரின பின்பும்

இத்தகைய கொலைகளைப் புரிந்த எவரும் ஒருபோதும் கண்டுபிக்கப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை. இலங்கை அரசின் இத்தகைய கண்மூடித்தனம் ஏற்கெனவே, எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும்.

ஐ.நா-வின் குற்றவியல் பட்டியலில் இருந்து தப்பும் நோக்கோடு, தமது கொலைகள் யாவும், அரசியல் சார்ந்தவை என்றும், இனப்படுகொலைகள் அல்ல என்றும் திரித்துக்கூற இலங்கை அரசு முயல்கின்ற இந்நேரத்தில் மேற்கூறிய சம்பவங்கள் அவற்றை முற்றாக நிராகரித்து, இலங்கை அரசு புரிந்தது இனப்படுகொலையே அன்றி வேறொன்றாக இருக்க முடியாது என ஆணித்தரமாக நிறுவுகின்றன. இவற்றை ஏற்றால் தமிழீழம் மலர வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பதால், இதை மறுப்பதில் சுய இச்சை உடைய பல அமைப்புகளும், நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன. சர்வதேச சட்டங்களின்படி தனது குடிமக்கள் எனக்கோரும் மக்களைத் தானே கொன்று குவிக்கும், ஒரு அரசின் இனப்படுகொலை நிரூபிக்கப்பட்டவுடன,; தமிழீழம் அமைக்கும் உரிமை தானாகவே வந்து சேரும்.

ஆ). போர்க்குற்றம் நிரூபிக்க உதவும் அறிவியல் முன்னேற்றம்

நல்லவேளையாக, இலங்கை அரசும் அதன் படைகளும் புரிந்த மேற்கூறப்பட்ட குற்றங்கள் யாவும் இன்றைய தொழில்நுட்பம் (செய்மதி, கைபேசி), குற்றயியல் மருத்துவம் போன்றவற்றின் உதவியுடன் நிரூபிக்கப்படக்கூடியன. சமீபத்தில் ஐக்கிய இராச்சியத்தில் ஊhயnநெட ஐஏ தொலைக்காட்சியில் காட்டப்பட்டவையும் (இவ்வடிப்படையில் வழங்கப்பட்ட) டப்ளின் மக்கள் நிரந்தர நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பும் இதற்குத் தகுந்த எடுத்துக்காட்டாகும். இந்தத் துறையில், நமது தற்போதைய நிலைப்பாடு தனித்துவம் வாய்ந்தது ஆகின்றது.

இ). ஈழப் போராட்டத்தின் அணுகுமுறைகள்

விடுதலைப் போராட்டத்தில் இதுவரை வெற்றி கொண்ட பல நாடுகளைப் போலல்லாது, தமிழீழ விடுதலைப் போராட்டம், ஒரு ஒழுங்கான, தர்க்க ரீதியான முறையில் நடத்தப்பட்டது என்பது அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும்.

1. முதன் முப்பது வருடக் காலத்தில், பாராளுமன்றத்தின் வயிலாக விவாதங்களின் மூலம், தமிழர்களின் அபிலாசைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. (ளுதுஏ.செல்வநாயகம், சு.நடேசன், புபு பொன்னம்பலம் ஆகியோரின் பாராளுமன்ற விவாத உரைகள்)

2. இவை பயனளிக்காதபின், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சாத்வீக போராட்டங்கள் (காந்திய வழிமுறை) சத்தியாகிரக போராட்டம் (முக்கியமாக தமிழரசு கட்சியினால்) நடத்தப்பட்டன.

3. இளையோரின் ஆயுதப் போராட்டம்: மேற்கூறிய இரண்டு வழிகளும் தோல்வியடைந்த நிலையில், ஆயுதப் போராட்டம் அன்றி வேறு வழியில்லையென தீர்மானித்த இளைய தலைமுறையினர் (பழைய அரசியல்வாதிகளின் புத்திமதிகளையும் மீறி) ஆயுதப் போராட்டங்களில் இறங்கினர். அந்நேரத்தில் சர்வதேசச் சமூகம் இப்போராட்டத்திற்கு, அதற்குரிய மதிப்பைக் கொடுக்காது, இலங்கை அரசிற்குத் தாளம் போட முனைந்தது. அவர்கள், தமிழ் மக்கள் “அப்பாவிகள் அல்லது ஏமாளிகள்” என நினைத்திருக்கலாம். ஆனால், தமிழ் மக்களின் உண்மையான உத்வேகத்தை, அவர்கள் உணரத் தொடங்கும் முன், சீனா இலங்கையின் வாசற்படியில் வேரூன்றிவிட்டது!

4. சனநாயக அரசியல்: 2008-ல் மாவீரர் நாள் உரையில், தலைவர் “போராட்ட வடிவங்கள் மாறலாம்! ஆனால் குறிக்கோள் மாறாது!” என்று கூறியதற்கேற்ப தலைவரின் ஆணையைத் தலைமேற்கொண்டு, சனநாயக வழியில் நமது போராட்டத்தை முன்னெடுக்கப் புலம்பெயர் சமூகம் இன்று முன்னிற்கிறது.

சர்வதேச ரீதியில், வட்டுக்கோட்டைத் தீர்மானம், மக்களவை, நாடு கடந்த அரசாங்கம் எனப் பல அமைப்புகளின் மூலம் இந்நடவடிக்கை செயல்வடிவாகிறது. இவற்றின் ஊடாக, தமது அரசியல் மேற்பரப்பை விரிவுபடுத்துவதுடன், இலங்கை அரசின் மீதும், அதன் இராணுவத்தின் மீதும், போர்க்குற்றம், மனித உரிமை மீறல், இனப்படுகொலை ஆகிய குற்றச்சாட்டுகளை நிரூபித்து, சர்வதேச சமூகம் தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு நிர்பந்தப்படுத்துவர்.

ஈ). ஈழத்தமிழரின் கல்வி ஆளுமைத் திறன்

பல்வேறு துறைகளில் பரந்த, தனித்துவம் வாய்ந்த தமிழரது கல்வித்துறை முன்னேற்றம், அவர்கள் ஜனநாயக வழியில் நடத்தும் விடுதலைப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. கல்வியில் இத்தகைய நிலைப்பாடு, எமது போராட்டத்திற்கு ஒரு தனித்துவமான பெருமையை அளிக்கும்.

உ). உலகப் பயங்கரவாதப் பீதி

செப்டம்பர் 11-க்கு முன், தேசிய விடுதலைப் போராட்டங்கள், உலகில், ஒருவரையும் பெரிதாகப் பயமுறுத்தவில்லை எனக் கூறலாம். ஆனால், இதன்பின், சர்வதேச நாடுகள், தமிழர்pன் விடுதலைப் போராட்டத்தை ஓர் பயங்கரவாதப் போராட்டமாகத் திரிபு செய்த போதும், அதற்கு மாறாக, இனவாத இலங்கையரசின் இனவழிப்பு நடவடிக்கைகளை, ஒரு அணுவளவும் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியும் என எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை. மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டுமாயின், அவர்கள் மீது திணி;க்கப்படும் அரச பயங்கரவாதம் உடனே நிறுத்தப்பட வேண்டும் என்ற கசப்பான உண்மையை உணர்ந்து கடைப்பிடித்தல் மூலந்தான் மக்களின் பலாத்கார நடவடிக்கைகளைத் தவிர்க்கலாம். இக்கூற்றானது, இலங்கைக்கு மட்டுமல்ல, பிற நாடுகளுக்கும் பொருந்தும் என்பதுதான் சரித்திரம் கற்பிக்கும் உண்மை.

ஊ). தற்போதைய உலகப் பொருளாதாரச் சரிவு

சமீபத்தில் உலகில் நடைபெற்ற பொருளாதாரச் சரிவின், அத்துடன் கூடிய பொருண்மிய பின்வாங்கலின் பலனாக, அதன் பாதிப்பினால் பல நாடுகள் தமது பொருளாதார நிலமையில் நாட்டம் கொள்வதைவிட்டு, பிறநாடுகளின் அரசியலிலோ, பொருளாதாரத்திலோ மூக்கை நுழைப்பது சுலபமாகாது. எனவே, முற்பட்ட காலங்களில், வளர்ச்சியுற்ற நாடுகள், ஆணவத்துடன் நடத்திய தலையீடுகளையும், சுரண்டல்களையும் இனிமேலும் தொடர்ந்து செய்வது சுலபமல்ல. அத்துடன் கண்மூடித்தனமாக, அராஜக அரசுகளுக்குத் துணை போவதும், இனிமேல் நடைமுறை சாத்தியமாகாது. எனவே, இன்று தமிழீழப் போராட்டம் வலுப்பெறுவது என்பது ஒரு தனித்துவமான பொருளாதார சூழ்நிலை எனலாம்.

எ). இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு

சீனாவின் “முத்துமாலை” திட்டத்தினால், இந்திய சமுத்திரத்தின் பெரும் பகுதியும், இலங்கையின் சில துறைமுகங்களும் (காலி, அம்பாந்தோட்ட) அதன் கைக்குள் விழுந்தன. இந்தியாவும் அதற்கு அனுசரணையான மேற்கு நாடுகளும் இதுவரை இந்து சமுத்திரத்தின் மேல் வைத்திருந்த மேலாண்மை இதனால் பெரிய கேள்விக்குறிக்குள் தள்ளப்பட்டது. அத்துடன் சீனா, இலங்கையில் காலூன்றியமை இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்குள் ஓர் ஆழமான அச்சுறுத்தல் ஆதலால், இத்தகைய புதிய நிலைமை, தமிழீழத்தை அங்கீகரிப்பதற்கு ஓர் தனித்துவமான காரணி ஆகலாம்.

ஏ). ஐ.நா மற்றும் மேலைநாடுகளின் குற்ற உணர்வு

உலகில் குற்றம் புரிதல் அபூர்வமல்ல. ஆனால், அந்தக் குற்றத்தை ஒப்புக் கொள்வதன் மூலமும் அதற்கு மன்னிப்பு கோருவதன் மூலமும் அதன் தாக்கத்தை, ஓர் அளவு குறைக்கலாம் என்பது சமூக விஞ்ஞானிகளின் கருத்து. ஐ.நா. சபையும், அதனுடன் ஒத்துப்பாடிய சில நாடுகளும் முள்ளிவாய்க்கால் போரில் தாம் விட்ட பாரதூரமான தவறுகளைச் “சிறிது சிறிதாக” உணர்ந்திருக்கலாம்! அத்தகைய நிலையில், அவர்கள் ஒரு பிராயச்சித்தமாக, தமிழீழத்தை அங்கீகரிப்பது மூலம், தமிழ் மக்களின் கோப அக்கினியிலிருந்து தப்ப எண்ணலாம். ஆனால், இந்நடவடிக்கையின் பின்னும், தமிழ் மக்கள் எவ்வளவு தூரம் ஆறுதலடைவார்கள் என்பது, என்றுமே ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.

ஐ). தமிழீழம் - வரலாற்றின் நிர்பந்தம்

போர்த்துகீசியர்கள் காலந்தொட்டு தமிழர்கள் தங்களது சொந்த யாழ் அரசு, கோட்டை அரசு, கண்டி அரசு ஆகிய இராச்சியங்களைத், தாமே ஆண்டு அனுபவித்து வந்தனர். பிரித்தானிய ஆட்சி எமது இவ்வரசுரிமையைப் பறித்ததோடு, இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பும், அதைத் திருப்பிக் கொடுக்கத் தவறியது. 1931-ல் சிங்கள மந்திரி சபையை (பிரித்தானிய ஆட்சியின்கீழ்!) அமைத்ததுடன், தமிழரின் கூட்டாட்சி அரசு கோரிக்கையையும், அதன் பின் 1948-ல் 50:50 அரசியல் பங்களிப்புக் கோரிக்கையையும் நிராகரித்தது. 1975-ல் ளுதுஏ. செல்வா கூறியது போல், 1972 அரசியல் சட்டத்திருத்தமும் தமிழரால் நிராகரிக்கப்பட்டது. 1972 யாப்பின் பின், தமிழர்களின் உரிமைகளைப் பற்றிக் குரலெழுப்பும் தகுதியும், 1979 மற்றும் 1983 சட்டங்களினால் தடுக்கப்பட்டது. எனவே, சரித்திர ரீதியாக, தமிழர், தாம் ஆண்டு வந்த தமிழீழத்தைக் கோருவதற்குத் தனித்துவமான நியாயம் உண்டு.

ஒ). புலம்பெயர் தமிழர் சமுதாயம்

இன்று, இனப்படுகொலைகள் புரியும் இலங்கை அரசின் பிடியிலிருந்து விலகியுள்ள 15 இலட்சம் வரையான ஈழத்தமிழர்கள், உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ளனர். அவர்கள் தாம் புகுந்த நாடுகளில், பெருமைப்படும் நிலையில், எல்லாத் துறைகளிலும் முன்னேறியிருக்கிற அதே வேளையில், தமக்கும் தமது எதிர்கால சந்ததியினர்க்கும் உரிய தாயக பூமியான தமிழீழக் கோரிக்கையிலும் உறுதியாக உள்ளனர். இவர்களின் சமூக, பொருளாதார, அரசியற் பலமும், சர்வதேச வலைப்பின்னலும் முறையாக நெறிப்படுத்தப்படுமிடத்து, நாம் தமிழீழத்தை அமைப்பதற்கு ஏதுவான ஒரு தனித்துவ வாய்ப்பை அளிக்கும்.


முடிவுரை

இன்று நீண்ட காலமாகத் துன்பங்களைத் தொடர்ந்து அனுபவித்துவந்த தமிழினத்திற்குத் தமிழீழம் மட்டுந்தான் ஓரேக் குறிக்கோள் ஆகும். அத்தோடு அல்லாது, அது நாம் அடையக்கூடியதும் ஒன்றாகும். ஆனால், அதே நேரத்தில், துரதிட்டவசமாக, சில அரசியல்வாதிகள், தாம், தமது தனிப்பட்ட சூழ்நிலையிலும், தாம் நெருக்கடிகளுக்கு ஆளான நிலையில் மாட்டப்பட்டுள்ளதாலும், தமிழ் மக்களின் உண்மையுணர்வை வெளியே கூறமுடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் அரசியல் நீரோட்டத்தை, நன்கு விளங்க நாம் முயல்வதோடு, தமிழீழம் எனும் புனிதமான கொள்கையிலிருந்து விலகக்கூடாது. அதே நேரத்தில், உலகமெல்லாம் பரவியிருக்கும் ஈழத்தமிழ் மக்களினாலேயே, தமது சுதந்திரத்தை, மனவுறுதியோடும், ஈடுபாட்டுடனும் போராடி வெல்லும் பொறுப்பு சார்ந்துள்ளது.


அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் (குறள்: 483)

Comments